மகிழ்ச்சி என்பது மாயையா?
ஒரு நடிகர், “நீங்கள் எத்தனை சிறப்பாக நாட்டியம் ஆடுகிறீர்கள்! நானும்தான் ஆடுகிறேன். ஆனால், உங்களைப்போல் ஆடமாட்டோமா என்றிருக்கிறது!” என்றாராம் ஏக்கத்துடன். அந்த நடன ஆசிரியர் என்னிடம் சொல்லிச் சிரித்தார்.
நடிகர் மிகப் பிரபலமானவர். பல துறைகளில் முத்திரை பதித்தவர். தன் நிறைகளை எண்ணி மகிழாது, குறைகளையே பெரிதுபண்ணினால் மகிழ்ச்சி எவ்வாறு கிட்டும்?
ஒப்பீடும் பொறாமையும்
`இது என்ன வாழ்க்கை! மகிழ்ச்சியே கிடையாது!’ என்று பலரும் புலம்புகிறார்களே! அவ்வாறு அலுத்துக்கொண்டாற்போல் நிலைமையை மாற்றிவிடமுடியுமா?
பெரும்பாலாரான பெற்றோர்கள் தம் குழந்தைகளை ஒருவருடன் ஒருவரை ஒப்பிடுவார்கள். இதுவே குழந்தைகளுக்குத் தாழ்வுமனப்பான்மை ஏற்படக் காரணமாகிறது.
அதனால், தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுக்கொள்வதும் பழக்கமாகிவிடுகிறது: `அவள் என்னைவிட அழகி, பணக்காரி, புத்திசாலி!’ என்ற வயிற்றெரிச்சல் ஏன்? இதனால் சிறந்துவிடவா போகிறார்கள்?
::கதை::
“முப்பது வயதில் இந்த இசைக் கலைஞர்கள் எவ்வளவு சாதித்திருக்கிறார்கள்! என் வாழ்க்கை வீண்!” என்று ஒருவர் அங்கலாய்த்துக்கொண்டார்.
அவர்களுடைய சாதனை மட்டும்தான் பிறர் கண்ணுக்குத் தெரியும். அதற்காக அவர்கள் சிறு வயதிலிருந்தே எத்தனை உழைத்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்ப்பதில்லை.
மற்ற சிறுவர்களைப்போல் விளையாடி இருக்கமாட்டார்கள். எனக்குத் தெரிந்து, சிலரது ஓய்வு நேரத்திலும்கூட இசைப்பயிற்சிதான். அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டுக்கூட இருக்கலாம்.
பள்ளி நாட்களில் அனுதினமும், தபேலா கலைஞரான ஜாகிர் ஹூசேனை இரவு இரண்டு மணிக்கு எழுப்பி சாதகம் செய்யச்சொல்வாராம் அவருடைய தந்தை. அதற்குமுன், காலை ஆறு மணியிலிருந்து!
எத்தனைபேர் இப்படி உழைப்பார்கள், சிறு வயதிலிருந்தே?
எங்கே மகிழ்ச்சி?
மகிழ்ச்சி என்பது எங்கேயோ வெளியில் கிடைப்பதில்லை. நமக்குள்ளேயேதான் இருக்கிறது. நம் செய்கைகளால் விளைவது அது. பேராசை அதை அழித்துவிடும்.
::கதை::
அரசியலில் ஈடுபட்டிருந்த ஒருவருக்குப் பெரிய பதவிகள் கிடைக்கவேண்டுமென்ற ஆசை. அப்போதுதான் பிறர் முன்னிலையில் தன் மதிப்பு கூடும் என்ற எண்ணம் அவருக்கு.
`பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்று யோசித்தே வாழ்வைக் கடத்தினால், மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்?
குடும்பத்தைக் கவனிக்க அவருக்கு நேரமில்லை. வீட்டில் கண்டிப்பு இல்லாததால், அதன் அங்கத்தினர் ஒவ்வொருவரும் மனம் போனபடி நடக்கத் துவங்கியிருந்தனர்.
