குழந்தையானாலும் சரி , தெய்வமானாலும் சரி அதை வைத்துச் சீராடி, விளையாடிக் கொண்டாடும் இடத்திலேதான் அவையும் தம் மனம் மறந்து நம்மையும் மகிழ்வித்துத் தானும் மகிழும் ! என்ற பொருள்பட 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்ற ஒரு பழமொழி, அங்கே விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தைகளை பார்க்கும் பொழுது எனக்கு ஞாபகம் வந்தது. நான் பாலர் பாடசாலை ஆசிரியராக இன்று தான் கடமையை ஏற்றுக்கொண்டேன்.
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது – அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது – அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் – அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் – என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்"
என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை முணுமுணுத்தபடி வகுப்பு அறைக்குள் புகுந்தேன். இது ஒரு கிராமப்புற பாடசாலை. நகரத்தில் பிறந்து வளர்ந்து படித்த எனக்கு, கவிஞரின் பாடல் வரிகளும் சேர்ந்து இது ஒரு புது உணர்வைத் தந்தது. முன் வாங்கில், பொன்மதி என்ற சிறுமி, மற்றவர்கள் எல்லோரிடமும் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக எனக்கு தெரிந்தது. நாளடைவில் அவளது மென்மையான இயல்பு, அனைத்து உயிரினங்களின் மீது அசைக்க முடியாத இரக்கம் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் அழகைக் காணும் திறமை என்னை கவர்ந்தது மட்டும் அல்ல, என்னையும் அவளின் பொன்னாலான நிலவு பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது எனலாம்.
நான் நகரத்தில் வாழ்ந்து இருந்தாலும், என் மனைவி கோமதி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அவள் பெயருக்கு ஏற்ப இறைவி பார்வதி போல என்னுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்தாள். அவள் சிவன், பார்வதி இருவர் மேலும் பக்திகொண்டவள். அதனாலோ என்னவோ நானும், மகா மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம் போல, அவளுடன் சேர்ந்ததால், இதுவரை இல்லாத தெய்வ பக்தி கொஞ்சம் முளை விட்டது. என்றாலும் எனக்கு அதில் பெரிய நம்பிக்கை இல்லை. கிராமங்களில் பொதுவாக காவல் தெய்வங்களை கண்டு உள்ளேன். தங்கள் கிராமத்தை அது வாழ வைப்பதாக அவர்களுக்குள் அப்படி ஒரு நம்பிக்கை. அதில் ஊறி வளர்ந்தவள் தான் என் மனைவி கோமதி.
கிராமவாசிகளின் வாழ்க்கையில் அந்த காவல் தெய்வம் மகிழ்ச்சியையும் சமநிலையையும் கொண்டு வருவதாக மனைவி எனக்கு அடிக்கடி கூறுவதுடன் அதன் தனி அழகிலும் மற்றும் கருணையிலும் ஒரு தீவீர பக்தி கொண்டவள். தெய்வம் என்பது ஒரு கட்டுக்கதை, ஆதி காலத்தில், காட்டுமிராண்டியாக திரிந்த மனிதனுக்கு ஒரு கட்டுப்பாட்டை, ஒரு பண்பாட்டை ஏற்படுத்த, அவனுக்குள் ஒரு பயம் , பக்தியை உண்டாக்க தோன்றியதே இந்த தெய்வங்கள் என்பது என் நிலைப்பாடு. என்றாலும், மனைவியின் நம்பிக்கையில் நான் குறுக்கீடு செய்வதில்லை.
என் வகுப்பில் இருக்கும் பாலர்கள் சராசரியாக நாலு அகவை, அதில் பொன்மதி தான் இளையவள். என்றாலும் துடிதுடிப்பும் ஆர்வமும் உள்ளவள். தங்க இழைகளை திரித்து நூலாக்கி முத்துகள் கோர்த்த "பொன் நகை" போல் அவளின் புன்னகை என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. விளிம்பை பிடித்து தரை படாமல் தாவித் தாவி செல்லும் அவளின் அழகு சொல்லவே முடியாது. பொன்மதி குழந்தையை பார்க்கும் போது எல்லாம், நாம் திருமணம் செய்து ஐந்து ஆண்டு கழிந்தும், இன்னும் ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கமும் தானாக என் இதயத்தை வாட்ட தொடங்கியது. என் மனைவி கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், தன் அழகு, தன் உடல் வடிவம் இரண்டிலும், எப்படி தெய்வத்தின் ஆர்வம் உடையவளோ, அப்படியே கூடிய ஆர்வம் கொண்டு இருந்தாள். அதனால் தான் குழந்தை பேறை கொஞ்ச ஆண்டுகள் பொறுத்து என்று, தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தாள்.
