மது குடிக்கும்போது உடலுக்குள்
என்ன நடக்கிறது?
ஒரு ஹேங்ஓவர் என்பது அதிகமாக குடிப்பதன் விளைவாக ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பைக்
குறிக்கிறது. வழக்கமான அறிகுறிகளில் சோர்வு, பலவீனம், தாகம், தலைவலி, தசை வலி, குமட்டல்,
வயிற்று வலி, தலைச்சுற்றல், ஒளி மற்றும் ஒலிக்கு உணர்திறன், பதட்டம், எரிச்சல், வியர்வை
மற்றும் அதிகரித்த இரத்த அழுத்தம்
ஆகியவை அடங்கும்.
மது அருந்துவது என்பது, சிலருக்கு அன்பளிப்புகள், அலங்காரங்கள், பரிசுகள் போல பண்டிகை பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஆனால், அளவுக்கு மீறினால், எப்பேர்ப்பட்ட அமிர்தமும் நஞ்சாகும் என்கிறபோது, ஏற்கனவே நஞ்சாக இருக்கும் மது எத்தகைய நஞ்சாக மாறும்? மது அருந்திய மறுநாள் உங்களுக்கு ஹேங்ஓவர் இருந்தால், உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியுமா? நீங்கள் ஏன் மிகவும் மோசமாக உணர்கிறீர்கள் தெரியுமா? தெரியவில்லை என்றால் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பலர் மது அருந்துவதை விரும்புகிறார்கள். ஏனெனில் குறைந்த அளவு ஆல்கஹால் ஆரம்பத்தில் ஒரு உற்சாகத்தை அளிக்கிறது. அது உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது. உடலில் உள்ள ரசாயனங்களான டோபமைன் மற்றும் எண்டோர்பின்களை வெளியிட வைப்பதன் மூலம் மூளையில் உள்ள ஆனந்தத்தை உணரச்செய்யும் அமைப்பை அது தூண்டுகிறது.
ஆனால், சிறிது நேரம் கழித்து, நீங்கள் அதிகமாக குடிக்கும்போது, அது இறுதியில் மூளையின் சில செயல்பாடுகளை அடக்கி, உங்கள் இதயத்தையும் சுவாசத்தையும் மெதுவாக்குகிறது.
ஆல்கஹாலின் தொடக்க விளைவு என்பது போதைப்பொருட்களால் உருவாகும் மயக்கத்தின் பல
நிலைகளில் முதன்மையானது. இதன் கடைசி கட்டம் மரணம். பயனுள்ள டோஸ் (உங்களை நீங்களே ரசித்துக்கொண்டு
விதந்து பேசிக்கொள்வது) மற்றும் ஒரு ஆபத்தான டோஸுக்கு (நகர முடியாத சவநிலை போல) இடையே
ஒரு பெரிய இடைவெளி உள்ளது.
நீங்கள் வழக்கமான வரம்பை அடைவதற்கு முன்பே, உற்சாகம், ஒருங்கிணைப்பின்மை, குறைபாடு, பேச்சு குழறல், தள்ளாடுதல் மற்றும் தயக்கங்களை இழப்பது ஆகியவை உங்களுக்கு ஏற்படலாம். சிறிய அளவிலான ஆல்கஹால் மூளையில் உள்ள லிம்பிக் அமைப்பை (நமது நடத்தை மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் அமைப்பு) பாதிக்கிறது. இதன் விளைவாகத்தான் வார இறுதியின் இரவுகளில் பல இடங்களில் கைகலப்புகள் நிகழ்கின்றன.
ஆல்கஹால் ஒரு வாசோடைலேட்டர் ஆகும், அதாவது இது ரத்த நாளங்களை விரிவுபடுத்தும் பண்புடையது. இது உடலின் மையத்திலிருந்து அதன் முனைகளுக்கு ரத்தத்தை திசை திருப்புகிறது. ஆல்கஹால் உட்கொள்ளும்போது கன்னங்கள் சிவப்பது இதன் காரணமாகவே ஏற்படுகிறது. கூடவே அதிகமாக மது அருந்துபவர்களுடைய மூக்கும் சிவக்கிறது.
ஆரம்பத்தில், மது அருந்துவது சுய வலுவூட்டலை அளிக்கிறது. ஆரம்பத்தில் நல்ல யோசனையாகத் தோன்றும் ஒன்று, மது அருந்திய பிறகு மிகவும் சிறந்த யோசனையாகத் தோன்றும். பெரும்பாலான பானங்களை ஒப்பிடும்போது ஆல்கஹால் உடலால் விரைவாக உறிஞ்சப்படுகிறது. ஒரு பாகம் வயிற்றால் (சிறுகுடலால் அல்ல) உறிஞ்சப்படும். பின்னர் அது உடல் முழுவதும் பரவி, மூளை மற்றும் கல்லீரல் உட்பட எல்லா உறுப்புகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. மதுவை உடைத்து அகற்றுவதற்கான துணிச்சலான முயற்சியை உடல் மேற்கொள்கிறது.
இதைச் செய்ய கல்லீரல், என்சைம்கள்(நொதிகள்) மற்றும் சிறிய மூலக்கூறுகளை உருவாக்குகிறது. அவை முக்கியமான மூலக்கூறுகளை உருவாக்க அல்லது உடைக்க உதவுகின்றன. இதில் ஆல்கஹால் டீஹைட்ரோஜினேஸ் என்ற நொதியானது ஆல்கஹாலை (எத்தனால்) அசிடால்டிஹைடாக (எத்தனால்) உடைக்கிறது, பின்னர் அது அசிட்டிக் (எத்தனோயிக்) அமிலமாகவும் பின்னர் கார்பன் டை ஆக்சைடாகவும் உடைகிறது.
இதன் எல்லா கட்டங்களிலும் ஆற்றல் வெளியிடப்படுகிறது. அதிகமாகக்குடிப்பவர்கள் சில நேரங்களில் அதிக எடையுடன் இருப்பதற்கான காரணத்தை இது விளக்குகிறது. நீண்ட கால குடிகாரர்கள் பெரும்பாலும் தங்கள் கலோரிகளின் பெரும்பகுதியை ஆல்கஹால் மூலம் பெறுகிறார்கள். அவர்கள் மிகக் குறைவாகவே சாப்பிடுகிறார்கள். இது அவர்களை அதிக எடையுடன் ஆக்குகிறது. ஆனால் அவர்கள் வெற்று கலோரிகளை உட்கொள்வதால் ஊட்டச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. வைட்டமின்கள் அல்லது புரதம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே நோய்வாய்ப்பட்டது போல காணப்படுவார்கள்.
மது குடித்தால் வாந்தி வருவது ஏன்?
முதல் நிலை முறிவு தயாரிப்பான எத்தனால், உங்களை வாந்தி எடுக்கத்தூண்டுகிறது. நீங்கள் குடித்துவிட்டு அதிக உற்சாகமடையும்போது, உங்கள் ரத்தத்தில் உள்ள எத்தனால் அளவு போஸ்ட்ரீமா என்ற பகுதியால் கண்காணிக்கப்படுகிறது. மூளையின் ஒரு பகுதியான இது, உங்கள் ரத்தத்தில் வேண்டாத பொருட்களை கண்காணிக்கிறது. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும் சில உணவுகளை நீங்கள் சாப்பிட்டிருந்தால், உங்கள் போஸ்ட்ரீமா தான் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து விடுபடுமாறு உங்கள் உடலை அறிவுறுத்துகிறது.
எத்தனாலும் அதே விளைவைக் கொண்டுள்ளது. போஸ்ட்ரீமா மிக நுண்ணிய சகிப்புத்தன்மையுடன் செயல்படுகிறது. மேலும் உங்கள் உடலில் எத்தனால் ஒரு குறிப்பிட்ட அளவை அதாவது இயற்கை அமைத்துள்ள வரம்பை அடைந்தவுடன், போஸ்ட்ரீமா உங்கள் வயிற்றை சுருங்கும்படி அறிவுறுத்துகிறது. உங்களுக்கு வாந்திவரும் உணர்வை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்க முயல்வது என்பது கடல்அலையைத் தடுக்க முயற்சிப்பது போன்றது. ஆர்வத்துடன் குடிப்பதற்கும், வாந்தி எடுக்க வருகிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கும் இடையே உள்ள மிகக் குறுகிய நேரத்தை நீங்கள் கவனித்திருக்கலாம்.
டிசல்பிராம் (ஆன்டப்யூஸ்) என்பது நாள்பட்ட மதுப்பழக்கத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. இது நீங்கள் குடித்த பிறகு எத்தனால் மேலும் சிதைவதை நிறுத்துகிறது. இது உடனடியாக ஹேங் ஓவரை ஏற்படுத்தி, வாந்தி வரச்செய்யும். இது வெறுப்பு சிகிச்சையின் ஒரு வடிவமாகும்.
ஹேங் ஓவருக்கான காரணம் என்ன?
துரதிர்ஷ்டவசமாக குடிபோதை அல்லது ஹேங் ஓவருக்கு சிகிச்சையளிக்க எந்த மருந்தும் இல்லை. போதை தெளிவதற்கு நீங்கள் காத்திருக்கவேண்டும். கல்லீரல் ஒரு மணி நேரத்தில் 8 முதல் 12 கிராம் ஆல்கஹாலை வளர்சிதைமாற்றம் செய்கிறது. போதையை குறைக்க குடிப்பதை நிறுத்துவதே ஒரே வழி. இதன்மூலம் மது உங்கள் மூளையில் இருந்து வெளியே பரவும். கல்லீரல் தனது வேலையை செய்துமுடிக்கும்.
வாந்தியெடுப்பதைத் தவிர ஹேங் ஓவரின்போது நாம் ஏன் மிகவும் பயங்கரமாக உணர்கிறோம் என்பது தெளிவாகத்தெரியவில்லை. ஆனால் இது எத்தனால் மற்றும் கன்ஜெனர்களின்(இது நொதித்தல் மூலம் உருவாகும் ஆல்கஹால் அல்லாத ரசாயன கூட்டம்) மற்றொரு விளைவு என்று கருதப்படுகிறது. இவற்றில் எண்ணெய்கள், தாதுக்கள் மற்றும் மெத்தனால் (வுட் ஆல்கஹால்) போன்றவை அடங்கும். அதிக அளவுகளில் உட்கொள்ளும்போது இவை குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.
அடர்ந்த நிறம் கொண்ட ஆல்கஹாலில் அதிக அளவு கன்ஜெனர்கள் உள்ளன. குறிப்பாக சிவப்பு ஒயின் கடுமையான ஹேங் ஓவரை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அதில் ஒரு வாசோகன்ஸ்டிரிக்டர் உள்ளது. இது உங்கள் ரத்த நாளங்களை சுருக்கி, துடிக்கும் தலைவலியை ஏற்படுத்துகிறது. ஆனால் வோட்கா அத்தனை அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் "தூய" வோட்கா என்பது வெறும் ஆல்கஹால் மற்றும் தண்ணீரின் கலவையாகும்.
அதிகமாக குடித்த பிறகு ஹேங் ஓவரை குறைக்க உதவும் ஒரே விஷயம் படுக்கைக்கு செல்லும்முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதாகும். உங்கள் பிட்யூட்டரி சுரப்பி, சிறுநீர் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் வாசோபிரசின் என்ற டையூரிடிக் ஹார்மோனை உற்பத்தி செய்வதை ஆல்கஹால் நிறுத்துகிறது.எனவே நீங்கள் உட்கொள்வதை விட அதிக தண்ணீரை நீங்கள் இழக்க நேரிடும். இதனால் ரத்த நாளங்களை பாதிக்கச்செய்யும் நீரிழப்பு ஏற்படுகிறது. இது தலைவலிக்கு வழிவகுக்கிறது.
இவற்றை நீங்கள் செய்யவில்லையென்றால், ஹேங் ஓவர் தெளிய நீங்கள் காத்திருப்பதுதான் ஒரே வழி.
நன்றி:பி. பி .சி தமிழ்
No comments:
Post a Comment