உங்களுக்கு நீரிழிவு நோய் வரப் போகிறதா...

... என்பதை எளிதில் கண்டறிவது எப்படி?

 


முன்பெல்லாம் நீரிழிவு நோய் இருக்கிறதா என்று கேட்டால் ஆம், இல்லை என்று இரண்டு பதில்கள்தான், ஆனால் இப்போதுஇருக்கு, ஆனா இல்லை என்று கூறும்படியாக ப்ரீ டயபடிக் என்ற நிலை உள்ளது.

 

ப்ரீ டயபடிக் எனப்படுவது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை ஆகும். அதாவது நீரிழிவு நோய் இல்லாத நிலைக்கும், நீரிழிவு நோய் ஏற்பட்ட நிலைக்கும் இடையில் உள்ள நிலை.

 

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொதுவாக இரண்டு விதமாக பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம். வெறும் வயிற்றில் காலை எழுந்தவுடன் ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது என பரிசோதிக்கலாம். மற்றொன்று, ரத்தத்தில் சர்க்கரை எவ்வாறு கரைகிறது என்பதைக் கண்டறியும் OGTT (Oral Glucose Tolerant Test) எனப்படும் பரிசோதனை.

 

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையை எப்படி கண்டுபிடிப்பது?

வெறும் வயிற்றில் பரிசோதனை செய்யும்போது, 100க்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது என்று அர்த்தம், 126க்கும் மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது என்று அர்த்தம். இதுவே 101 முதல் 125 என்ற அளவில் இருந்தால், அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும்.

 

அதே போன்று OGTT பரிசோதனை செய்யும்போது, 140க்கு கீழ் இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே 200க்கு மேல் இருந்தால், நீரிழிவு நோய் என்று அர்த்தம். ஆனால், 141 முதல் 199 வரை சர்க்கரை அளவுகள் இருந்தால் அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும்.

 

வெறும் வயிற்றில் எடுத்த பரிசோதனையில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், கல்லீரல் சீராகச் செயல்படவில்லை என்று அர்த்தம். இரண்டாவது பரிசோதனையில் சர்க்கரை அதிகமாக இருந்தால், தசைகளில் சர்க்கரை சேர்கிறது என அர்த்தம்.

 

இந்த இரண்டு பரிசோதனைகளிலுமே நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை கண்டறிப்பட்டால், அது விரைவிலேயே நீரிழிவு நோயாக மாறும்,” என்கிறார் மோகன் நீரிழிவு மையத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன்.

 

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையால் ஏற்படும் சிக்கல்கள்

நீரிழிவு நோயால்தான் ஆபத்து, அதற்கு முந்தைய நிலையால் எந்தப் பாதிப்பும் இல்லை என கவனக் குறைவாக இருக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தால் உடலில் அது பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் சர்க்கரைக்கு முந்தைய நிலையிலும் தீவிர பாதிப்புகள் ஏற்படும் என அவர்கள் விளக்குகின்றனர்.

உங்கள் சர்க்கரை அளவுகள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்தாலே, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மாரடைப்புகள் ஏற்படலாம்,” என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நீரிழிவு நோய் தலைவர் தர்மராஜன் கூறுகிறார்.

 

நீரிழிவு நோய் இருந்தால், ரெடினோபதி (கண்கள் பாதிப்பு), நெஃப்ரோபதி (சிறுநீரக பாதிப்பு), நியுரோபதி (நரம்புகள் பாதிப்பு) ஆகியவை ஏற்படும். சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இந்த பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.

 

கால்களில் ரத்தப் போக்கு நின்று செல்கள் இறந்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இவை எல்லாம், நீரிழிவு நோய் என்ற நிலைக்குச் செல்வதற்கு முன்பாகவே ஏற்படலாம்,” என்கிறார் மருத்துவர் மோகன்.

 

நீரிழிவு நோயாளியாக மாறுவதைத் தவிர்க்க முடியுமா?

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் விரைவிலேயே நீரிழிவு நோயாளிகளாக மாறக் கூடும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 10.1 கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாக இருப்பது கண்டறியப்பட்டது. அதே ஆய்வு, 13.6 கோடி பேர் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டியது.

 

இதில் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் நீரிழிவு நோயாளிகளாகவும், சுமார் 80 லட்சம் பேர் சர்க்கரைக்கு முந்தைய நிலையிலும் உள்ளனர் என்று ஆய்வு தெரிவித்தது.

 

இந்த ஆய்வில் பங்கேற்ற மோகன் டயபடீஸ் மையத்தின் தலைவர் வி.மோகன் கூறுகையில், “நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலிருந்து நீரிழிவு நோயாளியாக இந்தியர்கள் மிக விரைவில் மாறிவிடுவார்கள். மேற்கு நாடுகளில் ஒருவர் எட்டு முதல் 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால், இந்தியருக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் போதும். இந்தியர்கள் மாவுச் சத்து அதிகம் கொண்ட வெள்ளை அரிசி சாப்பிடுவது இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், சில மரபியல் காரணங்களும் இருக்கலாம்,” என்கிறார்.

 

ப்ரீ டயபடிக் - அறிகுறிகள் இருக்காது

நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது என்பதால், இதைக் கண்டறிவதே சவாலானது.

 

முழு உடல் பரிசோதனை போன்ற சோதனைகளின்போது, நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை இருப்பது தெரிய வரலாம். அறிகுறிகள் இல்லை என்றால், எந்த சிகிச்சையும் தேவை இல்லை என்று சிலர் அபத்தமாகப் பேசி வருகின்றனர்.

 

எவ்வளவு விரைவில் நீரிழிவுக்கு முந்தைய நிலை கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு விரைவில் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்,” என்கிறார் மருத்துவர் மோகன்.

 

இளைஞர்களிடம் நீரிழிவுக்கு முந்தைய நிலை

நீரிழிவு நோயே இப்போதெல்லாம் இளவயதினரில் ஏற்படும் நிலையில், நீரிழிவுக்கு முந்தைய நிலையில் பெரும்பாலும் இளைஞர்களே உள்ளனர் என்றால் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

 

20 ஆண்டுகளுக்கு முன்பு, நீரிழிவு நோய் வயதானவர்கள் மத்தியிலேயே அதிகம் காணப்பட்டது. ஆனால் இன்று 20 வயது இளைஞர்கள் சில நேரம், அதற்கும் இளையவர்களிடமும் நீரிழிவு நோய் காணப்படுகிறது.

 

இதற்கும் முந்தைய நிலை ப்ரீ டயபடிக், எனவே இது பொதுவாக இளைஞர்களிடமே காணப்படுகிறது,” என்கிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நீரிழிவு பிரிவு தலைவர் தர்மராஜன்.

 

சமீப கால வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிக எளிய முறையில் மூன்றே கேள்விகளில், நாம் ஆபத்தான நிலையில் இருக்கிறோமா இல்லையா எனக் கண்டறிய முடியும்.

 

<உங்கள் பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா?

<நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வதுண்டா?

<உங்களுக்கு என்ன வயது?

"இதில் முதல் கேள்விக்கு ஆம் என்றும் இரண்டாவது கேள்விக்கு இல்லை என்றும் கூறினீர்கள் என்றால், உடனே ஒரு இன்ச் டேப் எடுத்து வயிற்றைச் சுற்றி அளந்து பாருங்கள், ஆண்களுக்கு 90 செ.மீக்கு மேல், பெண்களுக்கு 80 செ.மீக்கு மேல் இருந்தால் நீங்கள் சர்க்கரை நோயின் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். வயது அதிகரிக்க, இந்த ஆபத்துகளும் அதிகரிக்கும்,” என்கிறார் மருத்துவர் மோகன்.

 

உணவுக் கட்டுப்பாடு

நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது நீரிழிவு நோய் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதற்குக் கிடைத்திருக்கும் அவகாசமாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தர்மராஜன் கூறுகிறார்.

 

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள், முறையான உணவு, உடற்பயிற்சி மேற்கொண்டால் நீரிழிவு நோய் என்ற நிலைக்குச் செல்லாமல் தவிர்ப்பது மட்டுமல்ல, சர்க்கரை அளவுகள் சாதாரண நிலைக்குத் திரும்பவும் கூடும்.

 

மாவுச்சத்தைக் குறைத்து புரதச்சத்தை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். புரதம் அதிகமாக எடுத்துக் கொண்டால், அது வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும். அதேநேரம், உடல் எடையும் கூடாது. பச்சை இலை காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்கிறார் மருத்துவர் மோகன்.

 

நாட்டு சர்க்கரை மாற்று அல்ல

வெள்ளை சர்க்கரை, உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் எனத் தெரிந்தவர்கள், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு சாப்பிட்டால் ஆபத்து இல்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறான கருத்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

வெள்ளை சர்க்கரையைவிட நாட்டு சர்க்கரையில் சர்க்கரை அளவு சற்று குறைவாக இருக்கலாம். ஆனால், அதனால் சர்க்கரை அதிகரிக்காது என்பது தவறான கருத்து," என்கிறார் மருத்துவர் தர்மராஜன்.

 

உடல் பருமன்

உடல் பருமனை குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதுவும் வயிற்றுப் பகுதியில் பருமன் அதிகமாக இருந்தால், அது முழுவதும் கொழுப்புச் சத்து என்றும் அது மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 35.1 கோடி பேருக்கு வயிற்று பருமன் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 2.6 கோடி பேருக்கு வயிற்று பருமன் உள்ளது.

 

பெண்கள் வீட்டு வேலை செய்வதால், உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வீட்டில் செய்யும் வேலைகள் கலோரியை குறைக்க உதவுவதில்லை. எனவே உடல் பருமனை தவிர்க்கும் நோக்கில் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்,” என்று மருத்துவர் தர்மராஜன் கூறுகிறார்.

 

சாரதா. வி,……பிபிசி தமிழ்

No comments:

Post a Comment