நான் உயர் வகுப்பில், தமிழ் இலக்கியத்தில் படித்த பாடல் ஒன்று இன்னும் என் மனதில் அரித்துக்கொண்டே இருக்கிறது. அது இப்ப பொன்மதியை கண்டதும், இவளை மாதிரி ஒரு குழந்தையை நாம் தவற விட்டுக்கொண்டு இருக்கிறேமே என்று ஒரு குற்ற உணர்வு கொஞ்சம் ஆழமாக என்னை குத்த தொடங்கி விட்டது. தெய்வம் தெய்வம் என்று வழிபாடும் என் மனைவிக்கு, கோமதிக்கு, அந்த தெய்வம் குழந்தையின் சிரிப்பில் வாழ்கிறது என்பது தெரியவில்லையே என்று ஒரு எரிச்சல், கோபமும் அறியாமலே என்னை பொத்துக்கொண்டு வந்தது.
"படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக் குறை இல்லை தாம் வாழு நாளே."
[புறநானூறு 188]
அதாவது, பலரோடு கூடி உண்ணும்போது இடையிலே குழந்தை சின்னச் சின்ன அடி வைத்து நடந்துவந்து கையை நீட்டித், தான் உண்ணும் உணவில் கையை வைத்து, அதே கையால் தன்னையும், தன் தாய் தந்தையரையும் தொட்டு, வாயால் சோற்றைக் கவ்வி, கையை விட்டுத் துளாவி, நெய் மணக்கும் சோற்றைத் தன் மேனியிலும், தன் பெற்றோர் மேனியிலும் உதிர்த்துக்கொண்டு எல்லாரையும் மயக்கும் பாங்கினது அந்தக் குழந்தைச் செல்வம் என்கிறது. அப்படியானவள் தான் இந்த பொன்மதியும்!
மனைவியின் பிறந்த நாளான 15 / 06 / 2023 அன்று, நான் பொன்மதியையும் அவளின் பெற்றோரையும் என் வீட்டிற்கு அழைத்து, அவர்களை மனைவிக்கு அறிமுகப்படுத்தி, பின் பொன்மதியை தனியாக மனைவியுடன் விட்டுவிட்டு நானும் , பொன்மதியின் பெற்றோரும் எமக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சாட்டு சொல்லிவிட்டு வெளியே போய்விட்டோம்.
இள வயது பெண்களுக்குச் சிக்கென்ற உடல், பளபளப்பான முகம், பட்டுக் கூந்தல், வெள்ளை நிறம்தான் அழகு என்கிற எண்ணம் மிகச் சிறிய வயதிலேயே பெண் குழந்தைகள் மனதில் ஊடகங்களால் விதைக்கப்படுகிறது. இந்த வரிசையில் அகப்பட்டவள் தான் என் மனைவி. அவள் இன்னும் சில ஆண்டுகளுக்கு அழகு காதல் மனைவியாக இருக்கவேண்டும் என்ற உள்ளுணர்வை மேலதிகமாக கொண்டு இருந்ததுடன் தாய் அல்லது தாய்மை பருவம் ஒருவேளை இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை குறைத்துவிடும் என்று நம்பினாள். உண்மையில் அழகு என்றால் என்ன? அழகுக்கான இலக்கணம் என்ன? உண்மையில் அழகானவர் யார் என்ற கேள்விக்கு உங்க பதிலும் என் பதிலும் வேறு வேறாகத்தான் இருக்கும். பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, முழுமையான சிவந்த உதடுகள், பருத்தமுலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்தகுழல் மறச்சிறுமி விழிக்குநிக ராகும், .... இப்படி பலவற்றை பலவிதமாக அளவிட்டு வர்ணிக்கிறார்கள். ஆனால் திருமணமாகிய பெண்ணுக்கு தாய்மையே பெரிய அழகு என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. குழந்தை பிறப்பதால் , உடல் எடையும் அதிகரிக்கும். என்ன தான் கஷ்டம் இருந்தாலும் தான் பெற்ற குழந்தையை பார்க்கும் போது அந்த துன்பங்கள் எல்லாம் காணமல் போகும். உடல் அழகு உண்மையான அழகு இல்லை குழந்தை தான் உண்மையான அழகு என்கிறார் கிறிஸ்டின் மெக்கின்னஸ் [christine
mcguinness].
அது தான் பொன்மதியையும் மனைவி, கோமதியையும் தனிய விட்டுவிட்டு வெளியே போயுள்ளேன். ஆழமான தெய்வ பக்தி நிறைந்த கோமதி, விரைவில் குழந்தையும் தெய்வமும் ஒன்றே என உணருவாள் என்ற நம்பிக்கையுடன்!
நன்றி
🖋[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment