பழகத் தெரிய வேணும் – 95

சிந்தனையின் விந்தை

ஒரு மூன்று வயதுக் குழந்தையிடம் கடுமையான வேலையைக் கொடுத்தால், “என்னால் முடியாதே!” என்று தயங்கலாம். தன் ஆற்றல் எவ்வளவு என்று புரிந்ததால் வந்த பதில் அது.

 

ஆனால், வயதும் திறமையும் கூடி இருந்தபோதும், அவ்வாறே கூறுவது எதிர்மறைச் சிந்தனை செய்யும் விபரீதம். ஒருவருக்குத் தன் திறமையில் நம்பிக்கை இல்லையென்று காட்டிவிடும்.

 

அப்படித் தோன்றும்போது, அதை எதிர்க்க ஓர் உத்தி: `என்னால் முடியும். கண்டிப்பாகச் செய்து முடிப்பேன்!’’ என்று தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொள்ளலாம்.

 

எச்சரிக்கை: இதையே உரக்கக் கூறினால், கர்வம் என்ற பழிக்கு ஆளாக நேரிடும்! தன்னம்பிக்கையை வேறு எப்படித்தான் வளர்த்துக்கொள்வது!

 

`முடியாது!’ என்று நினைத்த காரியத்தைச் செவ்வனே செய்து முடித்துவிட்டால், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியே தனி.

 

ஒரே நிகழ்வை வெவ்வேறு நபர்கள் பார்க்கும்போது, அவர்களது கணிப்பும் மாறுபட்டிருக்கும்.

 

::கதை::

அன்று ஒரு பெண்ணிற்குக் கல்யாணம். அவளுக்கும், அவளைப் பெற்றவர்களுக்கும் பெருமகிழ்ச்சி. ஆனால், உறவினர்கள் அந்த சம்பந்தத்தில் எங்கே குறை என்று தேடினார்கள்.

 

வரதட்சணையே வேண்டாம் என்கிறார்களே! மாப்பிள்ளைப் பையனுக்கு ஏதோ கோளாறு இருக்கவேண்டும்!”

 

அவசர அவசரமாகக் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என்றார்களே! ஏன் அப்படி?”

 

பெண்ணின் தாய் இதற்குப் பதிலளித்தாள். “மாப்பிள்ளைக்கு லீவு முடிந்து, உடனே வெளிநாடு திரும்பவேண்டுமாம். விசாவும் காலாவதி ஆகிவிடுகிறது”.

 

`இன்னும் எங்கு கோளாறு?’ என்று துடித்தார் ஒரு முதியவர். அவர் ஐந்து பெண்களைப் பெற்றுக்கொண்டு, திண்டாடுபவர். “அந்தப் பையன், அம்மாவுக்குப் பயப்படுகிறான். அவனைப் பேசவிடாமல், அந்த அம்மாவே பேசுகிறாள்!”

 

பெண்ணின் தாய்க்குச் சந்தேகம் வந்தது. மணப்பெண்ணிடமே போனாள். “என்னென்னவோ சொல்கிறார்களே!” என்றாள் கவலையுடன்.

 

மணப்பெண் சிரித்தாள். “நான் சந்தோஷமா இருந்தா, இவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியா இருக்குமான்னு ஒன்னையே கேட்டுக்கோ!”

 

அம்மாவுக்கும் சிரிப்பு வந்தது.

 

பிரச்னைகள் எதுவும் எழாத திருமணத்தைக் கண்டால் பொறாமைப்படுகிறவர்கள்தாம் அதிகம். `குற்றம் எங்கே?’ என்று தேடிப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.

 

ஏன் சிலர் இப்படி நடக்கிறார்கள்?

எப்போதோ தவறு நிகழ்ந்துவிட்டால், எத்தனை காலமானாலும் அதை மறக்க முடியாது, அதைப் பற்றியே எண்ணிக் குமைந்துகொண்டிருப்பவர்கள் அவர்கள்.

 

செய்ய ஆரம்பித்த எல்லாக் காரியங்களிலும் வெற்றி மட்டுமே கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்து, ஏமாந்தவர்கள்.

 

கார்டிஸால் (CORTISOL) என்கின்ற வேதியப் பொருள் மூளையில் இருக்கிறதே, அதுதான் அவர்களை அப்படி ஆட்டி வைக்கிறது.

 

அதற்கு நேர் எதிரிடை, டோப்அமீன் (DOPAMINE) என்கிற பொருள்.

 

நம்மை யாராவது புகழ்ந்தாலோ, நற்செய்தி கிடைத்தாலோ ஏற்படும் இனிய உணர்வு டோப்அமீன் சுரப்பதால் வருவது. போதைபோல் இருக்கும்.

 

ஓர் அறுவை சிகிச்சைக்கு முன்னால், மார்ஃபின் என்ற போதைப்பொருளை என் மூக்கில் வைத்தார்கள். அது குறிப்பிட்ட அளவில் மருத்துவர்கள் பயன்படுத்துவது.

 

சில வினாடிகளிலேயே, உடலை விட்டுப் பறப்பதுபோன்ற சுகமான உணர்வு ஏற்பட்டது. மயக்க நிலைக்குப் போய்விட்டேன்.

 

இதனால்தான், “வாழ்க்கை பொறுக்க முடியாததாக இருக்கிறது!” என்று புலம்புகிறவர்கள் ஏதாவதொரு போதையை நாடுகிறார்கள்.

 

துணுக்கு

நீ அதிகமாகக் குடித்தால், உன் மனைவி சண்டைபிடிக்க மாட்டாளா?”

 

எனக்குக் கல்யாணமே ஆகவில்லை!”

 

பின் ஏன் குடிக்கிறாய்?”

 

தமக்கு ஏன் எதிர்மறைச் சிந்தனைகளே ஓயாமல் எழுந்து வருத்தத்தில் ஆழ்ந்து கிடக்கச் செய்கின்றன என்று புரியாது, பழியை வேறு இடத்தில் போடுகிறவர்கள் இப்படிப்பட்டவர்கள்.

 

எதிர்மறைச் சிந்தனை தரும் வேதனையை எப்படி ஒழிப்பது?

1. அதிகாலையில், முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது, நாக்கை வெளியில் நீட்டி, சிரிப்பதுபோல் செய்யலாம். புன்னகைத்தால், உதிரமும் பிராண வாயுவும் முகத்திற்கு அனுப்பப்படுவதால் உற்சாகம் எழும்.

 

2. எந்தச் சூழ்நிலையிலும் வேடிக்கையான அம்சம் ஏதாவது இருக்குமே!

 

::கதை::

இந்த விரிவுரையாளர் இன்னிக்குச் சரியான சிடுமூஞ்சி!” பெண்கள் கல்லூரி மாணவிகள் தமக்குள் பேசிக்கொண்டனர்.

 

ஒரு பெண் கூறினாள், “இன்று காலை, மனைவியுடன் சண்டை போட்டிருப்பார்!”

 

அவள் தோழி, “அவருக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே!” என, முதலாமவள் விடாது, “சவரம் பண்ணிக்கொள்ளும்போது கன்னத்தைக் கீறிக்கொண்டிருப்பார். அந்த எரிச்சலை நம்மிடம் காட்டுகிறார்!”

 

எல்லாரும் சிரித்தார்கள்.

 

நமக்கு எழும் எதிர்மறை எண்ணங்களையும், அவற்றால் விளையும் ஆத்திரம் அல்லது வருத்தத்தையும் வேடிக்கையான கண்ணோட்டத்துடன் பார்த்தால், சிரிப்பு என்றும் மறையாது.

 

3. நம் பிரச்னைகள் நம்மோடு இருக்கட்டும். அவை திரும்பத் திரும்ப மேலே எழுகையில், வருத்தமும் நிலைத்துவிடும்.

 

உனக்கு வேலை போய்விட்டதாமே?”

 

உன் மனைவி உன்னைவிட்டுப் போய்விட்டாளாமே?”

 

நாம் மறக்க நினைப்பதைத் தூண்டித் துருவி விசாரிப்பவர்களுக்கு, எதற்காகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பது?

 

இவ்வாறு வீண் வம்புக்கு அலையாது, நம் மனநிலையைப் புரிந்து நடக்க ஓரிருவராவது கிடைக்கமாட்டார்களா?

 

4. ஒரே சமயத்தில், இயந்திர கதியில் பல வேலைகளைச் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், அது மன உளைச்சலில்தான் கொண்டுவிடும்.

 

ஓயாது, ஒரே வேலையைச் செய்துகொண்டிருந்தால் ஏற்படும் சலிப்பு, மன இறுக்கத்தில் கொண்டுவிடும். இயன்றவரை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.

 

இதைத்தான் பாரதியார் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்: `காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு..” என்று.

