அறிவியல்=விஞ்ஞானம்
மனஅழுத்தத்தின்போது உண்ணக்கூடாத உணவு வகைகள்
அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கும்போது பிடித்த உணவை உண்பது மனதுக்கு ஆறுதல் பெறலாம். ஆனால் இது உடலுக்கு நல்லதல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள். அதுவும் அதிக சுவைமிக்க உணவுகளான நொறுக்குத்தேனி, சிப்ஸ், பிஸ்கட் ஆகியவற்றில் கொழுப்புச்சத்து மிக அதிகம் உள்ளது. அதீத கொழுப்பு சத்து மிகுந்த இத்தகைய உணவுகள் சாதாரண நேரங்களிலேயே தீங்கு தரக் கூடியவை. மன அழுத்தத்தில் இருக்கும் போது இவற்றை உண்டால் உடலுக்கு மிகவும் கேடு என்கிறது சமீபத்திய ஆய்வு.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரமிங்கம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மன அழுத்தத்தின்போது கொழுப்புச்சத்து மிகுந்த உணவு உண்பது ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்றும் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனை குறைக்கும் என்றும் கண்டறிந்துள்ளனர். மூளைக்கு சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் அது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். அத்தோடு மூளை சார்ந்த பிரச்சினைகளும் உருவாகலாம்.
மனஅழுத்த்தத்தில் இருக்கும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது. இரத்த அழுத்தம் கூடுகிறது. மூளைக்கு பாயும் ரத்தம் அதிகமாகிறது. இந்த நேரத்தில் கொழுப்பு சத்துமிக்க உணவை உட்கொண்டால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். ரத்த ஓட்டம் ஒரு சதவீதம் பாதிக்கப்பட்டால் கூட, அது இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு 13 சதவீதம் அதிகரித்து விடும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாலிஃபீனால்கள் அதிகமுள்ள கோகோ, பெர்ரி, திராட்சை, ஆப்பிள் ஆகிய உணவுகளை உண்ணும் போதும் இந்த பிரச்சனை ஏற்படுவதில்லை. இதனால் ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் மன அழுத்தத்தின் போது எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.
உறுப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய முறை
உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு கடுமையாக பாதிக்கப்பட்டால் அதனை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன இதற்கு பதிலாக புதியதொரு 3டி பிரிண்டிங் முறை உறுப்புக்களை சரி செய்ய கை கொடுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
3d பிரிண்ட்டிங்கில் பல முறைகள் உள்ளன. 'வால்யு மெட்ரிக் பிரின்டிங்' என்று அறியப்படும் முறையில் திரவம் போன்ற பொருளை தேவைப்படும் வடிவத்திற்கு மாற்றுவதற்கு ஒளியை பயன்படுத்துவர். ஒளிபடும் இடங்கள் எல்லாம் திட வடிவமாக மாறும் ஆனால் இந்த முறையில் உடலுக்குள் இருக்கும் உறுப்புக்களை சரி செய்ய இயலாது ஏனென்றால் எவ்வளவு திறன்மிக்க ஒளியாய் இருந்தாலும் கூட உடலுக்குள் ஓர் அளவுக்கு தான் போகும்.
இதைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவை சேர்ந்த டியூக் பல்கலை, ஒரு புது 3d பிரிண்ட் முறையை கண்டறிந்துள்ளது. இந்த முறையில் மைபோன்ற பொருளை உடலில் எந்தப் பகுதிக்கு தேவையோ அங்கு அனுப்பி விடுவர். வெளியிலிருந்து 'அல்ட்ராசோனிக்' ஒளியை அந்த மைமீது செலுத்தி தேவைப்படும் வடிவங்களுக்கு ஏற்ப திட நிலைக்கு மாற்றி விடுவர்.
