நடை பயிற்சி யாருக்கு அவசியம்?

அதிக தூரம் நடந்தால் அதிக பலன் கிடைக்குமா?

இன்றைய அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரமே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அத்தகையோர் குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்வதன் மூலம் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

 

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்றுதான் பல காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதைவிட குறைந்த தூரம் நடப்பதன் மூலமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

 

தினமும் 5,000 அடிகளுக்கும் குறைவாக நடப்பது மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று ஆய்வு முடிவு கூறுகிறது.

 

உலகம் முழுவதிலும் இருந்து 2,26,000க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தினமும் 4,000 அடிகள் நடப்பது முன்கூட்டியே இறக்கும் அபாயத்தைக் குறைப்பதற்கு போதுமானதாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

ஆய்வில் தெரியவந்தது என்ன?

தினமும் 2,300 அடிகள் நடப்பது மூலம் நமது இதயம் , ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

 

ஒருவேளை நீங்கள் அதிக அடிகள் நடந்தால், அதற்கு ஏற்ப அதிக பலன்களை பெற முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

4,000 அடிகளுக்கு பின் 20,000 அடிகள் வரை நடக்கும் ஒவ்வொரு 1000 அடிகளும் முன்கூட்டியே இறக்கும் அபாயத்தை 15 சதவீதம் வரை குறைக்கும்.

 

உலகின் எந்த பகுதியில் வசித்தாலும் சரி, அனைத்து பாலினத்தவர்களுக்கு அனைத்து வயதை சேர்ந்தவர்களுக்கும் நடைபயிற்சியின் பலன் கிடைக்கும் என்று போலந்தில் உள்ள லோட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆகியவற்றின் குழு கண்டறிந்துள்ளது.

 

குறிப்பாக, 60 வயதுக்கு உட்பட்டவர்களிடையே மிகப்பெரிய பலன்கள் காணப்பட்டன.

 

உடல் ஆரோக்கியம் தொடர்பான சிகிச்சைக்கான மேம்பட்ட மருந்துகள் அதிகரித்து வந்தாலும் அவை மட்டுமே தீர்வு இல்லை என்று கூறுகிறார் லோட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மசீஜ் பனாச்.

 

உணவு, உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள், இதய ஆபத்தை குறைப்பதற்கும் ஆயுளை நீடிப்பதற்கும் குறைந்தபட்சம் அல்லது இன்னும் அதிகமாகவே பயனுள்ளதாக இருக்கும் என்பதை எப்போது வலியுறுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன்என்று அவர் கூறினார்.

 

போதிய உடல் செயல்பாடுகள் இல்லாமல் நிகழும் மரணங்கள்

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமை ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் இறப்புகளுக்கு காரணமாகின்றன .

 

உலகளாவிய ஃபிட்னஸ் நிறுவனமான பாரியின் தனிப்பட்ட பயிற்சியாளர் மற்றும் பயிற்றுவிப்பாளரான ஹனி ஃபைன், அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே இருப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து வலியுறுத்துகிறார்.

 

இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும், வலிகளை ஏற்படுத்தும் தசை வளர்ச்சி மற்றும் வலிமையை கட்டுப்படுத்தும்என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

"அதிக நேரம் உட்கார்ந்திருப்பது என்பது எல்லா வகையான முதுகுப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம், அலுவலக வேலைகளில் இருப்பவர்களிடம் இதை நாங்கள் அதிகம் காண்கிறோம், அவர்களின் முதுகு தொடர்ந்து அழுத்தமான நிலையில் வைக்கப்படுகிறது, இது எதிர்காலத்தில் வாழ்க்கையில் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது."

 

உடற்பயிற்சி செய்யாத செயலான தெர்மோஜெனீசிஸின் முக்கியத்துவத்தையும் அவர் விளக்குகிறார் . நம் அற்றலை பயன்படுத்தும் அல்லது கலோரிக்களை எரிக்கும் செயலை செய்வதை இது தெர்மோஜெனீசிஸ் குறிக்கிறது.

 

"நிற்பது, ஷாப்பிங் செய்யும் பொருட்களை எடுத்துச் செல்வது, தரையைக் கழுவுவது போன்றவை அனைத்தும் நம்மைச் சுறுசுறுப்பாகச் செய்யும் சிறிய விஷயங்கள்தான். ஆனால், இவை கலோரிகளை மிகவும் திறம்பட எரிக்க உதவுகின்றன," என்று அவர் கூறுகிறார்.

 

வழக்கமான நடை பயிற்சியை மேற்கொள்வது உங்களுக்கு கடினமாக இருந்தாலும் ஆரோக்கியம் என்று வரும்போது இதனால் கிடைக்கும் வெகுமதிகள் மிகச் சிறந்தவை என்று ஹனி ஃபைன் கூறுகிறார்.

 

"நடை பயிற்சி உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம், உங்கள் எலும்புகளைப் பாதுகாக்கும் விதமாக தசைகளை வலுப்படுத்தலாம், உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கலாம் மற்றும் ஆரோக்கியமான உணவுடன் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்," என்று அவர் கூறுகிறார்.

 

மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, எப்போதும் செல்போன், கணினி போன்றவற்றிலேயே நேரத்தை செலவிடுவதையும் பிற கவனச்சிதறல்களையும் கட்டுப்படுத்தவும் நடைபயிற்சி உதவும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

 

அனைத்து தரப்பினராலும் நடைபயிற்சி செய்ய முடியும், மூட்டுகள், தசைகள் போன்றவற்றுக்கு கடினமான உழைப்பை இது தராது என்றும் அவர் தெரிவித்தார்.

 

நடை பயிற்சி "கிட்டத்தட்ட யாருக்கும்" ஏற்றது, ஏனெனில் இது குறைந்த தாக்கம் மற்றும் மூட்டுகள் மற்றும் தசைகளில் எளிதானது, அவர் மேலும் கூறினார்.

 

நடை பயிற்சி தொடர்பான எளிய ஆலோசனைகள்

அருகில் உள்ள இடங்களுக்கு வாகனத்தில் செல்வதை விட நடந்து செல்லுங்கள்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு வேலை செய்பவராக இருந்தால், குறிப்பிட்ட இடைவெளியில் எழுந்து நின்று சிறிது தூரம் நடக்கலாம்

கர்ப்பமாக இருப்பவர்களுக்கு நடை பயிற்சி மிக சிறந்த உடற்பயிற்சி.

தினமும் 30 நிமிடங்களுக்கு இசையை ரசித்தபடியே நடை பயிற்சி மேற்கொள்ளலாம்.

முதலில் 10 நிமிடங்களுக்கு நடை பயிற்சியை தொடங்குங்கள், பின்னர் 20 நிமிடம், 30 நிமிடம் என அதை அதிகரிக்கலாம்.

 

:: நன்றி-அன்னாபெல் ரக்காம் ,பிபிசி செய்தியாளர்

0 comments:

Post a Comment