குறளோடு கவிபாடு-[குறள் 158]
"அவமதிப்பு செய்து உன்னைத் தாக்கியோரை
ஆணவம் தலைதூக்கி செருக்கு கொண்டோரை
இறுமாப்பு பேச்சால் இழிந்து கடிந்தோரை
ஈரமான நெஞ்சால் மன்னித்து கடந்து
உயர்ந்த பொறுமையில் வென்று விடு!"
"ஊன உள்ளத்தால் அநீதி விளைத்தாலும்
எள்ளி நகையாடி உன்னைத் தாழ்த்தாதே
ஏற்றம் இறக்கம் மனித வாழ்வே
ஐயம் வேண்டாம் எண்குணம் கொண்டோனே
ஒல்லார் மனதிலும் தெளிவு மலரும்!"
"விலங்கினை உடைத்தெறி"
"வலுவான குரல் வளமான சிந்தனை
பழமை வாதிகள் கண்களை திறக்கட்டும்!
கடந்தயுகம் ஒதுக்கித் தள்ளிய பெண்கள்
விழித்து எழுந்து உரிமை கேட்கட்டும்!"
"சுதந்திர நெருப்பு நெஞ்சில் எரிய
கலங்கரை வெளிச்சம் பாதை காட்டட்டும்!
தாயில் பிறந்து மனைவியில் அனுபவிப்பவன்
கண்கள் திறந்து உண்மை அறியட்டும்!"
"வாழ, நேசிக்க, சமபங்கு அடைய
ஒவ்வொரு அடியிலும் உரிமை கோரட்டும்!
புராணங்கள் சமயங்கள் பழைய கிடங்கே
நெகிழ்ச்சி கொண்டு கதவுகள் திறக்கட்டும்!"
"கனவுகள் விரிய தைரியம் பெருக
சிறகுகள் அடித்து விடுதலை பெறட்டும்!
சுதந்திரம் தழுவும் வீரப் பெண்கள்
உரிமை பெற்று விலங்கினை உடைத்தெறி[யட்டும்]!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment