உலகெங்கும், அவ்வப்போது கண நேரம் மரணமாகித் தீடீர் என்று திரும்பவும் உயிர் பெற்றுத் திரும்பியவர்கள் பலர், தாம் இறந்திருந்த அந்தக் கணப்பொழுதில் அவர்கள் கண்ட நம்பமுடியாத காட்சிகளைக் கதை , கதையாகச் சொல்லி விபரித்திருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இந்த மரண அனுபவம், வெவ்வேறு பிரிவினருக்கும், அவரவர் கலாச்சார ரீதியாக மாறுபடும். பெரும்பாலும், சில மதத்தவர்கள் தங்களைத் தேவதைகள் வந்து அழைத்துச் செல்வதாகவும், வேறு சிலர் தங்களைக் கன்னிப் பெண்கள் கூட்டி அணைத்துச் செல்வதாகவும், ஏனையோர் தங்களுக்குத் தேவ தூதர்கள் சமூகமளிப்பதாகவும் கண்டு கொள்வார்கள்.
அதிகமாக, எல்லோரும் மிகவும் அழகான மலைச் சாரல்களையும், கண்கவர் நீர் வீழ்ச்சிகளுடன் கூடிய பசுமையான இயற்கைக் காடசிகளைக் கண்டு கொண்டு, ஓர் ஆத்மீக உணர்வுடன், தெய்வீக சுரங்கம் ஊடாக, தூரத்தில் தெரியும் ஒர் ஈர்ப்பான ஒளியின் திசையில், சந்தோசமான சூழலில், பூரணமான மன அமைதியுடன் சொர்க்க உலகம் நோக்கிப் போய்க்கொண்டு இருப்பதாகக் கண்டு கொள்வார்கள். (சாட்சி: நானும் கண்டேன்; எனக்கும் ஒரு முறை அந்த அனுபவம் வந்தது). ஒன்றைக் கவனியுங்கள், ஒருவருமே நரக உலகம் போவதாகக் காண மாட்டார்கள்!
இத்தகைய அனுபவங்கள் பற்றி விஞ்ஞானிகள், முக்கியமாக நரம்பியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
அமெரிக்காவின் தேசிய அறிவியல் சபையில் இதுபற்றி ஆராய்ச்சி செய்த குழுவின் ஆய்வறிக்கையின்படி, இது மூளையினால் மத்தியஸ்தனம் செய்யப்பட்டு உணரப்படும் ஒரு வெளிப்பாடு என்று அறியப்பட்டுள்ளது. இந்த அனுபவம் நடைபெறும்போது, நபரின் நனவின் நரம்பியல் தொடர்புகள், அதன் அலை வடிவங்கள் என்பவற்றை இலத்திரனியல் சாதனங்கள்மூலம் ஆய்வு செய்து பார்த்தால், மயக்க நிலையில் உள்ள- இறந்து போனது என்று முடிவு செய்யப்பட்ட - மூளையின் செயற்பாட்டில் பாதிப்பு இருப்பதை அறிய முடியும். அவர்களின் மரணம் என்று ஒன்று நிகழும்போது, இறக்கும் மூளையின் சிக்கலான மின் வேதியியல் பற்றிய ஒரு அறிவார்ந்த ஒரு விளக்கத்தை இத்தகைய ஆராய்ச்சி தந்துள்ளது.
இது, மூளையில் பிராணவாயு ஏற்றம் குறையும் போது, அது நோயாளியின் மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவங்கள், அவரவர் கலாச்சார நம்பிக்கைகளின் மூலம் ஆழ் மனத்தில் தீவிர நம்பிக்கையுடன் ஊறவைக்கப்பட்டுள்ள காட்சிகளைக் காணுவதில் முடிவடையும்.
இத்தகைய மூளைப் பாதிப்பு, பொதுவான மயக்க மருந்துகள் மூலமும் வரலாம். அதை விட முளைக்குச் செல்லும் நரம்புகள், சவ்வுகள் பாதித்திருந்தாலும், மூளையில் கட்டி மறைந்திருந்தாலும் வரலாம். அல்லது, கண நேரத்துக்கு மூளைக்கு இரத்தமோ, பிராண வாயுவோ செல்வது தடைப்பட்டாலும் சொர்க்க உலகம் தெரியும்.
பரம்பரை வழியிலோ, பிறக்கும்போது நடந்த சிக்கல்களாலோ, கலங்களின் பாதிப்பினாலோ அல்லது இரு முனைப் பிகழ்வு மூலமோ மனச் சிதைவு வந்தால் மூளையில் பாதிப்பு ஏற்படும்.
உலகம் பற்றி வைத்திருக்கும் அபிப்பிராயங்கள் இவர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. மறுமை பற்றி அவர்களின் மனதில் ஆழமாகப் படிந்திருக்கும். அவர்களின் அசைக்கமுடியாத கருத்துகளுக்கு, நம்பிக்கைகளுக்குப் பயமுறுத்தல் வந்தால் அவற்றால் இவர்களுக்கு மனச் சிதைவு ஏற்படலாம்.
மற்றவர்கள் கேட்க முடியாத ஒலிகள் அல்லது குரல்களைக் கேட்பது அல்லது மற்றவர்கள் பார்க்க முடியாத தோற்றங்களைக் காண்பதுவும் இதுவே காரணமாய் இருக்கும். இவர்கள் எண்ணங்கள் குழப்பமடையும். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது அல்லது மற்றவர்களிடம் அவர்கள் தெளிவாக வெளிப்படுத்துவது கடினமாக இருக்கும். இப்படியானவர்களுக்கு மரணத்தின்போது பலவிதமான அனுபவங்கள் வருவதற்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன.
மரணத்திற்கு அருகில் வரும் அனுபவங்கள், பல தீவிர உடலியல் நிலைகளான அதிர்ச்சி, மூளையின் செயல்பாடு நிறுத்துதல், ஆழ்ந்த பொது மயக்க மருந்து அல்லது இதயச் செயற்பாட்டுத் தடுப்பு போன்றவற்றின் கீழ் நிகழ்கின்றன. இதில் விழிப்புணர்வு அல்லது உணர்ச்சி என்று ஒன்றும் இருக்கச் சாத்தியம் இல்லை.
ஆகவே, இத்தகைய
காட்சிகள்,
அனுபவங்கள்
எல்லாமே
உண்மை இல்லை; முழுக்க,
முழுக்க
மாயக் காட்சிகளே! பிரமைத்
தோற்றங்களே!
👻ஆக்கம்:செ.சந்திரகாசன்
No comments:
Post a Comment