ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வதை தடுக்க முடியுமா?



நாம் உண்ணும் உணவு நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

நாம் அன்றாடம் உண்ணும் உணவு, நமது தோல் மற்றும் முடி பளபளப்பையும் பாதிக்கிறது.

 

ஒருவருக்கு முடி உதிர்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல. நம்முடைய தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிர்கிறது என்றால், நம் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதற்கான முதல்கட்ட அறிகுறியே முடி உதிர்தல். அதை நாம் எப்போதும் அலட்சியம் செய்யக்கூடாது.

 

பல நாட்களாக இருக்கும் மன அழுத்தம், மரபியல், நமது உடல் ஹார்மோனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அல்லது சில மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் முடி உதிர்தல் ஏற்படலாம்.

 

நமது தலைமுடியைப் பாதிக்கும் காரணிகளை அறிந்துகொள்வதோடு, எளிய வகையில், எப்படி முடி உதிராமல் பராமரிப்பது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

 

முடி உதிர்வை கட்டுப்படுத்த என்ன உணவு சாப்பிட வேண்டும்?

முடி உதிர்வை கட்டுப்படுத்துவது எப்படி?

புரதங்கள், வைட்டமின் பி மற்றும் இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்த சில உணவுகள் ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் முக்கியம்.

 

அனோரெக்ஸியா (பசியின்மை) மற்றும் புலிமியா (அதிகமாகச் சாப்பிடுவது) போன்ற மருத்துவ உடல்நிலைகள் முடி உதிர்வதற்கான காரணிகளில் ஒன்று.

 

முடி உதிர்வைக் கட்டுப்படுத்த, மீன் மற்றும் பிஞ்சு விதைகளில் இருந்து தயாராகும் ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

 

இரும்புச் சத்துள்ள பேரிச்சை போன்ற பழங்கள், மீன், கீரைகள் முடி நன்கு வளர உதவுவதுடன் முடி உதிர்வதையும் தடுக்கும்.

 

அதைப்போலவே பால், முட்டை, பயிறு உள்ளிட்ட புரதம் மிகுந்த உணவும் மிகமிக அவசியம். விட்டமின் நிறைந்த உணவுகள் முடிக்கு நன்மை தரும்.

 

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்தான் முடிக்கு கரு நிறத்தைத் தருகிறது. விட்டமின் பி காம்ளெக்ஸ் மற்றும் அனைத்து வகையான ஊட்டச்சத்து அடங்கிய உணவு, எண்ணெய் தேய்த்து பராமரிப்பு செய்தல் ஆகியவை நரை முடி வருவதைத் தடுக்கும்.

 

முடி உதிர்தலுக்கு மன அழுத்தமும் ஒரு காரணம்

மன அழுத்தம், நம் உடலின் கோர்ட்டிசோல் ஹார்மோனின்(cortisol hormone ) அளவை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோனின் வெளியீடு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், பிரச்னைகள் ஏற்படும்.

 

இன்றைய சூழலில், மன அழுத்தம் என்பது நமது வாழ்வில் மிகவும் சாதாரணமாகிவிட்டது. இந்த மன அழுத்த நிலைகள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால், முடி உதிர்தல் பிரச்னை தொடங்கும்.

 

அட்ரீனலின் சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் கோர்ட்டிசோல் ஹார்மோன் முடி உதிர்வதற்கான முக்கிய காரணியாக உள்ளது. மன அழுத்தம் குறையும் போது, ​​உடலில் இந்த ஹார்மோனின் அளவு இயல்பு நிலைக்குத் திரும்பும்.

 

உணவின் மூலம் இந்த ஹார்மோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுலாம். நிச்சயமாக முடியும்.

 

மீன் வகைகள், சில வகையான விதைகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள், வைட்டமின்கள், தாதுக்கள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கோர்ட்டிசோல் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தலாம்.

 

புளித்த உணவுகள் முடி உதிர்வதை கட்டுப்படுத்துமா?

முடி உதிர்வை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்பட மூலாதாரம்

புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

இங்குதான் நமது குடலில் உள்ள மைக்ரோபயோட்டா எனப்படும் நுண்ணுயிரிகளின் (microbiota) பங்கு முக்கியமானது. மைக்ரோபயோட்டா(microbiota) என்பது நமது செரிமான அமைப்பில் உள்ள நுண்ணுயிர்களின் குழுக்கள்.

 

நாம் ஆரோக்கியமாக இருப்பதிலும், நாோயால் பாதிக்கப்படுவதிலும் மைக்ரோபயோட்டாவின் பங்கு உள்ளது. மைக்ரோபயோட்டாவிற்கும் நாம் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கும் தொடர்பு உள்ளது.

 

நாம் உண்ணும் உணவைப் பொறுத்து நமது உடலில் உள்ள மைக்ரோபயோட்டா வேறுபடுகிறது. நமது உணவு முறை மாறுபட்டால், குடலில் உள்ள பாக்டீரியாக்களும் மாறுகின்றன. எனவே, தயிர் போன்ற புரோபயாடிக்குகளை(probiotics) மற்ற புளித்த உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது முடியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

 

இவற்றைப் பின்பற்றி வந்தால் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

 

[இந்த கட்டுரையின் ஆசிரியர் பிலார் அர்ஜென்டோ அரிசோனா, சான் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தில் சுகாதார அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.]

நன்றி: பிலார் அர்ஜென்டோ அரிசோனா/பிபிசி /தி கான்வர்சேஷன்

No comments:

Post a Comment