"விவசாயி" -(சிறு கதை)


இலங்கையில் உடவலவ நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசமாக இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இங்கு  விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக இந்த  நீர்த்தேக்கம் உள்ளது.  கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு -4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தான் இரத்தினபுரி ஆகும். இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை இன்று அங்கு குறைந்து வருகிறது. ஐந்துக்கு மேற்பட்ட  தமிழ் பாடசாலைகளையும் பிரசித்திபெற்ற சிவன் கோவில், மற்றும் ஜும்மா மசூதி அங்கு காணப்படுகிறது.

 

இங்கு விவசாய குடும்பத்தில் பிறந்த ரமேஷ் என்ற இளைஞன் வாழ்ந்துவந்தான். உயர் வகுப்புவரை இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றாலும், அதன் பின் உயர் கல்வியை தொடராமல், தந்தையின் விவசாயத்தில் முழுநேரம் கவனம் செலுத்தினான். அவன் எளிய விவசாயியாக தொடக்கத்தில் இருந்தாலும்,  தனது நிலத்திற்கான அர்ப்பணிப்பிற்காகவும், தனது பயிர்களின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் அவன் வாழ்ந்த கிராமம் முழுவதும் நன்கு அறியப்பட்டான். என்றாலும் அவனுக்குள் ஒரு குறை. தனது பாடசாலையில் படித்த சக மாணவியும் அந்த கிராமத்து குயவனின் மகள் மீரா, அவன் பாடசாலையில் படிக்கும் மட்டும் மிக அன்னியோன்னியமாக அவனுடன் நெருங்கி பழகியவள், உயர்வகுப்புக்கு பின்பு பல்கலைக்கழகம் புகுந்ததும், ரமேஷ் பல்கலைக்கழகத்தை நிராகரித்து, தந்தையின் பரம்பரை விவசாயத்துக்கு போனதும் மெல்ல மெல்ல விலகியது அவனுக்கு மிக கவலையை கொடுத்தது.

 

உலகத்து உயிர்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற இயற்கை உணர்வு தான் காதல். அதில் ஈடு கொண்ட ஒரு மனம் தனது துணையைப் பற்றி காணும் கனவுகளும், கற்பனைகளும் எத்தனை எத்தனை? என்றாலும் அவனுக்கு இன்று வெறுப்பு வெறுப்பாக உள்ளது. நன்றாக சிவந்துபோன நாக்கு, அணிசேர்ந்ததுபோல அழகான சிறிய பற்கள், குறைவான பேச்சு உள்ள அந்த  மீராவை, அவள் இன்று தூர விலகி போனாலும், அவனால்  மறக்கமுடியவில்லை. பொதுவாக காதல் தோல்வி அடைந்தாலோ அல்லது காதலி இடையில் விலகிப் போனாலோ நாம் அழுது வடிப்போம், மன அழுத்தத்தில் மௌனமாவோம், குடி உள்ளிட்ட போதைகளில் ஈடுபடுவோம் ...  இப்படி எத்தனை எத்தனையோ, ஆனால் ரமேஷ் இவைகளில் இருந்து வேறுபட்டவன். ஒரு பெண்ணுடன் நீங்கள் ரசித்து உரையாடி உங்களை மறக்க அவளின் அழகு தான் பணப்பை விட முதலில் நிற்கிறது என்பதே உண்மை. அழகு என்பது ஒவ்வொரு பெண்ணும் அணியும் முகமூடி. அழகு என்பது காதலுக்கும் நமக்கும் இடையில் தோன்றும் மூடுபனி என்பதை உணர்ந்த அவன், எப்படி அவன் மீராவிடம் முழுக்கவனம் கொண்டு காதலித்தானோ, அதைவிட பலமடங்குடன் சூரியன் தினம் தினம் முத்தமிடும் வயல்களைத் காதலிக்கத் தொடங்கினான்.  

