படைத்தலும் ரகசியமும்
`நான் பல புத்தகங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறேன். அதனால் மகா புத்திசாலி!’
இப்படி எண்ணிப் பெருமைப்படுகிறவர்கள் முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை. நிறைய புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் அறிவு வளர்ந்துவிடாது. கற்பனைத்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஓயாமல் தன்னைப்பற்றியோ, பிறரைப்பற்றியோ யோசிப்பதால் நேரம்தான் விரயமாகும்.
ஒருவர் தனக்குப் பிடித்த ஆக்ககரமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டால், அவரால் பிறருக்கும் உபயோகமானதாக எதையாவது செய்ய இயலும்.
அவசியம் இருந்தால்தான் புதியதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் நிலை வரும் என்பதல்ல.
`இப்படிச் செய்தால் என்ன? ஏன், இம்மாதிரியும் இருக்கலாமே!’ என்று, நடைமுறையில் பின்பற்றப்படுவதை வேறுவகையில் மாற்றுகிறார்கள் படைப்பாளிகள். அது கண்களால் பார்க்கும் தொலைவில் இல்லாவிட்டாலும், கற்பனையால் அவர்கள் எதிரில் இருப்பதைப்போல் காண்கிறார்கள்.
கற்பனையில் கண்டதைக் கனவாகக்கொண்டு, அதிலேயே நிறைவு கண்டுவிடாது, அவற்றை நனவாக்கவும் முயற்சித்து வெற்றி பெறுகிறார்கள்.
எந்தக் கண்டுபிடிப்பையும், `இது பாதுகாப்பானதுதான்!’ என்று முதலில் உறுதி கூறவும்முடியாது. இருப்பினும், அதன் உபயோகம் நேரத்தையும், சக்தியையும் மிச்சமாக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன், துணிச்சலுடன் செய்கிறார்கள்.
ஒருவர் புதியதாக எதையாவது செய்ய முயன்றால், `புரட்சி’ என்பார்கள். அதனால் விளையும் நன்மைகள் அதை முயல்கிறவருக்குத்தான் புலப்படும்.
புதியதாக எந்தக் காரியத்தைத்தான் உடனுக்குடன் செய்ய முடியும்! பொறுமையும் விடாமுயற்சியும் அதிக அளவில் இருக்கவேண்டும். அதற்காக நிறைய உழைக்கவேண்டும். பல பிழைகளும் சறுக்கல்களும் எதிர்ப்படும்.
இவற்றால் உற்சாகத்தை இழக்காது, எடுத்த காரியத்தை முடிக்கும் உறுதியுடன் ஈடுபட்டால்தான் முயற்சி திருவினையாகிறது.
தற்காலத்தில், எல்லோராலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ப்ரெஷர் குக்கர் டெனிஸ் பாபின் என்ற பிரெஞ்சு நாட்டுக்காரரால், 350 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.
`நீராவியாலும், அழுத்தத்தாலும் பருப்பு, அரிசிபோன்ற எல்லாவற்றையும் வெகு விரைவாக வேகவைக்க முடியுமோ?’ என்ற யோசனை அவருக்கு முதலில் எழுந்திருக்கவேண்டும்.
ஆரம்பத்தில், `இது நம்மால் முடியுமா?’ என்ற சந்தேகம் இருந்திருந்தால், அதை அவரே வென்றிருக்கக்கூடும். எதையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியமாயிற்றே!
(இந்தியாவில் அறிமுகமானபோது, அதை உபயோகிக்க பலரும் பயந்தார்கள். அழுத்தம் அதிகமாக இருந்தபோதே, விவரம் புரியாது, மூடியைத் திறக்கமுயன்ற சிலர் முகத்தில் ஆவி அடித்தது காரணமாக இருக்கலாம்).
ஆரம்ப சூரத்தனம்
எந்தத் துறையாகிலும், நாம் செய்ய ஆரம்பித்த ஒரு காரியத்தை ரகசியமாக வைக்கவேண்டுவது அவசியம். சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிட்டு, முடிப்பதற்குள் அதைப் பற்றிப் பிறருடன் பெருமையாக பேச நினைப்பது அபாயம்.
யாரோ ஒருவர், அதைக் கவனமாகக் கேட்டுவிட்டு, `நீ சொல்வது நடக்காது!’ என்று சந்தேகம் ஏற்படச் செய்வார் முதலில்.
அவரது போலி சந்தேகத்தைச் சவால் என்றெடுத்துக்கொண்டு, விரிவாக விளக்குவோம்.
இதைத்தானே அவரும் எதிர்பார்த்தார்!
நம்மை முந்திக்கொண்டு, தானே முயன்று கண்டுபிடித்ததைப்போல், தக்க இடத்தில் விரிவாகக் கூறி, லாபம் சம்பாதிப்பார்.
இக்காலத்தில் இம்மாதிரியான நம்பிக்கைத் துரோகிகள் மலிந்துவிட்டார்கள்.
::கதை::
ஒரு இசைக்கலைஞர் தான் இயற்றிய பாடல்களை தன் குருவிடம் காட்டினார், அவர் மகிழ்ந்து பாராட்டுவார் என்று எதிர்பார்த்து.
அப்பாடல்களை நோட்டமிட்ட குரு ஒன்றும் சொல்லாதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அதன் காரணம் பிறகுதான் புரிந்தது.
தான் இயற்றியவை அவை என்று குரு அவற்றைப் பிரகடனப்படுத்தினார்!
`உங்களை எவ்வளவு நம்பினேன்! நீங்கள் என்னை இப்படி ஏமாற்றலாமா?’ என்று சீடரால் குருவைத் தட்டிக்கேட்க முடியவில்லை. குருபக்தியும், அவர்மேல் கொண்டிருந்த மரியாதையும் தடுத்தன.
ஆனால், ஆயுள் முழுவதும் குருவின் நேர்மையற்ற செயல் அவரை உறுத்திக்கொண்டே இருந்தது. வருத்தம் மறையவே இல்லை.
ஏன் காப்பி அடிக்கிறார்கள்?
பிறரைக் காப்பி அடிப்பது எளிதாக இருக்க, `நமக்கு இருக்கிற கொஞ்சம் மூளையைக் கசக்கி, எதையாவது கண்டுபிடிப்பது முடிகிற காரியமா!’ என்ற கொள்கை உடையவர்கள் இப்படிப்பட்டவர்கள்.
இவர்களுடைய சாமர்த்தியம் வேறுவிதமாக வெளிப்படும்.
ஒரு ராகத்தில் அமைந்த பல பாடல்களைக் கேட்டால், இசை நன்கு பயின்றவர்களுக்குக் கற்பனை ஓடும். அவற்றை எப்படியெல்லாம் மாற்றலாம் என்ற யோசனை எழும்.
`அவ்வளவு கஷ்டப்படுவானேன்!’ என்றுதான் காப்பி அடிக்கிறார்கள்!
::கதை::
கர்னாடக இசையில் தேர்ந்த ஒருவர் வேறு ஒருவரது பாடலுக்குத் தானே மெட்டமைத்து, ஒரு கச்சேரியில் பாடியிருந்தார். பக்கவாத்தியம் வாசித்தவர்களிடம் அடக்கமாக, தன் பங்களிப்பைத் தெரிவித்துக்கொண்டார்.
அவர் மறைந்ததும், திரைப்பட இசை அமைப்பாளர் ஒருவர் அந்த மெட்டைத் தன்னுடையதாக ஆக்கிக்கொண்டார். அதனுடன் வேறு வாத்தியங்களையும் இணைத்தது மட்டும்தான் அவருடைய கைங்கரியம்.
அவருக்குப் பெரும்புகழ் கிடைத்தது. `Genius’ என்றுகூட ஒரு ரசிகர் பாராட்டியிருந்தார்!
குழுவில் படைப்பு
இருவரோ, மூவரோ இணைந்து ஒரு படைப்பைப் படைத்தால் எளிதாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும். இதில் ஒருவர் நடைமுறையில் இருப்பதைப் புரிந்து வைத்திருப்பார். இன்னொருவர், `இப்படிச் செய்தால் என்ன?’ என்று புதிய கற்பனையைக் கொண்டுவருவார். மற்ற இரண்டையும் இணைப்பார் மூன்றாமவர்.
அறிவிலும், திறமையிலும் ஒத்திருப்பதுடன், அவர்களுக்குள் போட்டி, பொறாமை இருக்கக்கூடாதென்பதும் அவசியம். விவாதம் வரலாம். ஆனால், சண்டையில் முடியக்கூடாது.
`நான்தான் செய்தேன்!’ என்று கூறி, தானே முழு பாராட்டையும் பெற எண்ணுகிறவர் சுயநலவாதி. அடுத்த முறை, யார் அவருடன் இணைவார்கள்!
::கதை::
“நான்குபேர் இணைந்து, ஒரு கதையை எழுதுகிறோம். நான் இரண்டாவது, நீங்கள் மூன்றாவதாக எழுதுங்கள்,” என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்க, நான் ஒப்புக்கொண்டேன்.
எழுதி அனுப்பிவிட்டு, அதைப்பற்றி மறந்தேபோனேன்.
வெளியானதும், `இரண்டாவது பகுதி சுமாராக இருக்கிறது. கடைசி ஒரு பக்கம்தான் சுவாரசியமாக இருக்கிறது,’ என்று தோன்றியது.
அடுத்த மாதம் நான் எழுதியது வெளியாக, அதிர்ச்சி உண்டாயிற்று.
அப்போதுதான் புரிந்தது, என் பகுதியின் முதல் பாகத்தை அவர் தனதாக ஆக்கிக்கொண்டார் என்பது.
`இப்படிச் செய்துவிட்டீர்களே!’ என்று நான் கேட்கவில்லை. நான் அவரைவிடத் திறமைசாலி என்று சமாதானம் செய்துகொண்டேன்.
அடுத்த பல மாதங்கள் அப்பத்திரிகைக்கு எதுவும் எழுதவில்லை. அப்போது அவருக்குப் புரிந்திருக்கும் என் மனவருத்தம்.
மனச்சாட்சியே இல்லாது, இன்னொருவரின் ஆக்கபூர்வமான வேலையைத் `திருடினால்’ உண்மையான நிறைவு கிடைக்குமா?
ஆசை இருக்கு கதையெழுத, ஆனால்…
ஒரு படைப்பை ஆரம்பிப்பதற்குமுன், அதற்கான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழி வளமும் அவசியம்.
`எனக்குக் கதையெழுத, பாடல்கள் புனைய ஆசை. ஆனால், படிக்கப் பிடிக்காது!’ என்றால் எப்படி?
முன்னூறு வருடங்களுக்குமுன் இருந்த தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர் போன்ற வாக்கேயக்காரர்களைப் பார்ப்போமா?
சிறுவயதிலேயே அவர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற குருமார்களிடம் அனுப்பினார்களாம் அவர்களது பெற்றோர். அதைத் தவிர, மதத்தைப்பற்றியும் கற்றார்கள்.
பக்தி மிகுந்து, தென்னாட்டில் கோயில் கோயிலாகப் போக, அங்கிருந்த தெய்வங்களின்மேல் பாடல்களைப் புனையும் திறன் வந்தது. தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில், கர்னாடக இசைப்பாணியில் இயற்றினார்கள்.
அவர்களுடைய கற்பனைத்திறன் இன்றளவும் பாராட்டப்படுவது எப்படியென்றால், ஆர்வத்துடன், படைப்புக்கு வேண்டிய ஆதாரமான அறிவு, மொழித்திறன் இரண்டையும் பெற்றிருந்ததுதான்.
எந்தத் துறையானாலும், கற்பனைவளம் மிக்கவர்களே முன்னுக்கு வருகிறார்கள்.
தமிழ்த் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்தில், செந்தமிழில் உரையாடினார்கள்.
ஐம்பதுகளில், `நாம் அன்றாடம் அப்படிப் பேசுவது கிடையாதே! எல்லாருக்கும் இந்தத் தமிழ் புரியுமா?’ என்ற சந்தேகம் எழ, சற்றே மாற்றினார்கள். இருந்தாலும், உணர்ச்சிமயமான இறுதிக்கட்டத்தில் செந்தமிழ் துள்ளி விளையாடும்.
காலப்போக்கில், அதுவும் மாற, வெவ்வேறு உச்சரிப்புகளுடன்கொண்ட தமிழ் பயன்படுத்தப்பட்டது.
தெய்வங்கள் எப்படிக் காட்சி அளிப்பார்கள்?
பரம பக்தர்களுக்குத்தான் இக்கேள்விக்குப் பதில் புலனாகும்.
நம்மைப்போன்ற பாமரர்களுக்காக, தெய்வீகமான படங்களின் இயக்குனரின் கற்பனையால், உடை, ஆபரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டன. தெய்வங்கள் செந்தமிழில் உரையாட, நகைச்சுவைப் பாத்திரங்கள் தற்காலத்தமிழில் கொச்சையாகப் பேசுவார்கள்!
ரசிகர்களும் இயக்குனர்கள் மற்றும் கதாசிரியர்களின் கற்பனையை ஏற்றுக்கொண்டனர். அவ்வப்போது, விமரிசகர்கள் குறிப்பிட்ட குறைகளையும் நிவர்த்தி செய்தனர்.
::கதை::
நான் மேற்பயிற்சிக்காகப் போயிருந்தேன். நான்குவிதமான தலைப்புகள் முதலிலேயே கொடுக்கப்பட்டிருந்தன. விரிவுரையாளர்கள் அவற்றை ஒட்டிப் பாடம் நிகழ்த்தினார்கள்.
அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி முடியும் தறுவாயில், நீண்ட கட்டுரை ஒன்று எழுதவேண்டும் – மலாய் மொழியில்.
எங்கள் குழுவில் சீன ஆசிரியைகள் சிலர் இருந்தார்கள். அவர்கள் கற்றது, கற்பித்தது எல்லாமே சீன மொழியில்தான். ஓரளவு ஆங்கிலம் மட்டும் பேசுவார்கள்.
மலாய் அறவே தெரியாது என்ற நிலையில், அவர்களுக்கெல்லாம் கட்டுரை எழுதித் தந்து சம்பாதித்தார் ஒருவர்! அவர்களது நிலை புரிந்து, எந்தப் புகாரும் எழுப்பப்படவில்லை.
கற்பனை இருந்திருக்கலாம். ஆனாலும், இவர்களால் படைக்க முடியவில்லை. ஏனெனில், மொழி தெரியாமல் போயிற்று.
::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக... Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1
0 comments:
Post a Comment