புகழ் என்னும் போதை
இணையம் புழக்கத்திற்கு வருமுன், ஒரு சினிமா பத்திரிகையில் பிரபல நடிகைகளின் பேட்டி எடுக்கப்பட்டது.
கேள்வி: உங்களுக்குப் பிடித்தது எவை?
சொல்லிவைத்தாற்போல், எல்லாரும் ஒரே பதிலைத்தான் கூறினார்கள்.
அது என்ன தெரியுமா?
“பணம், புகழ்!”
இரண்டுமே நிலைப்பது மிகக் கடினம். அப்படியே கிடைத்தாலும், ஒருவர் வாழ்வில் வெற்றிபெற்றுவிட்டதாக ஆகிவிடாது. மிகச் சிலர்தான் பிறரது பாராட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் திறமையைப் பெற்றிருக்கிறார்கள்.
புகழ் வரும்போதே, வேண்டாத விமரிசனங்கள் – ஒருவரது படைப்பைப் பற்றியோ, குணாதிசயங்களைப் பற்றியோ, சொந்த வாழ்க்கையைப் பற்றியோ – எழுவதைத் தவிர்க்க முடியாது.
::கதை::
ஒரு தமிழ் எழுத்தாளரின் புதிய பாணியிலான நடை, கரு இரண்டும் வாசகர்களை ஈர்க்க, குறுகிய காலத்திலேயே மிகுந்த புகழை அடைந்தார்.
சிலர் புகழ, பலர் அவரைக் கேட்டார்கள் முகத்திற்கு நேராகவே: “ஏன் ஆபாசமாகவே எழுதுகிறீர்கள்?”
தடுமாற்றத்தைச் சமாளிக்க தலையைத் தடவியபடி, “எதை ஆபாசம் என்கிறீர்கள்?” என்று கேட்டாராம் அந்த எழுத்தாளர்.
`உன் கையை உடைத்துவிடுவேன்!’ என்ற மிரட்டல்கூட அவருக்கு வந்திருக்கிறது.
புகழ் பெற்றவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும் விமரிசனத்துக்கு ஆளாகிவிடுகிறது.
அவற்றில் எல்லாமே உண்மை என்பதில்லை. இருந்தாலும், அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க நேரிடுகிறது.
இது புரிந்து, பிறர் சொல்வதை அலட்சியம் செய்தால்தான் ஒருவர் தான் தேர்ந்தெடுத்த துறையில் தொடரமுடியும்.
நடிகர்களைக் காப்பியடிப்பது
பிரபலமடைந்த நடிக, நடிகையரைப்போல் தமக்கும் திறமையோ, அதிர்ஷ்டமோ இருக்கிறதா என்று எவரும் யோசித்துப்பார்ப்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு, அவர்கள் செய்வதைப் பின்பற்றுகிறார்கள்.
வேஷ்டி தயாரிப்பாளர்கள் முன்னணி கதாநாயகர் ஒருவரிடம், `படம் முழுவதிலும் வேட்டி அணிந்தபடி காட்சி கொடுங்கள். எங்களுக்கு அமோகமான விற்பனை ஆகும்,’ என்று வேண்ட, அவரும் இணைந்தார். படம் வெளியானதும், ரசிகர்கள் அவர் `விரும்பிய’ ஆடையைத் தாமும் அணிந்து மகிழ்ந்தார்களாம்.
தாம் என்ன செய்தாலும், அதைப் பின்பற்ற பலர் காத்திருக்கிறார்கள் என்ற நடப்பு புகழைப் பெற்றவர்களுக்கு முதலில் பெருமையாக இருக்கும். பக்கவிளைவாக, இன்னும் சிறக்கவேண்டும் என்று அவர்களுடைய பிரயாசை அதிகரித்துக்கொண்டேபோகும். அந்த முயற்சி மன இறுக்கத்தில்தான் கொண்டுவிடும்.
திறமை என்பது கடவுள் அளிப்பது. புகழ் – மனிதன் கொடுப்பது. கர்வமோ தனக்குத்தானே அளித்துக்கொள்வது என்பதால் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார் ஓர் அனுபவசாலி.
ராமாவதாரமா?!
ராமாயணக் கதாநாயகன் ஸ்ரீராமசந்திரமூர்த்தியாக ஒரு படத்தில் நடித்து, பெரும்புகழ் பெற்றவர் அந்த ஆந்திர நடிகர். மக்கள் அவரைக் கடவுளாகவே பாவித்தனர்.
தினமும், குறிப்பிட்ட வேளையில், அயோத்தி ராமரைப்போன்ற ஆடையணிகள் பூண்டு, தன் வீட்டு மாடி பால்கனியிலிருந்து `தரிசனம்’ கொடுப்பாராம். அதைப் பார்க்க, பல ஊர்களிலிருந்து வந்த மக்கள் கூடுவார்களாம்!
ஒருவர் தன்னைக் கடவுளாகவே பாவித்துக்கொண்டால், மற்ற அனைவரும் தனக்குக் கீழே இருப்பவர்கள்தாம் என்ற கர்வம் வந்துவிடாதா! நாளடைவில், தான் யார் என்பதே புரியாது போய்விடும். இதுவும் ஒருவித மனநோய்தான்.
பிறருக்கு என்ன பிடிக்கும், அதனால் தன் புகழ் கூடுமே என்று யோசித்தபடி இருந்தால், தனக்கென்று சிறிது நேரத்தையாவது ஒதுக்க முடியுமா? பின், நிம்மதி எப்படிக் கிட்டும்?
புகழையே துரத்திப் போகும்போது, உணர்ச்சிபூர்வமான தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள ஏது நேரம்!
உண்மையான நண்பர்களும், உறவினர்களும் இல்லாத வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் இருக்குமா?
புகழுடன் பணமும் சேர்ந்தாலும், ஏன் மகிழ்ச்சி கிட்டாததாக இருக்கிறது என்று புகழ் போதை கொண்டவர்களுக்குப் புரிவதில்லை. திறமை வாய்ந்தவர்கள் குறுகிய காலத்திலேயே காணாமல் போய்விடுவது இதனால்தான்.
வினா: புகழை ஏன் போதை என்கிறார்கள்?
விடை: எவ்வளவு கிடைத்தாலும், நிறைவு கிட்டாது.
சமயம் பார்த்து, இவர்களைத் தீய வழிகளில் ஈடுபடுத்த முன்வருவார்கள் பல `நண்பர்கள்’. அந்நிலையில், பணத்துடன் புகழும் கரைந்துபோகும். மிஞ்சுவது கசப்பும், ஆரோக்கியக்குறைவும்தான்.
பணம், புகழ், திறமைக்காக அளிக்கப்படும் பட்டங்கள் ஆகிய எதையுமே பெரிதாகக் கருதாது, எடுத்த காரியத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு, திருப்தி அடைகிறவர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.
“வெற்றி நிலைக்க பணிவு முக்கியம். பணம், புகழ் ஆகியவை தலைக்குமேல் ஏறக்கூடாது”. இப்படிக் கூறியிருப்பவர் A.R. ரஹ்மான்.
`இன்னும் என்னதான் வாங்கமுடியும்!’ என்ற அலுப்பை ஏற்படுத்திவிடுகிறதாம் அளவுகடந்த செல்வம்.
சிலர் இது புரிந்து, பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். மிகச் சிலர்தான்!
புகழின் உச்சியைத் தொட்ட குழந்தைகள்
ஒரு குழந்தை வயதுக்குமீறி பேசினால், அது சுட்டித்தனம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள்.
தமிழ் திரைப்படங்களிலோ, அல்லது முகநூலிலோ, குழந்தைகளைக் கண்டபடி பேசவைக்கிறார்கள். அப்பாவையும் தாத்தாவையும், `டேய்!’ என்றழைக்கும் குழந்தை புத்திசாலியாம்!
இயக்குனர் அல்லது பெற்றோர் கூறுவதுபோல் செய்து காட்டுகிறார்கள் குழந்தைகளும், தாம் என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே. பிறர் புகழ, எப்போதும் அப்படியே நடக்கத் தலைப்படுகிறார்கள்.
பல மணி நேரம் நடிக்க வேண்டியிருப்பதால், பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாட முடியாது. வயதுக்குரிய கல்வியையும் பெறுகிறார்களா என்பதும் சந்தேகம்தான்.
தம் வயதுக்குரிய அப்பாவித்தனத்தை இழந்து, வளர்ச்சிக்கு எது ஏற்றது என்று புரியாது வளர்வதால், மனஇறுக்கத்தைத் தவிர்க்க முடிவதில்லை. அதைப் போக்க, மது, போதைப்பொருட்களை நாடுவது பெரும்பாலரது பழக்கமாகிவிடுகிறது.