 

எங்கள் வீட்டருகே காலையும் மாலையும் இளைஞர்களும் முதியவர்களும் மூன்று மூன்று பேராக சைக்கிளில் போவார்கள், கலகலவென்று பேசிக்கொண்டு.

 

நோய்த்தொற்றால் வெளியே அதிகம் செல்ல அனுமதி கிடையாது என்ற நிலையில், வருந்தி வீட்டிலேயே உட்கார்ந்து விடுவதில்லை இவர்கள். நண்பர்களுடன்அவ்வப்போதுபொழுதைக் கழிக்கையில், மனமும் உல்லாசமாக ஆகிவிடும்.

 

எதையாவது கழற்றி, பழுது பார்ப்பதும் நல்லதொரு பொழுதுபோக்கு.

 

எது செய்யவும் தெம்பில்லையா?

 

இருக்கவே இருக்கிறது தொலைக்காட்சி!

 

இப்போதெல்லாம் பொழுதைப் போக்க, தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்க்கவென NETFLIX, AMAZON போன்றவற்றிற்குப் பலரும் சந்தா கட்டுவது அதிகரித்துவிட்டதாம்

 

5. `முடியாது!’, `கஷ்டம்போன்ற வார்த்தைகளை உபயோகித்தால், பிறர் நம்மை மட்டம் தட்ட நாமே வழிவகுத்துக் கொடுத்துவிடுகிறோம்.

 

எதிர்மறை எண்ணங்களால்தான் மன இறுக்கம் எழும் என்பது புரியாது, அதற்குரிய தீர்வோ, சிகிச்சையோ பெறாதிருக்கிறார்கள் பலர்.

 

இவர்கள் தம் ஆற்றாமையை மனைவியை அடிப்பதன் மூலம் வெளிப்படுத்திக்கொள்வதால், வன்முறையும் விவாகரத்துகளும் பெருகிவிட்டன.

 

உதவிபுரியும் எதிர்மறை எண்ணங்கள்

 

பலத்த மழையால் மழைத்தண்ணீர் வீட்டுக்குள் புக, புகலிடம் தேடிக் கூரைமேல் உட்காரப்போவது வேண்டாத விளைவுகளை எதிர்நோக்குவதால்தான். அந்த எண்ணம் எதிர்மறையாக இருந்தாலும், பாதுகாப்பை விளைவிக்கிறது.

 

இன்னொரு உதாரணம்.

 

தெருவைக் கடக்க ஆயத்தமாகிறோம். அப்போது, விரைந்து வரும் வாகனத்தைக் கண்டு, `அபாயம்!’ என்று மூளை எச்சரிக்க, நம்மையும் அறியாது, கால்கள் நம்மைப் பின்னால் இழுக்கின்றன.

 

மூன்று வயதுக் குழந்தைக்கு இத்திறமை கிடையாது. எது அபாயம் என்று புரிவதில்லை. ஏதாவது `மாலில்’ (MALL) பார்த்தால், தன் கையைப் பிடித்திருந்த தாயின் கையை உதறிவிட்டு, லிஃப்டில் ஏற ஓடுவான்.

 

அப்படிச் செய்த ஒரு சிறுவனை அவன் தாய் கண்டபடி திட்டினாள். அடிக்கப் போனாள்.

 

நான் குறுக்கிட்டு, “என் பேரனும் அந்த வயதில் அப்படித்தான் செய்தான்,” என்றேன் புன்முறுவலுடன்.

 

எப்படிச் சமாளித்தீர்கள்?” என்றாள், தன் அலுப்பை மறைக்காது.

 

நான் ஒரு பக்கம், அவன் தாய் ஒரு பக்கம் என்று, அவன் கைகளை இறுகப் பிடித்துக்கொள்வோம், அதன் கதவு திறக்குமுன்”.

 

ஒரு முறை எங்களை முந்திக்கொண்டு அவன் ஏற, அந்த இயந்திரம் அவனை மட்டும் ஏற்றிக்கொண்டு மேலே போய்விட்டது. சில நிமிடங்கள் கழித்துத் தனியே திரும்புகையில், அளப்பரிய அச்சம் அவன் முகத்தில். ஆனாலும், அந்த அனுபவத்தால் அவன் பாடம் கற்கவில்லை. வயதுக் கோளாறு!

 

குழந்தைகளின் இம்மாதிரியான விஷமம்கூட சில ஆண்டுகளுக்குப்பின் ரசித்துச் சிரிக்கும்படி இருக்கும்.

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

No comments:

Post a Comment