"காலத்தினால் செய்த உதவி" -சிறு கதை


"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது." 

காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆமாம் உதவி என்பது எப்படி செய்கிறோம், எவ்வளவு செய்கிறோம் அல்லது யாருக்கு செய்கிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதை என்றும் தன் நெஞ்சில் பதித்து வாழ்பவள் தான்,  ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில், வாழும் உடலாலும் மனதாலும் அழகிய இந்த  இளம் பெண். அவளின் பெயர் 'அருள்மலர்'. பெயருக்கு ஏற்ற அன்பு, இரக்கம், மற்றும் எந்தநேரமும் உதவும் இயல்பு கொண்டவர்.  ஒரு சிறிய கருணை செயல் ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற தீவீர நம்பிக்கை உடையவள். அழகில் ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை, ஏன் ரதி தேவதையை விட ஒரு படி மேல் என்று சொல்லலாம்!

மனதை கவரும் ஒரு மாலை பொழுது, சூரியன் மலையில் மறையும் அழகை ரசித்தபடி அருள்மலர் தன் வீட்டின் முற்றத்தில் இருந்த பாறாங்கல்லில் குந்தி இருந்தாள். இவளின் அழகு கதிரவனையும் கொஞ்சம் தடுமாற வைத்தது போலும். அந்த தடுமாற்றம் இயற்கையை குழப்பியது போல, இதுவரை அழகை பரப்பிய அது, திடீரென, எந்த முன் அறிவித்தாலும் இல்லாமல், கிராமத்தின் மீது கடுமையான புயலை வீசியது. காற்று ஊளையிட்டது, பலத்த மழை பெய்தது. ஓயாத புயலில் இருந்து தஞ்சம் தேடி கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு விரைந்தனர். ஆனால் அருள்மலர், தனது இரக்கமுள்ள இதயத்துடன், புயலின் கோபத்தில், வெள்ளத்தின் சீற்றத்தில் யாராவது சிக்கிக்கொண்டார்களா என்று தான் இதுவரை இருந்த பாறையின் உச்சத்தில் எழுந்து நின்று நான்கு பக்கமும் பார்த்தாள்.  மரங்கள் சுற்றி இருந்ததால், சரியாக பார்க்கமுடியவில்லை.

அவள் உடனடியாக தன் வீட்டின் மாடி ஜன்னலின் ஊடாக வெளியே எட்டிப்பார்த்த போது தான், ​​ஒரு வயதான பெண் மழையின் வழியே, வெள்ளத்தின் நடுவில், மின்னலின் வெளிச்சத்தில், நடக்க சிரமப்படுவதை கவனித்தாள். அந்தப் மூதாட்டி நனைந்து, நடுங்கி, ஒரு கிழிந்த குடைக்குள், ஆனால் அவநம்பிக்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்தாள். அருள்மலரின் இதயம் பச்சாதாபத்தால் வீங்கியது, அவள் எப்படியாவது உதவ வேண்டும் என்று முடிவு எடுத்தாள். .

சிறிதும் தயங்காமல், அருள்மலர் தனது நீர்புகா மேற்சட்டை [ரெயின்கோட்டைப்] ஒன்றை அணிந்துகொண்டு வெளியே விரைவாக விரைந்தாள். சீறிப் பாய்ந்த காற்றையும் வழுக்கும் சேற்றையும் எதிர்த்துப் போராடி, கிழவியின் பக்கம் ஒருவாறு வந்தாள். அருள்மலர் ஓடிப்போவதைக் கண்ட சில இளைஞர்களும் ஆவலுடன் இணைந்தனர். அது அவளுக்கு மேலும் உத்வேகத்தை கொடுத்தது. மூதாட்டி மிகவும் பயந்தும் களைத்தும் இருந்ததால், அவளுடன் இணைந்த  இளைஞர்கள் மூலம் மூதாட்டியை தூக்கி சிறிது தூரத்தில் இருந்த தன் வீட்டை நோக்கி எல்லோரையும் வழிநடத்தினாள்.

அவர்கள் எல்லோரும் சேறும் வெள்ளமும் நிறைந்த பாதைகள் வழியாகச் சென்றனர், மழை அவர்கள் எல்லோரையும் முழுமையாக  நனைத்தது. மூதாட்டி, புயல் காரணமாக தனது வீட்டில் மின்சாரம் முற்றாக இழந்ததையும், உதவிக்கு யாரையும் அழைக்க முடியாமல் போனதையும் அருள்மலருக்கும் மற்றவர்களுக்கும் தளதளத்த குரலில் கூறினாள். அருள்மலர் அதை கவனமாகக் கேட்டாள், தன்னால் முடிந்த எந்த வகையிலும் ஆறுதலையும் ஆதரவையும் வழங்குவதில் உறுதியாக இருந்தாள்.

தனது வீட்டில் மூதாட்டி மற்றும் இளைஞர்களுக்கு சுட சுட தேநீரும் அதனுடன் கடிக்க தன்னிடம் இருந்த எதோ சில பண்டங்களையும் கொடுத்து, சிறு ஆறுதல் அடைந்தபின், இறுதியாக, அவர்கள் எல்லோரும் மூதாட்டியின் சிறிய குடிசைக்கு வந்தனர். உட்புறம் இருட்டாக இருந்தது, மற்றும் அலறல் காற்று சுவர்களின் விரிசல் [இடைவெளி] வழியாக ஊடுருவியது. என்றாலும் தன்னுடன் வந்த இளைஞர்களின் உதவியுடன் தற்காலிகமாக சில நடவடிக்கைகளை எடுத்து ஓரளவு மூதாட்டியின் குடிசையை சரிப்பண்ணியத்துடன், அவள் கண்களில் உறுதியுடன், எல்லாம் சரியாகிவிடும் என்று மூதாட்டிக்கு  உறுதியளித்தாள்.

ஒளிரும் விளக்கைப் [flashlight] பயன்படுத்தி, அருள்மலர்  மெழுகுவர்த்திகள் மற்றும் தீப்பெட்டிகளைத் மூதாட்டியின் குடிசையில் தேடினாள் . அவள் அவற்றை ஒவ்வொன்றாக முக்கிய முக்கிய இடங்களில் ஏற்றி, அறையை ஒரு சூடான, மினுமினுப்பான பிரகாசத்தால் நிரப்பினாள். இதற்கிடையில் வளிமண்டலம் [அல்லது காலநிலைமிகவும் அமைதியானது, அத்துடன் மூதாட்டியின் நடுக்கம் தணிந்தது. என்றாலும் அருள்மலர் வெளியே சென்று அந்த இளைஞர்கள் துணையுடன் கொஞ்சம் தடிப்பான இரண்டு  போர்வைகளைச் சேகரித்து, ஒரு சிறிய எரிவாயு அடுப்பில் சூடான வடிசாறையும் [சூப்பையும் அல்லது காய்கறிக் கஞ்சியையும்] தயாரித்து திரும்பவும் மூதாட்டியின் குடிசைக்கு வந்தாள்.

அவர்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து, சூடான சூப்பைப் பருகும்போது, ​​மூதாட்டி தன் தனிமையை மறந்துவிட்டதை உணர்கிறார் என்பதை அருள்மலர் உணர்ந்தாள். அருள்மலர் இரக்கத்துடனும் , அன்புடனும் மூதாட்டியுடன் அளவளாவி, கிராமத்தில் எப்போதும் ஒரு நண்பர் உங்களுக்கு தனிமையை போக்கி கதைக்க, உதவ இருப்பார் என்று உறுதியளித்தாள்.

அடுத்த அடுத்த நாட்களில், புயல் முற்றாக தணிந்து, கிராமம் மீண்டும் பழைய நிலைக்கு வரத் தொடங்கியது. மின்சாரம், மற்றும் தொலைபேசிகள் வழமைக்கு திரும்பியது, கிராம மக்கள் தங்கள் பழைய வாழ்வுக்கு திரும்பினர். ஆனால் அருள்மலரின் கருணை செயல்  மூதாட்டியின் இதயத்தில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றது.

மூதாட்டி, இப்போது தன்னுள் ஒரு புதுப்பித்த உணர்வை உணர்ந்து, கிராமத்துடனும் அருள்மலருடனும் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார். அருள்மலரின் தன்னலமற்ற தன்மையையும், புயலின் போது அவள் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவையும் அவர் பாராட்டினார். அருள்மலரின் செயல்களால் ஈர்க்கப்பட்ட கிராமவாசிகள், அவளது அளவிட முடியாத  கருணையைக் கொண்டாட வார இறுதியில் ஒன்றுகூடினர்.

அன்று முதல், அருள்மலர் கிராமத்தில் நம்பிக்கை மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக மாறினாள். ஊர்மக்களால் பெற்ற ஆர்வம் [உற்சாகம்], அவளை சமூக நிகழ்வுகளை, தன்னார்வக் குழுக்களை அங்கும் அயல் கிராமங்களிலும் நிறுவ ஊக்கம் கொடுத்தது.  மேலும் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் மக்களை ஒன்றிணைத்தாள். மூதாட்டியின் தேவையின் போது அவருக்கு உதவிய அவளது எளிய செயல் கிராமத்தில் ஒற்றுமை மற்றும் கருணையின் தீப்பொறியை பற்றவைத்தது.

ஆண்டுகள் செல்ல செல்ல, அருள்மலரின் தாக்கம் கிராமத்திற்கு அப்பால் நீண்டது. அவளுடைய கதை மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்தது, மேலும் அவளுடைய இரக்கச் செய்தி காட்டுத்தீ போல பரவியது. தொலைதூர சமூகங்கள் அவளது  தத்துவத்தை ஏற்றுக்கொண்டன, இருண்ட காலங்களில் உதவும் கரத்தின் சக்தியை அங்கீகரித்தன.

"காலத்தினால் செய்த உதவி" அல்லது  அருள்மலரின் கதை ஒரு புராணக்கதையாக மாறி, கருணை மற்றும் தன்னலமற்ற அவளது மரபு, எமது அடுத்த அடுத்த  தலைமுறைகளுக்கும் தொடரும் என்பதில் ஐயமில்லை. இரக்கத்தின் ஒரு செயல், உலகில் ஏற்படுத்தக்கூடிய ஆழமான தாக்கத்தை நம் அனைவருக்கும் இன்று அது நினைவூட்டிக் கொண்டு இருக்கிறது!

நன்றி:- [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]