அதை சரி செய்வது எப்படி?
ஒரு நண்பரின் வயதான பெற்றோர் அவர்கள் நன்றாகத் தூங்குவதில்லை என்று கூறுகிறார்கள்.
இரவில் அவர்கள் கழிவறைக்குச் செல்ல பல முறை எழுகிறார்கள். அதனால் காலையில் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள்.
உண்மையில் இது பரவலான ஒரு பிரச்னை. இதன் பெயர்: adult nocturia, வயதானோர்க்கு வரும் நாக்டூரியா.
மலம் மற்றும் சிறுநீரை அடக்குவது குறித்த சர்வதேச குழுவின் (International Continence Society) கூற்றுப்படி, இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு, இரவில் குறைந்தது இரண்டு முறை சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
தூக்கம் மற்றும் வாழ்க்கை தரத்தைப் பாதிக்கும் இந்தப் பிரச்னை, வயதானவர்களுக்கு அதிகமாக வருகிறது. 70 வயதிற்கு மேற்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் இதனால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இது இளைஞர்களுக்கும் ஏற்படலாம். இது ஆண்களையும் பெண்களையும் சமமாகப் பாதிக்கிறது.
இதற்கான காரணங்கள் என்ன?
நாக்டூரியாவுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
சிறுநீர்ப்பையின் திறன் குறைதல்
பாலியூரியா எனப்படும் சிறுநீர் உற்பத்தி அதிகரித்தல்
சிறுநீர்ப்பை என்பது 300மில்லி முதல் 600 மில்லி வரை கொள்திறன் கொண்ட ஓர் உடலுறுப்பு. இதன் கொள்திறன் இரண்டு காரணங்களால் குறையலாம்.
உடற்கூறியல் மாற்றம். ஆண்களில், இது பொதுவாக புரோஸ்டேட் ஹைபர்ப்ளாசியா (Benign prostatic hyperplasia) என்ற காரணத்தால் ஏற்படுகிறது. பெண்களில், இது உடல் பருமன் மற்றும் இடுப்பு உறுப்பு சரிவினால் (pelvic organ prolapse) ஏற்படுகிறது.
செயல்பாட்டு சிக்கல்கள். அதிகப்படியான சிறுநீர்ப்பை செயல்பாடு, சிறுநீர்ப்பை அழற்சி, தொற்று.
பாலியூரியா: ஆண்டிடியூரிடிக் ஹார்மோனின் (antidiuretic hormone) செயல்பாட்டின் காரணமாக இரவு சிறுநீர் உற்பத்தி பொதுவாக குறைகிறது. ஆனால் நாம் வயதாகும்போது, இரவில் இந்த ஹார்மோனின் வெளியீடு குறைகிறது. இது இந்தப் பிரச்னைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.
இருப்பினும் பல்வேறு நோய்கள் இதைத் தூண்டலாம். உதாரணமாக, நீரிழிவு நோய், சிரைப் பற்றாக்குறை, இதயச் செயலிழப்பு, தமனி உயர் ரத்த அழுத்தம் போன்றவை.
மேலும், மாலையில் அதிகமாக திரவ உணவுகளை உட்கொள்ளல் மற்றும் காபி, மது, புகையிலை போன்றவற்றின் பயன்பாடும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
கூடுதலாக, மருந்துகளின் பக்க விளைவுகள் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கலாம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டை மாற்றலாம்.
இந்த பாதிப்பை ஏற்படுத்தும் பொதுவான மருந்துகள்:
டையூரிடிக்ஸ் (Diuretics): நீர் கோர்த்தல் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுகிறது.
ஆன்டிகோலினெர்ஜிக்ஸ் (Anticholinergics): இவை பெரும்பாலும் சிறுநீர்ப்பையின் அதீத செயல்பாட்டு நோய்க்குறியைக் குணமாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இந்த உறுப்பைக் கட்டுப்படுத்தும் நரம்பு சமிக்ஞைகளில் தலையிடலாம் மற்றும் நாக்டூரியா போல சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கலாம்.
உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள்: கால்சியம் சேனல் தடுப்பான்கள், ஆஞ்சியோடென்சின் (angiotensin) மற்றும் என்சைம் தடுப்பான்கள் போன்றவை.
மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகள் (antidepressants): ஆண்டிடியூரிடிக் ஹார்மோனின் செயல்பாட்டைத் தடுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறுபயன்பாட்டு தடுப்பான்கள் போன்றவை.
லித்தியம்: பைபோலார் கோளாறுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து.
இந்த மருந்துகளை உட்கொள்ளும் எல்லோருக்கும் நாக்டூரியா பக்க விளைவாக வராது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யாராவது தங்களுக்கு இந்த விளைவு இருப்பதாக சந்தேகித்தாலோ அல்லது சொல்லப்பட்ட அறிகுறியைப் பற்றி கவலைப்பட்டாலோ, அவர்கள் தங்கள் மருத்துவரை அணுகுவது முக்கியம். இந்த மருந்துகளுக்கு அவர்கள் மாற்று மருந்துகளை வழங்கலாம் அல்லது சிகிச்சையை சரிசெய்யலாம்.
இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்னையைத் தடுக்க 5 வழிகள்
நாக்டூரியா மேலாண்மை தனிப்பட்ட நபர்களைப் பொறுத்து மாறுபடும், ஏனெனில் இதற்குப் பல காரணிகள் உள்ளன.
வாழ்க்கை முறை மாற்றங்கள்: படுக்கைக்குச் செல்வதற்கு 4 முதல் 6 மணிநேரத்திற்கு முன் திரவ உணவுகள் உட்கொள்வதைக் குறைக்கவும். இரவில் மது மற்றும் காபியைத் தவிர்க்கவும். புகைபிடிப்பதை விட்டுவிடவும். அதிக எடை இருந்தால் எடையைக் குறைக்கவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறுநீர் கழிப்பது நல்லது. மேலும் உங்கள் கால்களில் நீர் கோர்க்கும் சிக்கல் இருந்தால், இரவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அவற்றை உயர்த்தி வைத்திருப்பது நல்லது.
நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற மருத்துவ காரணிகளால் நாக்டூரியா ஏற்பட்டால், அவற்றுக்கு முறையாக சிகிச்சை பெறுவதன் மூலம் அறிகுறிகளைக் குறைக்கலாம். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பின் இருப்பது முக்கியம்.
மருந்தியல் சிகிச்சைகளை மாற்றுவது: டையூரிடிக்ஸ், ஆஞ்சியோடென்சின் மாற்றும் என்சைம் தடுப்பான்களின் அட்டவணையை மாற்றவும். பக்க விளைவுகளைக் குறைக்க சிகிச்சையை எப்படி சரி செய்யலாம் என்று மருத்துவர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.
இடுப்பின் அடிப்பகுதியிலுள்ள தசைகளுக்கான சிகிச்சை (Pelvic floor treatment) மற்றும் பிசியோதெரபிஸ்டுகளுடன் சிறுநீர்ப்பை பயிற்சி சிறுநீரைக் கட்டுப்படுத்துவதில் உதவியாக இருக்கும்.
சில நேரங்களில், ஒரு தனிப்பட்ட மதிப்பீட்டிற்குப் பிறகு, மருத்துவர் இரவுநேர பாலியூரியா சிகிச்சைக்கான மருந்துகளை பரிந்துரைக்கலாம்.
சுருக்கமாக, வயதானவர்களுக்கு நாக்டூரியா மிகவும் பொதுவானது என்றாலும், அது தூக்கத்தையும் அதன் விளைவாக வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது.
இதற்காக மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது. அவர்கள் உங்களைப் பரிசோதிப்பார்கள். உங்கள் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் பிற நோய்க்குறிகள் வரை அனைத்தையும் ஆய்வு செய்வார்கள்.
நன்றி:பிபிசி தமிழ்
நல்ல பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDelete