மழைநீர் சத்துகள் நிறைந்ததா? [-உடல் நலம்]

அதைச் சேமித்து குடிப்பது உடலுக்கு நல்லதா?

 


மழைகாலத்தில் மழை நீரை சேகரித்து குடிப்பதும், சமைப்பதும் பல வீடுகளில் வாடிக்கையாக உள்ளது. மழை நீரில் சாதாரண குழாய் நீரை விட சத்துகள் அடங்கியிருப்பதாக பொதுவான நம்பிக்கையும் மக்களிடம் நிலவுகிறது.

 

மழைநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், அதனை முறையாக சேகரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் சரியான அக்கறை காட்டவில்லை என்றால், அதனால் நோய் பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

மழைநீரில் பிரத்தியேகமான தனிமங்கள், தாதுபொருட்கள் எதுவுமில்லை என்றும் மழைநீர் பெய்யும் இடங்களை பொறுத்துதான் அதன் தரம் இருக்கும் என்பதால், எல்லா இடங்களில் கிடைக்கும் மழைநீரிலும் ஒரே மாதிரியான தாதுக்கள் இருக்கும் என்று சொல்லமுடியாது என்கிறார் இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் இந்துமதி.

 

நீரை சேகரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றி விளக்கிய அவர், ''மழை நீரை எங்கிருந்து சேமிக்கிறோம் என்பதை பொறுத்துதான் மழை நீரின் தரம் அமையும். வனப்பகுதியில் பெய்யும் மழை நீரும், காற்று மாசுபாடு அதிகமுள்ள பகுதியில் பெய்யும் நீரும் ஒரே தரத்தில் இருக்காது.

 

தூய்மையான குடியிருப்பு பகுதியில் பெய்யும் மழை நீரை சேமிக்கலாம். அனல் மின் நிலையம் இருக்கும் பகுதியில், நீங்கள் வசிக்கும் பட்சத்தில் அங்கு மழை நீரை சேமித்தால்,மாசுபாட்ட காற்றில் உள்ள துகள்கள் அந்த நீரில் கலந்திருக்கும். அதனால், தூய்மையான பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்களா, அங்குள்ள மழைநீரை நீங்கள் சேமிக்கிறீர்களாக என்பதுதான் முதல் கேள்வி,''என்கிறார்.

 

''சேமிப்பதற்கு தூய்மையான கலன்களை பயன்படுத்தவேண்டும். அதனை உடனே அருந்துவதை பரிந்துரை செய்வதில்லை. ஏனெனில், மாசுபாடு காரணமாக மழைநீரில் அல்கலைன் என்ற நீர்க்காரத்தன்மை அதிகமாக இருக்கும்.

 

நீர்காரத்தன்மை எந்தளவில் உள்ளது என்பதை பொறுத்துதான் தண்ணீரின் தரத்தை மதிப்பிடமுடியும். வெள்ளம் ஏற்பட்டு, குடிநீருக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்ற சமயத்தில், நீரை சேகரித்து, துணியில் வடித்து குடிக்கலாம். பொதுவாக மழைநீரை நன்கு காய்ச்சி குடிப்பதுதான் சிறந்தது,''என்கிறார் இந்துமதி.

 

மழை நீரின் தரம் மற்றும் சேமித்துவைத்திருக்கும் கலனை பொறுத்து, ஒருவாரம் முதல் இரண்டு மாதங்கள் வரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என்கிறார் அவர். ''மழைநீரை வடிகட்டுவதற்கு பலவிதமான வடிகட்டிகள் கிடைக்கின்றன.

 

மணல், கார்பன், ஸ்பாஞ் வகை மற்றும் கிருமிகளை நீக்குவதற்கான வடிகட்டிகள் உள்ளிட்டவை அடிப்படையாக பயன்படுத்தப்படும் வடிகட்டிகள். ஒரு சிலர் மழைநீரை நீண்ட நாட்கள் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்த சேமிப்பார்கள். அதனால், முதலில் சேகரித்தவுடன் வடிகட்டிகளில் தூய்மைபடுத்திதான் மழைநீரை பயன்படுத்தவேண்டும்,''என்கிறார்.

 

மழைநீரை குடிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவற்றை பற்றி பிபிசி தமிழிடம் பேசிய தொற்று நோய் நிபுணர் விஜயலட்சுமி, அமிலத்தன்மை மழைநீரில் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு நேரடியாக மழைநீரை கொடுப்பதை தவிர்க்கவேண்டும் என்கிறார்.

 

''மழைநீரை முறையாக சேமிக்கவில்லை என்றால், அதில் இருந்து வாடை வரும், அதில் பூஞ்சை வளரும். அந்த நீரை குடிப்பதற்கு, சமைப்பதற்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வெள்ளம் ஏற்பட்ட காலங்களில், நேரடியாக கலங்கலான மழைநீரை குடித்த மக்கள் பலர் நோய்வாய்ப்பட்டனர்,''என்கிறார் விஜயலட்சுமி.

 

மேலும், ''தண்ணீரால் பரவும் நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் அதிகரிக்கும். மழைநீராக இருந்தாலும் குழாய்நீராக இருந்தாலும், காய்ச்சாமல் நீரை குடித்தால், அதில் நுண்கிருமிகள் இருந்தால், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தாக்கத்தால் பலவிதமான நோய்கள் ஏற்படும். சாதாரண காய்ச்சலில் தொடங்கி, வயிற்றுபோக்கு, மஞ்சள்காமாலை, மூளைகாய்ச்சல், நிமோனியா காய்ச்சல் வரை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது,'' என்கிறார்.

:பிரமிளா கிருஷ்ணன்/பிபிசி தமிழ்


No comments:

Post a Comment