இந்தத் தொழில்நுட்பம் சரியாக செயல்படுகிறதா என்று பார்ப்பதற்காக விலங்குகளில் சோதித்தனர். அதில் நல்ல முடிவுகள் கிடைத்தன. இதயம் பாதிக்கப்பட்ட ஆட்டுக்கு இதன் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டது. கோழியின் பாதிக்கப்பட்ட கால எலும்பு சரி செய்யப்பட்டது. வருங்காலங்களில் அறுவை சிகிச்சைக்கு மாற்றாக இந்த தொழில்நுட்பம் பரவலாக பயன்பாட்டிற்கு வரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அதிகமாக எடுத்தால் யாருக்குத் தீமை
கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு சத்துக்களில் நல்லவை, தீயவை என்று இருவகைகள் உள்ளன. நல்ல கொலஸ்ட்ராலாக இருந்தாலும் கூட அவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது, மறதி தொடர்பான மூளை நோய்களை உடையவர்களுக்குத் தீமை விளைவிக்கும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த மொனாஸ் பல்கலை மேற்கொண்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிறுநீரக கல்லைக் கரைக்க
நிறைய பேருக்கு சிறுநீரக கல் பிரச்சினை வருகிறது. வயது, உடல் பருமன் ஆகியவைதான் இதற்கு காரணங்கள் என கருதப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இள வயதினருக்கும் சரியான உடல் எடை கொண்டோருக்கும் கூட இப்பிரச்சனை வருகிறது
. மக்கள் தொகையில் 10% பேருக்கு இச்சிக்கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இது குறித்து தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் ஓர் ஆய்வு குடல் நுண்ணுயிர்களுக்கும், கல் உருவாக்கத்திற்கும் தொடர்பு உள்ளதாக கூறுகிறது.
'கால்சியம் ஆக்ஸலேட்'களால் ஆன இந்தக் கற்களை உடைக்கின்ற ஆற்றல் 'ஆக்ஸலோபாக்டர்ஃபோர்மிஜெனஸ்'
என்ற பாக்டீரியாவுக்கு உண்டு என்பது முன்னரே அறியப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கனடாவை சேர்ந்த லாசன் ஹெல்த் டீ சர்ட் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இன்னும் பல பாக்டீரியாக்களுக்கு இந்த ஆற்றல் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
சிறுநீரகக் கல் உள்ள 83 பேரையும், கல்லில்லாத ஆரோக்கியமான 30 பேரையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அதில் கல் உள்ளவர்களில் உடலில் நன்மை செய்யும் பக்ரீறியா மிகக் குறைவாக இருந்ததும், ஆரோக்கியமானவர்களில் அவை அதிக அளவில் இருப்பதும் கண்டறியப்பட்டது. ஆகவே நல்ல பாக்டீரியா அதிகமாய் இருக்கின்ற தயிர் உணவுகளை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவை கல் உருவாக்கத்தை தடுக்கும் என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரோபோ- கின்னஸ் சாதனை
கொரியாவை சேர்ந்த 'கெய்ஸ்ட்' ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட 'ஹெளவுண்ட்' எனும் 45 கிலோ எடையுள்ள ரோபோ, 100 மீட்டர் தூரத்தை வெறும் 19.87 வினாடி நேரத்தில் கடந்து கின்னஸ் சாதனை செய்துள்ளது.
தீராத வலி-காரணம்
கனடாவை சேர்ந்த எம் சி கில் பல்கலை சேர்ந்த ஆய்வாளர்கள் நடுத்தர வயதினருக்கு ஏற்படும் தீராத கழுத்துவலி, முதுகு வலி ஆகியவற்றிற்கு சிறுவயதில் அவர்கள் அனுபவித்த உடல், மன உணர்வு ரீதியான பிரச்சினைகள் காரணமாக இருப்பதனை கண்டறிந்துள்ளனர்.
ஹைட்ரஜன் வாகனம்
கவாஸாகி நிறுவனம் முழுதும் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளது. இதற்கு நிஞ்சா எச்௨ எஸ்எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதிலிருந்து சிறிதளவு கார்பன் கூட வெளியிடப்படாது.
பதிவு:செ மனுவேந்தன்
No comments:
Post a Comment