[போதை பொருள் மற்றும் பாலியல் விழிப்புணர்வு]
வடக்கே கிளிநொச்சியையும் கிழக்கே இந்துசமுத்திரத்தையும், மேற்கே மன்னாரையும், தெற்கே திருகோணமலை மற்றும் வவுனியாவையும் எல்லைகளாக கொண்ட, சங்க கால நிலக்கூறுகளின் பண்பை ஒத்த நானிலத்தன்மை கொண்டதாகவும் உள்ள முல்லைத்தீவில் தனது சிறு வீட்டில் பெற்றோர் சகோதரர்களுடன் வாழும் இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி இரண்டு அகவை மதிக்கத்தக்க, எழுத்தாளரும் சமூக தொண்டாளருமான இளம் பெண் அபி, காலை தேநீரை அருந்திக்கொண்டு, ஹால் இல் இருந்த தொலைக்காட்சியில் அன்றைய செய்திகள் கேட்டுக் கொண்டு இருந்தார். கிழக்கு வானம் சிவந்து சூரியன் மெல்ல மெல்ல கீழ்வானில் இருந்து மேலே ஏறிக் கொண்டு இருந்தது. பறவைகள் தமது கூட்டை விட்டு புறப்பட்டு வானில் அங்கும் இங்கும் எதையோ தேடி பறந்து கொண்டு இருந்தன. ஆடு மாடுகள் கூட்டம் கூட்டமாக மகிழ்ச்சியாக புல்லுகளை மேய்ந்து கொண்டு இருந்தன. ஆனால் அபிவர்ணா கண்கள் சிவந்து சிவந்து ஏறிக்கொண்டு இருந்தன. அவள் மனம் அங்கும் இங்கும் வெறுப்பில் பறந்துகொண்டு இருந்தன. அவள் எதையோ, தான் எழுதிய முன்னைய கவிதையில் இருந்து மேய்ந்து மேய்ந்து அசை போட்டுக் கொண்டு இருந்தாள். அப்படி என்ன செய்தி டிவி யில்?
புங்குடுதீவு மாணவி வித்யா என்ற பாடசாலை மாணவி, கூட்டுப் பாலுறவு வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்வதற்கான திகதியை - எட்டு ஆண்டுகள் கழித்து, இன்னும் தண்டனை வழங்கப்படாமல் இழுத்தடித்து - இன்று மார்ச் 20, 2023 உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது என்ற செய்தியே அதுவாகும். முக்கிய குற்றவாளியான “சுவிஸ் குமார்” இன்னும் அதற்கான தண்டனை வழங்கப்படாமல் இருப்பது வேடிக்கையே! அவள் மனம் இந்து புராணத்தை தட்டிப் பார்த்தது.
விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்?அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம். நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக் கூடாது என ஜலந்தர் போலவே உருவம் எடுத்து விஷ்ணு அவளுடன் ஏமாற்றி இணைந்து பாலுறவு கொண்டார். இன்னும் இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை? விஷ்ணுவை தூக்கி எறியவும் இல்லை ? இந்த முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா? அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.
ரூபிஸ்
[roofie / Date-rape drugs] போன்ற ஒரு காம மயக்கம் தரும் மாத்திரை வடிவில் உள்ள ஒன்றை எதாவது ஒரு குடி பானத்தில் கலந்து கொடுப்பது மூலம் அல்லது பருக்குவது மூலம், அந்த பெண்ணை குழப்பமான உணரவில் ஆழ்த்தி, தங்களை தற்காத்துக் கொள்வதில் பலவீனமாக்கி, என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள முடியாத பக்குவத்துக்கு ஆக்கி, கூட்டு அல்லது தனிப்பட்ட பாலுறவு வன்முறைகள் இலங்கை வடமாகாணத்தில் இன்று பெருகிவருவது அவளுக்கு கவலை கொடுத்துக் கொண்டு இருந்தது. 20, மார்ச் 2023 அப்படியான சம்பவம், யாழ் அச்சுவேலியில் 15 வயது சிறுமிக்கு எதோ கலந்த மதுபானம் அருந்தக் கொடுத்து அண்மையில் நடந்த கூட்டு பலாத்காரம் அவள் நினைவுக்கு வந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், பொலிஸார், யாழ் மனித உரிமை ஆணைக்குழு தலையிடும் மட்டும், அந்தச் சிறுமியை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்காமல் இரவு எட்டு மணி மட்டும் வைத்திருந்தது, அந்த கூட்டு வன்முறையாளர்களுடன் சேர்ந்து காவல் படையினரும் ஒத்துழைக்கின்றனர் என்பது தெரிய வந்தது அவளுக்கு? ஆனால் அந்த இளம் பெண்ணால் தனிய, இதற்கு எதிராக என்னத்தைத்தான் சாதிக்க முடியும்? ஆனால் முடியும் முடியும் என்று அவள் வாய் முணுமுணுத்தப் படி, தன் வீட்டு தூணில் சாய்ந்தபடி வெளியே பார்த்தாள்!
கதிரவன் தன் முழுக் கைகளையும் [கதிர்களையும்] விரித்தபடி, அள்ளி அள்ளி வெப்பத்தை கொட்டிக்கொண்டு இருந்தது. முற்றத்தில் இருந்த ரோசா பூக்களை, வண்டுகள் மொய்த்து கூட்டாக தேன் பருகிக் கொண்டு இருந்தன. அவளுக்கு வண்டுகளை பார்க்க பார்க்க கோபம் கோபமாக வந்தது. இன்று அப்பாவி பெண்களின் நிலையும் ரோசா மாதிரி ஆகிவிட்டதே, அது தான் அவளின் ஒரு ஏக்கம், ஏன் அவள் கூட ஒரு குமரிப் பெண்ணே! பெண்கள் அழகு சிறிது சிறிதாக கூட ஆரம்பித்து குமரிப் பருவத்தில் உச்சத்தில் இருக்கிறது என்பார்கள். அப்படித்தான் அபிவர்ணாவும் இருந்தாள். உடலியல்பு, வடிவு, பேச்சு, நலம், வாசம் என அனைத்துமே ஒரு உச்ச கட்டத்தில் அவளிடம் இருந்தது. அதிலும் அந்தக் கருங்கூந்தல், கார்மேகம் தனைத்தந்த கருங்கூந்தல் ஆக, அகிற்புகை மணத்திலே சுகித்திருக்க பலவண்ண நறுமண மலர்கள் பலவும் சூடி இருக்க ஐயகோ எப்படி வர்ணிப்பேன் அவள் கூந்தலை? என்றாலும் காலை உலாவும் தென்றலும் அவளுக்கு இன்று சுகிக்கவில்லை. அது அள்ளி வீசும் குளிர்ச்சியும் அவளுக்கு தழல் போல் இருந்தது. அவளின் பெண்மையின் சிறப்புத்தன்மையும் சுகிக்கவில்லை. கதிரையில் இருந்த அவளோ தோகை மயில்போல் எழுந்து தன் அந்த அழகு பொழியும் கருங்கூந்தலின் பாரத்தையும் இன்று தாள முடியாதவளாகினாள். என்ன கொடுமை இது? வடமாகாணம் முழுவதும் திடீர் திடீரென புத்தர் முளைக்கிறார். ஆனால் புத்தர் பூமி ஆக்குவதில் கரிசனை இருக்கே தவிர, அவரின் ஒரு போதனையாவது காப்பாற்ற, கடைபிடிக்க முயன்றால், இந்தக் கொடுமை தானாக அற்றுப்போகுமே. அவள் குருந்தூர் மலைத் திசையை நோக்கி வெறுத்துப் பார்த்தாள்!
வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் ஒன்று முல்லைத்தீவு ஆகும். அடங்காப் பற்றுக் கொண்ட வீரமன்னன் பண்டாரவன்னியன் தனது இறுதி மூச்சுவரை ஆங்கிலேயருடன் போரிட்டு வீர காவியம் படைத்த மண். அம் முல்லை மண் ஈன்றெடுத்த முத்துக்களில் ஒருவளாக அபி, தன் நண்பி சிலருடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் இன்று போக ஏற்கனவே திட்டம் போட்டு இருந்தாள். ஆனால் அவளை இந்த செய்திகள் குழப்பிக் கொண்டு இருந்தன. பச்சைநிற வயல்வெளிகளும், நீரோடைகளினால் குளிர்ந்த காற்றும், பறவைகளின் ஒலியும் மனதிற்கு இனிமை அவளுக்கு கொடுத்தாலும் அவளின் எண்ணம் முழுக்க இதற்கு தீர்வு காணவேண்டும், மக்களை போதை பொருள் விழிப்புணர்ச்சி படுத்தவேண்டும், ஆனால் அதை எப்படி ஆரம்பிக்கிறது என்பது தான் அவள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. அவளின் நண்பிகள் படலையை திறந்து 'ஹாய் அபி, ரெடியா போக?' என கேட்கவும், அவசரம் அவசரமாக வெளிக்கிட்டு அவர்களுடன் புறப்பட்டாள். ஆனால் மனது மட்டும் இலங்கையில் பாவிக்கப்படும் போதைப்பொருள் விபரங்களையும், அதை எப்படி எப்படி எல்லாம் தங்கள் ஆசைகளை, தேவைகளை நிறைவேற்ற பாவிக்கிறார்கள் என்பதையும் மீட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் நந்திக்கடலின் ஓரத்திலே, கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்புக்கு நடந்து போகக்கூடிய தூரத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு பெற்ற ஆலயமாகும்.
அவளும் மூன்று நண்பிகளும் பேருந்தில் வற்றாப்பளை போனார்கள். அப்பொழுதுதான் தன்னுடன் வரும் யாதவி, அங்கு தன் முகநூல் நண்பரை முதல் முதல், அவனின் வேண்டுகோளின்படி சந்திக்க இருக்கிறார்கள் என்றும், அவனின் பெறோர்கள் இன்று அங்கு பொங்கல் செய்கிறார்கள் என்றும் அவளுக்கு தெரிய வந்தது. அவன் பெரிய வர்த்தகரின் மகன், என்றாலும் பெரிதாக படிக்கவில்லை, நல்ல வசதிகளுடன் இருக்கிறான். அவன் யாதவியை முகநூல் மூலம் நண்பியாக, காதலியாக பழகுவதாக மற்ற நண்பிகளின் கதைகளில் இருந்து அவள் ஊகித்தாள். அபி மனதில் ஒரு மூலையில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது, காரணம் பொதுவாக பாலுறவு பலாத்காரம் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் மற்றும் அந்நியர்களுக்கு இடையில் நடப்பது அவளுக்கு தெரியும். அதுமட்டும் அல்ல, முகநூலில் அறிமுகமானவர்களுடன் கவனமாக இருக்கவேண்டும் என்பதும் அவளுக்கு தெரியும். அது தான் அவளின் பதற்றம். என்றாலும் அதை அவள் வெளியில் காட்டவில்லை.
'கணினி மூலம் [ஆன்லைன்] சில மணித்தியாலம் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதம் அல்லது வருடக் கணக்கில் அரட்டை அடிக்கலாம் அல்லது அளவளாவலாம். அதனால் ஒருவரை ஓரளவு அறிந்து கொள்ளலாம். இதனால் உண்மையான காதல் சாத்தியம் அங்கு தென்பட வாய்ப்பு உண்டு. என்றாலும் கோடு இட்டு குறிக்கக் கூடிய உண்மை என்ன வென்றால் கணினி மூலமான உறவு ஒரு உண்மையான ஒன்று அல்ல. முக நூல் சந்திப்பு ஒரு காதல் தேர்விற்கு உதவலாம். ஆனால் அவனின் உண்மையான நோக்கம் யாருக்கும் தெரியாது, அவன் இன்னும் அந்நியனே' அபி தனக்குள் முணுமுணுத்தாள். உடனடியாக அவள் பிரச்சனைகள் வரும் பொழுது நாடும் எனக்கு குறும் செய்தி அனுப்பினாள். நான் அவளின் முன்னைய ஆசிரியர், இன்று ஓய்வு பெற்று கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி பொழுது போக்குகிறேன்.
நான் உடனடியாக, அவளுக்கு ஒரு செய்தி அனுப்பிவிட்டு, இரண்டு மிளகு தெளிப்பான் [pepper spray] எடுத்துக்கொண்டு அவளை கண்ணகி அம்மன் கோவிலில், அவளின் நண்பிகள் சந்தேகப்படாதவாறு சந்தித்து, எதாவது அசம்பாவிதம் நடந்தால் இதை பாவி என, அதை அவளிடம் கொடுத்ததுடன், நான் தூர இருந்து கண்காணிப்பேன் என்றும் தைரியம் கொடுத்தேன். அத்துடன் என் நண்பனும், இன்று பொலிஸ் அதிகாரியாக இருபவனிடமும், எதாவது பொருத்தமான அறிவுரை பெற, விபரம் கூறி கதைத்தேன். அப்ப பொலிஸ் அதிகாரி கூறியது என்னைத் தூக்கிவாரி போட்டது. யாதாகியின் இந்த முகநூல் நண்பன், ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றி, அவனுக்கு எச்சரிக்கை கொடுத்து இருப்பதாகவும், அவனின் தந்தையின் பணப்பலம் தண்டனையில் இருந்து தப்ப உதவியதாகவும் கேள்விப்பட்டேன். அந்த பெண் கற்பை இழந்ததுடன், வழக்கிலும் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்தாள் என்றும் மேலும் கூறினார்.
யாதவியை கோயிலில் சந்தித்த, அவளின் முகநூல் காதலன், கொஞ்ச நேரம் எல்லாருடனும் அளவளாவிய பின், தங்கள் நிலத்துக்கான கேப்பாப்பிலவு, பிலவுகுடியிருப்பு போராட்டம் நடை பெறுவதாகவும், ஏன் நாம் அதை போய் பார்க்கக் கூடாது என, எதோ கரிசனையாக கேட்டு, கெதியாக போகவேண்டும் என்று குறுக்குவழியால் யாதவியையும் அவளின் நண்பிகளையும் கூட்டிக் கொண்டு போனான். எனக்கு உடனே அபி செய்தி அனுப்பினாள். நானும் அதை உடனே பொலிஸ் அதிகாரிக்கு அனுப்பி, அவர்களை தூர நின்று, மறைவாக பின் தொடர்ந்தேன். அரைவாசி தூரம் கூட போய் இருக்கமாட்டார்கள், திடீரென, யாதாவியின் காதலனின் மூன்று நண்பர்கள் அவனுடன் இணைந்து, ஆளுக்கு ஒரு பெண்ணாக எதோ தண்ணிமாதிரி ஒன்றை வாயில் வலாற்காரமாக பருக்கிக் கொண்டு கையை பிடித்து இழுக்க தொடங்கினார்கள். அபி ஒருவாறு அந்த மிளகு தெளிப்பான்களை எடுத்து, அவன்களின் கண்ணில் தெளிக்கவும், நானும் அந்த பொலிஸ் அதிகாரியும், அதிகாரியுடன் வந்த மூன்று காவல்துறை வீரர்களும் மடக்கி நாலு பேரையும் பிடித்ததுடன், ஒரு காவத்துறை வீரன் முழுநிகழ்வையும் விடியோவும் எடுத்தான்.
அபியின் புத்தியான முன்செயல்களால், இம்முறை அவன் சிறைக்கு போய் இருந்தாலும், அவன் ஏந்த நேரமும் பணப்பலத்தால் வெளியே வரவும் சந்தர்ப்பம் உண்டு. எதுவாகினும் அந்த நிகழ்வு கொடுத்த நம்பிக்கையும், அந்த நிகழ்வின் மூலம் அபி மேல் தெரிந்தவர்கள் அயலவர்கள் கொண்ட நம்பிக்கையும், இன்று அவளை போதை மற்றும் பாலுறவு வன்முறைக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த தைரியம் வழங்கியது.
இன்று மார்ச் 31, 2023, வெள்ளிக் கிழமை, அபிவர்ணாவின் முதலாவது ஆரம்ப விழிப்புணர்வு கூட்டம், அந்த பொலிஸ் அதிகாரியின் தலைமையில் ஒட்டிசுட்டான் தான்தோன்றீசுவரம் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பித்தது. இதற்கு நான் பிரதம விருந்தினராக முன் வரிசையில் இருந்தேன். நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து சிறிய புன்னகையை அதில் பதித்த அந்த அபியின் முகம், முத்துகளைக் கோத்து அவற்றின் ஒளி தெரியாதவாறு குடைந்து உள்வைத்து வெளியே சிவந்த இரண்டு பவழத்தைப் பதித்த இதழ்கள், மொத்தத்தில் பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதினையே மீண்டும் கடைந்து வந்தத் தெளிவுடன், இன்னும் இன்சுவையைக் கலந்து, மன்மதன் நுகரப் படைத்த அழகு, எனோ இன்று அவளிடம் காணவில்லை. கோபம் தணியாத கண்ணகி, தன் மார்பைக் கிள்ளி மதுரையின் மீது எறிந்தாள். இவளோ கோபத்தின் விளிம்பில், கருங்கூந்தல் காற்றோடு ஆட , மேடையில் நின்றாள். கோபம் கொண்டோரை பிசாசு சூழாது. கோபம் கொண்டோரை பிரியங்கள் ஆளாது. கோப முகத்தில் ஈக்கள் மொய்ப்பதில்லை. உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் மனதுக்குள் கோபம் ஒரு கவசம். அப்படித்தான் தன் முதல் கன்னி பேச்சை, "எல்லா ஆண்களும் சுதந்திரமாக பிறந்தார்கள் என்றால், எப்படி எல்லா பெண்களும் அடிமையாக பிறந்தார்கள்?" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தாள்.
:நன்றி::கந்தையாதில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment