நோயாளியை ஆறுதல் படுத்த….
மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நேரங்களில் அதீத கோபம் ஏற்படும். இதற்காகவே, நோயாளிகள் அணியக்கூடிய 'ஸ்மார்ட் சாக்ஸ்' ஒன்றை இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலை கண்டறிந்துள்ளது. இந்த சாக்ஸை அணியும் நோயாளி வரம்புமீறி கோபம் அல்லது உணர்ச்சி வசப்படும்போது, அந்தத் தகவலை, நோயாளியைக் கவனிப்பவருக்கு அனுப்பிவிடும், அவர் வந்து ஆறுதல் படுத்துவார்.
துணியின் வகையைக் கண்டறிய…
நாம் பயன்படுத்தும் துணி துாய்மையான பருத்தியா, பட்டா, வேறு ஏதேனும் ரகமா என்று கண்டறியும் கையடக்க கருவியை ஜெர்மானிய ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். இது 'ஸ்பெக்ரோஸ்கோபி' முறையைப் பயன்படுத்தி அகச் சிவப்புக் கதிர்களைத் துணி மீது செலுத்தும். பிரதிபலிக்கப்படும் ஒளியின் அலைநீளத்தை வைத்து துணியின் வகையைக் கண்டறியும்.
கடல் நீரில் யுரேனியம்
நிலத்தடி எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
அணுமின் உற்பத்திக்கு மிக அவசியமான பொருள் யுரேனியம். மண்ணில் இருக்கும் யுரேனியத்தை விட கடலில் பல மடங்கு அதிகமாக உள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அணு அறிவியல் தொழில்நுட்பக் கழகம் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளது.
இரண்டடுக்கு ஹைட்ராக்சைடுகளின் மீது நீயோடியம், டெர்பியம், யூரோப்பியம் ஆகிய வேதிப்பொருட்களைப் பூசி, அதைக் கடல் நீரில் முக்கி வைத்தனர். இது கடலில் உள்ள யுரேனியத்தோடு சோடியம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவையும் சேர்ந்து ஈர்த்தது. இவற்றில் இருந்து யுரேனியத்தை மட்டும் தனித்துப் பிரித்து எடுத்தனர். இந்தப் புதிய முறை இதற்கு முன்பு பயன்பட்ட முறைகளைக் காட்டிலும் குறைவான செலவில் அதிகமான யுரேனியத்தைப் பிரித்தெடுக்கின்ற முறையாக இருக்கிறது.
உடல் ஆரோக்கியம் மேம்பட…
நாம் உண்ணும் உணவில் கலோரிகளைக் குறைத்துக் கொண்டு, பிற அத்தியாவசியமான வைட்டமின், தாதுக்களை எடுத்துக்கொள்வது தசைகளை வலிமையாக்கும்; முதுமையால் வரும் நோய்களைத் தடுக்கும் என்று அமெரிக்காவின் தேசிய உடல்நல பல்கலை மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.
இரண்டு ஆண்டு தொடர்ந்து நடந்த இந்த ஆய்வில் பங்கேற்ற அவர்களின் தசைகள் வலிமை அடைந்ததோடு, முதுமையால் ஏற்படும் நோய்களுக்குக் காரணமான மரபணு மாற்றங்கள் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடிப்படையாகக் கொண்டு நம் உண்ணும் உணவைச் சரியாக திட்டமிட்டு, கலோரி கட்டுப்பாடு செய்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு இதய நோய்
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் துாக்கமின்மையால் அவதிப்படும் பெண்களுக்கு இதய நோய்கள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துஉள்ளது. ரத்த நாளங்களின் சுவர்கள் மேலுள்ள 'எண்டோதீலியம்' எனும் பூச்சு பாதிக்கப்படுவதால் இந்நிலை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வேலை செய்பவர்களுக்கு மன அழுத்தம்
இரவில் அதிக நேரம் விழித்திருந்து செயற்கை ஒளி மிகுந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்கு மன அழுத்தம் 30 சதவீதம் அதிகரிப்பதாக மலேஷியாவின் மொனாஷ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 86,772 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த மிகப் பெரிய ஆய்வில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பகல் வெளிச்சத்தில் வேலை செய்ய வைத்துப் பார்த்தபோது, அவர்களது மன அழுத்தம் 20 சதவீதமாக குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment