தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல்:

மண்டை ஓடு, மூளை என்ன ஆகும்?


தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கோவில் வழிபாடுகளின்போது, கடவுளிடம் பிரார்த்தனை வைத்து, அது நிறைவேறியவுடன் வேண்டுதலை பூர்த்தி செய்வதற்காக தீ மிதிப்பது, அலகு குத்துவது, தலையில் தேங்காய் உடைப்பது ஆகிய செயல்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.

 

சமீபத்தில் அத்தகைய வேண்டுதல் நடவடிக்கையைப் பார்த்தபோது, உள்ளம் பதைபதைத்த அதேநேரத்தில் மனிதர்களுடைய மண்டை ஓடு எந்தளவுக்கு உறுதியானது என்ற கேள்வியும் உள்ளூர எழுந்தது.

 

சாதாரணமாக, யாருடைய தலையோடு தலையாக சற்று வேகமாக மோதினாலே தலை வலி எடுத்துவிடும். நம்மை அறியாமல் சுவற்றிலோ, கதவிலோ இடித்துக் கொள்ளும்போதே நடு மண்டை வரை சுளீரென ஏறும் வலியை நம்மில் அனைவரும் அறிந்திருப்போம். அப்படியிருக்கும்போது ஒரு முழு தேங்காயை தலையில் அடித்து உடைத்தால் எப்படியிருக்கும்!

 

தலையில் தேங்காய் உடைப்பதும் வழக்கமாக ஏற்படக்கூடிய காயங்களைப் போன்றதுதான் என்கிறார் மருத்துவர் அர்ஷத் அகீல். “வாகனம் ஓட்டும்போது திடீரென எங்காவது மோதுவது, எதிர்பார்க்காத நேரத்தில் தலைமீது ஏதேனும் பொருள் விழுவது ஆகியவற்றைப் போலவே தான் இதன் தாக்கமும் இருக்கும்.

 

ஒருவருடைய தலையில் தேங்காயை உடைக்க முயல்வது சில நேரங்களில், சாதாரண காயங்களோடு போகலாம். ஆனால், சில நேரங்களில் எலும்புகள் காயமடைவது முதல் உள்காயங்களான ரத்தக்குழாய்களில் சேதம், ரத்த உறைவு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்,” எனக் கூறுகிறார் மருத்துவர் அர்ஷ்த அகீல்.

 

மண்டை ஓட்டின் முக்கியமான பணிகள்

மரம், இரும்பு ஆகியவற்றோடு மனித மண்டை ஓட்டின் வலிமையைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம். மனித மண்டை ஓடு அவற்றின் அளவுக்கு உறுதியானது இல்லையென்றாலும், அதனால் சுமார் 68 ஜூல்ஸ் அளவிலான தாக்கத்தை எதிர்கொள்ள முடியும். அதேவேளையில், இந்த உறுதி ஒவ்வொருவரின் உடல்நிலைமையைப் பொறுத்து மாறுபடலாம் என்கிறார் அர்ஷத் அகீல்.

 

இயற்பியலின்படி, சராசரியாக ஒரு தேங்காயை சுக்குநூறாக உடைப்பதற்கு 320 கிலோவுக்கும் மேலான அழுத்தத்திற்கு நிகரான வேகத்தைப் பயன்படுத்த வேண்டும். அதையே இரண்டாக உடைப்பதற்கு குறைந்தபட்சம் 90 கிலோ அளவிலான அழுத்தத்திற்கு நிகரான வேகத்தையும் பலத்தையும் பிரயோகிக்க வேண்டும்.

 

இத்தகைய வலிமையான வெளிப்புறம் கொண்ட தேங்காயை தலையில் உடைக்கிறார்கள் என்றால், நம்முடைய மண்டை ஓடு எந்தளவுக்கு உறுதியானது, அதன் அமைப்பு எப்படிப்பட்டது என்ற சந்தேகம் எழுந்தது.

 

அதற்கான பதிலைத் தேடியபோது, 2012ஆம் ஆண்டில் இன்டர்நேஷனல் ரிவ்யூ ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்ற ஆய்விதழில் இந்தோனீசியாவை சேர்ந்த வலுயோ அடி சிஸ்வன்டோவின் மனித மண்டை ஓடு குறித்த ஆய்வறிக்கை கிடைத்தது. அதன்மூலம், தலைப் பகுதி குறித்த முக்கியமான தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.

 

தலையும் மூட்டுப் பகுதிகளும் மனித உடலின் மிகவும் முக்கியமான பாகங்கள். அவை நன்கு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். மண்டை ஓடு முகத்தின் பாகங்களையும் மூளையையும் பாதுகாக்கிறது. நன்கு வளர்ந்த ஒரு மனிதரின் மண்டை ஓடு, 22 எலும்புகளைக் கொண்டிருக்கும். இவை, தலைப் பகுதி மற்றும் முகப் பகுதி என்று இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 

கீழ்தாடையைத் தவிர மற்ற அனைத்து எழும்புகளுமே மிக மிகக் குறைவாக அசைக்கக்கூடிய வகையில் தான் இருக்கின்றன. இவற்றில் 8 எலும்புகள் மூளையைச் சுற்றி ஒரு பாதுகாப்பு உரையைப் போல் அமைந்துள்ளன. அதுபோக மீதமுள்ள 14 எலும்புகளும் முக அமைப்பில் இருக்கின்றன.