அவர் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததைக் கண்டும் காணாததுபோல் இருக்கவேண்டிய நிலை. மகனோ போதைப்பித்தன். மகளுக்கு நிறைய காதலர்கள்.
உயர்பதவி கிடைத்ததோ என்னவோ, மகிழ்ச்சி அவரைவிட்டுப் போய்விட்டது.
“உங்களைப்போல் என்னால் இருக்க முடியவில்லையே! எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள்!” என்று பொருமுவார், தன்னைவிடச் சற்றே தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைக் கண்டு. இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தி அடைய அவருக்குத் தெரியாததுதான் வருத்தம் எழக் காரணம்.
இருப்பினும், `நிறைய ஆசைகள் கூடாது!’ என்று புத்தர் வழிகாட்டியபடி இளம்வயதில் இருக்க வேண்டியதில்லை. தன்னால் என்னென்ன முடியும் என்று அறிந்துகொள்ளும் பருவம் அது.
அப்போது ஆசைகளை அடக்கிக்கொண்டிருந்துவிட்டு, காலம் கடந்தபின், “நான் என்னென்னவோ செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டிருந்தேன்!” என்ற ஏக்கப் பெருமூச்சு எதற்கு?
எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒத்திருந்தால்தான் மகிழ்ச்சி கிட்டும்.
கடந்ததை எண்ணி வருந்தினாலோ, அல்லது எதிர்காலத்தில் என்ன வருமோ என்று அஞ்சினாலோ நேரம்தான் விரயமாகும். இரண்டுமே நம் கையில் இல்லை.
89 வயதான ஒருவர் முனைவர் பட்டம் பெற்றார் என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். அந்தப் படிப்பால் பெரிய உத்தியோகம், அதற்கேற்ற ஊதியம் என்று அவர் கணக்குப் போட்டிருக்கமாட்டார். என்றோ செய்ய நினைத்து, முடியாமல் போனதற்காக ஏங்குவதைவிட அதைச் செய்து முடிக்கலாம் என்ற விவேகம் அவருக்கு இருந்தது.
தன்னைவிடப் பிறர் உயர்ந்திருக்கிறார்களே என்ற ஆற்றாமைக்கோ, சுயவெறுப்புக்கோ அவர் இடம் கொடுக்கவில்லை.
பகிர்ந்துகொள்!
வேண்டாத நினைவுகளிலிருந்து நம்மை விடுவித்துகொள்ளும் முயற்சிதான் நாம் நமக்கே அளித்துக்கொள்ளும் கருணை. அப்போதுதான் நம் நிலையிலிருக்கும் பிறருக்கும் உதவி செய்யும் ஆற்றலைப் பெறுகிறோம்.
ஒரே நிலையில் இருப்பவர்கள் ஒன்றுசேர்ந்து தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, அனைவருமே தம் பலம் பெருகிவிட்டதுபோல் உணர்வர்.
நடந்ததை மறைக்காது, `நானும் அவதிப்பட்டிருக்கிறேன்!’ என்று ஒத்துக்கொள்ளும்போது, `இதுவும் ஒருநாள் கடந்துபோகும்!’ என்று அவர்கள் உணர்ந்து, ஆறுதல் அடைவார்கள். வாழ்க்கை பொறுக்கமுடியாததாக இருக்காது.
நடப்பதெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தானாம். நம்மால் ஏற்க முடியாதது ஏன் நடந்தது என்று நெடுநாட்கள் கழித்துப் புரியும். நாம் துயருற்று, பின் அதிலிருந்து மீண்டால், நம்மைப்போன்ற பிறருக்கு உதவி செய்ய முடியும். அதிலேயே நிறைவு காணலாம்.
நம் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒருவரிடம் பகிர்ந்துகொள்வதும் மனதை ஆற்றிக்கொள்ளும் ஒரு வழி. அவருக்கும் அதேபோன்ற துன்பமோ, துயரோ வந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நம் நிலையில் பொருத்திக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தாலே போதும்.
::கதை::
எல்லா வயதினருக்கும் துன்பங்கள் உண்டு.
பள்ளிக்கூடத்தில் சேர்ந்தவுடனேயே இது தெளிவாகிறது. வீட்டில் அன்பும் பாதுகாப்பும் அளித்த பெற்றோருடன் இருந்துவிட்டு, புதிய சூழ்நிலைக்குப் போகும்போது சில பேருக்குப் பொறுக்கமுடியாததாக ஆகிவிடும்.
“நீ குண்டு! ரொம்ப பயந்தவள்!”
“உன் தலைமயிர் ஏன் நீளமாக இருக்கிறது, தெரியுமா? நிறைய பேன்! அதனால்தான்!”
பொறாமை கொண்ட சிறுமிகள் தம்மைப்போன்று இல்லாத வகுப்புத்தோழிகளைப் பார்த்துப் பலவாறாகப் பழிப்பார்கள்.
“கோபம் வந்தால், இவள் மூக்கு எப்படித் துடிக்கிறது, பாரேன்!”
தாய் ஆதரவுடன் நடந்துகொண்டால், தாம் படும்பாட்டை அவளுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
பத்து வயதிலிருந்து என்னை ஓயாமல் கேலி செய்தாள் ஒரு பெண். நான் சண்டைபிடிக்க மாட்டேன்.
பள்ளிக்கூடத்திலிருந்து நான் திரும்பியதுமே, முதல் வேலையாக அம்மாவிடம் போய், என்னை ஓயாது கேலிசெய்தவளைப் பற்றிக் கூறுவேன்.
“சூரியனைப் பாத்து நாய் குலைக்கிறதுன்னு விட்டுடு!” என் தாய் தினமுமே எனக்கு ஆதரவாகக் கூறியது.
அப்பெண்ணைப் பதினேழு வயதில் பார்த்தபோது, அவள் ஏன் என்னை அப்படி நடத்தினாள் என்று புரிந்தது. அன்போ, செல்வமோ இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவள் அவள்.
இதைப்போன்ற பல சம்பவங்களிலிருந்து நான் கற்ற பாடம்: நம்மைக் கஷ்டப்படுத்த நினைப்பவர்கள் பொறாமைபிடித்தவர்கள். அவர்கள் சொல்லையும் செய்கையையும் அலட்சியப்படுத்தவேண்டும். ஏனெனில், அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.
குடித்தால் பிரச்னைகள் தீருமா?
பிரச்னைகளைச் சமாளிக்க ஒரு வழிதான் என்று திரைப்படங்களில் காட்டுகிறார்கள்.
“ஏதோ ஒரு பிரச்னை இருப்பதால் ஒருவன் குடிக்க ஆரம்பிக்கிறான். குடிப்பதால் மேலும் பல பிரச்னைகள் வருகின்றன,” என்ற வாக்கியம் என் பாட புத்தகத்தில் இருந்தது இன்னும் மறக்கவில்லை.
பிரச்னைகளைத் தாற்காலிகமாக மறப்பதால் அவை குடிப்பவரைவிட்டு விலகப்போவதில்லை. உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகிய இரண்டும் பாதிப்படையுமுன் அவை ஏன் நிகழ்ந்தன என்று யோசிப்பது மேல். குடிபோதையில், `ஏனோ, எனக்கு மகிழ்ச்சி கிடைக்க மாட்டேன் என்கிறது!’ என்று புலம்புவானேன்!
நாம் பட்ட கஷ்டங்கள் நடந்தபோது, நம்மை வெகுவாகப் பாதித்து இருக்கலாம். அவற்றை மறப்பது கடினம்தான்.
ஆனால், ஓயாது அவற்றையே நினைத்துக்கொண்டிருந்தால், அவை நம்மைக் கட்டுப்படுத்த விடுகிறோம். இது புரிந்து, நம்மை விடுவித்துக்கொள்ளவேண்டும்.
நல்ல வழிகளா இல்லை!
::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக... Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1
No comments:
Post a Comment