குரல் எப்போதும் இளமையாக இருக்க என்ன செய்யவேண்டும்?
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு மேடை கச்சேரியில் பி சுசீலா பாடுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.
‘அந்தக் காலத்துல கேட்ட சுசீலா குரல் எங்க போச்சுன்னே தெரியல. இவங்க குரலுக்குக்கூட வயசாகுமா?’
அதைப் பார்த்துக்கொண்டிருந்த சுசீலாவின் ரசிகை ஒருவர் இப்படி அங்கலாய்த்தார்.
நமக்குப் பிடித்த பாடகர்களின் குரல் நமது நினைவில் இருப்பது போலவே நிஜத்திலும் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம்.
ஆனால் நிதர்சனம் வேறு.
நமது குரல்களுக்கும் வயதாகும்.
ஆனால், சில வழிமுறைகளின் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம்.
குரல் எப்படி உருவாகிறது?
நமது குரலின் சத்தத்தை உருவாக்குவது குரல் நாண் (vocal cord). இது குரல்வளையில் (vocal cord) அமைந்திருக்கிறது. குரல்வளை நமது சுவாச அமைப்பின் ஒரு பகுதி.
இது காற்றை தொண்டையிலிருந்து நுரையீரல்களுக்கு அனுப்புகிறது. நுரையீரலில் இருந்து குரல்வளை வழியே காற்று வெளியே வரும்போது, அது குரல்வளையில் அதிர்வுகளை உண்டாக்குகிறது. இதன்மூலமே குரலின் சத்தம் உருவாகிறது.
குரல் நாண் மூன்று பகுதிகளைக் கொண்டது:
குரல் தசை (vocalis muscle)
குரல் தசைநார் (vocal ligament)
சளிப் படலம் (இதில் சுரப்பிகள் உள்ளன)
இந்தச் சளிப்படலம் தசைகளை ஈரமாக வைத்திருப்பதன் மூலம் சேதமாகாமல் காப்பாற்றுகிறது.
ஹார்மோன்கள் செய்யும் மாற்றங்கள்
மேலும், குரல்வளையில் கிட்டத்தட்ட 17 தசைகள் உள்ளன. இவை குரல்வளையின் அமைவிடம் மற்றும் இறுக்கம் ஆகியவற்றைத் தீர்மானிக்கின்றன. அதோடு, இதன்மூலம் உருவாகும் சத்தத்தையும் அவைதான் தீர்மானிக்கின்றன.
பருவமடைதலுக்கு முன், ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால் பருவமடையும்போது, ஹார்மோன்கள் தங்கள் வேலையைத் தொடங்குகின்றன.
இது குரல்வளையின் வடிவத்தை மாற்றுகிறது. ஆண்களுக்கு Adam’s Apple எனப்படும் குரல்வளைக் கூர் பெரிதாகிறது. இதனால் குரல் நாணும் பெரிதாகிறது. பருவமடைந்ததற்குப் பின் ஆண்களுக்கு இது 16 மில்லிமீட்டராகவும், பெண்களுக்கு இது 10 மில்லிமீட்டராகவும் இருக்கும்.
பெண்களைப் பொறுத்தவரை, பருவமடைந்த பிறகு அவர்களது குரல் நாண் 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை சன்னமாக இருக்கும். இதனால்தான் அவர்களது குரல் சில நேரம் கீச்சிடுகிறது.
பருவமடைந்த பிறகும் ஹார்மோன்கள் மனிதக் குரலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
சான்றாக, பெண்களின் மாதவிடாய் சுழற்சியைப் பொறுத்து அவர்களது குரலும் மாறும். கருமுட்டை வெளிப்படும் காலகட்டத்தில் அவர்களது குரலின் தன்மை மிகச் சிறந்ததாக இருக்கும். இதற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில், சுரப்பிகள் அதிகபட்சமான சளியை உருவக்கும். இது குரல் நாணைச் சிறப்பாக இயங்க வைக்கும்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களின் குரலில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதில்லை என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஏனெனில் அவர்களது கருமுட்டை வெளிப்படாமல் தடுக்கப்படுகிறது.
அதேபோல், மாதவிடாய் சுழற்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள் குரல் நாண்களை கெட்டியாக்குகின்றன. இதனால் அவர்களது குரல்கள் அப்போது சிறப்பானவையாக இருக்காது.
இதனால் 1960களில் இங்கிலாந்தில் ஓபரா பாடகிகளுக்கு இந்த நாட்களின்போது விடுமுறை அளிக்கப்பட்டது.
பெண்களின் குரன் நாண்கள் சன்னமாக இருப்பதால், அவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் அவை சேதமாகும் வாய்ப்பும் உள்ளது.
வாழ்க்கை முறை குரல்வளையை எப்படிப் பாதிக்கிறது?
அதேபோல் வயதாக ஆக, நுரையீரல் தசைகளில் இயக்கமும் குறைகிறது. இது சத்தம் உண்டாவதற்கான காற்றை வெளியிடும் திறனைக் குறைக்கிறது. அதேபோல் குரல்வளையில் சளிப்படலத்தை உருவாக்கும் சுரப்பிகளின் எண்ணிக்கையும் குறைகின்றன.
பொதுவாக அனைவருக்கும் குரல்வளை ஒரே வேகத்தில் மூப்படைந்தாலும், வாழ்க்கை முறையும் குரல்வளையை சேதப்படுத்தக்கூடும்.
எடுத்துக்காட்டாக, புகைப்பிடித்தல் குரல்வளைப் பகுதியை வீங்கச் செய்யலாம், அதிக சளி சுரப்பை ஏற்படுத்தலாம், அல்லது சளிப்படலத்தை காய்ந்துபோகச் செய்யலாம். மதுவும் இதேபொன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
மற்றுமொரு வாழ்க்கை முறை, குரல்வளையை அதிகமாகப் பயன்படுத்துவது. குறிப்பாக, பாடகர்கள், ஆசிரியர்கள் போலத் தங்கள் குரலை அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த ஆபத்து உள்ளது.
இது குரல் நாண்களில் அதிக திரவம் கோர்த்து வீங்கிப் போகக்கூடிய, Reinke's oedema எனப்படும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது குரலின் சுருதியைக் குறைத்துவிடும். இந்த நிலை தீவிரமடைந்தால், அறுவை சிகிச்சை தேவைப்படும். சாதாரண சந்தர்ப்பங்களில் புகை மற்றும் மதுவைத் தவிர்த்தல், மற்றும் பேச்சுப் பயிற்சிகள் கைகொடுக்கும்.
நம்மால், வயதாவதால் குரல்வளைக்கு ஏற்படும் மாற்றங்களைத் தடுக்க முடியாவிட்டாலும், அதைச் சரியாகவும் தொடர்ச்சியாகவும் பயன்படுத்துவதன் மூலம் நமது குரலின் தன்மை கெடாமல் பாதுகாக்கலாம்.
மற்றவர்களைக் காட்டிலும் பல தொழில்முறைப் பாடகர்களின் குரலில் அதிகளவு மாற்றம் ஏற்படாததற்கு இதுவே காரணம்.
தினமும் குறித்த கால அளவுக்குப் பாடுவதும், புத்தகங்களை உரக்க வாசித்தலும் குரல் நாண்களுக்குப் போதுமான அளவு பயிற்சியைக் கொடுக்கும், அது மூப்பினால் சேதமடைவதையும் குறைக்கும்.
அதேபோல், உடலில் சரியான அளவு நீர்ச்சத்து இருப்பதை உறுதிப்படுத்துவதும், புகை மற்றும் மதுப்பழக்கத்தைக் குறைத்துக் கொள்வதும் குரல்வளை சேதமடைவதைக் குறைக்கும்.
உங்கள் உடலின் பிற பாகங்களைக் கவனித்துக்கொள்வதைப் போல, குரல்வளையைக் கவனித்துக்கொள்வதும் முக்கியமானது.
(இந்தக்
கட்டுரையிலிருக்கும்
அறிவியல்
மற்றும்
மருத்துவம்
சார்ந்த
தகவல்கள்,
லான்காஸ்டர்
பல்கலைக்கழகத்தில்
மருத்துவ
உடற்கூறியல்
பள்ளியின்
இயக்குநராக
இருக்கும்
ஆடம்
டெய்லர்
எழுதிய
கட்டுரையிலிருந்து
எடுத்தாளப்
பெற்றுள்ளது.)
நன்றி:பிபிசி தமிழ்:----
0 comments:
Post a Comment