திருக்குறள் தொடர்கிறது…
38. ஊழ்
👉குறள் 371:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்று மடி.
மு.வ உரை:
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள்
போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:
பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும்.
இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.
கலைஞர் உரை:
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின்
அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.
English
Explanation:
Perseverance comes from a
prosperous fate, and idleness from an adverse fate
👉குறள் 372:
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.
மு.வ உரை:
பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ்
அறிவைப் பெருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய
விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.
கலைஞர் உரை:
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை,
அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.
English Explanation:
An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged
knowledge
👉குறள் 373:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
மு.வ உரை:
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள
தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை:
பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய
பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)
கலைஞர் உரை:
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை
அறிவே மேலோங்கி நிற்கும்.
English Explanation:
Although (a man) may study the most polished treatises, the knowledge
which fate has decreed to him will still prevail.
👉குறள் 374:
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
மு.வ உரை:
உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும்
வேறு அறிவு உடையவராதலும் வேறு.
சாலமன் பாப்பையா உரை:
உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும்
வேறு வேறாம்.
கலைஞர் உரை:
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர்
அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.
English Explanation:
There are (through fate) two different natures in the world, hence the
difference (observable in men) in (their acquisition of) wealth, and in their
attainment of knowledge.
👉குறள் 375:
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.
மு.வ உரை:
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு,
தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை
சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும்
நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.
கலைஞர் உரை:
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய
செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.
English Explanation:
In the acquisition of property, every thing favourable becomes
unfavourable, and (on the other hand) everything unfavourable becomes
favourable, (through the power of fate).
👉குறள் 376:
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
மு.வ உரை:
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல்
போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா
என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
கலைஞர் உரை:
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல்
போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
English Explanation:
Whatever is not conferred by fate cannot be preserved although it be
guarded with most painful care; and that, which fate has made his, cannot be
lost, although one should even take it and throw it away.
👉குறள் 377:
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.
மு.வ உரை:
ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும்
அவற்றை நுகர முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை
அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
கலைஞர் உரை:
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள்
குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.
English Explanation:
Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).
👉குறள் 378:
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
மு.வ உரை:
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத
வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை
என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.
கலைஞர் உரை:
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள்
வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.
English Explanation:
The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.
👉குறள் 379:
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்.
மு.வ உரை:
நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது
துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.
சாலமன் பாப்பையா உரை:
நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும்
துன்பப்படுவது ஏன்?
கலைஞர் உரை:
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள்,
தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?
English Explanation:
How is it that those, who are pleased with good fortune, trouble
themselves when evil comes, (since both are equally the decree of fate) ?
👉குறள் 380:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
மு.வ உரை:
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு
வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு
ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?
கலைஞர் உரை:
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை
நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?
English Explanation:
What is stronger than fate ? If we think of an expedient (to avert it),
it will itself be with us before (the thought).
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
0 comments:
Post a Comment