"என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது
அவளை நினைத்தேன் அழுகை வருகுது
வாழ்வை நினைத்தேன் ஆத்திரம் வருகுது
மரணத்தை நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது!"
"குழந்தை பருவம் சுமாராய் போச்சு
வாலிப பருவம் முரடாய் போச்சு
படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு
பழக்க வழக்கம் கரடாய் போச்சு!"
"உண்மை தேடி உலகம் சுற்றினேன்
வேஷம் போட்ட மனிதர் கண்டேன்
மாற்றி அமைத்த வரலாறு பார்த்தேன்
காசுக்கு மாறும் காதல் கண்டேன்!"
"ஒற்றுமை கொண்ட தமிழர் தேடினேன்
மரண வீட்டிலும் வேற்றுமை கண்டேன்
பதவி ஆசை பிரித்து விளையாடுது
பணம் தேடி வியாபாரம் செய்யுது!"
"ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்
பிரிந்து கிடப்பவன் மரித்து போவான்
மதம் கடந்து பிரதேசம் கடந்து
ஒன்றாய் சேரு உய்யும் தமிழினம்!"
"ஆலம் விழுதின் அற்புதம் பார்
தாங்கி நிற்கும் உறுதியைப் பார்
இடர் பல எமக்கு வந்தாலும்
இணை பிரியா ஒற்றுமை காண்!"
"நானாய் வாழ முடிவு எடுத்தேன்
சாதி சமயம் இரண்டும் தவிர்த்தேன்
அண்ணாவும் தம்பியும் கனவில் வந்தினம்
பெற்ற அனுபவத்தை எனக்கு தந்தினம்!"
"ராமனை வெறுத்து பூமியுள் குதித்தாள்
யுத்தத்தை வெறுத்து புத்தன் ஆனான்
அன்பை போதித்து சமயம் பிறந்தது
வெறுப்பை வளர்த்து கொலை செய்யுது!"
"ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை
இருந்ததும் இல்லை நிலமும் இல்லை
சிதைந்து போராடி வெற்றியும் இல்லை
புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!"
"கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம்
நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம்
நீதி வேண்டி சிலம்பை உடைத்தாள்
நியாயம் வேண்டி உலகை கேட்கிறோம்!"
"விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும்
தட்டிக் கேட்டும் பெற வேண்டும்
நன்னெறி என்றும் நிலைக்க வேண்டும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!"
"ஒன்றாய் கூடு உண்மையை உரை
நியாயம் நிறுத்து விசாரணை எடு
கவலை மறக்க தீர்வைத் தா
கேள்வி கேட்டு நடுகல் முழங்குது!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment