"கனவே கலையாதே"( சிறு கதை)

கனவும், இயல்பும் ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் வேறுபட்டது, என்றாலும் சிலவேளை இயல்பாக நடக்கும் ஒரு சம்பவத்தை, இது கனவா என கருதும் அளவிற்கு ஆச்சரியப்படுத்தும் வலிமை கனவுக்கு உண்டு. அதேபோல கனவு கண்டு கொண்டிருப்பவர் இது இயல்பாகவே நடக்குமா என அவரை சிந்திக்க தூண்டிவிட்டு போகும் வல்லமையும் கனவுக்கு நிறையவே உண்டு. எனக்கு இரண்டுமே நடந்து உள்ளது அதனால்தானோ என்னவோ 'உங்களுக்கென ஒரு கனவு இருந்தால், அதைப் கெட்டியாகப் பிடிக்க வேண்டும், ஒருபோதும் விடக்கூடாது' என்று என் பொன்மொழியை மாற்றி உள்ளேன்  இல்லை "கனவே கலையாதே" என்று வேண்டுகிறேன்!

 

நான் இப்ப திருமதி ஜெயா தில்லை, ஆனால் நான் வேம்படி மகளிர் கல்லூரியில் உயர் வகுப்பு படிக்கும் காலத்தில், நான் நல்ல அளவான தோற்றத்துடனும் காண்பவர்கள் கண்ணுக்கு 'மயிர் வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும், உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும்' என கொஞ்சம் மிதமிஞ்சிய அழகாக இருந்ததாலோ என்னவோ, என்னை விமர்சிப்பதற்கு , தெரிஞ்சும் தெரியாதது போல் உரசி செல்வதற்கும் வக்கிரம் பிடித்த ஒரு மனித மிருக கூட்டங்கள் காத்திருந்து பின் தொடரும். நான் இதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. என்னை பொறுத்தவரையில் ஒருவருக்கு பொதுவாக அனைத்தும் அழகாய் இருக்கவேண்டும், அழகாய் தெரிய வேண்டும் நினைக்க வைப்பது அவரின் இளமை உணர்வுகளே, அப்படியே அனைத்தும் நலமாய் இருக்கவேண்டும் என நினைக்க வைப்பது முதுமை உணர்வுகளே!. ஆமாம் உடையின் அழகை ரசிப்பது இளமை. உள்ளத்தின் அழகை ரசிப்பது முதுமை!! இதில் நான் விதிவிலக்கு அல்ல.  அதேபோல அவர்களும் விதிவிலக்கும் அல்ல, ஆனால் அவர்கள் தங்கள் உணர்வை மதிப்போடு, மனிதத்தன்மையுடன் வெளிப்படுத்த வேண்டும் , அதில் தான் அவர்களின் பெருமை நிலைத்திருக்கும்.

 

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணப் பெண்பிள்ளைகளின் வசதிக்காக 1838 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் என் பாடசாலை. இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகளையும் நூறு அல்லது சற்றுக் கூடிய தொகை ஆசிரியர்களையும் கொண்டு, 'சரியானதை துணிந்து செய்!' என்ற குறிக்கோளைக் தன்னகத்தே கொண்டது அது. அதனால் தானோ என்னவோ, எனக்கும் அந்த துணிவு என் இரத்தத்தில் கலந்து விட்டது. எனவே தான் நான் இந்த வம்பு கூட்டங்களை கண்டு பயப்படுவதே இல்லை. எனினும் என் மனதில் ஒரு சலசலப்பு உண்டு. அது சிலவேளை இரவில் கனவாக வருவதும் உண்டு.

 

எனது அந்த கனவுகளுக்கு பூட்டு இல்லை என்றாலும் யாரும்  உள் நுழைந்து என்னை உருகுலைக்க முடியாது! என் கனவுகளில் நானே இளவரசி! வண்ணாத்திப் பூச்சியாய் வண்ண வண்ண சிறகுகளுடன் மகிழ்வாக எங்கும் பறந்து திரிவேன். அங்கே காடையர்கள் கிடையாது! என்னைப் பிடித்து முகர்ந்து [மோந்து] பார்த்து நசுக்கி சாக்கடிக்க. மான் போல் துள்ளி குதித்தாலும் மயில் போல் தோகை விரித்தாலும் இடை மறிப்பதற்கு ஒருவரும் இல்லை. நான் உண்மையில் அந்தக் கனவுகளில் நீந்தி சந்தோசமாக விளையாடினேன்.

 

என் கூந்தல் கட்டையாக, சிறு நீளமே எனினும், சிக்கின்றி அந்த சீரான கொண்டையில் மல்லிப்பூ வைத்து வீதியில் நடந்தேன். அப்பொழுது தான் நான் அவனைப் பார்த்தேன். அவன் யார், எனக்கு சரியாக தெரியாது? காக்கி காற் சட்டையுடன் வெள்ளை மேல் சட்டையுடன் மிக எளிமையாக என் எதிரே நடந்துவந்தான். நான் 'கோல முகமும்

குறுநகையும் குளிர் நிலவென நீலவிழியும் பிறை நுதலும்' விளங்கிடும் எழில் கொண்டு இருந்தாலும், அவன் என்னை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. எனக்கு ஒரே அதிசயம். நான் என் இயல்பான நாணத்தை தூக்கி எறிந்துவிட்டு அவனை பார்த்தேன். உறுதியைக்காட்டும் உடலமைப்பு, முறுக்கேறிய மீசை, அகன்ற நெற்றி; ஆழ்ந்த கூரிய கண்கள்; எடுப்பான மூக்கு, அரிதாக புன்னகைக்கும் இறுகிய உதடுகள், ... அப்போதே. அவனுடைய  கம்பீரத் தோற்றம் என் நெஞ்சில் நிறைந்து விட்டது.  போதிய உயரம் இல்லாவிட்டாலும் அகன்றமார்பும் திரண்ட தோள்களும் அவனுடைய உருவத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அதில் என்ன வேடிக்கை என்றால், எனக்கு பின்னே தொடரும் அந்தக் கூட்டம், இவனைக் கண்டதும் எப்படி ஓடி மறைந்ததோ எனக்கு தெரியவில்லை? அது மேலும் அவனை அணுகவேண்டும் கதைக்கவேண்டும் என என் நெஞ்சம் எனோ ஏங்கியது. நான் ஹலோ என அவனை நோக்கி அழைக்க, என் அம்மா 'பிள்ளை நேரமாச்சு பள்ளிக்கு' என அதட்ட, அவன் மறைந்து போனான். இப்ப என்னைக் யாரும் கேட்டால், 'கனவுகள் இல்லையேல் வாழ்வு இனிமை ஆகாது' என்பேன்!

 

நான் அன்று இரவு மீண்டும் அவன் யார் என்ற எண்ணம் மனதில் ஊஞ்சலாட , இரவு சாப்பாட்டின் பின் நம்பிக்கையோடு உறங்கினேன். என் மனம் இப்ப தெளிந்த நீரோடைப் போல் சலசலத்துக்கொண்டு இருந்தது. புதிய கனவுலகில் நான் மீண்டும் நீந்தினேன், ஆனால் என்ன வியப்பு, நேற்றைய கனவு கலையவில்லை, அவனே மீண்டும் வந்தான்!

அதே கண் அதே பார்வை, ஆனால் சிறு வித்தியாசம், அவன் புன்னகை வீசிடும் கார்முகில் போல கொஞ்சம் சிரிக்கிறான். அது என்னுள் மறைந்து இருந்த அச்சம், மடம், நாணத்தை நீக்கிவிடுகிறது. சரியானதை துணிந்து செய் என்ற என் பாடசாலையின் அறிவுறுத்தல் முன்னுக்கு வர, 'நீ யார், ஏன் என்னை கவருகிறாய்?' கொஞ்சம் உரக்கவே கேட்டுவிட்டேன். அம்மா விழுந்தடித்து வந்து, 'சும்மா கனவுகளை கண்டு குழம்பாதே' , இதற்குத்தான் அந்தந்த வயதில் கல்யாணம் செய்யவேண்டும், வீண் கனவுகள் வந்து, மனதில் வேதனையை கொடுக்காது, உன்னுடைய அப்பா கேட்டால் தானே, எத்தனை தடவை அவருக்கு சொல்லிவிட்டேன் என்று ஒரு புலம்பல் வேறு!

 

நான் உங்களுக்கு இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன், என் அப்பா ஒரு பண்டிதர், புலவர், மகாவித்தியாலயம் ஒன்றின் அதிபர், அம்மா ஒரு ஆசிரியை. என்றாலும் என் அந்த மனம் கொண்ட கனவை, என் விழி காணும் நாளுக்காய் ஒவ்வொருநாளும் என் பயணம் தொடர்ந்தது. அதில் மாற்றம் இல்லை. 'கலையாத கனவு அது அவன் நினைவு, மண் மீது நான் இருந்தும், கனவில் அவனை தேடுகிறேன், அவன் முகம் மீண்டும் மீண்டும் நான் காண தவிக்கிறேன்,  என் கனவில் அவன்  நீயிருந்தால் நேரம் போவது தெரியாதே' என என்பாடு போய்விட்டது!

 

திடீரென ஒரு நாள் இரவு, என அம்மா, அப்பா இருவரும் ஒன்றாக கூப்பிட்டு நாளை மாலை என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள் என கூறி, புது உடைகளும் தந்து, ஆலோசனையும் கூறி நித்திரைக்கு போனார்கள். அப்ப தான் எனக்கு முதல் முதல் கவலை ஒன்று மனதில் தானாக மூண்டது. என கனவு? அவன் நினைவு ? எல்லாம் மனதை அரிக்கத் தொடங்கின.  'கனவே கலையாதே', அது தான் என் வாழ்வும் இருப்புமாகிவிட்டதே!  நான் மெல்ல அம்மா, அப்பாவின் கதவை தட்டினேன். 'என்னால் இப்ப சடுதியாக மனம் முடிக்கும் நிலையில் இல்லை அப்பா, கொஞ்சம் பிந்தி போடுங்கள் அம்மா, எனக்கு இன்னும் வயது இருக்கு' என்று சொன்னேன். என் நினைவெல்லாம் என் கனவு இன்னும் கொஞ்ச மாதங்களுக்காவது கலையாத கனவாக தொடரவேண்டும் என்பதே! என் அம்மா உடனே 'அதெல்லாம் ஒன்றும் இல்லை, பெண் பார்க்க மட்டும் தான் வருகிறார்கள்' என்றதும் அப்பா 'கவலைப்படாதே, உனக்கு பிடித்தால் மட்டுமே மேற்கொண்டு எல்லாம் நடக்கும், திருமண நாளை கூட, உன் விருப்பம் படி  ஒன்று இரண்டு ஆண்டுக்கு பிறகு வைக்கலாம், அதில் பிரச்சனை இல்லை, பையனுக்கும் பெரிய வயது ஒன்றும் இல்லை, உன்னைவிட இரண்டு மூன்று வயது தான் கூட'  என்று ஆறுதல் வார்த்தையாக கூறினார்.

 

அம்மாவும் அப்பாவும் அரை நேரத்துடன் இன்று வேலையால் வந்து விட்டார்கள். பெண் பார்க்க வருபவர்களுக்கு கொடுப்பதற்கு சில பலகாரங்கள் அம்மா செய்ய தொடங்கினார். அப்பா முன் வளவு, நீண்ட பொது அறை [Hall] ... இப்படி கொஞ்சம் துப்பரவு செய்யத் தொடங்கினார், என் கடைசி தங்கையும், தம்பியும் இன்னும் பாடசாலையால் வரவில்லை, மற்ற தங்கை கொழும்பு சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டும் அண்ணா இலங்கை கொழும்பு விமானத் தளத்தில் வேலை செய்து கொண்டும் இருந்தனர், இருவரையும் இதற்கு கூப்பிடவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,  என் எண்ணம் எல்லாம் அந்த கனவு, அவன் கலையக் கூடாது என்பதே! எனோ என் மனது அதை விரும்புகிறது. ஆனால் எனக்கு காரணம் தெரியாது.

 

நேரம் ஐந்து பத்து இருக்கும், ஒரு சிறு கூட்டம் எமது முன் வாசல் திறந்து உள்ளை நுழையும் சத்தம் கேட்டது. எமது வீடு, ஆத்திசூடி வீதி, கந்தர்மடத்தில் அமைந்து இருந்தது. என்றாலும் என்னை முன்னுக்கு வரவோ, எட்டிப் பார்க்கவோ அப்பா விடவில்லை, இன்னும் கொஞ்சம் முகஒப்பனை, உடை ஒப்பனை எனக்கு பக்கத்து வீட்டு மாமி செய்துகொண்டு இருந்தார். அப்பா அம்மா அவர்களை வரவேற்கும் சத்தங்களும் மணமகனாகப் போகும் பையனின் வீட்டினரின் சத்தங்களும் கேட்டன. என்றாலும் அவனின் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை? கொஞ்ச நேரம் பெரியவர்கள் தங்களுக்குள் கலந்தாலோசிப்பது போல இருந்தது. அதன் பின் சிரிப்புகளுக்கிடையில் அவனின் குரல் கேட்டது. அந்தக்குரல் எங்கேயோ கேட்டமாதிரி இருந்துது. சரியாக ஞாபகம் வரவில்லை. ஆனால் அது எனக்கு பிடித்து இருந்தது.

 

அவர்கள் வந்து ஒரு இருபது நிமிடத்தின் பின், என்னை அவர்களுக்கு முன் அழைத்துக்கொண்டு போக அம்மா என் அறைக்கு வந்தார், எனக்கு எனோ இதில் மனம் நாடவில்லை. 'என்னைப் பிடிக்கவில்லை' என்று ஏதாவது காரணம் சொல்லி தட்டிக்கழிக்க வேண்டும் என்ற ஒரு நம்பிக்கையுடன் அம்மாவுடன் என் அறையில் இருந்து வெளியேவந்து அவர்களுக்கு வணக்கம் கூறி அமரும் பொழுதுதான், அவனை நேருக்கு நேர் பார்த்தேன். அதே என் கனவில் வந்தவன்!  

 

என்னால் நம்பமுடியவில்லை, அதே முகம், அதே மீசை, அதே பார்வை, அதே புன்னகை, என்னை தூக்கிவாரி போட்டது. இவ்வளவு நேரமும் அவன் விரும்பக் கூடாது அல்லது தள்ளிப் போடவேண்டும் என்று கவலைப் பட்டுக்கொண்டு இருந்த நான், இப்ப அவன் விரும்ப வேண்டும், விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என என் மனம் ஏங்க தொடங்கிவிட்டது, நான் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன்!, 'போய் எல்லோருக்கும் பலகாரமும் காபியும் தங்கச்சியுடன் எடுத்துவந்து கொடு' என்று சொல்லி இருக்காவிட்டால், நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது! நல்ல காலம் அம்மா என்னை அதிர்ச்சியில் இருந்து மீட்டது!  கனவில் வந்தவன் இன்று இயல்பாகவே என முன்னால் நிற்கிறான், அதுவும் என்னை பெண்பார்க்க. இனி என்றுமே என் கனவு கலையப் போவதில்லை!. நான் மிகவும் மகிழ்ச்சியாக அவனின் பெற்றோரிடமும் அவனின் அக்காவுடனும், இடைக்கிடை அவனுடனும் கொஞ்ச நேரம் அம்மா, அப்பாவுடன் சேர்ந்து கதைத்தேன். பிறகு நான் என் அறைக்கு போய்விட்டேன். என்றாலும் அம்மா அப்பா தொடர்ந்து கதைப்பது காதில் கேட்டது.

 

'தம்பிக்கும் பிடிச்சுக்கொண்டது' அவனின் அக்கா கூறுவது கேட்டது. உடனே அம்மா 'அது மகிழ்ச்சியான செய்தி, மகளிடமும் கேட்டுச் சொல்கிறேன், ஆனால் மகள் ஒன்று இரண்டு வருடமாவது பொறுத்து செய்ய விருப்பம், வயதும் இருவருக்கும் இருக்குதுதானே' என்று கூறியது தான் இப்ப என்னை தூக்கிவாரி போட்டது! ஏன் தான் அப்படி முன்பு சொன்னேனோ என நான் என்னையே திட்டினேன். எனக்கு இப்ப என்னில் சரியான கோபம். அவனுடன் இப்பவே வாழவேண்டும் என என் மனது வெட்கம் இல்லாமல் பேச தொடங்கிவிட்டது.  அப்பொழுது அம்மா, அப்பா இருவரும் வந்து உனக்கும் சம்மதமா என்று கேட்டனர். நான் ஒருவாறு என்னை சமாளித்துக்கொண்டு புன்சிரிப்பாலேயே மறுமொழி கொடுத்தேன். அதன் பின் உனக்கு விருப்பம் என்றால் தனிய, அவனுடன் போய் கதை என அனுமதி தந்தனர். நாம் இருவரும்  பின்வளவில் வாழை மரங்களுக்கிடையில் இருந்த வாங்கில் அருகருகே அமர்ந்து பேச தொடங்கினோம். எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை, அவன் தன்னைப் பற்றி எல்லாம் சொன்னான். நான் கேட்டுக்கொண்டே இருந்தேன், என்னைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை தவிர, நான் வேறு ஒன்றும் பேசவில்லை. எனக்கு இன்னும் கல்யாணம் பிந்திப் போகப்போகுதே என்ற கவலை மறையவில்லை. அவனையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அது எங்கே அவனுக்கு தெரியப் போகுது. ஆனால் கலையாத கனவாக நனவிலும் அது தொடரும் என்பது மட்டும் இப்ப நிச்சியம்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]


0 comments:

Post a Comment