 

மூளையைப் பாதுகாப்பது, முப்பரிமாண பார்வையை வழங்குவதற்குரிய வகையில் கண்களுக்கு இடையில் இடைவெளியைத் தக்க வைப்பது, ஒலியின் திசை மற்றும் தொலைவை மூளை கணக்கிடுவதற்கு ஏதுவான அமைப்பில் காதுகளை வைத்துக் கொள்வது ஆகியவை தான் மண்டை ஓட்டின் ஆகப்பெரும் வேலைகள்.

 

மண்டை ஓட்டின் கடினமான தன்மை, உறுதியான மேற்புறம் ஆகியவற்றின் முக்கியத்துவமே மூளையைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அத்தகைய பகுதியில், கடுமையான தாக்கம் ஏற்பட்டால் அங்குள்ள 8 எலும்புகளில் ஒன்றோ அல்லது அதற்கும் மேலோ உடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

 

நேரடியாக மண்டை ஓட்டில் ஏற்படும் அத்தகைய தாக்கம் அல்லது தாக்குதலால் எலும்புகள் உடைவது மட்டுமின்றி, சில நேரங்களில் அதற்குக் கீழே இருக்கும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். இதனால், நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, ரத்தக்கசிவு, ரத்தம் உறைவது, ஆகியவை முதல் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுவது வரை கூட செல்லலாம்.

 

ஒருவேளை, தற்காப்புக் கலையில் ஈடுபடுவோர் தொடர்ச்சியான பயிற்சிகளின் மூலம் செங்கல், ஓடு ஆகியவற்றை உடைக்கும் அளவுக்குத் தங்கள் உடலை உறுதியாக்கிக் கொள்வதைப் போல, தலையில் தேங்காயை உடைப்பதிலும் நிகழுமா என்ற கேள்வி எழுந்தது.

 

அதற்கு, “கை, கால் ஆகியவற்றை பயிற்சிகளின் மூலம் வலிமையாக்குவது வேறு, தலையில் அடிப்பது வேறு. அதுமட்டுமின்றி, தற்காப்புக் கலையைப் பயில்பவர்கள் இதற்கு நீண்டகாலம் பலகட்ட பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதை வேண்டுதலுக்காக தேங்காயை தலையில் உடைக்கும் சராசரி மக்களோடு தொடர்புபடுத்த முடியுமா என்பது சந்தேகம் தான்,” எனக் கூறுகிறார்.

 

மேலும், “எப்படியிருப்பினும் இத்தகைய முயற்சிகளை பயிற்சிகளுக்குப் பிறகு எடுத்தாலும் அதில் காயங்கள் ஏற்படலாம். மூளை போன்ற மிகவும் முக்கியமான உடல் பாகங்கள் இருக்கக்கூடிய தலைப் பகுதியை அபாயத்திற்கு உள்ளாக்காமல் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்,” என்றார் மருத்துவர் அர்ஷத் அகீல்.

 

இவை சாத்தியமாகக்கூடிய விஷயம் தான் என்றாலும், மருத்துவரீதியாக அது பரிந்துரைக்கத்தக்கவை அல்ல. இது வயதைப் பொறுத்தும் மாறுபடலாம். 20 வயதுக்குக் கீழுள்ளவர்கள், 50 வயதைத் தாண்டியவர்களுக்கு அதிக பாதிப்புகள் இதனால் ஏற்படலாம். மண்டை ஓட்டிலுள்ள எலும்புகள் காயமடைவது, உடைவது போன்றவை ஏற்படலாம்,” எனக் கூறுகிறார் நரம்பியல் நிபுணர் மருத்துவர் சதீஷ் குமார்.

 

இதுமட்டுமின்றி, “மண்டை ஓட்டின் உள்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்படலாம். அதன் விளைவாக, வலிப்பு ஏற்படுவது, சுயநினைவை இழப்பது முதல் உயிருக்கே ஆபத்தாகும் நிலை வரை செல்லக்கூடும்,” எனக் கூறும் சதீஷ், நம்முடைய மண்டை ஓடு எந்தளவுக்கு அழுத்தத்தை, தாக்கத்தை தாங்கக்கூடும் என்பதற்கு துல்லியமான வரையறை இல்லை என்கிறார்.

 

அது ஒவ்வொன்றுடைய வலிமை, உறுதி, தாங்குதிறன் ஆகியவற்றைப் பொறுத்தது. இவை மட்டுமின்றி, இத்தகைய செயல்களால், மிக மிக லேசான ரத்தக்கசிவு ஏற்படும். இது ஸ்கேன் மூலமாகக் கூட தெளிவாகத் தெரியாது. அதனால், மறதி, தலைவலி போன்ற பிரச்னைகள் தாமதமாக ஏற்படலாம்.

 

இத்தகைய நடவடிக்கைகளைச் செய்து முடித்த பிறகு சாதாரணமாக ஒன்றும் நடக்கவில்லை என்று நினைத்து வழக்கமான வேலைகளுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் கழித்து இத்தகைய பாதிப்புகளுக்கு அவர்கள் உள்ளாகலாம்,” எனக் கூறுகிறார் மருத்துவர் சதீஷ்.

 

 

நன்றி::-- க. சுபகுணம்-/-பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment