திருக்குறள் தொடர்கிறது…
39. இறைமாட்சி
👉குறள் 381:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு.
மு.வ உரை:
படை குடி கூழ் அமைச்சு
நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
சாலமன் பாப்பையா உரை:
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று
மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர்,
துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில்
சிங்கம் போன்றது.
கலைஞர் உரை:
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த
குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண்
ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.
English Explanation:
He who possesses
these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress,
is a lion among kings.
👉குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.
மு.வ உரை:
அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை,
ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அநீதிக்கும் பகைவர்க்கும்
பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து
வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க
வேண்டும்.
கலைஞர் உரை:
துணிவு, இரக்க சிந்தை,
அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய
தகுதிகளாகும்.
English Explanation:
Never to fail in these
four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly
character.
👉குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்நீங்கா நிலனாள் பவற்கு.
மு.வ உரை:
காலம் தாழ்த்தாத தன்மை,
கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல்
இருக்க வேண்டியவை.
சாலமன் பாப்பையா உரை:
செயல் ஆற்றுவதில் சோர்வு
இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு
இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.
கலைஞர் உரை:
காலம் தாழ்த்தாத விரைவான
நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல்
நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.
English Explanation:
These three things,
viz, vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of
a country.
👉குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.
மு.வ உரை:
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில்
தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்குச் சொல்லப்பட்ட
அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில்
தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.
கலைஞர் உரை:
அறநெறி தவறாமலும், குற்றமேதும்
இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.
English Explanation:
He is a king who,
with manly modesty, swerves not from virtue, and refrains from vice.
👉குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
மு.வ உரை:
பொருள் வரும் வழிகளை மேன்மேலும்
இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும்
வல்லவன் அரசன்.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் வரும் வழிகளை உருவாக்குவது
வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம்,
பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.
கலைஞர் உரை:
முறையாக நிதி ஆதாரங்களை
வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச்
செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.
English Explanation:
He is a king who is
able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.
👉குறள் 386:
காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம்.
மு.வ உரை:
காண்பதற்கு எளியவனாய்க்
கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு
எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு
விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)
கலைஞர் உரை:
காட்சிக்கு எளிமையும்,
கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.
English Explanation:
The whole world will
exalt the country of the king who is easy of access, and who is free from harsh
language.
👉குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு.
மு.வ உரை:
இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப்
பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய சொல்லுடன் பிறர்க்குக்
கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும்
இவ்வுலகம் தரும்.
கலைஞர் உரை:
வாக்கில் இனிமையும், பிறர்க்கு
வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
English Explanation:
The world will
praise and submit itself to the mind of the king who is able to give with
affability, and to protect all who come to him.
👉குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும்
மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்
மு.வ உரை:
நீதி முறை செய்து குடிமக்களைக்
காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
நீதிவழங்கி மக்களைக் காக்கும்
அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.
கலைஞர் உரை:
நீதிநெறியுடன் அரசு நடத்தி,
மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.
English Explanation:
That king, will be
esteemed a God among men, who performs his own duties, and protects (his
subjects).
👉குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கு முலகு.
மு.வ உரை:
குறைகூறுவோறின் சொற்களைக்
செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
இடித்துக் கூறும் தகுதி
மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும்
பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.
கலைஞர் உரை:
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும்
பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.
English Explanation:
The whole world will
dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.
👉குறள் 390:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.
மு.வ உரை:
கொடை, அருள், செங்கோல்முறை,
தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப்
போன்றவன்.
சாலமன் பாப்பையா உரை:
தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக்
கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது,
மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.
கலைஞர் உரை:
நலவாழ்வுக்கு வேண்டியவற்றை
வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப்
பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.
English Explanation:
He is the light of
kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care
for his people.
❤❤❤❤❤❤
No comments:
Post a Comment