- வல்லுநர்கள் வழங்கும் ஆச்சரிய தகவல்கள்
நீண்ட வேலை நேரம் - அதில் சில பணிகளை நாம் விரும்பி செய்கிறோம் சிலவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், எது எப்படியோ நமது பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டுதான் செல்கிறது. எனவே நாள் முழுவதும் நமது ஆற்றலை தக்க வைத்து கொள்வது சிரமம்தான்.
கணினியில் இருப்பது போல நமது ஆற்றல் குறையும்போது ஒரு 'ரீஸ்டார்ட் பட்டனை' அழுத்தி மீண்டும் 'சார்ஜ்' செய்து கொண்டால் எப்படியிருக்கும்?
இம்மாதிரியான ஒரு ரீஸ்டார்ட் பட்டனாக 'நாப்' எனப்படும் 'குட்டித்தூக்கம்' இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் இரவு தூக்கத்திலிருந்து விழித்து கொள்ளும் நேரம் முதல் நமது மூளையில் 'அடினோசின்' எனும் ரசாயனம் அதிகரித்து கொண்டே செல்லும்.
எனவே நீங்கள் அதிக நேரம் விழித்து கொண்டிருக்கும்போது உங்கள் மூளையில் அடினோசின் அதிகமாகும். அது தூக்க உணர்வை அதிகரிக்கும்.
"ஆனால் நாம் சிறிது நேரத்திற்கு தூங்கும்போது இந்த அடினோசின் குறைகிறது. எனவே நமது ஆற்றல் அதிகரித்து நாம் விழிப்புடன் இருப்போம்," என்கிறார் லண்டனில் உள்ள 'தி ஸ்லீப்' பள்ளியின் துணை நிறுவனர் கை மீடோவ்ஸ்.
இந்த குட்டித்தூக்கம் என்பது 10-20 நிமிடங்களுக்குட்பட்டதாக இருக்கும்.
ஆனால் இதுவே நாம் நமது நினைவாற்றல், புதுமையான சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், ஆராயும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த குறைந்தது 90 நிமிடங்களாக தூங்க வேண்டும் என்கிறார் 'டேக் எ நேப்; சேங்ஜ் யுவர் லைஃப்' புத்தகத்தின் எழுத்தாளர் சாரா மெட்நிக்.
"இம்மாதிரியாக 60-90 நிமிடங்கள் தூங்கும்போது இரவில் தூங்குவது போன்ற நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன." என்கிறார் சாரா. இவர் தூக்கம் குறித்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
குட்டித்தூக்கத்திற்கான பயிற்சிகள் என்ன?
குட்டித்தூக்கத்திற்கு மீண்டும் வருவோம். இந்த குட்டித்தூக்கம் என்பது நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது போன்றோ அல்லது பைக் ஓட்டுவது போன்றோதான் என்கிறார் மீடோவ்ஸ்.
ஏனென்றால் இதற்கும் பயிற்சி தேவை ஆனால் குறுகிய காலத்தில் இதனை கற்றுக் கொள்ளலாம்.
"குட்டித்தூக்கம் மட்டுமே போதும் என்றால் பத்து நிமிடத்திற்கு நீங்கள் அலாரம் வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் தினமும் ஒரே நேரத்தில் தூங்கினால் உங்கள் உடலும் அதற்கு பழகிக் கொள்ளும்" என்கிறார்.
மூன்று மாதங்களில் இதில் நீங்கள் கை தேர்ந்தவர் ஆகிவிடலாம்.
முக்கியமான விஷயம் உங்களை நீங்களே தூங்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. மெத்தையிலோ அல்லது நாற்காலியிலோ அல்லது ஏதேனும் ஒரு வசதியான இடத்திலோ அமர்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ உறங்கலாம். அறை இருட்டாக இருக்க வேண்டும். உங்களின் கண்களை ஏதேனும் மாஸ்கை கொண்டு மூடிக்கொள்ளலாம். அந்த தருணத்தை பயன்படுத்தி ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.
அதேபோன்று குட்டித்தூக்கத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு அலைப்பேசி பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். மூச்சை இழுத்து விடுங்கள். தண்ணீர் குடிக்கலாம். சுருக்கமாக சொல்லப்போனால் 'வசதியாக ஓய்வெடுங்கள்'.
உங்களை மறந்து தூங்குவீர்கள்
சிலர் தங்களுக்கு எளிதில் தூக்கம் வராது என்பதால் ஒரு நாளின் இடையில் 15 நிமிடங்களுக்கு மட்டும் தூங்குவது என்பது இயலாத காரியம் என்கின்றனர். ஆனால் நாம் நம்மை அறியாமலேயே தூங்கி விடுகிறோம் என்கிறார் மிடோவ்ஸ்.
"பலரை தூங்கச் செய்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அவர்கள் தூக்கத்தின் முதல் கட்டத்தில் இருக்கும்போது அவர்களை எழுப்பி அவர்கள் விழித்து கொண்டிருந்தனரா அல்லது தூங்கிக் கொண்டிருந்தனரா என்று கேட்டபோது 65 சதவிதம் பேர் அவர்கள் விழித்துக் கொண்டிருந்ததாகதான் தெரிவித்தனர்."
"எனவே இம்மாதிரியான தூக்கத்தில் நாம் தூங்குகிறோம் என்பதை பலர் அறியவில்லை" என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல தூங்குவதால் மட்டும் நமக்கு பலன் அல்ல. 10-20 நிமிடங்கள் நமது கண்ணை மூடிக் கொண்டிருப்பதாலும் நமக்கு நன்மையே.
இது இரவில் தூங்கியவர்கள் தூங்காதவர்கள் என இருவருக்குமே நன்மை தரும்.
மாற்று வழிகள்
பல வலைத்தளங்களில் குட்டித்தூக்கத்திற்கு முன்பு காஃபி குடிப்பது பயன் தரும் என்கின்றனர். ஏனென்றால் குடித்த 20 நிமிடங்களுக்கு பிறகுதான் கெஃபைனின் தாக்கம் உடலில் தெரிய தொடங்கும்.
ஆனால் இது நல்ல யோசனை அல்ல என்கிறார் சார மெட்நிக்.
"இந்த குட்டித்தூக்கம் என்பதே ஆற்றல் பெறுவதற்குதான். ஆனால் மதிய வேளையில் காஃபி என்பது தவறான யோசனை" என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மெட்நிக் மற்றும் அவரின் சக பணியாளர்கள் 2008ஆம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில் 200மிகி கெஃபைனின் தாக்கத்துடன் 60-90 நிமிட தூக்கத்தின் தாக்கத்தை ஒப்பிட்டனர்.
அதில் தூக்கம் மட்டுமே பலன் தந்தது என்றும் காஃபியால் எதிர்மறை தாக்கங்களே ஏற்பட்டன என்றும் கண்டறியப்பட்டது.
குட்டித்தூக்கம் போட இயலாதவர்களுக்கு சிந்தனை திறன் மேம்படும் பயன் கிடைக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் குட்டித்தூக்கத்தை வெறுக்கிறார்கள் அல்லது நேசிக்கிறார்கள்.
சிலருக்கு இது தங்களின் நாளை மீண்டும் ஆற்றலுடன் தொடங்குவதற்கான உந்துதலை தருகிறது ஆனால் சிலருக்கு இது தவறான ஒரு ஓய்வு முறையாக தெரிகிறது.
எனவே இவர்கள், நடப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது அல்லது தியானம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என மெட்நிக் தெரிவிக்கிறார்.
நன்றி:-பிபிசி தமிழ்-
No comments:
Post a Comment