வைரஸ்களை கொண்டு புற்றுநோய் செல்களை அழிக்கும் புதுமையான சிகிச்சை:

 முடிவு என்ன?


வைரசைத் தொற்றச் செய்து புற்று செல்களை அழிக்கச் செய்யும் புதுவிதமான புற்றுநோய் சிகிச்சையை மனிதர்களிடம் பரிசோதித்தபோது நம்பிக்கை அளிக்கும் முடிவுகள் கிடைத்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

இந்த சிகிச்சை பெற்ற ஒரு நோயாளியின் புற்றுநோய் குணமாகியது. மற்றவர்களின் புற்று கட்டிகள் சுருங்கியதையும் அறிய முடிந்தது,

 

புற்று கட்டிகளை அழித்துவிடுவதற்கு திருத்தியமைக்கப்பட்ட ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்கிற குளிர் புண் வைரஸின் மிதமான வடிவம்தான் இந்த மருந்து.

 

இது குறித்து பெரிய, நீண்ட கால ஆய்வுகள் தேவைப்படுகின்றன. ஆனால், தீவிர புற்றுநோய் பாதிப்பால் துன்புறுவோருக்கு இந்த ஊசி மருந்து அதிக நாட்கள் வாழும் வாய்ப்பை வழங்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

முதல் கட்ட பாதுகாப்பு சோதனையில் பங்கேற்ற நோயாளிகளில் ஒருவர் மேற்கு லண்டனை சோந்த 39 வயதான கட்டுமான தொழிலாளர் கிறிஸ்டாஃப் விட்கோவ்ஸ்கி. இந்த பரிசோதனை ராயல் மார்ஸ்டன் என்ஹெச்எஸ் ட்ரஸ்டில் புற்றுநோய் ஆய்வு நிலையத்தால் நடத்தப்பட்டது.

 

2017 ஆம் ஆண்டு உமிழ்நீர் சுரப்பியில் கிறிஸ்டாஃப் விட்கோவ்ஸ்கி-க்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது. அந்நேரத்தில் நடத்தப்பட்ட சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும், அந்த புற்று தொடர்ந்து வளர்ந்தது.

 

'எனக்கு வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று என்னிடம் சொல்லப்பட்டது. வாழ்க்கையின் இறுதி தருண பராமரிப்பை நான் பெற்று கொண்டிருந்தேன். சுக்குநூறாக வாழ்க்கை அழிந்துவிட்ட நிலையில், இத்தகைய பரிசோதனையில் சேர வாய்ப்பு கிடைத்ததை நம்ப முடியவில்லை.

 

கிறிஸ்டாஃப்-க்கு வழக்கமாக குளிர் புண்களை ஏற்படுத்தும் ஹெர்பெஸ் வைரஸ் பதிப்பில் சிறப்பாக திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்பட்ட இந்த குறுகிய கால வைரஸ் சிகிச்சை, அவரது புற்றுநோயை குணப்படுத்தி விட்டதாக தோன்றுகிறது.

'இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஐந்து முறை நான் ஊசி போட்டுக்கொண்டேன். அது எனது புற்றுநோயை முற்றிலும் நீக்கிவிட்டது. இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயிலிருந்து விடுபட்டவனாக வாழ்கிறேன்." என்கிறார் கிறிஸ்டாஃப்.

 

புற்றுக்கட்டிகளில் நேரடியாக வழங்கப்படும் இந்த ஊசி மருந்து புற்றுநோயை இரண்டு வழிகளில் தாக்குகின்றன. புற்று உயிரணுக்களை ஆக்கிரமித்து, அவற்றை தகர்த்து விடுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பையும் செயல்பட வைக்கிறது.

 

இந்த பரிசோதனையில் சுமார் 40 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு ஆர்பி2 என்று அழைக்கப்படும் வைரஸ் ஊசி மருந்து வழங்கப்பட்டது. மற்றவர்கள் நிவோலுமாப் என்று அழைக்கப்படும் இன்னொரு புற்றுநோய் மருந்து எடுத்துகொண்டனர்.

