முன்னேற வயதில்லை
“என் மகள் ஆரம்பப் பள்ளியில் மிக நன்றாகப் படித்து, ஒவ்வொரு வருஷமும் பரிசு வாங்குவாள். அதன்பின், என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. படிப்பில் அக்கறை போய்விட்டது,” என்று பிரலாபித்தாள் ஓர் ஆசிரியை. அவள் பள்ளி இறுதிப் பரீட்சைக்குப் பிறகு இரு வருடங்கள் பயின்றிருந்தவள்.
பெற்றோர் தமக்குத் தெரிந்ததைக் கற்றுக் கொடுத்து, சிறு குழந்தைகள் அதைச் சுமாராகச் செய்தாலும் பாராட்டுவார்கள். குழந்தையும் மகிழ்ந்துவிடும்.
எதில் ஈடுபட்டாலும், புகழ் கிடைக்கும்போது அதையே இன்னும் நன்றாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும். நாளடைவில், பாராட்டை எதிர்பார்த்து, எந்தக் காரியத்திலும் முழுமை (PERFECTION) தேடுவார்கள்.
பெருமை அடைந்தால் கர்வம் தலைக்கேறும். பாராட்டு கிடைக்காவிட்டால் தன்னம்பிக்கை குறைந்துவிடும்.
பாராட்டு கிடைத்தால் ஒரேயடியாக மகிழ்ந்து, பெருமைப்படாது, அவமதிப்பு வந்தாலும் அதை ஒதுக்கித் தள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால்தான் முன்னேற முடியும்.
தமிழில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் இருவர் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டு, அழுதுகொண்டே இருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.
எனக்குத் தோன்றிய காரணம்: ஆண்கள் எப்படி ஆபாசமாக எழுதினாலும் அதை ஏற்கும் நம் சமுதாயம் பெண்களின் எழுத்து, ஒரு வரையறைக்குள்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. பெண்களுக்கு இழைக்கும் அநீதிகளைப் பற்றித் துணிச்சலுடன், விரிவாக எழுதும் பெண் எழுத்தாளர்கள், சில
ஆண்களால் பழிக்கப்படுவார்கள்.
`ஆண்களும் தவறு செய்வார்கள்!’ என்று வெளிப்படையாக எழுத இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’ என்ற ஆத்திரம் ஆண்கள் பலருக்கு எழும். `இவள் எழுதுவதெல்லாம் ஆபாசம்!’ என்று ஏதோ சொல்லி, தம் மனக் குமுறலை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
பெண்களுக்கு உணர்ச்சிகளே இருக்கக்கூடாது, அப்படி இருந்தாலும், அவற்றை வெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கும் அறிவிலிகளின் கருத்தை அலட்சியம் செய்தால்தான் பெண்கள் முன்னேற முடியும்.
அறிவு, திறமை எல்லாம் இருந்தும் பல பெண்கள் வெளியில் அறியப்படாது இருப்பதன் காரணம் – கண்டனத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பதுதான்.
நாம் ஈடுபடுவது எந்தத் துறையாக இருந்தாலும், அதில் எத்தனை காலம் தொடர்ந்திருந்தாலும், மேலும் முன்னேற இடம் இருக்கும்.
இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்களையோ, இசை வல்லுனர்களையோ எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பக் காலத்தில் அவ்வளவு சிறப்பாகத் தம் தொழிலைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கே அது புரிந்திருக்கும். அதனால் மனம் தளராது, முன்னேறும் வழிகளை ஆராய்ந்து, அவற்றை என்றென்றும் கடைப்பிடிக்கிறார்கள்.
அவ்வப்போது தோல்விகளும் வரும். ஆனால், அவற்றால் மனம் உடைந்துவிடாது, தன்னம்பிக்கையுடன் மீண்டு எழும் வகைகளை ஆராய்ந்து, கடைப்பிடிக்கிறார்கள்.
சிறிது வெற்றி கிடைத்தவுடன், தலைக்கனத்துடன் இருப்பவர்கள் எத்துறையிலும் நிலைத்திருக்க முடியாது.
ஒரே சமயத்தில் தாம் கற்ற பல துறைகளிலும் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியுமா?
முடியும். ஆனால், வெகு விரைவிலேயே தோல்வியைச் சந்திக்க நேரிடும் — நம் மூளை வெகுவாகக் குழம்பிப் போவதால்.
இதைத் தவிர்க்க, ஒரு துறையில் மட்டுமே சில காலம் ஆழ்ந்துவிட்டு, பிறகு முழுக் கவனத்துடன் இன்னொன்றிற்குத் தாவலாம்.
நான் ஒரு புதினமோ, நீண்ட கதையோ எழுத ஆரம்பித்தால், வேறு எந்தவிதமான எழுத்திலும் மனம் செல்ல விடுவதில்லை. அப்போதுதான் கதாபாத்திரங்களுடன் உறவாட முடியும். பாத்திரப் படைப்பும் நம்பகமாக இருக்கும்.
ஒரு போட்டிக்காக நூறு பக்கங்கள் கொண்ட புதினத்தை எழுதவேண்டும் என்றால், முதலில் ஒரு நாளைக்குச் சுமார் எத்தனை பக்கங்கள் எழுதலாம் என்று யோசித்து வைக்கவேண்டும்.
ஒரே வாரத்தில் முடிந்ததா? சில நாட்கள் அப்படியே வைத்துவிட்டு, அதன்பின், கதையைப் படித்துப் பார்த்தால், நிறைய ஓட்டைகள் புலப்படும். முடிவு தேதி வரும்வரை, திருத்தியபடி இருந்தால், கதையில் மெருகேறும்.
வியாபாரத்தில் முன்னேற்றம்
ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார் சாங். அதிக லாபம் பார்ப்பது தவறு என்ற கொள்கை அவருக்கு இருந்ததால் எல்லாப் பொருட்களும் மலிவாக இருந்தன. நிறைய வாடிக்கையாளர்கள் சேர்ந்தார்கள். அதிலேயே திருப்தி அடைந்தார் சாங்.
அவருடைய மகன் தந்தையின் கொள்கையை ஆதரிக்கவில்லை. அவன் வியாபார நுணுக்கங்களைக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தான். அவனுக்கு வழிவிட்டு, பெருந்தன்மையுடன் தந்தை ஒதுங்கிக்கொண்டார். `நான் இத்தனை காலமும் இப்படித்தானே செய்து வந்திருக்கிறேன்!’ என்று மகனுடன் விவாதிக்கவில்லை.
வியாபாரத்தைப் பெருக்க, பல வழிகளைக் கையாண்டான் ஜூனியர் சாங்.
`எங்கள் கடைக்கு இன்னும் இரு மைல்தான் இருக்கின்றன!’ என்ற அறிவிப்பு தெருக்களில் வைக்கப்பட்டிருந்தன. விமான நிலையத்திலும்கூட ஒரு கடை — வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை வாங்கிப் போக வசதியாக.
வியாபாரம் பெருகியது. ஆனாலும், பெரும் லாபம் வைத்து விற்கும் பேராசை கொள்ளாததால் நிலைத்திருக்க முடிந்தது.
குடும்பத்தில் முன்னேற்றம்
`கணவர் சொல்வதையோ, செய்வதையோ மறுத்துப் பேசினாலோ, குற்றம் கண்டுபிடித்தாலோதானே சண்டை வரும்!’ என்று நடக்கும் பெண்களின் குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலைக்கலாம். ஆனால், மகிழ்ச்சி?
கோலாலம்பூரில், சில ஆண்டுகளுக்குமுன், வங்கியிலிருக்கும் ATM-இல் பணம் எடுக்குமுன், `உங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள்!’ என்ற அறிவுரை காணப்பட்டது.
குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதுடன் தம் கடமை தீர்ந்துவிட்டது என்றெண்ணி, பெரும்பாலான பெற்றோர் நடப்பதை மறைமுகமாகக் குத்திக் காட்டும் முயற்சி இது.
அண்மையில், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அதிகம் வெளியே செல்லமுடியாத நிலையில், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதே! இதனாலும், சில நன்மைகள் விளையாமல் இல்லை.
`என் குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது எவ்வளவு மகிழ்ச்சிகரமான விஷயம் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!’ என்று பலரும் கூறியிருப்பதாகச் செய்திகள் வந்தன.
தம் விருப்பு வெறுப்பைப் புரிந்து பெற்றோர் அன்பாக நடந்தால்தானே குழந்தைகள் நன்கு முன்னேறுவார்கள்?
உடல்நிலையில் முன்னேற்றம்
`வயதாகிவிட்டது! இனி என்ன!’
“பள்ளி நாட்களில், உடல் சம்பந்தமான கல்வி எதுவாக இருந்தாலும், அதிலிருந்து எப்படித் தப்புவது என்றே சமயம் பார்த்துக்கொண்டிருப்பேன்!”
`நிமிர்ந்து நடப்பது விமானப் பணிப்பெண்களுக்குத்தான் அவசியம்!’
இப்படியெல்லாம் விதண்டாவாதம் புரிகிறவர்கள் உடலை மட்டும் அலட்சியம் செய்வதில்லை. உடற்கட்டுடன் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் இழந்துவிடுகிறார்கள். அதனால், சிரிப்பும் பறிபோய்விடுகிறது.
இருபது வயதிலிருந்ததுபோல் என்றும் இளமையாகத் தோற்றம் அளிக்க முடியாவிட்டாலும், அறுபது வயதில் எழுபது வயதுக்காரர்போல் முதுமையை அடைய வேண்டுமா?
தொண்ணூறு வயதை எட்டிக்கொண்டிருக்கும் மிஸஸ் லீ தன்னைவிடச் சற்றே இளைய பெண்மணிகளுடன் அவர்கள் வீட்டருகே இருக்கும் பூங்காவில் ஒவ்வொரு காலையும் ஒருவித உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கிறேன்.
இவர்கள், `வயதாகிவிட்டதே! முன்போல் எதுவும் செய்ய முடியவில்லையே!’ என்று அலுத்துக்கொள்வதில்லை. ஏனெனில், தங்களால் முடிந்தவரை உழைக்கிறார்கள்.
`ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்கிறதே!’ என்ற அலுப்பு கிடையாது. அத்துடன், பிறருடன் பேசிப் பழகுவதால், குருட்டு யோசனையில் மனம் போகாது.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக, அரைமணி நேரம் தொடரும் நிகழ்ச்சி இது.
`பயிற்சிக்கு அரைமணி போதுமா? இரண்டு மணி நேரம் பண்ணினால், இன்னும் பலன் கிடைக்குமே!’
வயதை மறந்து, இப்படி நினைத்துச் செய்தால், உடல்வலியால் பல நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும்.
பரீட்சைக்கு முதலிரவு முழுவதும் தூங்காது படித்துவிட்டு, மறுநாள் பரீட்சை எழுதும்போது எதுவுமே நினைவுக்கு வராமல், அல்லது தலைவலியுடன் தவிப்பதுபோல்தான்!
`பரீட்சைக்கு முதல்நாள் இரவு முழுவதும் நான் கண்விழித்துப் படித்தேன். ஆனாலும், ஏனோ பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியவில்லை!’ என்று சில மாணவிகள் குழம்புவார்கள்.
இதைத் தடுக்கத்தான் சில பள்ளிகளில் TEST என்று, அடிக்கடி பரிசோதனை செய்வார்கள். அவ்வப்போது, சிறுகச் சிறுகப் படித்தால், மன இறுக்கம் இருக்காது.
நான் படித்த பள்ளியில், வாராந்தரப் பரிசோதனை, மாதாந்தரப் பரிசோதனை, கால், அரை, முழுப் பரீட்சை என்று வருடம் முழுவதுமே வைத்திருந்ததில், இறுதிப் பரீட்சைக்கு ஒரு மாதம் முன்பே, `எல்லாம் எளிதுதான். எத்தனை முறை படித்திருக்கிறோம்!’ என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.
மாறாக, குறுகிய காலத்தில் மிகுந்த பிரயாசையுடன் ஒரு காரியத்தில் ஈடுபடுவது களைப்பையும் சலிப்பையும்தான் உண்டாக்கும். அப்புறம் முன்னேறுவது எங்கே!
::நிர்மலா ராகவன்-/- எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக... Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1
No comments:
Post a Comment