"கள்ளூறும் பார்வை உள்ளூறப் பாயுமே
அள்ள அள்ள குறையாமல் நிறையுமே!
உள்ளத்தை ஆழமாய் துளைத்து எடுத்து
உள் மனதில் குடிகொண்டு வாட்டுமே"
"மெல்லியலாள் காலடி அருகில் கேட்டால்
சொல்லாமல் சொல்லி ஏக்கம் வருமே!
அல்லி மலராய் இரவில் மலர்ந்து
மெல்லிடையாள் வருவாளே கனவில் தருவாளே!"
"ஆள் நடமாற்றம் இல்லா அந்தியில்
கள்ளம் கவடம் இல்லா கன்னியே!
வெள்ளம் போல் ஆசை தூண்டி
குள்ள நரி இவனிடம் வந்தாயே!"
"அல்லும் பகலும் உன் நினைவில்
கல்லாகி உலகை நான் மறந்தேனே!
பொல்லாத புன்னகையால் நெஞ்சைக் குத்தி
கொல்லாமல் கொல்லும் பேதை நீயே!"
"அளவு இல்லா இன்ப ஊற்றில்
களவாக வந்து முழுதாக நனைந்தேனே!
இளமை காட்டும் அழகு மயக்கத்தில்
தாளம் போடுமே ஆண்மையின் துடிப்புகளே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment