நமது தமிழ் வானொலிகளில், அன்று தொட்டு இன்று வரை, ஒரு நாளின் நிகழச்சிகளைத் தொடங்குமுன்னர், மத நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக, முதலில் மும்மதத் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டு வருகிறார்கள். இதில் இந்து, கிறீஸ்தவ, இஸ்லாம் பாடல்களின் மூலம் நேயர்களின் நாளை நல்ல சிந்தனைகளுடன் தொடக்கி வைக்க முன்வருகிறார்கள்.
இது உண்மையில் சகல சமயத்தினாராலும் விருப்பத்துடன் செவி மடுக்கப்படுகிறதா என்பது ஆராயப்பட வேண்டியதே!
இந்து (அல்லது சைவ) சமயத்தினரைப் பொறுத்தமட்டில், இவர்களுக்கு தங்கள் கடவுள்களை வணங்குவதோடு விட்டு வைக்க மாட்டார்கள். புற சமயக் கடவுள் சின்னங்களையும் தமது பூசை அறையின் வைத்துக் கொள்வார்கள்; மாற்றுச் சமய ஆலயங்களுக்கும் போய்த் தரிசனம் செய்து கொள்வார்கள்; அங்கு வழங்கும் உணவுகளையும் பய பக்தியுடன் ஏற்றுப் புசிப்பார்கள்; அவர்களின் மதச் சின்னங்களையும் அணிந்து கொண்டு மகிழ்வார்கள்; நேர்த்திக்கடன் வைத்து அதை நிறைவேற்றியும் வைப்பார்கள்.
இவர்களுக்கு எம்மதமும், எக்கடவுளும் சம்மதம்தான். எந்த மதப் பாடல்களையும் கேட்கலாம்; இசைக்கலாம், மதத் தலைவர்கள் எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். எந்தப் பெயரில், எந்த மூலையில், எப்படியான உருவில், சக்தி கூடிய கடவுள் ஒன்று இருந்தாலும், அந்தக் கடவுள் கேட்டதைச் செய்தால், எமக்குத் திருப்திதான் என்ற கருத்தில் நிம்மதியாக வாழ்பவர்கள்.
ஆனால், மற்றைய சமயத்தினரின் நம்பிக்கையைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் அவர்களை நரகத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய அளவுக்குப் பாவகரமான செயல்களாகக் கருதப்படுகிறது.
அவர்கள் புறச் சமய ஆலயங்களுக்குப் போகக்கூடாது. அருகிலேகூடச் செல்ல மாட்டார்கள். பிறமதச் சின்னங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். புறக்கடவுள்களின் பெயரில் செய்யப்படட உணவுகளைத் தொடவும் மாட்டார்கள். வேற்றுச்சமய பாடல்களைச் செவிமடுத்துக் கேட்க மாட்டார்கள். தங்கள் கடவுள் ஒன்றே உணமையானவர் என்று போதிக்கப்பட்டு. அந்த நம்பிக்கையிலேயே வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள்.
இப்படி இருக்கும்போது, வானொலியில் மூன்று பாடல்களையும் அடுத்தடுத்து ஒன்றாய் ஒலிபரப்புச் செய்யும்போது அவர்கள் எல்லாம், புறச்ச சமய ஆராதனைப் பாடல்களைச் செவிமடுத்துக் கேட்டு இரசிப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறியே! சில இடங்களில், வெறும் பாடல்களே பாவம்தான் என்ற கருத்துடனும் வாழ்பவர்கள் இருக்கின்றனர்.
தனியாகவே, ஓர் அரை மணித்தியாலத்திற்கு ஒரு மதப் பாடல் என்று போட்டால் மட்டுமே பெரும்பாலானவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
நரகத்துக்கு அவர்கள் போகாமல் தப்புவதற்கு இதுதான் ஒரே ஒரு வழியாகும்.
:செ.
சந்திரகாசன்
No comments:
Post a Comment