 

சில ஆண்டுகள் கழிய, ரமேஷ் விவசாயத்தில் பெரும் முன்னேற்றம் கண்டு, இன்று அந்த கிராமத்தில் இளம் தலைவர்களில் ஒரு பெரும்புள்ளியாக பண்பிலும் செல்வத்திலும் உயர்ந்து, சில விவசாயத்துடன் தொர்புடைய தொழிற்சாலைகளின் அதிபதியாகவும்  இருந்தான். என்றாலும் அவன் தன்னை விவசாயி என்று சொல்வதிலேயே பெருமையடைந்தான். ஒரு நாள், பருவமழை இயற்கையை பச்சை நிறத்தில் வர்ணம் பூசும்போது, தன்னிடம் கார் இப்ப இருந்த பொழுதிலும், எந்தவித பெருமையும் இல்லாமல், மாட்டுவண்டி ஒன்றில் ரமேஷ் தனது வயலுக்கு கிராமத்து குயவனின் மகள் மீராவின் வீட்டை கடந்து போனான். அவன் மனதில் இன்றும் மீரா ஒரு மூலையில் இருந்துகொண்டுதான் இருந்தாள். ஒவ்வொரு காதல் நினைவும் விசேடமானதுதான் ... அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும், அந்த உணர்வை காதலியிடம் அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி, பதட்டம், உணர்ச்சிப் பெருக்கு  .. மறக்க முடியாத பசுமையான நினைவுகளே!

 

கிராமத்துப் பாதைகளை அலங்கரித்த மணம் கமழும் மலர்களைப் போல அவளது கதிரியக்கச் சிரிப்பு வசீகரமாக அன்று அவனுக்கு இருந்தாலும், இன்றும் அவன் அந்த முதல் காதலை மறக்க முடியாவிட்டாலும், அவளின் பிரிவுதான், அது கொடுத்த வைராக்கியம் தான்  இன்று தன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்ததை அவன் எப்படி மறப்பான்? "உன் முதல் பார்வையே என்னை முட்டாள் ஆக்கியதை இன்றுவரை உணர்கிறேன் ..., உன்னை நினைத்து சிரிக்கிறேன் உன் கடைசி பேச்சு என் மூளையில் நீங்காத அழிக்க முடியாத கல்வெட்டு வாசகம் ... அதுதான் நான் யார் என்று எனக்கு உணர்த்திய வாசகம்!" அவன் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான்.

 

"அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்

பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்"

 

அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய காட்டுமல்லிகைச் செடியையும்,  பசியமரலையையும்  களைந்தெறிவைத்து போல மீராவை ஏறிய ரமேஷ் ஆசைப்பட்டாலும், அவனால் முழுமையாக ஏறிய முடியவில்லை. அவன் அவளின் வீட்டை  கடக்கும் பொழுது, அவனது கண் அவனை அறியாமலே அவளது வீட்டை நோட்டமிட்டது. அவள் அங்கு முற்றத்தில் தந்தையுடன் எதோ கதைத்துக்கொண்டு நின்றாள்.

 

"வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்,

மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி

ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப,

கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்

தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட,  "

 

மூங்கீலென திரண்ட தோளினையும். மணத்தால் வெறியூட்டும், வளர்ந்த, ஐம்பால் ஒப்பனை செய்யப்பட்ட கூந்தலையும், மான் பார்வையை வென்ற மருண்ட பார்வையையும். மயில் போன்ற சாயலையும் ,அழகிய சிலம்பில் உள்ளிருக்கும் மணிகளால் ஆன கலங்களை உடைய,  நடக்கும்போது ஒளி வீசி இமைக்கும் அணிகலன்களையும் . கொடியா, மின்னலா, அணங்கா என்று எண்ணும்படித் கண நேரத்தில் யாதென்றே தெரியாத அந்த மெல்லிய இடையை அவன் கண்கள் எந்த வெட்கமும் இன்றி நாடிச் சென்றன.

 

'ஐயா கொஞ்சம் நில்லுங்கள். என்று மீராவின் அப்பா கூப்பிட்டுக் கொண்டு படலைக்கு வெளியே வருவதைக் கண்டான். 'மீரா பட்டம் பெற்றுவிட்டாள், வேலை தான் கிடைக்கவில்லை. உங்க தொழிற்சாலையில் பயிற்சி முகாமையாளர் பதவி வெற்றிடம் என்று அறிந்தேன். அதை ... ' என முடிக்கமுடியாமல் முடித்தார்.    கொஞ்சம் தூர முற்றத்தில் நின்ற மீராவை, ரமேஷ் வேலிக்கூடாக பார்த்தான். அவள் தலை குனிந்தபடி, கால் விரலால் எதோ மண்ணில் எழுதிக்கொண்டு இருந்தாள். கொஞ்சம் உற்றுப்பார்த்தான். ஆங்கிலத்தில் வெரி சாரி என்று அது இருந்தது.

 

ரமேஷ் கொஞ்சம் உரத்து, மீராவின் காதில் விழக்கூடியதாக, 'என் தொழிற்சாலைகள் விவசாய உற்பத்தியையும், விவசாயத்துக்கு தேவையானவற்றையும் அடிப்படையாக கொண்டவை. உங்கள் மகள் பட்டதாரி, இதற்கு உடன்படுவாரா ?' என்று கேட்டுக்கொண்டு 'அவர் சரி என்றாள்,  வரும் திங்கட் கிழமை காலை பொது முகாமையாளரை விண்ணப்ப பத்திரத்துடன் அலுவலகத்தில், நேர்முகப்பரீட்சைக்கு சந்திக்கலாம்'  என்று கூறிவிட்டு, மீராவின் அப்பா அதற்கு பதில் சொல்லமுன்பு ரமேஷ் புறப்பட்டுவிட்டான்.

 

மீரா தன்னை மிகவும் அழகாக அலங்கரித்துக் கொண்டு, கொஞ்சம் முந்தியே ரமேஷின் தொழிற்சாலைக்கு போனாள். அங்கு ரமேஷ் இல்லை. பொது முகாமையாளர் அவளின் விண்ணப்பத்தை பெற்றுவிட்டு, கொஞ்சம் காத்திருப்பு அறையில் இருக்கும்படி கூறினார். கடும் வரட்சி காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து, உடவளவ நீர்த்தேக்கத்தின் கீழ் அறுவடை செய்யப்பட்ட 65,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டதால், ரமேஷ்  விவசாயிகளுக்கு தலைமை வகுத்து, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு இரண்டு தவணை நீருக்காக சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து 27 மில்லியன் கனமீற்றர் நீரை 10 நாட்களுக்கு பெற்றுக்கொள்ள ஒரு ஏற்பாடு செய்யும் முகமாக பேச்சுவார்த்தை ஒன்றுக்கு போய் இருந்தான். என்றாலும், தற்போது 87 மில்லியன் கனமீற்றராக உள்ள சமனலேவாவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 60 மில்லியன் கனமீட்டராகக் குறைவடைந்தால், இலங்கை மின்சார சபையானது தென் மாகாணத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என்று கொடுக்க மறுத்து, அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. இதனால் கடும் கோபத்துடன் மதியம் அளவில் அலுவலகம் திரும்பினான்.

 

ரமேஷ் கொஞ்சம் அவசரமாகவும் கோபத்துடனும் தனது அலுவலகத்துக்குள் நுழைவதை கண்ட மீரா, கொஞ்சம் பதற்றத்துடன் எழும்பி நின்று கவனித்தாள். அவன் அவளை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. அவளின் அலங்காரம், அழகு அவனுக்கு இப்ப ஒரு பொருட்டு அல்ல. அவன் எண்ணம் எல்லாம் நீர் பற்றாக்குறையினால் அழிந்து வரும் நெற் கதிர்களே! இன்னும் காத்து இருப்பதா, இல்லை பேசாமல் போவதா என்று மீராவுக்கு புரியவில்லை. அவள் எழும்பிய படியே நின்றுவிட்டாள். திரும்பி மீண்டும் இருக்கவில்லை. ஒரு பத்து நிமிடத்தின் பின், அவள் இனி பிரயோசனம் இல்லை என்று மனதில் நினைத்தபடி, வீட்டிற்கு திரும்பி போக ஓர் இரு அடி எடுத்து வைத்தாள். அப்பொழுது பொது முகாமையாளரிடம் இருந்து  'மீரா, நீங்க உள்ளே வரலாம்' என்ற சத்தம் கேட்டது. 

