"அகவை ஒன்று இன்று கூடுதே!"



"அகவை ஒன்று இன்று கூடுதே

அகங்காரம் எனோ அப்படியே இருக்கே!

ஆசைகள் ஒழிந்தால் சரித்திரம் இல்லையே

ஆணவம் அகன்றால் நானும் இல்லையே!"

 

"இளமை போக முதுமை வரலாம்

இவை ஒன்றும் புதுமை இல்லையே!

ஈன்றவள் தந்த தமிழ் உணர்ச்சியில்

ஈடிகை எடுத்து இன்னும் எழுதுகிறேன்!"

 

"உலகம் இன்று பெருத்து விட்டது

உண்மை எனோ சிறுத்து விட்டதே!

ஊக்கம் தேடல் குறைய வில்லை

ஊனம் உடலில் தோற்ற வில்லை!"

 

"எரிவனம் என்னை எட்டும் வரையும்

எய்யாமை என்னை என்றும் எட்டாதே!

ஏராளம் உலகில் அறிய வேண்டும்

ஏன் எதற்கென்று கேட்க வேண்டும்!"

 

"ஐயம் தெளிந்து வாழ வேண்டும்

ஐதிகம் அறிந்து தொடர வேண்டும்!

ஒற்றுமை  உண்டேல் வெற்றி நமக்கே

ஒழிந்து போகட்டும் வேற்றுமை இன்றே!"

 

"ஓதிக் கெடுக்கும் கூட்டத்தின் நடுவிலும்

ஓகை கொண்டு வாழ்ந்திட வேண்டும்!

ஔவியம் அகற்றி சமரசம் பேசி

ஒளசரம் போல் ஒளிர வேண்டும்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

[அகவை - ஒருவர் பிறந்ததில் இருந்து எத்தனை ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன என்பதைக் குறிக்கும் ஆண்டு அளவு

ஈடிகை - எழுதுகோல்

ஊனம் - உடல் குறை, இயலாமை

எரிவனம் - சுடுகாடு

ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை

எய்யாமை - அறியாமை

ஔவியம் - பொறாமை, அழுக்காறு

ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்

ஓகை - உவகை, மகிழ்ச்சி]

No comments:

Post a Comment