புற்றுநோய் அறிகுறிகள் என்ன? (உடல்நலம்)

 உறுதிப்படுத்த எங்கு பரிசோதனை செய்வது? - முழு விவரம்


இந்தியாவில் புற்றுநோய் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னையாக மாறியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் 14.61 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2025இல் 15.7 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது எனவும் அந்த அறிக்கை கூறியது. இதில் ஆண்கள் அதிகமாக நுரையீரல், வாய் மற்றும் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. பெண்களுக்கு அதிகமாக மார்பகம், கருப்பை புற்றுநோய் ஏற்படுவதாகவும் எச்சரித்துள்ளது.

குறிப்பாக 2023ஆம் ஆண்டில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில், யாருக்கெல்லாம் புற்றுநோய் வரலாம், புற்றுநோய் அறிகுறிகளை உறுதிப்படுத்திக்கொள்வது எப்படி என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது. அவை குறித்து இங்கு பார்ப்போம்.


புற்றுநோய் யாருக்கெல்லாம் வரலாம்?

உயிர்க்கொல்லி நோய்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது புற்றுநோய். முதல் இடத்தில் இருப்பது இதய நோய். ஆனால் இதய நோய் போல் அல்லாமல், தலை முதல் கால் வரை உடலின் எந்தப் பாகமும் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது”, என்கிறார் அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையத்தின் மருத்துவர் மற்றும் மூத்த கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் ரத்னா தேவி.

அவரது கூற்றின்படி, தலைமுடி, நகங்கள், பற்களில் மட்டுமே புற்றுநோய் வராது. புற்றுநோயைப் பொறுத்தவரை கருப்பை, மார்பகம், நுரையீரல் புற்றுநோய்களைத் தவிர்த்து மலக்குடல் புற்றுநோய், சூல்பைப் புற்றுநோய் (Ovarian cancer), தலை மற்றும் கழுத்து புற்றுநோய் போன்றவையும் இந்தியாவில் சாதாரண நோயாக மாறி வருகிறது.

இதில் முக்கியமானது தலை மற்றும் கழுத்து புற்றுநோய். இதற்கு மிக முக்கியக் காரணம் புகையிலை. இந்தியாவில் புகை பிடிப்பது என்பது அதிகமாகி வருகிறது. சாதாரண சிகரெட், பீடி, சுருட்டு தவிர்த்து, புகையிலையை மெல்கிறார்கள், -சிகரெட்டுகளை புகைக்கிறார்கள். பல இளைஞர்கள் கூல் லிப் எனப்படும் புகையிலையைப் பயன்படுத்துகிறார்கள்.

"சிறுவயதிலேயே இத்தகைய பழக்கங்கள் உருவாகின்றன. புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் இந்தப் பழக்கங்கள் பெரும் பங்காற்றுகின்றனஎன்கிறார் மருத்துவர் ரத்னா தேவி. இதுமட்டுமின்றி தவறான உணவுப் பழக்கங்களும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிறார் அவர்.

பெண்களை அதிகளவில் பாதிக்கும் மார்பக புற்றுநோய்க்கு மோசமான உணவுப் பழக்கம் ஒரு காரணமாக உள்ளது. எந்த வகையான உணவுகளை, எந்த நேரத்தில், எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம்.”


புற்றுநோய் எந்தெந்த வழிகளில் ஏற்படும்?

உணவுப் பழக்கம் தவிர்த்து வைரஸ் மூலமாகவும் புற்றுநோய் ஏற்படலாம். ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றால் இது ஏற்படுகிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய், குதப் புற்றுநோய் (Anal cancer) போன்றவை இந்த வைரஸால் உருவாகின்றன. ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரையும் இது தாக்கும். முக்கியமாக பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து இது வருகிறது.

இந்த வகை வைரசுக்கு இப்போது தடுப்பூசிகள் வந்துவிட்டன. போலியோ தடுப்பூசிகள் போல 9 முதல் 13 வயது வரை உள்ளவர்கள் வரும் முன் காக்கும் நடவடிக்கையின்படி அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் இது குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை,” என்கிறார் மருத்துவர்.

புற்றுநோய் ஏற்படுவதற்கு மரபணு காரணங்களும் உள்ளன. உணவுகளில் செய்யப்படும் கலப்படம், மாசுபட்ட காற்றை சுவாசித்தல், மாசடைந்த நீரைத் தொடர்ந்து பருகுதல், இப்படிப் பல காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. எனக்கெல்லாம் புற்றுநோய் வராது என யாரும் நினைக்க முடியாது,” என்று கூறுகிறார் மருத்துவர் ரத்னா தேவி.

 

புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

மத்திய, மாநில அரசுகள் சார்பாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும்கூட, இந்தியாவில் கணிசமான பேருக்கு புற்றுநோய் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி, கீழே கொடுக்கப்பட்டுள்ள புற்றுநோய் அறிகுறிகளை நாம் புறக்கணிக்கக்கூடாது.

✏எந்தக் காரணமும் இல்லாமல் உடல் எடை 5 கிலோ அல்லது அதற்கு மேலாகக் குறைந்தால், அது புற்றுநோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம். கணையம், வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் புற்றுநோய்களால் இது அடிக்கடி நிகழ்கிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது. புற்றுநோய் பரவ ஆரம்பித்த பிறகு அடிக்கடி காய்ச்சல் ஏற்படும். ரத்தப் புற்றுநோய் (leukemia) அல்லது நிணநீர்க்குழியப் புற்றுநோய் (lymphoma) போன்ற புற்றுநோய்களின் ஆரம்ப அறிகுறியாக இது இருக்கலாம்.

ஓய்வெடுத்தாலும் தீராத உடல் சோர்வும் ஒரு அறிகுறி. ரத்தப் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களில், முதலில் சோர்வு ஏற்படலாம். சில பெருங்குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோய்கள் வெளிப்படையாகத் தெரியாத ரத்த இழப்பை ஏற்படுத்தும். அதனாலும் உடல் சோர்வு ஏற்படலாம்.

தோலில் ஏற்படும் மாற்றங்களான சருமம் கருமையாகுதல் (hyperpigmentation), தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் (jaundice), தோல் சிவத்தல் (erythema), அரிப்பு (pruritus), அதிகப்படியான முடி வளர்ச்சி ஆகிய அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். இவை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கக்கூடும்.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவை பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மறுபுறம், சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் ரத்தம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிறுநீர் கழிப்பது போன்றவை) சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

ஆறாத வாய்ப் புண், வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக ஒரு மருத்துவர் அல்லது பல் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆண்குறி அல்லது பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்கள், தொற்று அல்லது ஆரம்ப நிலை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இவையும் ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

புற்றுநோயுடன் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம். இருமும் போது ரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மறுபுறம், மலத்தில் ரத்தம் தோன்றினால் (இது மிகவும் கருமையான நிறத்தில் இருக்கலாம்) அது பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால், கருப்பையிலிருந்து அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும், சிறுநீரில் ரத்தம் வருவது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

முலைக் காம்பிலிருந்து ரத்தம் கசிவது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

பல புற்றுநோய்களை தோலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் உணர முடியும். இந்தப் புற்றுநோய்கள் முக்கியமாக மார்பகங்கள், விரை, நிணநீர் கணுக்கள் (சுரப்பிகள்) மற்றும் உடலின் மென்மையான திசுக்களில் ஏற்படுகின்றன.

தொடர்ந்து அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய், வயிறு அல்லது குரல்வளை (தொண்டை) புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இருப்பினும், இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான அறிகுறிகளைப் போலவே, புற்றுநோயைத் தவிர வேறு காரணங்களாலும் இவை ஏற்படுகின்றன.

தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மூன்று வாரங்களுக்கு மேல் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. தொண்டை கரகரப்பு குரல்வளை அல்லது தைராய்டு சுரப்பி புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

 

இந்தியாவில் புற்றுநோயாளிகள் அதிகரிப்பது ஏன்?

இந்தியர்களில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது ஏன் என்பது குறித்தும் விளக்கினார் மருத்துவர் ரத்னா தேவி.

இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மைதான். பலரும் புற்றுநோய் சோதனைகளைச் செய்ய முன்வருகிறார்கள். இதனால் புதிய புற்றுநோயாளிகள் குறித்த தரவுகள் ஒவ்வோர் ஆண்டும் வெளியாகின்றன,” என்கிறார் மருத்துவர்.

தொடர்ந்து பேசிய அவர், “அறிவியில் வளர்ச்சியால் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. பலரும் தங்கள் உடல்நிலை குறித்து இப்போது ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு கவலை கொள்கிறார்கள்.

முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் மூலம் தங்கள் உடலில் இருக்கும் நோய்கள் மற்றும் அபாயங்கள் குறித்து அறிந்து கொள்கிறார்கள்.

கைப்பேசி மூலமாகப் பல அறிகுறிகளைத் தெரிந்துகொண்டு, மருத்துவர்களை அணுகுகிறார்கள். அரசும் பல பரிசோதனை முகாம்களை நடத்துகிறது. சமீபத்தில் கரூரில் நடத்தப்பட்ட முகாம் மூலம் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டார்கள்.

புற்றுநோய் எந்தளவு அதிகரித்து வருகிறதோ அதே அளவு வேகமாக மருத்துவ அறிவியலும் முன்னேறி வருகிறது. எனவே இதற்கான தீர்வுகளும் நம்மிடம் உள்ளன,” என்கிறார் மருத்துவர்.

 

புற்றுநோய் பரிசோதனைகளை எங்கு செய்யலாம்?

புற்றுநோய் என்றாலே மரணம்தான் என்ற போலி பிம்பம் உடைக்கப்பட வேண்டும் என்கிறார் மருத்துவர் ரத்னா தேவி.

எந்தப் புற்றுநோயாக இருந்தாலும் அது ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் அதிகம். செய்ய வேண்டியது எல்லாம் சில எளிய பரிசோதனைகளே. அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது.

தங்களுக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பதாக சந்தேகம் இருந்தால், உடனே இந்த சோதனைகளைச் செய்தால் தெரிந்துவிடும். ஆனால் வெகு சிலருக்கு மட்டும் ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால்கூட குணமாவதற்கான வாய்ப்புகள் குறைவு. இது ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்," என்று விளக்கினார் அவர்.

ஆனால் ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்கிறார் மருத்துவர்.

 

புற்றுநோய் அபாயம் எப்போது அதிகமாகிறது?

ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம், சிகிச்சை எடுக்கிறோம். அதுபோல புற்றுநோய் வந்தால் அதை ஏற்றுக்கொண்டு, முழு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சினிமா பார்த்து புற்றுநோய் என்றால் குணப்படுத்தவே முடியாது, நிச்சயம் மரணம்தான் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.

அது தவறு, எத்தனையோ பேர் சிகிச்சை எடுத்து குணமாகி இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் பலர், எந்த அறிகுறியும் இல்லாத போதும்கூட வழக்கமான உடல் பரிசோதனைகள் மூலம் தங்களுக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்து கொண்டார்கள்.

எனவே கண்டிப்பாக, அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அறிகுறிகள் வந்தால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும் என இல்லை, முக்கியமாக நாற்பது வயதைக் கடந்தவர்கள். நமக்கு வயதாகும்போது புற்றுநோய் அபாயமும் அதிகமாகிறது,” என எச்சரிக்கிறார் மருத்துவர் மற்றும் மூத்த கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் ரத்னா தேவி.

நன்றி:பிபிசி தமிழ்

 

No comments:

Post a Comment