 

அவள் உள்ளே வந்ததும், பொது முகாமையாளர், 'உங்களுக்கு தேவையான தகுதி இருக்கிறது, எமது முதலாளியும் சம்மதித்துவிட்டார். நாளையில் இருந்து ஒரு ஆண்டுக்கு பயிற்சி, அது வெற்றிகரமாக முடித்தால், பணி நிரந்தரமாகும். சம்பளமும் மேலும் அதிகரிக்கும். உங்களுக்கு தேவையான பயிற்சியை பெரும்பாலும் எம் முதலாளி ரமேஷ் தருவார்' என்று சொல்லி, உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று விடைகொடுத்தார். ரமேஸுக்கு தனது நன்றியை கூற மீரா விரும்பினாலும், ரமேஷ் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வரவே இல்லை. ஆனால் அவன் ஒரு விவசாயியாக, ஓரளவு நீரை வழங்கி, அழியும் பயிர்களை கொஞ்சமாவது காப்பாற்ற, மொனராகலை மாவட்டத்தில் உள்ள 11 குளங்களில் இருந்து ஒரு பகுதி வெலி ஓயா அணையின் ஊடாக உடவலவை நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்ல, மொனராகலை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தான்.

 

அடுத்த நாள், மீரா தனது பயிற்சியை தொடங்க அலுவலகம் வந்தாள் ரமேஷ் அவளுக்கு அடிப்படை பயிற்சிக்கான விளக்கத்தை கொடுத்ததுடன், நேரடியாக விவசாயம், மற்றும் அதனுடன் தொடர்புடையனவற்றை செய்முறையில் அறிவது அவசியம் என்பதை கோடிட்டு காட்டி, வயலில் அவளை கொஞ்ச மாதத்துக்கு பயிற்சி எடுக்க அனுப்பினான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தைப்பற்றி அறியத் தொடங்க, அவர்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடத் தொடங்கினர், அவர்கள் தங்கள் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் பரந்த பரப்பிற்கு கீழே விவாதித்தனர். அதுமட்டும் அல்ல, அவர்களின் பிணைப்பு ஆழமான நிலையில், மீரா நிலத்தின் மீதான தனது அன்பைப் பகிர்ந்து கொண்டதை ரமேஷ் கண்டுபிடித்தார். அவள் அடிக்கடி அவனுடன் வயல்களுக்குச் சென்றாள், அவளுடைய வேகமான விரல்கள் பழுத்த காய்கறிகளைப் பறிக்கவும், செடிகளை மென்மையாகப் பராமரிக்கவும் உதவின. வயல்வெளிகளுக்கும் மண்ணின் நறுமணத்துக்கும் நடுவே அவர்களது காதல் மீண்டும் மலர்ந்து, கிராமத்துச் சுவர்களில் ஏறிச் செல்லும் கொடிகள் போல இதயத்தைப் பின்னிப் பிணைந்தது.  

 

நல்ல உள்ளம் காதலின் பூஞ்சோலை; அன்பின் வளமான வயல்வெளி. இவைதாம் இதயத்தின் அழகு. இவை இல்லாத இதயம் வறண்ட பாலை நிலம்தான் என்பதை அவள் உணர்ந்து, தான் முன்பு விட்ட  தவறுக்கு ரமேஷ் இடம் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்!

 

"சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு"

 

"தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி

தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி அல்ல பாடம்படி பவளக்கொடி

உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை

உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை"

 

 

நன்றி :[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

No comments:

Post a Comment