"வண்ணச் சுடரை ஊதி அணையாயோ?"

"அம்மம்மா பெயரைத் தனது ஆக்கி

அன்பு கொண்டு பலரைக் கவருபவளே !

அழகு தேவதையாய் எம்மிடம் வந்து

அளவு இல்லா மகிழ்வு தருபவளே !"

 

"ஆண்டு பல கடந்து போனாலும்

ஆறுதல் தர அம்மம்மாவாக வந்தவளே!

ஆறு அகவை இன்று உனக்கோ

ஆசீர்வதிக்கிறேன் நீடூழி நீ வாழ்க !"

 

"இன்பம் என்பது உன் மழலையே

இசையும் தோற்கும் உன் பேச்சே !

இராவணன் வீணை மீட்டுப் பாட

இனிய பிறந்தநாள் வாழ்த்து உனக்கே !"

 

"எட்டி உதைத்து செல்லம் காட்டுகிறாய்

கட்டி அனைத்து இன்பம் கூட்டுகிறாயே !

வெட்டி பேச்சில் சட்டம் போடுகிறாய்

பாட்டா சொல்லும் பாசமிகு தேவதையே !"

 

"கொஞ்சி அணைக்கையில் முத்தம் தந்து

கெஞ்சி அழுது செல்லம் காட்டுகிறாயே !

அஞ்சி அஞ்சி குழப்படி செய்யும்

வஞ்சகம் இல்லா குட்டி மழலையே !"

 

"இனிய அகவை நாள் இன்றோ

இசை முழங்க வாழ்த்து ஒலிக்காதோ?

இரக்க குணம் உன்னுடன் பிறந்ததோ

இனிமை சேர்ந்து வாழ்வு மலராதோ?"

 

"நிலா உன் முகத்தில் வாழாதோ

நிறைந்த அறிவு உன்னில் வளராதோ?

நில்லாமல் ஓடும் குறும்பு பெண்ணோ

நிதானம் பெற்று வாழ்வு உயராதோ ?"

 

"மண்ணில் இருந்து தாத்தா வாழ்த்தாரோ

விண்ணில் இருந்து அம்மம்மா அருளாரோ?

கண்கள் இரண்டும் மகிழ்வில் ஒளிராதோ

வண்ணச் சுடரை ஊதி அணையாயோ?"

::தாத்தா-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்

No comments:

Post a Comment