ஆற்றல் பானங்கள்(Energy Drinks) நீண்ட காலம் வாழ உதவுமா?

ஆற்றல் பானங்களில் சேர்க்கப்படும் டாரைன் அமினோ அமிலம், சில பாலூட்டிகளில் ஆயுளை நீட்டிக்கும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

 

இந்த முடிவுகள் மனிதர்களிடம் சோதிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் அது நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

டாரைன் என்பது அமினோ அமிலமாகும். இது பொதுவாக இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளில் காணப்படுகிறது. தாவரங்களில் இது அரிதானது. எனினும், பாசி, பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளில் சிறிய அளவில் காணப்படுகிறது.

 

ஆனால் இந்த துணைப் பொருள் ஏன் ஆற்றல் பானங்களில் சேர்க்கப்படுகிறது? டாரைன் குடிப்பது நன்மை பயக்குமா?

டாரைன் சில சமயங்களில் ஒரு துணைப் பொருளாகவும் விற்கப்படுகிறது, பாடி பில்டர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே இது மிகவும் பிரபலமாக உள்ளது. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சியின் போது தசை சோர்வைக் குறைக்கவும் உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

 

மற்ற அமினோ அமிலங்களைப் போல புரதத்தை உருவாக்க டாரைன் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இது பல பங்குகளை வகிக்கிறது. குறிப்பாக மத்திய நரம்பு மண்டலத்தில், நரம்பு செல்களில் கால்சியத்தின் அளவைக் கட்டுப்படுத்துகிறது, வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.

 

சொல்லப்போனால், டாரைன் விலங்குகளின் உடல் எடையில் 0.1% ஆகும்.

 

இது முதன்முதலில் 1820 களில் ஐரோப்பிய கால்நடையின் (பாஸ் டாரஸ்) பித்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. பாஸ் டாரஸில் இருந்து முதன்முதலில் பிரித்தெடுக்கப்பட்டதால் இதற்கு இப்பெயர் வந்தது.

 

சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் குழு மிக சமீபத்தில், எலி மற்றும் குரங்கிடம் (சோதனையின் போது அவை முறையே 14 மாதங்கள் மற்றும் 15 வயது இருந்தன) தினசரி டாரைன் டோஸின் விளைவுகள் குறித்து சோதித்தது.

 

ஆய்வின் முடிவில் தெரியவந்தது என்ன?

எலிகள், குரங்குகள் மற்றும் மனிதர்களின் ரத்தத்தில் உள்ள டாரைன் அளவு இயற்கையாகவே வயதாக ஆக குறைகிறது, எனவே அமினோ அமிலத்தின் கூடுதல் டோஸ் நன்மை பயக்குமா என்பதை அறிவதில் குழு ஆர்வமாக இருந்தது.

 

இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தன. டாரைனைப் பெற்ற விலங்குகள் கணிசமாக ஆரோக்கியமாகவும் இளமையாகவும் தோன்றின - அவற்றின் தசைகள், மூளை, நோயெதிர்ப்பு அமைப்புகள் மற்றும் பிற உறுப்புகள் அமினோ அமிலத்தை பெறாத விலங்குகளை விட சிறப்பாகச் செயல்படுகின்றன.

 

முக்கியமாக, டாரைன் சிகிச்சையளிக்கப்பட்ட எலிகளின் ஆயுட்காலம் 10-12% அதிகரித்துள்ளது. மேலும் குரங்குகளும் இதேபோன்ற விளைவை அனுபவித்தன. வயதான காலத்தில் கூடுதலான டாரைனை உட்கொள்வது மனிதர்களுக்கு அதே பலன்களைக் கொண்டிருந்தால், ஒது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு சமமாகும்.

 

"இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மிகவும் நல்லது என நான் நினைத்தேன்," என்று மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உடற்பயிற்சி உடலியல் மூத்த பேராசிரியரும், ஆய்வில் ஈடுபட்ட 50 இணை ஆசிரியர்களில் ஒருவருமான ஹென்னிங் வாக்கர்ஹேஜ் பிபிசியிடம் கூறினார்.

 

குளிர்பானத்துக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட ஆற்றல் பானம்

முதல் ஆற்றல் பானம் 1949 இல் "டாக்டர் எனுஃப் (Dr.Enuf)" என்ற பெயரில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. குளிர்பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றமாக எலுமிச்சை-சுண்ணாம்பு சுவை, பி வைட்டமின்கள் மற்றும் காஃபின் ஆகியவற்றுடன் ஆற்றல் பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

ஆனால் ஆற்றல் பானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகுதான் டாரைன் உள்ளே வருகிறது. ஒரு ஆஸ்திரிய மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வணிக பயணத்தின்போது தாய் பிராண்ட்டான க்ரேட்டிங் டேங் என்பதால் ஈர்க்கப்பட்டார்.

 

இந்த கார்பனேற்றப்படாத பானத்தில் டாரைன் மற்றும் மூளையில் காணப்படும் ஒரு வகை சர்க்கரையான இனோசிட்டால் உள்ளது. ஹேங் ஓவருக்கு சிகிச்சையளிப்பதற்காக இது விற்கப்பட்டது.

 

இரு ஆண்களும் இணைந்து மூல சூத்திரத்தில் மாற்றங்கள் செய்து அதில் குமிழ்களைச் சேர்த்து ரெட் புல்லை உருவாக்கினர். இதன் மூலம், நவீன கால ஆற்றல் பானம் பிறந்தது.

 

டாரைனை ஆற்றல் பானத்தில் சேர்ப்பதற்கான உண்மையான காரணம் தெளிவாக இல்லை. இன்றும் இதயம், மூளை மற்றும் தசைகளுக்கு அதன் நன்மைகளை தருகிறது என்பதை சுட்டிக்காட்டுவதைத் தாண்டி எந்த நிறுவனத்திடமும் விளக்கம் கிடையாது.

 

இருப்பினும், அதன் சாத்தியமான விளைவுகள் குறித்து சில ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ரெட் புல்லின் டாரைன் உள்ளிட்ட பொருட்களின் கலவையானது மக்களின் ஏரோபிக் மற்றும் மன செயல்திறனை மேம்படுத்துவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

 

ஆற்றல் பானங்கள் நீண்ட காலம் வாழ உதவுமா?

டாரைன் பற்றிய சமீபத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடையில் 1,000 மில்லிகிராம் இந்த பொருளைப் பெற்ற விலங்குகளில் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளுக்கான மிகப்பெரிய நன்மைகளும் காணப்பட்டன.

 

விலங்குகளின் அளவை மனித அளவுகளாக மாற்றும் முறையின் அடிப்படையில் பார்க்கும்போது சராசரி வயது வந்தவருக்கு ஒரு நாளைக்கு சுமார் 6 கிராம் தேவைப்படும்.

 

டாரைன் ஆய்வில் ஈடுபட்டுள்ள முதன்மை ஆசிரியர், மற்றவர்களை பாதிக்காத வகையில் டாரைனை எடுத்துக்கொள்கிறாரா என்பதை பிபிசிக்கு வெளிப்படுத்த விரும்பவில்லை.

 

டாரைன் சப்ளிமென்ட்ஸ் மனிதர்களுக்கு அதே நன்மைகளை அளிக்குமா என்பதும் இன்னும் நிறுவப்படவில்லை.

 

1.5 லிட்டர் ரெட் புல் அல்லது 3 லிட்டர் மான்ஸ்டர் பானத்தை நாம் பருகும்போது, அதில் உள்ள மற்ற பொருட்களை ஒரே நாளில் உட்கொள்வதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் நாம் குறிப்பிட வேண்டும்.

 

ரெட் புல்லைப் பொறுத்தவரை, இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி சர்க்கரை அளவை விட மூன்று மடங்குக்கும் (32 டீஸ்பூன்கள்) அதிகமாக கொண்டுள்ளது, மான்ஸ்டரில் இந்த அளவு இரண்டு மடங்காக உள்ளது.

 

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, பெரியவர்கள் தங்கள் தினசரி கலோரிகளில் 10% க்கு மிகையாக சர்க்கரையில் இருந்து எடுத்துகொள்ளக் கூடாது.

 

எனவே, ஆற்றல் பானங்களை அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல. என்னதான் டாரைன் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவது சாத்தியம் என்றாலும், இது தொடர்பாக இன்னும் ஆராய்ச்சிகள் தேவை.

 

::ஜாரியா கோர்வெட்//பிபிசி செய்தியாளர்

No comments:

Post a Comment