"குடும்பம் ஒரு கோயில்"[சிறு கதை]


"கோவில் கூடாது என்று சொல்லவில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது"  - பராசக்தி

உண்மையில் கலைஞர் மு கருணாநிதியின் இந்த வசனம் அன்று எனக்கு விளங்கவில்லை. நான் அதை பெரிதுபடுத்தவில்லை. எதோ சந்தையில் வாங்கும் தலையணையில் கவர்ச்சியாக எழுதி இருக்கும் ஒரு வசனம் போல் அதை எடுத்துக்கொண்டேன். வீடு என்பது நான் இரவில் உறங்கும் இடமாக, வீட்டு புறா மாதிரி, தினம் திரும்பும் ஒரு வசிப்பிடமாக கருதினேன். வீடு என்பது கட்டாயம் ஒரு குடும்பத்தின் அடையாளம் என்று கூட கருதலாம். ஆமாம் நான் பாதுகாப்பாக, குடும்ப வலைக்குள் அகப்பட்டவனாக, அதே நேரம் பொதுவாக மகிழ்வாக, அன்பு விளையும் ஆலயமாக உணர்ந்தேன். ஆமாம்என்றால் ஆன்மா.’லயம்என்றால் வயப்படுதல் அல்லது ஒன்றுபடுதல். எனவே ஆலயம் என்றால் உயிர்கள் ஒன்றுபடும் இடமே! அதுவே வீடும் குடும்பமும்!! கோவில் என்பது கோ + இல், இங்கே கோ என்பது அரசனையும், இல் என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். நானும் அங்கு அரசனாக, இளவரசனாக, இரண்டு தங்கைகளுடன் மகிழ்வாக இருந்தேன்.

 

ஆனால் 2023 தொடக்கத்தில் இருந்து இலங்கையில், அசாதாரணமான முறையில் வரி அதிகரிக்கப்பட்டமை, மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமை, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறைக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல காரணங்களால், அடிக்கடி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன. 2021 ஆம் ஆண்டில், வெளிநாட்டுக் கடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101% ஆக உயர்ந்தது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் 2022 ஆண்டில் இருந்து இலங்கைப் போராட்டங்களுக்கு வழிவகுத்தன என்பது வரலாறு. ஆனால் இது எப்படி சிறு வியாபாரம் செய்துவந்த எம் குடும்பத்தையும் பாதிக்கிறது என்பதை இன்று தான் உணர்ந்தேன்.

 

2023 மார்ச் தொடக்கத்தில் ஒரு நாள் இரவு, நான் வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது. திடீரென நான் ஏதோ அம்மா அப்பா அறையில் இருந்து கேட்டேன். இதுவரை நான் அப்படி ஒரு சம்பவத்தை கண்டதோ கேட்டதோ இல்லை. என் அம்மா, அப்பாவிடம், 'இப்படியே போனால் நான் வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு எங்கேயாவது போய் தொலையப் போகிறேன்' என கடும் தொனியில் மிரட்டுவது, அதட்டி பேசுவது கேட்டது. நான் எப்படி அந்தநேரம் அதை உணர்ந்தேன் என்பதை என்னால் விளக்குவது கடினம். மகிழ்வு, சோகம் என்ற ஒரு இலகு சொல்லால் விளக்குவதை விட உணர்வுகள் மிகவும் சிக்கலானவை என்பதை இப்ப நான் அறிகிறேன். எத்தனை சொற்களும் இதற்கு போதாது. என்றாலும் நான் சோர்ந்தேன், பயம் கொண்டேன், அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் என்று சுருக்கமாக என்னால் கூறமுடிகிறது. இது முழு உணர்வுகளையும் வெளிப்படுத்தாவிட்டாலும் ஓரளவு என் நிலைமையை புரிய வைத்திருக்கும். நானும் என் தங்கைகளும் தனிமையில் கை விட்டது போல ஒரு உணர்வு. என் இதயம் வெடித்தது, என்றாலும் நான் என் குமுறலை வெளியில் காட்டவில்லை. அன்பு, பாசம் நிலவிய எம் குடும்பம் என்ற கோவிலில் என்ன நடந்தது? நான் எனக்குள் கத்தி அழுதேன். எம் குடும்பம் என்ற வீட்டின் ஒவ்வொரு சுவரும் இடிந்து விழுவது போல உணர்ந்தேன்.

 

நேரம் இப்ப இரவு பத்துமணி இருக்கும். என் தங்கைகள்  உறங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் அறைக்குள் இருந்து எப்படியோ அந்த சண்டை கொல்லைப்புறத்துக்கும் போய்விட்டது. அக்கம் பக்கத்தாரின் காதில் விழுந்திடுமோ என்ற பயம் எனக்கு மறுபக்கம். ஒருவரையொருவர் கத்துகிறார்கள், அதை கேட்கும் பொழுது நானும் என் தங்கைகளும் மிகவும் வேதனைப்பட்டு வெட்கப்படும் அளவுக்கு இருந்தது. எனக்கு சரியாக தெரியவில்லை, எப்படி கல்யாணம் செய்து, இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின், அவர்களுக்கு இடையில் இந்த தகராறு வெடித்தது என்று ? என்றாலும் எவ்வளவு மோசமானது என்பதை மட்டும் உணர்ந்தேன். அதேநேரம் இது சில உண்மைகளை, இதுவரை தெரியாத செய்திகளை  எமக்கு சொன்னது. 'கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது' என்றதின் அர்த்தமும் ஓரளவு புரியத் தொடங்கியது!

 

அம்மா, அப்பா எம்மை பெற்றதால், நாம் எப்பவும் அவர்களை உயர்வாகவே கருதுகிறோம். அவர்களும் எம் மேல் பாசம் பொழிகிறார்கள். ஆனால் அவர்களிலும் சிலவேளை கொடிய குணங்கள், செயல்கள் இருக்கும் என்பதை மறந்து விடுகிறோம். எமது குடும்பம் ஒரு ஆலயமாக வெளியே பிரகாசித்துக் கொண்டு இருந்தாலும், உண்மையில் அது கொடியவர்களின் கூடாரம் என்பதை உணர்ந்தேன். என் தங்கைகள் இருவரும் தமது அறையில் இருந்து ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து அழுதார்கள். இதை பார்த்த, அப்பா , ஒன்றும் இல்லை , நாம் ஓகே என்று அம்மாவும் அப்பாவும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டபடி தம் அறைக்கு போய்விட்டார்கள். ஆனால் அவர்கள் மூட்டிய தீ இன்னும் என் மனதில் எரிந்து கொண்டே இருந்தது. அது அணையவில்லை?

 

என் அம்மா கல்யாணம் செய்து சில ஆண்டுகளின் பின், வீட்டின் தேவைகள் அதிகரித்ததால், என் அப்பா ஏற்கனவே வேலை பார்த்து வந்த பல்பொருள் அங்காடியில் வேலைக்கு சேர்ந்தார். அவர் மிகவும் அழகாக, எல்லோருடனும் அன்பாக பேசக்கூடியவராக இருந்ததால், முதலாளிக்கு அவரை நன்றாக பிடித்துவிட்டது. காலம் கொஞ்சம் போக, முதலாளி என் அம்மாவை தனது நேரடி உதவியாளராக பதவி உயர்வு கொடுத்தார். இது அவர்கள் இருவரும் தனிய பல நேரம் சந்திக்கும், கதைக்கும் சந்தர்ப்பங்களை கொடுத்தது. முதலாளி ஏற்கனவே திருமணம் செய்து இருந்தாலும், அவர் மெல்ல மெல்ல அம்மாவுடன் நெருக்கமாக பழக தொடங்கினார். அம்மா, தான் பிள்ளைகளின் தாய் என்று முதலில் மறுத்தாலும், சூழ்நிலை சிலவேளை சாதகமாகவும் அமைந்துவிட்டது. ஆனால், அம்மா எல்லாவற்றையும் ஒளிவுமறைவு இன்றி அப்பாவிடம் கூறுவார். அப்படி ஒரு கட்டத்தில் தான், முதலாளியின் ஆசைக்கு இணங்குவது போல நடித்து, அதை களவாக  வீடியோ எடுக்க திட்டம் போட்டனர். அவர்களின் நோக்கம் அதை வைத்து முதலாளியிடம் இருந்து பெருந்தொகை பணம் கறப்பதாக இருந்தது. அப்படி கடைசியில் ஏமாற்றி பெற்றது தான் இப்ப அப்பா முதலாளியாக இருக்கும் கடை. அந்த முதலாளியும் தனது கடையை இழந்த சோகத்தில் தன்னை மாய்த்துக் கொண்டார். இப்ப இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில், வியாபாரம் மந்தமாக போக, அந்த பாவம் தான் தம்மை வாட்டிவதைக்குது என்று, ஒருவரை ஒருவர் பழியை போட தொடங்கியதே இந்த தகராறு என ஒருவாறு ஊகித்துக் கொண்டேன். எனினும் அதை நான் தங்கைகளுக்கோ அல்லது வெளியேயோ காட்டவில்லை. அந்த கொடியதை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. இதுவும் ஒரு வாழ்வா ?, அதில் நானும் ஒரு உறுப்பினரா ?? 

 

எனக்கு இப்ப அந்த முதலாளியின் குடும்பம் எங்கே, எப்படி என அறிய ஆவலாக இருந்தது. நான் வங்கி உதவி முகாமையாளராக, பல்கலைக்கழக படிப்பு முடித்து சென்ற ஆண்டு முடிவில் பதவி ஏற்றதால், விசாரிப்பது இலகுவாக இருந்தது. முதலாளியின் மனைவியும் அவரது இரு பெண் பிள்ளைகளும் மிகவும் கஷ்டத்துடன் வாழ்வதாக அறிந்தேன். எம் குடும்பம் மீண்டும் ஒரு கோவிலாக வேண்டும் என்றால், கட்டாயம் அவர்களுக்கு நல்ல வாழ்வு அமைக்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் ஓங்கியது. அதேநேரம் அம்மா அப்பாவின் தகராறையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அப்ப தான், ஏன் நான் அவர்களின் ஒரு மகளைக் கல்யாணம் கட்டக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அது அம்மா அப்பாவுக்கும் ஒரு ஆறுதலை கொடுக்கலாம்?  'புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே, சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே' என்று நம்புபவன் நான்.  'தவறு அறிந்து சரியாய் செய், விளைவு இருக்கு புரிந்து செய்' என்பதை அம்மா அப்பா இனியாவது புரிந்து கொள்ளட்டும்!

 

"மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது

மதிக்கப் படுகிறான் போற்றப் படுகிறான்

மகிழ்ச்சியுடன்  சுகம், இன்பம் பிறக்கிறது

மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்!" 

 

"குடும்பம் ஒரு கோவில் என்றால்

அன்பே அதில் தெய்வம் ஆகும்

கருணை ஒளி கண்கள் வீசினால்

மங்கலம் என்றும் நின்று ஜொலிக்கும்!"

 

அதனால் தான் நான் அந்த முடிவு எடுத்தேன். இன்று மார்ச் 15, 2023, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இலங்கை முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறி இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். அதில் நானும் ஒருவன். அந்த நேரத்தில் ஒரு சில மணித்தியாலத்தை, அம்மா அப்பாவின் பாவத்தை கழுவ, அந்த முதலாளியின் குடும்பத்தை சந்திக்க, பெண் கேட்க இப்ப போய்க்கொண்டு இருக்கிறேன்.

 

நன்றி

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

1 comment:

  1. சிந்திக்க வேண்டியது

    ReplyDelete