"பார்வை ஒன்றே போதுமே" -சிறு கதை


திடீரென எதேச்சையாக இருவர் சந்திக்கும் பொழுது அவர்களின்  கண்கள் அப்படியே ஒருவரை ஒருவர் அசையாமல் கணப்பொழுது நின்றுவிட்டது என்றால், அதுவும் இளம் ஆணும் பெண்ணும் என்றால்,

 

என் அப்பா ஒரு கிராம அலுவலகத்தில் பணிமனை குற்றேவலனாக [பியூன்] வேலை செய்கிறார். நான் இறுதியாண்டு விஞ்ஞான உயர் வகுப்பு மாணவன். எங்கள் கிராமத்தில் இருக்கும் அந்த ஒரேயொரு உயர்நிலைப் பள்ளியிலும் ஆய்வகம் மற்றும் நூல்நிலைய வசதிகள் பற்றாக்குறையாக இருந்தது. எனவே அப்பா தன் ஆத்ம நண்பனும் இன்று பெரும் வர்த்தகராக பட்டணத்தில் நிறைய செல்வாக்குடனும் வசதியுடன் இருப்பவருமான சுந்தரலிங்க முதலியார் வீட்டுக்கு, அங்கிருந்து, பட்டண பாடசாலையில் இறுதி ஆண்டை படிக்க என்னை அனுப்பிவைத்தார். முதலியாரே தன் காரை அனுப்பி என்னை தன் வீட்டுக்கு கூப்பிட்டார். எனக்கான அறை அவர்களின் கீழ்மாடியில் ஒதுக்கி தரப்பட்டது. அது அவர்களின் நீண்ட பொது அறையை [ஹால்] தாண்டி போகவேண்டும். அவர்கள் எல்லோரினதும் அறை மேல்மாடியில், பணியாளர்கள் வீட்டின் பின்புறத்தில் தனியாக ஒரு சிறு வீட்டில் வாழ்கிறார்கள். நான் காரால்  வந்து இறங்கி, கொஞ்சம் களைத்த முகத்துடனும் குழம்பிய சீவப்படாத முடியுடனும் என் பெட்டியுடன் என் அறைக்கு  போகும்பொழுது தான், முதல் முதல் அவள் என்னை பார்த்தாள், நானும் அவளைப் பார்த்தேன்.  

 

இன்னும் எனக்கு அவளின் பெயர் தெரியாது, சாதாரண வகுப்பில் படிக்கிறாள் என்று சுந்தரலிங்க முதலியாரும் அவரின் துணைவியாரும் என்னை வரவேற்கும் பொழுது அறிந்தேன். ஆகவே பதினைந்து பதினாறு வயது இருக்கலாம்? அவள் தான் அவர்களின் கடைசி செல்லப்பிள்ளை, அவளின் அக்காவும் அண்ணாவும் பல்கலைக்கழகத்தில் என்றும் கேள்விப்பட்டேன். மற்றும் படி எந்த விபரமும் இப்போதைக்கு எனக்கு தெரியாது. அவள் எதோ ஹால்லில் இருந்த புத்தக அலுமாரியில் தேடிக்கொண்டு இருந்தாள். அப்ப தான் சுந்தரலிங்க முதலியார்,

 

'நாம் இவளுக்கு செல்லம் கூட கொடுத்துவிட்டோம், எந்த நேரமும் எதாவது உலக வரலாறு, இலக்கியம் அல்லது நாடுகள், விலங்குகள், பறவைகள் பற்றித்தான் படிப்பாள். பாடசாலை  கணிதத்தில், விஞ்ஞானத்தில் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறார். அது தான் எமக்கு கவலை' என்று வசை  பாடினார்.

 

"மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,

செய்யவள் இருந்தாள்என்று, செழு மணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்

ஐயனை, ‘ஒல்லை வாஎன்று அழைப்பது போன்றது அம்மா!"

 

என்ற கம்பராமாயண பாடல் தான் எனக்கு ஞாபகம் வந்தது,  குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள். ஆகவே, ராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்! என்று அழைப்பது போல, நாம் இங்கு வந்தேனோ என்று என் மனம் எதோ கனவு கண்டது. அப்பேர்ப்பட்ட அழகு அவள்! சீதையின் எல்லையில்லாத  பேரழகை அமுதத்திலே எழுதுகோலைத் தோய்த்து எடுத்து எழுதத் தொடங்கினாலும் அவளது அழகை முழுயைாக  எழுத முடியாமல் மன்மதன் திகைத்தது போல்

 

 

"ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும்!’" நானும் ஒரு கணம் திகைத்தே போனேன், என்றாலும் உடனடியாக சமாளித்தவாறு, என் அறைக்கு போனேன்.

 

ஒன்றுமட்டும் எனக்கு புரிந்தது, அவள் என்னைப் பார்த்த அடுத்தக்கனமே, கீழே பார்த்து, பின் அவள் தன் கண்களை தரை முழுவதும் துடைப்பது போல நகர்த்தினாள். அது என்னென்னெவோ எனக்கு சொன்னது.

 

நள்ளென்றன்றே, யாமம் சொல் அவித்து, இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று, நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் மற்ற துஞ்சாதேனே

 

நள்ளிரவு நிசப்தம் நலவுகின்றதே, தமது சத்தங்களை எல்லாம் தொலைத்து மக்கள் தூங்குகின்றனரே, அடடா உலகமே தூங்குகின்றதே என்னைத்தவிர என அன்று இரவு பொழுது எனக்கு கழிந்தது. என்றாலும் அவள் என்ன நினைத்தாள், ஏன் என்னை அவள் அப்படி பார்த்தாள், வெறுப்பா, அருவருப்பா இல்லை உண்மையில் நான் அவளைத் தாண்டும் சமயம் அவள் இதயம் எகிறி குதித்தோடுயதால் ஏற்பட்ட ஒற்றை பார்வையோ நான் அறியேன் ? அது காலம் தான் உறுதிப்படுத்தும்!   

 

ஆனால் ஒன்று மட்டும் எனக்கு புலனாகியது, அவளைப் போன்ற ஒரு பதினைந்து பதினாறு வயது பருவ சிறுமிக்கு கட்டாயம் எளிமை மற்றும் அப்பாவித்தனம் தான் முதலில் இருந்து இருக்கும். அப்படி என்றால் அந்த பார்வை, அதனின் எதிரொலியோ? என் மனது விடை தேடியது. அப்படி என்றால் நான் கொஞ்சம் அவளின் எண்ணத்தில் இருந்து விலகுவது மேல் என்று அது பதிலும் சொன்னது. எனக்கும் அது சரியே எனவும் பட்டது. நான் அதன் பின் அவளை நினைப்பதை நிறுத்திக் கொண்டேன். நான் என் படிப்பில் மூழ்கிவிட்டேன். நான் ஞாயிறு இங்கு வந்ததால், திங்களில் இருந்து பாடசாலை போவதும், மாலை வந்து படிப்பில் முழுவதுமாக வெள்ளி மட்டும் போய்விட்டது. அவளை அந்த ஒரு நாளுக்குப் பின் காணவே இல்லை. பொதுவாக சுந்தரலிங்க முதலாளியார் குடும்பம் மேல் மாடியிலேயே இருப்பார்கள். அது மூன்று மாடி கட்டிடம். எல்லா வசதியும் அங்கே அவர்களுக்கு இருந்தது. விருந்தினர்கள் வந்தால், அல்லது வார முடிவில் சுந்தரலிங்க முதலியார் வீட்டில் இருக்கும் பொழுது அல்லது ஏதாவது தேவை இருந்தால் தான் பொதுவாக கீழே வருவார்கள். சாப்பாடு கூட பணியாட்கள் மேலே அவர்களுக்கு வழங்குவார்கள். இவை எல்லாம் பணியாட்கள் மூலம் அறிந்தது.

 

சனிக்கிழமை காலை தேநீர் அருந்திவிட்டு, அவர்களின் ஹால்லில் இருந்த தொலை காட்சியில் நேரடி கிரிக்கெட் [துடுப்பாட்டம்] ஒளிபரப்பை பார்த்துக்கொண்டு, புத்தக அலுமாரியில் இருந்த "A History of Sri Lanka, first published in 1981, by K  M  De Silva" [கே எம் டி சில்வா எழுதிய இலங்கையின் ஒரு வரலாறு] என்ற புத்தகத்தை மேய்ந்து கொண்டு, கூறை மின்விசிறி தரும் காற்றை அனுபவித்துக் கொண்டும் இருந்தேன். நேரம் இன்னும் ஏழுமணி வரவில்லை. காலை சாப்பாடு பொதுவாக வாரவிடுமுறையில் எட்டு மணிக்குப் பிறகுதான் என்று நேற்றே கூறிவிட்டார்கள். திடீரென பின்னால் என்னை நோக்கி காலடி வரும் சத்தம் கேட்டது. நான் திரும்பி பார்க்கும் முன் 'ஹாய் குட் மோர்னிங்' என்ற இனிய குரல் கேட்டது மட்டும் அல்ல, என் தோளில் மெதுவாக தட்டி, நகத்தைக் கடித்துக் கொண்டு 'can you help me to take a book?' [புத்தகம் எடுக்க உதவுகிறீர்களா?] என்று வேண்டுகோள் வந்தது. நான் திரும்பி பார்த்தேன். அதே கொஞ்சும் பார்வை, அதே கண். ஆனால் அதனுடன் ஒரு மெல்லிய புன்னகை. முகம் கொஞ்சம் அலங்காரம் செய்து கண் மையை இறகு போல் வளைத்து வரைந்தும் அடர் சிகப்பு நிற உதட்டுச்சாயம் பூசியும் இருந்தது. அதற்கு ஏற்ற கை இல்லா மேல்சட்டையும் முழங்காலுக்கு சற்று மேலே வரையான குட்டை கீழ்ச்சட்டையும் அணிந்து இருந்தாள். 

 

காய்ச்சிய எண்ணை தேய்த்த அவளின் கரியகூந்தல், மின் விசிறியின் காற்றில் அசைந்தால், அந்த கூந்தலின் காற்று என்னில் பட்டு

 

காய்ச்செண்ண தேய்ச்ச நின் கார்கூந்தளத்தின்றே காற்றேற்றால் போலும் எனிக்கு உன்மாதம்

 

போல என்னை பித்தனாகியது. அது திடீரென ரதி தேவதையே வந்தது போன்ற அவளின் அந்த அழகும் பெண்மையை கோடிட்டு காட்டும் வனப்பும் தந்த கவர்ச்சியின் அதிர்வை கரைத்து, மகிழ்வில்  நனைத்து, உள்ளம் கனத்து, நெஞ்சம் தவித்து, உணர்வை உருக்கி, ஏதேதோ சொன்னது என்றாலும், பல்லைக்கடித்துக்கொண்டு 'ஓகே'  என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னேன். நான் அவளை முதல் முதல் கண்ட அந்த புத்தக அலுமாரியில், கொஞ்சம் உயரத்தில் இருந்த சில புத்தகங்களை அவள் காட்ட காட்ட, நானும் எடுத்தெடுத்து அவள் கையில் கொடுத்தேன். அவள் அவ்வற்றை கவனமாக பிடித்து வைத்திருந்தாலும், அது கையில் இருந்து நழுவுவதை கண்டேன். நான் உடனடியாக அதை தடுக்க அவள் கையை பிடித்தேன். அவள் புத்தகம் விழுவதை தடுக்க என்னுடன் ஒத்துழைக்கவில்லை, அது விழுவதையும் பொருட்படுத்தவில்லை. எனவே நான் அவள் கையை விட்டுவிட்டு, புத்தகங்களை என் கையில் ஏந்த முயன்றேன். ஆனால், அவள் என் கையை இறுக பிடித்து, அதே முதல் நாள் பார்வையுடன் நின்றாள். புத்தகங்கள் எல்லாம் கீழே சிதறின. இவளைக் கண்டு கண்கள் இன்புறுகிறது, இவளின் பேச்சை கேட்டு காதுகள் இன்புறுகிறது, இவளின் இதழை உண்டு நாக்கு இன்புறுகிறது, இவளின் வாசனை நுகர்ந்து மூக்கு இன்புறுகிறது, இவளின் தொடுகையில் [அணைப்பில்] என் உயிர் (மெய்) இன்புறுகிறது, என் ஐந்து புலன்களும் இன்பமும் இவளிடம் இருக்கிறதே "கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள" போல நானும் அப்படியே சிலையாக நின்றேன். 'என்ன சத்தம் கீழே' என மேலே இருந்து அவளின் அம்மா கேட்காவிட்டால், என்ன நடந்து இருக்குமோ .. நல்ல காலம் அப்படி ஒன்றும் நடக்கவில்லை!

 

'பார்வை ஒன்றே போதும்' என என் படிப்பு முடியும் மட்டும் எவ்வளவு விலகி நிற்க முடியுமோ, அவ்வளவு விலகி நின்றேன். அது அவளுக்கும் புரிந்து இருக்கும். மீண்டும் ஒரு சனி காலை அவளை தனிய சந்தித்தேன். அவள் என் அருகில் நெருங்கி வந்து இருந்தாள், இந்த கணிதம் விளங்கவில்லை, சொல்லித்தாங்கோ என்று நெஞ்சம் குளிர கேட்டாள்  சரி என்று நானும் விளங்கப் படுத்தினேன், ஆனால் அவள் குறும்பாய் ஏதேதோ செய்தாலே தவிர அதைக் கவனிக்கவில்லை அவள் முழு பார்வையும் என்னை கவ்விக்கொண்டே இருந்தன. நான் மெல்ல அவள் முகத்தை தட்டி 'காலம் கனியும் பொழுது கட்டாயம் நாம் இணைவோம், இப்ப அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது' என்று செல்லமாக கடிந்தேன். சுருங்கி சிணுங்கி குழைந்து சொல்ல எதோ வந்தாள், ஆனால் நாணி கோணி பின் விலகி நின்றாள். நறுக்காய் ஒரு சிரிப்புடன், சினம் கொண்ட பார்வையுடன், அவள் தன் அறைக்கு மேலே போய்விட்டாள்.

 

 

 

ஒற்றை பார்வையில் உட்புகுந்தவள். சில நாள் சந்திப்பில் காதலுக்கு அழைப்பிதழ் அனுப்பியவள். இப்ப காத்திருப்பை கவிதையாக்கி, தூர நின்று மூச்சு காற்றால் உறவாடுகிறாள். அவளது உள்ளங்கை வேர்வை அன்று உணர்ந்தேன். அவள் சுவாசம் புரியும், வாசம் தெரியும். அவள் விழிகளின் வார்த்தைகள் உணர்வேன். அது காணும், காலம் கனியும் மட்டும், அந்த பார்வை நினைவில் நிற்கும்! தொலைக்காடசியில்  "நீயும் நானும் அன்பே.. கண்கள் கோர்த்துக் கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்" என்ற பட்டு ஒலித்துக்கொண்டு இருந்தது. எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன் ? ஒருகணம் வாயடைத்து நின்றேன். திரும்பி பார்த்தேன், அவள் சுவரில் சாய்ந்தபடி என்னை பார்த்துக்கொண்டு இருந்தாள்.  அத்துணை அழகு அவள் அணிந்திருக்கும் கண்ணாடியின் உள் உள்ள அவள் கண்கள்? அவளின் கண்ணசைவுக்கு பதில் கூற முடியாமல் தவித்தேன். என் எண்ணங்களை சட்டென்று மண்ணிலிருந்து விண்ணிற்க்கு கொண்டு போனது. அந்த அவளின் பார்வை போதும் போதும் என்று நான், என்னை கட்டுப்படுத்திக்கொண்டு என் அறைக்கு  போனேன்!  

 

எட்டு ஆண்டுகள் கழித்து, இன்று அவள் என் மனைவி. இந்த நொடி தான் உண்மையில் அத்தனை ஆனந்தம் மனதிற்கு. ஆசைப்பட்ட பெண் ஒருத்தி ஆசைப்பட்ட வார்த்தையை, அருகில் அணைத்துக்கொண்டு,  வெளிப்படையாக மீண்டும் மீண்டும் அவளாக சொல்லும் நொடிகள் எத்தனை பரவசமானது. ஆசைகள் எல்லாம் ஒருங்கிணைந்தது, அவளின் ஆசைகளும் எனது ஆசைகளும். சிறு சிறு குறும்பு, குழந்தைத் தனமான பிடிவாதம், கொஞ்சல்கள் இப்ப புதிது தான் அனால் அவள் சிரிப்பினை பார்க்கும் பொழுது வரும் மகிழ்ச்சி அளவிட முடியாதவை. என்னவள் எனக்கானவள், உயிரினிலும் உயிராய் கலந்தவளை. முதல் முறை என் படுக்கை அறையில்  காண்கிறேன் எனக்கான இன்னொரு உயிரை! அளவுக்கு அதிகமான காதல் இருக்கும் பொழுது அளவுக்கு அதிகமான சொந்தம் என்ற எண்ணம் ஏற்படும். முழுதாக இன்று போல் சொந்தம் ஆன பிறகு தான் செல்லச் சண்டைகள் இட முடியும். எத்தனையோ விடயங்கள்  அவளிடம் பழகிய பின் பிடித்தாலும் முதன் முதலில் என்னை மயக்கிய அந்த கண்கள் தான் இன்று வரை பழக்கப் பட்டவை, மனதை கவர்ந்தவை. எவ்வளவு சண்டை, கோபம் வந்தாலும் நேரில் அவள்  பார்க்கும் அந்த பார்வை ஒன்றில் எல்லா கோபமும் மறைந்து விடும், அவள் கண் சொல்லும் வார்த்தையால்.! ஆமாம்

 

"பார்வை ஒன்றே போதும்"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment