நாம் ஒரு இருட்டில் தொலைந்து போனால், யாராவது ஒருவர் கொஞ்சம் வெளிச்சம் தந்து பாதுகாப்பான வழியை காட்டினால் நல்லது. ஆமாம் ஒரு சிறிய ஒளி, எங்கள் வீட்டிலும் நாம் வாழும் உலகிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், முதலில் நாம் அதற்கு உடந்தையாக இருக்கவேண்டும். அன்பான சொற்களால், இதயத்தை மகிழ்வாக தொடுவதால், காது கொடுத்து கேட்பதால், அல்லது இதயபூர்வமாக உதவும் கரங்களால் இதை செய்யமுடியும். அதையும் பணத்தை விட, விளம்பரம் செய்வதை விட, முழுக்க முழுக்க அன்பினால் செய்யவேண்டும். அங்கு ஆடம்பரமான மேன்மை அல்லது பாசாங்குத்தனம் இருக்கக் கூடாது. மற்றவர்கள் வேண்டும் என்றால், உங்களை பெருமையாக கூறட்டும். எதோ தன் சுய பெருமைக்கு, பெரிதாக செய்யவேண்டும் என்று இல்லை. சிறிதாயினும் பெரிய அன்புடன், ஈடுபாடுடன் செய்ய வேண்டும். அதற்காக சமயத்தை, பெயரை மாற்ற வேண்டும் என்று உதவும் கரங்களை வியாபாரமும் செய்யக் கூடாது. அதுவும் மத குருமார் செய்வது, அவர்களின் பொய்த்தன்மையை கோடிட்டு காட்டுகிறது என்று நான் எண்ணுகிறேன்.
"என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து?"
என்று நன்னெறி பாடல் ஒன்று கூறுவதுபோல, சுவையான உணவினைக் கையால் எடுத்து நாவுக்கு அளிப்பது, அது தன்னைப் புகழவேண்டும் என்பதற்காகவா? இல்லையல்லவா. அதுபோலத்தான் தன்னை எப்போதும் முகஸ்துதி செய்யாமல் இருந்தாலும் அத்தகையவர்களின் துன்பங்களையும் நீக்குவதற்கு ஓடோடிப் போய் உதவி செய்வர் எவ்வித பலனையும் எதிர்பார்க்காத பெரியோர்கள் ஆகும். அப்படியானவர்கள் உள்ள உதவும் கரங்களை நான் வணங்குகிறேன். மதிக்கிறேன்!
வீதி வெயிலில் நிற்கும் ஏழை பிச்சைக்கார சிறுமிக்கு தன் செருப்பை கழட்டி கொடுத்து, தான் வெறும் காலுடன் அந்த வெயிலில் நிற்பதாக ஒரு சுய விளம்பரத்தை கண்டேன். அழுவதா சிரிப்பதா எனக்கு புரியவில்லை. அந்த ஏழை சிறுமிக்கு இந்த வெயில் எல்லாம் அத்துப்படி. அவளுக்கு தேவையானது சாப்பாடு, அழுக்கற்ற உடை, தூங்க நல்ல இடம், உழைக்க சிறு வேலை, முடிந்தால் கொஞ்சம் கல்வி. நான் அனுபவ பட்டவள் என்பதால் சொல்கிறேன், அதற்காக எல்லா உதவும் கரங்களையும் சொல்லவில்லை, பாதிக்கு மேல் விளம்பரம் என்பது உண்மை, உங்க முகநூலை / இணையத்தை திறந்து பாருங்கள் உங்களுக்கு தானாகவே புரியும். ஏன் நான் அண்மையில் [ மார்ச் நடுப்பகுதி, 2023], எப்படி ஏழை குடும்பம் ஒன்று உதவும் கரங்கள் என்ற போர்வையில், மட்டக்களப்பு - வாகரை, ஊரியன்கட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ நாலு பிள்ளைகளை கொண்ட குடும்பம் ஒன்று பெயர், சமயம் மாற்றப்பட்டது என்பதை ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் (பாகம் :123) இல் அறிந்தேன் [https://www.youtube.com/watch?v=iKTHOI3SOks]. அதனால் தான் என் கதையை உங்களுடன் கீழே பகிர்கிறேன்.
வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி. அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி என
"செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே"
என்று புறம் 189 :7-8 இல் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கூறுகிறார். அன்பு என்ற சுடருக்குத் தியாகம்தானே எண்ணெய்யாக இருக்க முடியும் என்ற தோரணையில், கலி.139
"பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்"
என்று என்று பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் பற்றி நல்லந்துவனார் குறிப்பிடுகிறார். உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவும் அழியும் என்று பெருங்கடுங்கோவும் குறிப்பிடுகிறார். உடல் உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவுவது போலச் சமூக உறுப்புகளான மனிதர்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும். இதயம் இரத்தத்தை எல்லாம் தனக்கே வைத்துக் கொண்டால் என்ன ஆவது? இரைப்பை, உணவை அப்படியே தானே வைத்துக் கொண்டால் என்ன ஆவது? என் மனம் இப்படித்தான் எண்ணுகிறது.
'கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை' என ஔவையார் ஒருமுறை பாடியது ஞாபகம் இருக்கிறது. ஒரு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு ஓலைக்குடிசையின் முற்றத்தில் உள்ள பெரும் கல்லின் மீது உட்கார்ந்து கொண்டு நிலவை வெறுத்து பார்த்துக் கொண்டு இருந்தேன். என் அம்மாவின் இருமல் சத்தம் இன்னும் என் காதுக்கு கேட்கிறது. என் தம்பியும் தங்கையும் வெளியில் எதோ விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். மணி இரவு ஏழு மணி இருக்கும், பக்கத்து காட்டில் பொறுக்கிய சுள்ளித் தடிகள் அடுப்பில் வைத்த மரவள்ளிக் கிழங்கை வேகவைத்துக் கொண்டு இருக்கிறது. அப்பா, கண்மூடித்தனமான ஷெல் தாக்குதலில் இறந்து பதினாலு பதினைந்து ஆண்டு இருக்கும். அப்பாவின் மறைவிற்குப் பின் அம்மா அப்பப்ப கிடைக்கும் கூலி வேலைகள் மூலம் எம்மை ஓரளவு வளர்த்து எடுத்ததுடன் நானும் உயர் வகுப்பு வரை படித்தேன். என்றாலும் இப்ப அம்மாவும் இயலாமல் இருக்கிறார். எனக்கு சிறு வேலையாவது கிடைக்கும் என்றால், எப்படியும் நாம் இந்த வறுமையில் இருந்து கொஞ்சமாவது நிமிரலாம். மற்றும் படி நிலாவின் குளிர்ச்சியில் காய நான் இங்கு குந்தி இருக்கவில்லை!
யாரோ கடலை சாப்பிட்டுவிட்டு எறிந்த பேப்பர் துண்டு காற்றோடு அள்ளுப்பட்டு என் காலடியில் வந்து விழுந்தது. மெல்ல குனிந்து அதை எடுத்து, நிலா ஒளியில் பார்த்தேன். யாரோ வெளிநாட்டில் இருந்து இங்கு வருவதாகவும், அவர் தன் தாயின் பெயரில் உதவும் கரங்கள் நடத்துவதாகவும், அதன் பெயரில் வறுமையில் வாடும் அல்லது உழைக்கும் தந்தையை இழந்த தனிக் குடும்பங்களுக்கு உதவ இருப்பதாகவும் அறிந்தேன். அது எனக்கு ஒரு ஆறுதலாக அந்தநேரம் இருந்தது. அவர் நேரடியாக எம் கிராமத்துக்கு வந்து, அந்தந்த குடும்பங்களை பார்த்து கதைத்து தன் நிறுவனத்தால் இயன்ற உதவிகள் செய்வார் என பின் குறிப்பும் அதில் இருந்தது. நான் ஓரளவு படித்து இருப்பதால், எனக்கு எதாவது ஒரு வேலை எடுக்க அல்லது வீட்டில் இருந்து ஓரளவு வருமானம் தரக்கூடிய தொழில் வாய்ப்புக்கு உதவினால் போதும் என்று என் மனதில் எண்ணினேன். அதை விட்டுவிட்டு எதோ ஒரு கொஞ்ச உணவு மூடை , ஒன்று இரண்டு உடுப்புகள் தந்து, அதை படங்களும் எடுத்து இணையத் தளத்தில், முகநூலில் பெருமைப்படுத்தி போடுவதால் பிரச்சனை தீராது என்பது என் திட நம்பிக்கை.
என் பெயர் வெண்ணிலா, வயது இருபது. பெயருக்கு ஏற்ற அழகு என்று என்னை எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் இந்த அழகு, கவர்ச்சி ஏழைக்கு கூடாது என்பதை அந்த உதவும் கரங்களின் ஸ்தாபகரை சந்தித்த பின்பு தான் உணர்ந்தேன். அந்த நிறுவனருக்கு ஐம்பது, ஐம்பத்தைந்து வயது இருக்கலாம். என் தந்தையை விட கொஞ்சம் வயது கூட என்றே சொல்லலாம். காலை ஒன்பது மணியளவில் அந்த நிறுவனர், தன் சில நண்பர்களுடன் எங்களை அந்த கிராமத்தில் உள்ள பொது விடுதி ஒன்றில் அழைத்தார். எனவே நான் அம்மா, தம்பி, தங்கை எல்லோரும் அங்கு சென்றோம், மிகவும் கரிசனையுடன் முதலில் எங்கள் எல்லோரையும் விசாரித்தார். எங்களுக்கு சில பலகாரங்களும் குளிர் பானமும் தரப்பட்டது. அம்மா அடிக்கடி இருமிக்கொண்டு இருந்தார். தம்பி தங்கைகள் இன்னும் படிக்கிறார்கள் என்று சொன்னேன். என் உயர் வகுப்பு சித்திக்கான சான்றிதழையும் காட்டினேன். தான் கட்டாயம் உதவி செய்வதாகவும், அதற்கு சில படிவங்கள் நிரப்ப வேண்டும் என்றும், இப்ப அம்மா இருமலில் கஷ்டப்படுவதால், அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு மாலை நான் மட்டும் வந்து நிரப்பலாம் என்று அன்பாக கூறி அனுப்பினார்.
உண்மையில் எதோ எம் கவலைகள் ஓரளவு தீரும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம். அம்மாவின் முகத்தில் அன்று தான் ஒரு மகிழ்ச்சியை கண்டேன். மாலை மூன்று மணிக்கு பிறகு நானும் எனக்கு துணையாக தம்பியும், திரும்பவும் அங்கு புறப்பட்டோம். அவரின் நண்பர்கள் வெளியே போய்விட்டார்கள். அவர் மட்டுமே அங்கு இருந்தார். எங்களை கண்டதும் அன்பாக வரவேற்று உள்ளுக்குள் அழைத்தார். பிறகு தம்பியை பார்த்து, அக்கா படிவம் நிரப்ப வேண்டும், அதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும், அதுவரை டிவி பார்க்கும் படி அதை போட்டுவிட்டார். பின் என்னை அலுவலக அறைக்கு படிவம் நிரப்ப கூப்பிட்டார்.
நான் படிவங்களை நிரப்பும் போது, சரியாக நிரப்ப வேண்டும் அப்ப தான் வேலை எடுக்க உதவும் என்று கரிசனையுடன் சொல்லிக் கொண்டு, தான் சொல்லுவது படி என்னை நிரப்ப சொல்லி என் அருகில் கொஞ்சம் சாய்ந்தார். என் அப்ப மாதிரி அவர் என்பதால் நான் அதை அந்த நேரம் தவறாக உணரவில்லை. ஆனால் அவர் படிவத்தை நிரப்ப உதவுவதை விட, என் அழகை, என் கவர்ச்சியை விமர்சிக்க தொடங்கினார். அப்பவும் அதை நான் பெரிதாக பொறுப்படுத்த வில்லை. அவர் வயது போனவர் என்பதால், ஒரு விளையாட்டாக சொல்லுகிறார் என்று நினைத்தேன். கொஞ்சம் நிரப்பி முடிய, இனிப்பு பண்டங்களும் குளிர்பானமும் தந்து, இதை சாப்பிட்டுவிட்டு தொடரலாம் என்றார். தானும் என்னுடன் நெருங்கி இருந்து சாப்பிட தொடங்கினார். அப்ப தான் எனக்கு கொஞ்சம் அருவருப்பாக இருந்தது. நான் விலகி தள்ளி இருக்க முயன்றேன். அவர் சடுதியாக கையை பிடித்து, தன்னுடன் இழுத்தார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை, ஓங்கி ஒரு அறை கன்னத்தில் போட்டேன். அதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. படிவத்தை கிழித்து அவர் முகத்தில் எறிந்துவிட்டு சடுதியாக அந்த விடுதியை விட்டு தம்பியுடன் வெளியே வந்தேன். அப்ப தான் எனக்கு நிம்மதி வந்தது.
நான் வெளியே ஒட்டமும் நடையுமாக கெதியாக வீடு நோக்கி போனேன். என்னை அறியாமலே கண்ணீர் ஒழுகிக் கொண்டு இருந்தது. அந்த நேரம் தற்செயலாக அந்த வழியே வந்த ஒரு இருபத்தி ஐந்து, இருபத்தி ஆறு வயது மதிக்கத்தக்க இளைஞன் எம் இருவரையும் பார்த்துவிட்டான். அவன் என் தம்பியை கூப்பிட்டு என்ன நடந்தது, ஏன் அக்கா அழுகிறார் என்று விசாரித்தார். எனக்கு கோபம் கோபமாக வந்தது. இவனும் அவனை மாதிரி ஒருவனோ என்ற எண்ணம் தான் மனதில் ஓங்கியது. நீ உன் வேலையை பார் என்று அவனை திட்டினேன். அப்பொழுது தான் அவனின் அதிகாரப்பூர்வ வேலை அடையாள அட்டை கழுத்தில் தொங்குவதை கண்டேன். அதில் அவனின் பெயரும் மற்றும் சிவில் இன்ஜினியர், கட்டிடத் துறை என்று இருந்தது. நான் உடனடியாக மன்னிப்பு கேட்டு நடந்ததை கூறினேன்.
