பழகத் தெரிய வேணும் – 82

கவலையை விட்டுத்தள்ளுங்கள்!

நீங்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்களே! வாழ்க்கை உங்களை நல்லவிதமாக நடத்தியிருக்கவேண்டும்!” என்று அனுமானித்தாள் என்னுடன் அதிகம் பழகியிருக்காத ஒருத்தி.

 

அதற்கும் மெல்லச் சிரித்தேன். துன்பமோ, துயரமோ அறவே இல்லாத வாழ்க்கை எங்கானும் உண்டா?

 

சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்புகளை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தால், நிம்மதி ஏது!

 

சில இல்லங்களில், மூத்த மகள் தந்தைக்கு அருமையாக இருப்பாள். இரண்டாவது பெண் அம்மாவின் செல்லமாக இருந்தாலும், தந்தை தன்னிடமும் அன்பைப் பொழியவில்லேயே என்ற குறை ஏற்படக்கூடும்.

 

தந்தை மறைந்தபின்னும், “அப்பா உன்னைத் தலையிலே வைத்துக்கொண்டு ஆடுவார்!” என்று சகோதரியிடம் வன்மம் பாராட்டுகிறவள் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறோம் என்பதை உணர்வதில்லை.

 

கடந்தகாலக் கசப்பான நிகழ்வுகளை எப்படிச் சமாளிப்பது என்று புரிந்துவிட்டால், வாழ்க்கை எளிதானதுதான் என்று புரிந்துபோகும்.

 

நம்மால் பொறுக்கமுடியாத ஒரு நினைவிலிருந்து விடுபட வேண்டுமானால், அதைப் பற்றி ஆழமாக யோசித்துத்தான் ஆகவேண்டும்அப்படிச் செய்வது எவ்வளவு வருத்தமாக இருந்தாலும். வேறு வழி கிடையாது. இல்லையேல், அதேபோன்ற அனுபவங்கள் தொடரும்.

 

::கதை::

ஒரு பெரிய குடும்பத்தில் வேண்டாத பிள்ளையாகப் பிறந்தவன் செல்வம். மூத்த அண்ணனுக்கோ, அவன் கேளாமலேயே அவனுக்குப் பல சலுகைகள் கிடைத்தன. அவன் தீய பழக்கங்களில் ஈடுபட்டு, வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டவுடன், செல்வம் உறுதிபூண்டான்: `நான் முன்னுக்கு வந்து, என்னை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுப்பேன்’.

 

ஆனால், தன் வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொண்டபோதும், அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சியோ, நிம்மதியோ கிடைக்கவில்லை.

 

தன்னையுமறியாது, தந்தையைப்போலவே தன்னைத் துச்சமாக நடத்தும் ஒருவனைச் சிறந்த நண்பன் என்று நம்பினான் செல்வம்.

 

அதன்பின், `யாரையும் நம்ப முடியவில்லை. எல்லாரும் என்னைக் காயப்படுத்துகிறார்கள்!’ என்று புலம்ப ஆரம்பித்தான்.

 

இவனிடம் பலரும் தம் குறைகளைப் பகிர்ந்துகொள்ள, அவர்களுக்கு ஆறுதலாகப் பேசுவான். அதே அன்பைத் தன்னிடமும் செலுத்த அவனுக்குத் தெரியாமல் போயிற்று.

 

கடந்தகாலத்தை நினைவுகூர்ந்தாலே வருத்தம் மிக, தன்னிரக்கம் பெருகியது. அதை நினைத்தும் பார்க்க விரும்பவில்லை.

 

அறியாவயதில் ஏதேதோ நடந்திருக்கலாம். கடந்த காலத்திலேயே நிலைத்து, நிகழ்காலத்தை மகிழ்ச்சியின்றிக் கடப்பானேன்!

 

நல்ல நண்பர்களைப்போல் புகழ்ச்சி, பரிசுப்பொருட்களுடன் கவர்ந்து, அதன்பின் உணர்வுபூர்வமாக வதைப்பவர்கள் தொடர்பு எதற்கு?

 

அப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகுவதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும் உதவி.

 

மன்னிப்பு

பிறரால் வதைக்கப்பட்டவர்களால் வெகு காலமானாலும் அவர்களை மன்னிக்கமுடியாது.

 

தாம் ஏன் வதையை அனுமதித்தோம் என்று, தம்மீது கொண்ட ஆத்திரமும் குற்ற உணர்வும்கூடத் தணியாது.

 

வதைக்கு ஆளாகிய குழந்தைகளுக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறத் தெரியாது. அவர்களை ஏதாவது வரையச்சொன்னால், மனத்திலிருப்பது சித்திரம்வழி வெளிப்படும். (உளவியல் நிபுணர்கள் இவ்வழியைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்).

 

செடிகளிடம் ஒரு பாடம்

எங்கள் வீட்டில் ஒரு மல்லிகைச் செடி புதராக வளர்ந்திருந்தது. இந்தச் செடி பூத்ததே கிடையாது. ஏனெனில் ஒரு மரத்தின் நிழல் அதன்மேல் படர்ந்திருந்தது.

 

அபூர்வமாக, ஒரே ஒரு கிளை மட்டும் மிக நீண்டிருக்க, அதில் மொட்டுகள்!

 

சூரிய வெளிச்சம் இல்லாததால் பூக்க முடியவில்லை என்று புரிந்து, அது வெளிச்சத்தை நோக்கி வளர்ந்துவிட்டது!

 

சூழ்நிலை சரியாக இல்லை என்றால், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது அதற்குத் தெரிந்திருக்கிறது!

 

இயற்கையால் துன்பம்

துன்பமோ, துயரமோ பிறர் கொடுப்பது மட்டுமில்லை. இயற்கையும் அதைச் செய்யும்.

 

::கதை::

என் மகளுடைய பள்ளிக்கூட ஆசிரியை கனகா என்னைச் சந்திக்க விரும்புவதாக அழைத்தாள். (`கண்டிப்பாக உன்னைப்பற்றிக் குறை கூறமாட்டேன்!’ என்று என் மகளிடம் வாக்குறுதி கொடுத்தபின்தான் அவளால் என்னுடன் தொடர்புகொள்ள முடிந்ததாம்!).

 

திருமணம் செய்துகொடுத்தபின்னும், தன் மகளுடன் தங்கிவிட்ட அவளுடைய தாய் இறந்து போயிருக்கிறாள். ஆனால் கனகாவால் அத்துயரத்தை ஏற்க முடியவில்லை.

 

ஒரே மகனைப் பறிகொடுத்த துக்கத்தை நான் எப்படி எதிர்கொண்டேன் என்று அறிய விரும்பினாள் அவள்.

 

பொதுவாக, எந்தத் துக்கமும் ஒன்றரை வருடத்துக்குமேல் நீடிக்காது என்று கூறுவார்கள். அது சரியல்ல.

 

துயரை மாற்ற நாம் எதையாவது முனைந்து செய்தால்தான் அது காலம் முழுவதும் நம்மை ஆட்டுவித்து, நடைப்பிணமாக ஆக்கிவிடாது காத்துக்கொள்ள முடியும்.

 

என் அம்மாவுக்கு பாயசம் என்றால் ரொம்பப் பிடிக்கும். இப்போது பண்டிகைக்குக்கூட பாயசம் பண்ண மனம் வரவில்லை,” என்றாள் கனகா. “இரண்டு பேரும் மாலை வேளையில், ஒன்றாக டீ குடிப்போம். இப்போது அழுகை அழுகையாக வருகிறது”.

 

எப்பவும்போல, இரண்டு கப் டீ போட்டு எதிரெதிரே வைத்துவிட்டு, `அம்மா! டீ!’ என்று உரக்கக் கூப்பிடுங்கள். சில தினங்களுக்குப் பின் மனம் அடங்கிவிடும்,” என்றேன். “அம்மாவின் ஃபோட்டோவில் வாய்க்கருகே ஒரு சொட்டு பாயசத்தை வைத்தால், முதலில் அழுகை வரும். ஆனால், நாளடைவில், நிம்மதி கிடைக்கும்,” என்று என் சொந்த அனுபவத்தை விளக்கினேன்.

 

உற்றவர் மறைந்தபின் துயருறும் சிலர் என்னிடம் இவ்வாறு ஆலோசனை கேட்டிருக்கிறார்கள்.

 

விபத்தில் மகனைப் பறிகொடுத்த ஒரு முதியவர், `உங்களிடம் பேசியதும், நிம்மதியாக இருந்தது,’ என்று, வெகு தூரத்திலிருந்து என்னைச் சந்திக்க வந்தார், மறுமுறை.

 

சில வருடங்களுக்குப்பின், அவர் குடும்பத்தில் இன்னொரு துக்கம் நிகழ, அயல்நாட்டிலிருந்த என்னைத் தொடர்புகொண்டார்.

 

`நான் மாறிவிட்டேன். நீங்களும் மாறலாம். ஓயாமல் அழுதுகொண்டிருக்க வேண்டியதில்லை,’ என்று நான் சொல்லாமல் சொன்னது அவ்விருவருக்கும் நம்பிக்கை அளித்துவிட்டது.

 

போதைப் பழக்கத்தில் ஈடுபட்டு, பின்பு அதிலிருந்து விடுபட்டவர்களையும், சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவிட்டுத் திரும்பித் திருந்தி வாழ்பவர்களையும் கல்விக்கூடங்களில் உரையாற்ற அழைக்கிறார்களே, ஏன்?

 

`நீங்களும் மாறலாம்என்ற நம்பிக்கையைப் பிறருக்கு ஊட்டுவதற்காகத்தான்.

 

`அப்போது எனக்குத்தான் தெரியவில்லை. பிறரும் என்னைக் காப்பாற்றத் தவறிவிட்டார்கள். ஆனால், நான் அப்படி இருக்கமாட்டேன். அவதிப்படும் பிறருக்கு ஆதரவாக இருப்பேன்!’ என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர்கள் இவர்கள்.

 

அப்போக்கால், பிறரது கவலையைப் போக்குவதுடன் தம் மனதையும் ஆற்றிக்கொள்கிறார்கள்.

 

பெருந்துயரோ, தீய பழக்கங்களோ மட்டும் மாற்றப்பட வேண்டியதில்லை.

 

மகிழ்ச்சி எங்கே?

`நமக்கு ஏன் மகிழ்ச்சியே கிடைப்பதில்லை?’ பலருக்கும் மன உளைச்சலை உண்டாக்கும் கேள்வி.

 

தமக்கு என்ன வேண்டும் என்று புரியாததால் வரும் விளைவு இது.

 

நமக்கு உகந்ததாக இல்லாவிட்டாலும், பிறரது எதிர்பார்ப்புகளை ஏற்றுச் செய்யும்போது சலிப்பாகவோ, எரிச்சலாகவோ இருக்கும். எல்லோரிடமும் நற்பெயர் வாங்கவேண்டும், பிறர் மனதை நோகடிக்கக்கூடாது என்ற எண்ணத்துடன், அக்காரியங்களைச் செய்வானேன்! எதற்காக நம்மையே கஷ்டப்படுத்திக்கொள்வது?

 

நம் நலனையும் கவனித்துக்கொள்ள வேண்டாமா?

 

எதிலும் சுயநலம்

எவருமே சிறிதும் சுயநலமின்றி, பிறருக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதில்லைஇவ்வாறு கூறினார் ஆப்ரஹாம் லிங்கனின் நண்பர் ஒருவர்.

 

மாஜி அமெரிக்க ஜனாதிபதியோ அக்கூற்றை ஏற்க மறுத்தார். “நான் பிறருக்கு நன்மை செய்வதில் என்ன சுயநலம் இருக்க முடியும்?” என்று விவாதித்தார்.

 

அப்படிச் செய்வதால் உனக்கு என்ன கிடைக்கிறது?”

 

மகிழ்ச்சிதான்!”

 

அதுவும் சுயநலம்தானே! உனக்காகத்தானே செய்கிறாய்!” என்று அவரை மடக்கினார் நண்பர்.

 

கலைஞர்களும் மனக்கவலையும்

பண்பட்ட நடிகர்களும், எழுத்தாளர்களும் தம் அனுபவங்களை செயல்மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.

 

ஒருவரை ஆட்டிப்படைக்கும் எண்ணங்களை, அவற்றால் எழும் பாதிப்பை, வெகுவாகக் குறைக்கும் வலிமை எழுத்துக்கு உண்டு.

 

நிம்மதி பெறுவதற்கு, எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்மை அலைக்கழைக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி யோசித்து, அன்றாடம் எழுதிவந்தாலே நம் மனம் புரிந்துபோகும்.

 

அநாவசியமான கவலைகளை மனதில் சுமந்து அவதிப்படுவானேன்!

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

1 comments:

  1. சிறந்த கட்டுரை தொடர்க வாழ்த்துக்கள்

    ReplyDelete