 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிகழ்ந்த மருத்துவ மாநாட்டில் பின்வரும் முடிவுகள் சமர்பிக்கப்பட்டன :

 

ஆர்பி2 ஊசி மருந்து வழங்கப்பட்ட 9 நோயாளிகளில் 3 பேருக்கு புற்றுக்கட்டிகள் சுருங்கிவிட்டன. இதில் கிறிஸ்டாஃபும் ஒருவர்.

 

ஒருங்கிணைந்த சிகிச்சை பெற்ற 30 பேரில் 7 பேருக்கு பலன் கிடைத்தது.

 

களைப்பு போன்ற பக்கவிளைவுகள் பொதுவாக மிதமாகவே இருந்தன.

 

தலைமை ஆய்வாளர் பேராசிரியர் கெவின் ஹாரிங்டன் பிபிசியிடம் இது பற்றி தெரிவிக்கையில், உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் அரிய வகை கண் புற்றுநோய் உள்பட தீவிர புற்றுநோய்கள் தொடர்பாக, இந்த சிகிச்சை முடிவுகள் உண்மையிலேயே உற்சாகம் அளிக்கின்றன என்றார்.

 

"சிகிச்சையின் பாதுகாப்பை சோதனை செய்யும் முதன்மை நோக்கத்தோடும் நடத்தப்படுவதால், இத்தகைய மருத்துவ பரிசோதனைகளின் ஆரம்ப கட்டத்திலேயே இத்தகைய நல்ல முடிவுகளை பெறுவது அரிதானது. தற்போது இருக்கின்ற சிகிச்சை முறைகள் வேலை செய்யாத தீவிர புற்றுநோயாளிகள் இந்தப் பரிசோதனையில் இடம்பெற்றுள்ளனர்." என்று அவர் தெரிவித்தார்.

 

"இன்னும் அதிக நோயாளிகளுக்கு நாம் சிகிச்சை அளித்து, பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் ஒரு வைரஸை விஞ்ஞானிகள் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. T-Vec என்று அறியப்படும் குளிர் புண் வைரஸ் சிகிச்சையை தீவிர தோல் புற்றுநோய்க்கு பயன்படுத்திக் கொள்ள சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனின் பொது சுகாதார சேவை அனுமதி அளித்தது.

 

T-Vec பதிப்பில், வீரியமும், செயல்திறனும் அதிகரித்ததுதான் ஆர்பி2 மருந்து என்கிறார் பேராசிரியர் ஹாரிங்டன்.

 

"இந்த வைரஸில் செய்யப்பட்ட திருத்தங்களால், அது புற்று உயிரணுக்களுக்குள் நுழைந்தவுடன், அவற்றை அழித்துவிடுகிறது".

 

ஊக்குமளிக்கும் இந்த ஆய்வு முடிவுகள் புற்றுநோய் சிகிச்சையை மாற்றியமைக்கலாம் என்று பிரிட்டனின் புற்றுநோய் ஆய்வகத்தை சேர்ந்த மருத்துவர் மரியன்னே பேக்கர் தெரிவித்துள்ளார்.

 

புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க வைரஸ்கள் உதவலாம் என்று விஞ்ஞானிகள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்தனர். ஆனால், அவற்றை பாதுகாப்பாகவும், செயல்திறனோடும் பயன்படுத்துவது சவாலாகவே உள்ளது".

 

"சிறிய அளவில் நடத்தப்பட்ட இந்த வைரஸ் சிகிச்சையின் தொடக்க நிலைப் பரிசோதனைகள் உற்சாகமூட்டும் முடிவுகளை வழங்கியுள்ளன. இது எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது என்பதை பார்க்க மேலதிக ஆய்வுகள் அவசியம்".

 

"பன்முக சிகிச்சைகளை சேர்த்து வழங்குவது சக்தி வாய்ந்த யுக்தி என்று ஆய்வு பரிந்துரைக்கிறது. இது போன்ற வைரஸ் சிகிச்சைகள் புற்றுநோயை ஒழிக்கும் கருவியாகலாம்".

 

மைக்கேல் ராபர்ட்ஸ்

டிஜிட்டல் சுகாதார செய்தி ஆசிரியர்

No comments:

Post a Comment