மைக்கல் ஜாக்சன்
இசைத்துறையில் உலகிலேயே அதிகமான விருதுகள் பெற்றவர், ஓராண்டில் மிக அதிகமான வருமானம் பெற்றவர் என்றெல்லாம் பெரும்புகழ்பெற்ற மைக்கல் ஜாக்சனுக்கு போதை மருந்து இல்லாவிட்டால் உறங்கமுடியாது என்ற நிலை ஏற்பட, ஒரு மருத்துவரை கூடவே வைத்துக்கொண்டார்.
அளவுக்கு அதிகமாகிப்போன அப்பழக்கமே அவருக்கு யமனாக அமைந்தது.
எந்தத் துறையானாலும், புகழ் போதை பிற போதை வழிகளில் கொண்டுவிடுகிறது.
பிரபல HARRY POTTER ஆங்கில திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த டானியல் (Daniel Radcliffe) கூறுகிறார்: “நான் நடிக்கப் போகும்போது, ஒவ்வொரு முறையும் கண்மண் தெரியாது குடித்துவிட்டுத்தான் போவேன். எப்போதும், இனிமையாக நடந்துகொள்ளவேண்டுமே! சிறந்த நடிகன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது”.
குழந்தை நட்சத்திரங்களாகப் புகழ் பெற்றவர்கள் இருபது வயது ஆனபோது புகழின் பாதிப்பை உணர்கிறார்கள். தம் வயதையொத்த பிறரது எதிர்பார்ப்பையும் தாளமுடியாது போய்விடுகிறது.
மது அருந்திவிட்டுக் காரோட்டியது, திருடுவது போன்ற சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு, சிறைத்தண்டனை அனுபவித்த இளம் நடிகர்களும் உண்டு. இவர்களால் மது, போதைப்பழக்கம் இரண்டையும் விடமுடியாது போக, வாழ்க்கையின் அடிமட்டத்திற்கே போய்விட்டார்கள்.
::கதை::
டெமி லோவாடோ (Demi Lovato) சிறுவயதிலேயே புகழ்பெற்ற பாடகியாகவும், நடிகையாகவும் விளங்கினாள்.
`ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும்’ என்று அறிவுரை வழங்கப்பட்டதில், அவளுக்குப் பிடித்ததுபோல் பாட முடியவில்லை. மன இறுக்கம் வந்தது.
தந்தையைப்போல் தானும் குடித்தால் நிம்மதி அடையலாம் என்று ஆரம்பித்த பழக்கம் மிக மோசமாகி, பல வருடங்கள் மறுவாழ்வு மையம் ஒன்றில் கழிக்க நேர்ந்தது.
பத்து வயதிற்குள் கிட்டவேண்டும் என்று தாம் அடைய ஆசைப்பட்ட புகழ் தம் பிள்ளைகளுக்காகவாவது கிடைக்கவேண்டும் என்று பல பெற்றோர் விரும்புகின்றனர். மகனும் ஒரு தனிப்பிறவி, அவனுக்கென்று விருப்பு வெறுப்புகள் இருக்கலாம் என்று யோசிப்பதில்லை.
::கதை::
Home Alone என்ற தொடர் திரைப்படங்களின் கதாநாயகன் மெக்காலே (Macaulay Culkin) என்ற சிறுவன்.
அவனுக்குக் கிடைத்த புகழும் அத்துடன் வந்த பணமும் நிலைக்க, தந்தை அவனைப் பலவிதமாகக் கொடுமை செய்தாராம்.
தாளமுடியாது, அவன் பெற்றோரின்மேல் வழக்குப் போட்டு, அவர்களிடமிருந்து `ரத்து’ வாங்கினான். அவனுடைய கோடிக்கணக்கான சொத்தை அவர்களால் தீண்டவும் முடியாதுபோயிற்று.
தான் அழிவுப்பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கே புரிந்து, தப்பித்தவறிக்கூட மது அருந்துவதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறான்.
தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு புகழ்வாய்ந்தவர்களின் வாழ்க்கை பிரமிப்பை உண்டுபண்ணும். `எவ்வளவு பெரிய வீடு! வண்ணவண்ணமாக எத்தனை ஆடைகள்! எத்தனை கோடி ரசிகர்கள்! நினைத்ததை எல்லாம் வாங்க முடியும்!’ என்று, தமக்கும் அப்படி ஓர் அதிர்ஷ்டம் இல்லையே என்று ஏங்கலாம்.
அவர்களுக்குப் புரிவதில்லை, மிகக் கவனமாக இல்லாவிட்டால், புகழ் சறுக்கி, மகிழ்ச்சியை அறவே பறித்துவிடும் என்பது.
::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
0 comments:
Post a Comment