முதுமையில் இளமை
நூறு வயதைக் கடந்த ஒருவர் வேடிக்கையாகக் கூறியது: “நம்மை ஒத்தவர் என்ன நினைப்பார் என்ற கவலை இனி இல்லை. ஏனெனில், அவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லை!”
பிறர் என்ன நினைப்பார்கள்!
நாம் அப்படி நினைத்துக் குழம்பாவிட்டாலும், பதின்ம வயதிலிருந்து, `பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்று கண்டித்துக்கொண்டே இருப்பார்கள் பெற்றவர்கள். அதனால், வயது ஏற ஏற, பிறருக்குப் பயந்தே வாழ்வது பழக்கமாகியிருக்கும்.
வீண் கட்டுப்பாட்டைப் பொறுக்க முடியாது, சுதந்திரமாக நடக்கத் தலைப்பட்டவர்களுக்கு வசவும், கெட்ட பெயரும் கிடைக்கும்.
அறுபது வயதில், யாரும் நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கவில்லை என்பது புலனாக, `இவர்களுக்காகவா பயந்து பயந்து, நம் வாழ்க்கையை வீணடித்தோம்!’ என்ற அயர்ச்சி உண்டாகும்.
“இளமையை நல்லபடியாகக் கழித்திருந்தால், முதுமை ஓய்வாக இருக்கும்!” (ஸ்பானிஷ் நாட்டுப் பழமொழி)
முதுமையில் வாட்டமா?
நாம் வளர்க்கும் குழந்தைகளும் ஒரு நாள் பெரியவர்கள் ஆவார்கள்; அப்போது, அவர்களுடைய அன்பும் அண்மையும் நமக்குத் தேவைப்படும் என்பது புரியாது, அத்தியாவசியத் தேவைகளைக் கொடுப்பதுடன் தம் கடமை தீர்ந்தது என்று நினைத்து நடப்பவர்கள் முதுமையில் வாடத்தான் நேரும்.
::கதை::
நாற்பது வயதுக்கு மேல் மூன்றாவது குழந்தை ஆயிஷாவைப் பெற்றெடுத்தாள் ஹப்ஸா.
உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் சமயத்தில், `இது என்ன தொந்தரவு!’ என்ற எரிச்சல் ஏற்பட, குழந்தையை வளர்க்க ஒரு பெண்ணை அமர்த்தினாள். குழந்தை எப்படி வளர்கிறாள் என்று கவனிக்கும் ஆர்வம் கிஞ்சித்தும் அவளிடம் இருக்கவில்லை.
ஒரு சமயம், “உன்னை எதற்குத்தான் பெற்றேனோ!’ என்று ஹப்ஸா எரிந்து விழ, அவள் மனம் உடைந்துபோயிற்று.
ஆயிஷாவுக்குப் பத்து வயதானபோது, தாய் எது கூறினாலும், “நீ என்னை வளர்க்கவில்லையே” என்று எதிர்த்துப் பேசினாளாம். (அண்மையில், தன் கதையை வருத்தத்துடன் அப்பெண்ணே என்னிடம் பகிர்ந்துகொண்டது).
அன்பு கிடைக்காது ஏங்குபவர்கள் தீய நட்பை நாடுவார்கள். ஆனால், ஆயிஷா நல்ல பெண். மகா புத்திசாலி வேறு. கல்லூரிப் படிப்புடன், தன் கவனத்தைப் பல ஆக்ககரமான வழிகளில் செலுத்தினாள்.
தீபாவளிக்கு எங்கள் இல்லத்திற்கு வந்துவிட்டு, “நான் இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்ததே இல்லை. இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கலாமா?” என்று கெஞ்சலாகக் கேட்டாள்.
அவள் உணவருந்தும்போது, மெள்ள பேச்சுக் கொடுத்தேன்.
“நீங்கள் செய்வதுபோல், எங்கள் வீட்டில் ஒன்றாக அமர்ந்து, பேசிச் சிரித்தபடி சாப்பிடமாட்டோம். பண்டிகைச் சமயங்களில் அப்படிச் சாப்பிட்டாலும், பேசுவது கிடையாது,” என்றாள்.
குடும்பத்தில் யாராவது தனியாகச் சாப்பிட்டாலும், கூடவே ஒருவர் இருக்கவேண்டும் என்பது நான் என் பாட்டியிடம் கற்ற பாடம். சாப்பிடுபவர் அதிகம் பேசக் கூடாது. ஆனால் உடன் இருப்பவர் சுவாரசியமாக ஏதாவது கதை சொல்வார். அனேகமாக, அது அவர் வாழ்க்கையில் சந்தித்த நபர்களைப் பற்றி இருக்கும்.
“காரில் போகும்போதும் நான் இப்படித்தான் எதையாவது அலசிக்கொண்டிருப்பேன். பொதுவாக, அதிகம் பேசாதவர்கள்கூட அப்போது பேசுவார்கள்,” என்று நான் கூற, “நாங்கள் காரிலும் பேசிக்கொள்வது கிடையாது. அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்,” என்று, விரக்தியுடன் பதில் வந்தது.
இன்றும், `அம்மாவை எப்படியெல்லாம் ஆத்திரப்படுத்தலாம்?’ என்று யோசிப்பவள்போல் நடந்துகொள்கிறாள்.
அவளைச் சொல்லிக் குற்றமில்லை. சிறு வயதில் அன்பாக வளர்க்கப்பட்டு இருந்தால்தானே தனக்குக் கிடைத்ததைத் திருப்பி அளிக்க முடியும்?
வீடு திரும்புகையில், “உங்கள் கதைகளுக்கு மிக்க நன்றி,” என்று பலமுறை கூறி விடைபெற்றாள் ஆயிஷா.
வயதானவர்களா? போர்!
தமிழ்நாட்டில், `பெரிசு’, `கிழவி’ என்று பேரன் பேத்திகளே அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கும் ஒரு நாள் முதுமை அண்டாதா?
அதுதான் அவர்கள் பழக்கம் என்றாலும், மரியாதை இல்லாதது போலிருக்கிறதே!
முதுமை ஒரு நோயல்ல. எத்துணை அனுபவங்களை, இடர்ப்பாடுகளைக் கடந்து வந்திருந்தாலும், முதியோர்களில் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்வை நடத்துகிறார்களே!
வயதானவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள், வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என்று கூற முடியாது. அதற்கு இளமையில் சற்று கவனமாக நடந்திருக்க வேண்டும்.
`எனக்கு வயதானவர்களுடன் பேசவே பிடிக்காது. போரடிப்பார்கள்!’ என்று கூறும் நடுத்தர வயதினர் முதுமை அடைந்ததும், நிராதரவாக உணர்வார்கள் — `நாம் நினைத்தது போல்தானே பிறரும் நம்மை மதிப்பிடுவார்கள்!’ என்ற தயக்கத்துடன்.
அறிவுரையை ஏற்கலாமா?
“நான் புகை பிடிப்பதில்லை. என் தந்தைக்கு அந்தப் பழக்கத்தால் உடல்நிலை சீர்கெட்டுவிட்டதென்று, `நீயும் இந்தப் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாதே! அதை விடவே முடியாது,’ என்று அவரே சிறுவயதிலிருந்து எனக்கு அறிவுரை கூறினார்,” என்று நண்பர் ஒருவர் கூறினார்.
வயதில் மூத்தவர்கள் சொல்வதெல்லாம் சரி என்பதல்ல.
ஒரு வேறுபாடு: `நான் செய்த தவற்றை நீயும் செய்யாதே!’ என்ற நல்லெண்ணத்துடன் கூறுகிறார்கள் என்று புரிந்துகொண்டால், அவர்கள் சொற்படி நடக்கமுடியும். அதுவே அவர்களுக்கு அளிக்கக்கூடிய மரியாதை.
அறிவு வளர வேண்டுமானால், வயதும் கூடிக்கொண்டே போகவேண்டும் என்பதல்ல. பிறரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தாலே போதும். அவர்கள் செய்த தவற்றை நாமும் செய்யாதிருப்போம்.
எப்போதும் பாதுகாப்பா!
சில குழந்தைகள் பாதுகாப்பை நாடி, எப்போதும் தாயை ஒட்டியபடிதான் இருப்பார்கள்.
`மகளுக்குத்தான் என்மீது எத்தனை அன்பு!’ என்றெண்ணும் தாய்க்கு இப்போக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், குழந்தையின் வளர்ச்சிக்கு இது நல்லதல்ல. தனியாக இயங்க வேண்டிய தருணங்களில் அச்சம்தான் எழும்.
::கதை::
பத்து வயதான மகளிடம் வீட்டு வேலை செய்யச் சொன்னாள் தாய்.
“என் வயதில் நீ செய்தாயா?” என்ற சந்தேகம் பிறந்தது மகளுக்கு.
“இல்லை,” என்று உண்மையை ஒத்துக்கொண்டாள் பெரியவள்.
“பின்னே, என்னை மட்டும் செய்யச் சொல்கிறாயே?” சிறு குழந்தைகளுக்கே உரிய எதிர்ப்பு.
“நான் வளர்ந்தபோது, எங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய ஆட்கள் இருந்தார்கள். அது வேறு காலம், வேறு நாடு. நீ வளர்ந்தபின், எல்லா வேலைகளையும் நீயேதான் செய்ய வேண்டியிருக்கும். அதற்காகத்தான் இப்போதே பழக்குகிறேன். என்னை மாதிரி நீயும் திண்டாடமாட்டாய், பார்!”
சில குழந்தைகளுக்கு இத்தகைய விளக்கம் புரியும். வேறு சிலர், அம்மாமேல் ஆத்திரப்படுவார்கள். தாய் உறுதியாக இருந்தால், அவளுடைய கண்டிப்பின் காரணம் பிற்காலத்தில் புரியும்.
அறுபது, எழுபது வயதுக்குமேல் செய்யும் ஒவ்வொரு காரியமும் மலை ஏறுவதுபோல் பிரயத்தனப்பட்டுதான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், மலைமேலிருந்து பார்ப்பதுபோல், வாழ்க்கையின் அழகான தன்மையை உணரமுடியும் என்கிறார் திரு. அனுபவசாலி.
வயதானால் குறைந்துகொண்டே வரும் புற அழகு. ஏன், மறைந்துவிடவும் கூடும். ஆனால், மனம் அழகாக இருந்தால், எந்த வயதிலும் அழகாகத் தெரிவார்கள்.
காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லா உயிர்களின் உடலும் அப்படித்தான். ஆனால், நம் எண்ணங்களை காலத்துக்கு ஏற்ப மாற்றி நடந்துகொண்டால், நன்மதிப்பும் மரியாதையும் நிலைக்கும்.
::கதை::
பெரிய பணக்காரனாக வேண்டும் என்று இளமையில் கனவு கண்டு, அதற்காகக் கடுமையாக உழைத்தான் ரகுபதி. தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தேவைக்கும் அதிகமாகவே பணம் கொடுத்தான். பணத்துடன் அதிகாரமும் வந்தடைந்தது.
அவற்றிற்கான விலை: நேரமின்மையால் குடும்பத்தைக் கவனியாதது.
தங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு நபர் இருப்பதையே அவன் குடும்பத்தார் உணரவில்லை.
வயதானதும், ரகுவின் உடல்நிலை சீர்கெட்டது. எதிர்பார்த்த அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் கிட்டவில்லை. ஏமாற்றமும் உலகத்தாரின் `நன்றிகெட்ட’ போக்கால் ஆத்திரமும்தான் மிஞ்சின.
அன்பு, கனிவான பேச்சு ஆகியவற்றைக் காசு பணத்தால் ஈடுகட்டிவிட முடியுமா? இது புரியாததால்தான் இறுதிக்கட்டத்தில் பலரது வாழ்க்கையும் சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறது.
முதுமையில் முடிந்துவிடுமா வாழ்க்கை?
குழந்தைகள் வளர்ந்து, கூட்டைவிட்டுப் பறந்ததும், “அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!” என்று விரக்தியுடன் பெருமூச்சு விடுவது எதற்கு?
உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. புதிதாகக் கற்க எவ்வளவோ இருக்கின்றன.
துணுக்கு
“நீ உன் வயதுக்கேற்றபடி நடந்துகொள்ளேன்!” என்று சிடுசிடுத்தாள் மகள்.
அலட்சியமாக, தாய் அளித்த பதில்: “எல்லாரும் அப்படி நடந்துகொள்வதால்தான் உலகம் இப்படி சீர்கெட்டுக் கிடக்கிறது!”
::கதை::
அழகழகாக உடுக்கவேண்டும், புதிய நாடுகளைச் சுற்றிப் பார்க்கவேண்டும், பலவிதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டும் என்று ஏதேதோ ஆசைகள் மேரிக்கு.
ஆனால், வன்முறையை பிரயோகித்த கணவன், அவளுக்கு வாய்த்திருந்தான். தாற்காலிகமான வேலை செய்து குழந்தைகளைக் காப்பாற்ற நேர்ந்தது.
அவளுடைய முதுமையில், கணவன் இறந்தான். ஆனால், அவள் நிர்க்கதியாக விடப்படவில்லை.
பல ஆண்டுகள், தங்களுக்காக தாய் அனுபவித்த அவதி புரிந்து, மகன் வெளிநாட்டில் வேலை செய்து, நிறைய காசு அனுப்பினான். ஒவ்வொன்றாக அவளும் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டாள்.
மகிழ்ச்சியுடன், “கடவுளால் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!” என்கிறாள். கடந்தகாலம் கடந்தே போய்விட்டது.
வயது ஏறிக்கொண்டே போனாலும், சிறு குழந்தைகளைப்போல், எல்லாவற்றையும் அறியும் ஆர்வமும் மகிழ்ந்து சிரிக்கும் குணமும் இருக்கும்வரை யாரையும் முதுமை அண்டுவதில்லை.
இளமையிலிருந்த அவர்களுடைய அழகு, முகத்திலிருந்து இருதயத்திற்குப் போய்விடுகிறதோ?
::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக... Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1
No comments:
Post a Comment