அவன் ஒன்றும் கொஞ்ச நேரம் பேசவில்லை, பின் தான் இந்த கிராமத்துக்கு புதிதாக வேலைக்கு வந்துள்ளதாகவும், தனது அலுவலகத்தில் ஏதாவது ஒரு பொருத்தமான வேலை இருந்தால் சொல்வதாகவும், எனது வீட்டு விலாசத்தையும், பெயரையும் கேட்டுவிட்டு தன் வழியில் போய்விட்டான். நான் அவனை நம்பவில்லை. என் முதல் அனுபவம் இன்னும் என் நெஞ்சில் அப்படியே இருக்கிறது.
ஒரு கிழமைக்கு பின்பு, ஒரு நாள் அதே இளைஞன் என் குடிசைக்கு வந்தான். முதலில் அம்மாவிடம் ஏதேதோ கதைதான். ஒரு வேலை படிவத்தையும் தந்தான். அதை நிரப்பி, தனது அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் படி கூறிவிட்டு புறப்பட்டான். அம்மா தேநீர் குடித்துவிட்டு போகும் படி கூப்பிட்டாலும், அவன் இன்னும் ஒரு நேரம் குடிக்கிறேன் என்று கூறிவிட்டு உடனடியாக போய்விட்டான். நான் வெளியே வந்து அந்த பெரும் கல்லின் மீது உட்க்கார்ந்து கொண்டு அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தேன், நிலவின் குளிர்ச்சியை எனோ இன்று உணர்ந்தேன்! எனக்குள் என்னென்னவோ அலைகள் பாய்ந்து கொண்டு இருந்தன, அது என்ன என்று எனக்கு சரியாக புரியவில்லை, முகத்தில் மகிழ்ச்சி தானாக வந்தது. அவன் மறையும் மட்டும் கண்வெட்டாமல் பார்த்துக்கொன்டே இருந்தேன்.
ஒரு கிழமைக்கு பின் எனக்கு உதவி பயிற்சி குமாஸ்தா வேலை கிடைத்தது. நான் முதல் நாள் என்பதால், எதோ என்னிடம் இருந்த உடைகளில் கொஞ்சம் நல்லதாக இருந்ததை உடுத்துக்கொண்டு , அதே நேரம் கொஞ்சம் பயத்துடனும் வேலைக்கு போனேன். அவன் அந்த அலுவலகத்தில் கொஞ்சம் பிஸியாக இருந்தான். அந்த கட்டிடத் துறை அலுவலகத்தின் முகாமையாளர் என்னை நலம் விசாரித்துவிட்டு, அவனுக்குத் தான் என்னை உதவி பயிற்சி குமாஸ்தாவாக நியமித்தார். அது எனக்கு நிம்மதியாக இருந்தது. தெரியாததை பயப்படாமல் கேட்டு அறியலாம் என்ற நம்பிக்கை வந்தது. எனோ அவன் மேல் எனக்கு ஒரு பிரியம் இப்ப ! ஆனால் அவனுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது?
ஒன்று மட்டும் என் மனதில் ஆணிவேர் மாதிரி நிலைத்து நின்றது. பெரும் ஆரவாரத்துடன் வந்த அந்த உதவும் கரங்களுக்கும், சொல்லிக்கொள்ளாமல் வந்த இந்த உதவும் கரங்களுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாக எனக்கு புரிந்தது. ஏனெனில் இந்த செயல் அன்புடன் செய்யப்பட்டது. ஆனால் முன்னையதோ அப்படி இல்லை. அது ஒரு வியாபாரம். இவன் இதில் தனக்கு எந்த புகழையோ அல்லது தற்பெருமையையோ எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், உதவி தேவை என்று தோன்றிய சக மனிதனுக்கு தன்னால் இயன்றதை மௌனமாக செய்து முடித்துள்ளான். அது தான் எனக்கு அவன் மேல் ஒரு காதல். என் மேல் சாயமாட்டானா, கை பிடித்து இழுக்கான என்று வெட்கம் விட்டு மனதில் ஏங்குகிறேன். ஆனால் அவனாக என்னை விரும்பும் மட்டும் எல்லை தாண்டமாட்டேன். அப்படித்தான் நான் வளர்க்கப் பட்டேன்!
:நன்றி:-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment