திருக்குறள்/18/- வெஃகாமை

முகவுரை-17- வரலாற்று ஆவணங்கள்

குறளைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள், மேலோலைகள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களைத் தமிழகத்தில் பரவலாகக் காணலாம். இடைக்காலத் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் பிரதான ஆட்சி நூலாகத் திருக்குறள் திகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் அருகிலுள்ள பொன்சொரிமலையில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கல்வெட்டு ஒன்றில் "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்ஙன மாளு மருள்" என்ற புலால் மறுத்தல் அதிகாரத்துக் குறட்பா காணப்படுகிறது. இது அக்காலத்து கொங்கு நாட்டு மக்கள் அகிம்சையையும் கொல்லாமையையும் தங்கள் வாழ்வியல் நெறிகளாகக் கடைபிடித்து வந்ததைக் காட்டுவதாக உள்ளது.  1617-ம் ஆண்டின் கொங்கு நாட்டு பூந்துறை நாட்டார் மேலோலை, 1798-ம் ஆண்டின் கொங்கு நாட்டுப் நாரணபுரத்து பல்லடம் அங்காள பரமேசுவரி கொடைச் செப்பேடு, நாமக்கல் மாவட்டம் கபிலக்குறிச்சிப் பகுதியில் காணப்படும் 18-ம் நூற்றாண்டின் கபிலமலைச் செப்பேடு, பழனி வீரமுடியாளர் மடத்துச் செப்பேடு, கொங்கு நாட்டு காரையூர் செப்பேடு, பழையகோட்டை ஏடு, மற்றும் சென்னை இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் காணப்படும் 1818-ம் ஆண்டின் எல்லீசன் கல்வெட்டுகள் போன்றவை திருக்குறளைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட மேலும் சில வரலாற்று ஆவணங்களாகும்.

[திருக்குறள் முகவுரை18,  அடுத்தவாரம் தொடரும்]

திருக்குறள் தொடர்கிறது

18-வெஃகாமை

 

👉👉குறள் 171:

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்.

மு. உரை:

நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

கலைஞர் உரை:

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.

English Explanation:

If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.

 

👉👉குறள் 172:

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.

 

மு. உரை:

நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

கலைஞர் உரை:

நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்.

English Explanation:

Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.

 

👉👉குறள் 173:

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

மு. உரை:

அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை:

அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

கலைஞர் உரை:

அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.

English Explanation:

Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)

 

👉👉குறள் 174:

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்.

மு. உரை:

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌.

சாலமன் பாப்பையா உரை:

ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.

கலைஞர் உரை:

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.

English Explanation:

The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute."

 

👉👉குறள் 175:

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.

மு. உரை:

யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?

சாலமன் பாப்பையா உரை:

பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?

கலைஞர் உரை:

யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?

English Explanation:

What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?

 

👉👉குறள் 176:

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்.

மு. உரை:

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:

அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

கலைஞர் உரை:

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.

English Explanation:

If he, who through desire of the virtue of kindness abides in the domestic state ie, the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.

 

👉👉குறள் 177:

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.

மு. உரை:

பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.

கலைஞர் உரை:

பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.

English Explanation:

Desire not the gain of covetousness In the enjoyment of its fruits there is no glory.

 

👉👉குறள் 178:

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.

மு. உரை:

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை:

செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

கலைஞர் உரை:

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

English Explanation:

If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.

 

👉👉குறள் 179:

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்

திறனறிந் தாங்கே திரு.

மு. உரை:

அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.

கலைஞர் உரை:

பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.

English Explanation:

Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.

 

👉👉குறள் 180:

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்

வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

மு. உரை:

விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

பின் விளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.

கலைஞர் உரை:

விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.

English Explanation:

To covet (the wealth of another) regardless of consequences will bring destruction That greatness (of mind) which covets not will give victory.


 திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....

 ✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக 


அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக  
 Theebam.com: திருக்குறள்/19/புறங்கூறாமை:

No comments:

Post a Comment