"நிம்மதியைத் தேடுகிறேன்" (சிறு கதை)

நான் திருமணமாகி, ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கு ஒரு பொண்ணும் என, இரு குழந்தையின் தந்தை. கொழும்பில் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்வாக இருந்த காலம் அது. நல்ல உத்தியோகம், வசதியான வீடு, அழகான மனைவி, புத்திசாலி பிள்ளைகள்!

 

ஆனால் யாரும் எதிர்பாராத, திடீரென ஆனால் திட்டமிட்டு தோன்றிய இனக்கலவரம், எம்மை உள்நாட்டிலேயே ஏதிலியாக [அகதியாக] கப்பலில் யாழ்ப்பாணம் இடம் பெயரவைத்தது. அன்று தொலைந்த நிம்மதியை இன்றும் தேடிக் கொண்டே இருக்கிறேன்!

 

திரும்பவும் கொழும்பு வர மனமில்லாமல், பிள்ளைகளின் பாதுகாப்பும், படிப்பையும் முன்னிறுத்தி மனைவி ' ஏன் நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு போகக் கூடாது?' என்று கேட்டார். 'உங்களுக்கு நல்ல படிப்பு உண்டுதானே. நானும் எதோ படித்துள்ளேன்.  அங்கு ஏதாவது ஒரு வேலை இருவரும் எடுத்து சமாளிக்கலாம் தானே !' என்று மேலும் கூறினார். கொழும்பை  விட்டு , வேலையை விட்டு வெளியே வந்து ஆறு மாதம் கடந்துவிட்டது. யாழ்ப்பாணமும் ஒரு போர் சூழல் நிலமையாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போய்க்கொண்டு இருந்தது. ஆனால் இது முழுமையாக தமிழர் சமுதாயத்தின் இடம் என்பதால், ராணுவத்தின் எடுபிடிகளை தவிர, வேறு பிரச்சனைகள் அங்கு இல்லை என்பது கொஞ்சம் நிம்மதி. பாடசாலைகளும் நல்ல தரமான பாடசாலைகள். என்றாலும் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது?

 

நாம் ஆறு மாதத்துக்கு முன் தொலைத்த நிம்மதி முழுதாக இன்னும் வந்தபாடில்லை. பாடசாலைகளும், படிப்பு நல்லதாக இருந்தாலும், அடிக்கடி ஏற்படும் குண்டு, ஷெல் தாக்குதல்களால்  ஒழுங்காக நடைபெறுவதில்லை. இப்படியான நிலைமைகளால் மரணங்களும், காயப்படுபவர்களும் அங்கொன்று  இங்கொன்றாக நிகழ்ந்த வண்ணமே இருந்தன. ஆகவே நாம் குடும்பமாக வெளிநாடு போக தீர்மானித்து, கொழும்பு சர்வதேச விமான நிலையம் ஊடாக இங்கிலாந்து போய் சேர்ந்தோம். எம்மை இங்கிலாந்து வரவேற்று விசாவும் தந்தார்கள். என்றாலும் எம் பிரச்சனை தீரவில்லை, பாடசாலை எடுப்பது பெரும் பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால், நாம் இருவரும் உத்தியோகம் எடுக்கவேண்டும், பிள்ளைகள் பாடசாலைக்கு போக வசதியான இடத்தில் வீடு எடுக்கவேண்டும். இந்த இரண்டும் விரைவாக செய்யவேண்டும். அப்ப தான் நாம் எதிர்பார்க்கும் நிம்மதி மீண்டும் வரும்? 

 

எங்கள் படிப்பு, அனுபவம் எல்லாம் எங்கள் நாட்டில் என்பதால், நான் சென்ற நேர்முகப் பரீடசையில் வெற்றி கிடைக்கவில்லை. எல்லோரும் இங்கு ஒரு அதிகாரபூர்வமான ஒரு பயிற்சிநெறி கற்று, மீண்டும் வேலைக்கு மனு போடுவது நல்லது என்றனர். இதற்கு ஒன்றில் இருந்து குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகலாம்? அது மட்டும் குடும்பத்தை ஓரளவு நல்ல நிலையில் வைத்திருப்பது இயலாதகாரியமாக இருந்தது. எனவே நான் அதை கைவிட்டு, ஓரளவு நல்ல சம்பளம் உள்ள மாற்று வேலைகளுக்கு முயற்சி செய்தேன். அது உடனடியாக, பல கடைகளை நடத்தும் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பதவி பெற்றேன். தொடக்கத்தில் பயிற்சி மேலாளராக , எனக்கு ஆறு மாத பயிற்சியும் அதனுடன் சம்பந்தபட்ட பாடமும் போதித்தார்கள். சம்பளம் வீடு வாங்க, குடும்பத்தை நடத்த போதுமாக இருந்தது. ஆனால் அப்பவும் நிம்மதி வரவில்லை. காரணம் கையில் கிடைத்த வாழ்வை மகிழ்வாக கொண்டு செல்லாமல், ' நீங்க என்ன இலங்கையில் படித்தீர்கள் ? என்ன வேலை செய்தீர்கள் ?, ஒன்றும் இங்கு சரிவரவில்லையே? உங்களை நம்பி நானும் திருமணம் செய்தேனே?' என்று மனைவி நச்சரிக்க தொடங்கியதே!  

 

மனைவி தமிழ் பாடசாலை, ஆலயம் என இங்கு போகத் தொடங்க, மற்ற  பெண் கூட்டாளிகளுடன் பழகத் தொடங்க, அவர்களின் நிலைகளுடன் எம்மை ஒப்பிட தொடங்கிவிட்டார். ஆனால், அவர்கள் எப்ப இந்த நாட்டுக்கு வந்தவர்கள், என்ன படிப்பு இங்கு வந்து படித்தவர்கள், எப்படி பணம் சேர்க்கிறார்கள் / உழைக்கிறார்கள் .. இவை போன்றவற்றை அவர் கவனத்தில் எடுக்கவில்லை? அவரின் எண்ணம் எல்லாம் நாமும் அவர்கள் போல் இரண்டு மூன்று வீடு வாங்க வேண்டும், ஆளுக்கொரு மோட்டார் வண்டி வைத்திருக்கவேண்டும் .. இப்படி நீண்டு கொண்டே போனது.

 

பாடசாலையில் பிள்ளைகள் மிகவும் திறமையாக படிப்பிலும் விளையாட்டிலும் மற்றும்  கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளிலும் முன்னுக்கு நின்றார்கள். அது எனக்கு உண்மையில் நிம்மதி தந்தது. அது மட்டும் அல்ல, அவர்களுக்கு படிப்பிற்க்கான எல்லா வசதிகளும் குறைவின்றி நான் கொடுக்கக் கூடியதாகவும் இருந்தது. இதை விட என்ன வேண்டும்.? சொந்த வீடு, சொந்த மோட்டார் வண்டி,  இப்படி தேவைக்கு அளவாக எல்லாம் உண்டு. ஆனால் ஆடம்பரம் இல்லை. எனக்கு அதில் கவலையும் இல்லை

 

குடும்பம் என்பது இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து மகிழ்வாக போவதே!. அதைத்தான் நான் இப்ப தொலைத்துவிட்டேன்!  மற்றும் படி ஒரு பிரச்சனையும் இல்லை. குண்டு ஷெல் இங்கு இல்லை. ஆனால் வாயால் செயல்களால் வரும் இந்து குண்டுகள், ஷெல்களில் இருந்து தப்ப பலவேளை நிம்மதியைத் தேடுகிறேன்! அது என் வாழ்நாள் வரை தொடரும்! ஒருவேளை அதை அவள் உணர்ந்தால், நிலைமை மாறலாம்? அப்படி வந்தால், மீண்டு என் கதையை உங்களுடன் தொடர்கிறேன் !

 

"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!"

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

1 comment:

  1. எல்லாத்தையும் பெண்கள் தலையில் போடுவதில் ஒரு சந்தோசம் ஆண்களுக்கு

    ReplyDelete