பகலில் சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு நல்லது

 - புதிய ஆய்வில் தகவல்

லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கமாக அவ்வப்போது சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு மிகவும் நல்லது என்றும், அதனால் மூளை சுருங்குவதை நீண்ட காலத்துக்கு தடுக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது.

 

இது போல் தூங்குபவர்களின் மூளை வழக்கமாக இருப்பதைவிட 15 கன சென்டி மீட்டர் பெரிதாக இருப்பதாகவும், இதனால் அவர்களின் வயது 3 முதல் 6 ஆண்டுகள் குறைவாகத் தோன்றுவதாகவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இருப்பினும், இது போல் தூங்கும் போது, அது அரைமணிநேரத்துக்குக் குறைவான தூக்கமாக இருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

 

ஆனால், பெரும்பாலும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு பகல் நேரத்தில் தூங்கும் வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. நடைமுறையில் பெரும்பாலான பணிச்சூழல்கள், பணியாளர்கள் விரும்பும் வகையில் இருப்பதில்லை என்பதே இதற்குக் காரணமாக இருக்கிறது.

 

"இப்படி பகல் நேரத்தில் தூங்கும் ஒவ்வொருவருக்கும் சில நன்மைகள் இருக்கின்றன என்பதையே நாங்கள் விளக்க முயல்கிறோம்," என டாக்டர் விக்டோரியா கார்ஃபீல்ட் என்னிடம் தெரிவித்தார்.

 

இந்த தகவல்கள் "உண்மையில் புதிதாகவும், ஆர்வத்தைத் தூண்டும் வகையில்" இருப்பதாக அவர் கூறினார்.

 

நாம் குழந்தைகளாக இருக்கும் போது அடிக்கடி இப்படி தூங்குவது ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம் என ஏற்கெனவே நமக்குத் தெரியும்.

 

ஆனால் நாம் பெரியவர்களாகும் போது, இப்படி அடிக்கடி தூங்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. பணி ஓய்வுக்குப் பின்னர் கூட தூக்கத்துக்கு நேரம் கிடைப்பதில்லை.

 

65 வயதைக் கடந்த 27 சதவிகிதம் பேர் மட்டுமே பகலில் தூங்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

உடல் எடை குறைப்புக்காக உடற்பயிற்சி செய்ய பரிந்துரைப்பதை விட, தூங்குவது குறித்து ஆலோசனை அளிப்பது "மிகவும் எளிதானது" என டாக்டர் கார்ஃபீல்ட் கூறுகிறார்.

 

இயற்கையாகவே வயதாகும் போது மூளை சிறிதாகிக் கொண்டே போகிறது.

 

ஆனால் அல்ஜீமர் போன்ற நோய்களை தூக்கம் குறைக்குமா என்பதைக் கண்டுபிடிக்க இன்னும் கூடுதலாக ஆராய்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.

 

மனநலப் பிரச்சினைகளில் இருந்து ஒருவர் தப்பவேண்டும் என்றால் அவருக்கு மூளையின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

 

தூக்கம் குறைவாக இருந்தால் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

 

போதுமான தூக்கமின்மை என்பது நாளடைவில் மூளையை கடுமையாகப் பாதிக்கிறது என்றும், அது மூளை அழர்ச்சியை ஏற்படுத்தி மூளையில் உள்ள உயிரணுக்களுக்கு இடையே நிலவும் தொடர்பை வெகுவாக பாதிக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

"இப்படி, சரியான தூக்கம் என்பது மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பில் இருந்து ஒருவரைப் பாதுகாக்கும் என்பது மட்டுமின்றி, போதுமான தூக்கம் கிடைக்காமல் தவிப்பவர்கள் சிறிது நேரம் தூங்குவதால் அதை ஈடுசெய்யமுடியும்," என ஆராய்ச்சியாளர் வேலன்டினா பாஸ் கூறினார்.

 

இருப்பினும், பணியிடத்தில் தூங்குவதற்கு வசதியான இடத்தைத் தேடுவதை விட வேறு வழிகளைப் பயன்படுத்துவதே சரியான செயலாக இருக்கும் என்கிறார் டாக்டர் கார்ஃபீல்ட்.

 

"என்னைப் பொறுத்தளவில், தூங்குவதற்கு 30 நிமிடங்கள் எனக்குக் கிடைத்தால், அந்த நேரத்தை உடற்பயிற்சியில் ஈடுபடவே பயன்படுத்துவேன். அந்த நேரத்தில் தூங்குவதற்கு எனது அம்மாவுக்கு வேண்டுமானால் அறிவுரை வழங்குவேன்."

 

தூக்கத்தினால் ஏற்படும் நன்மைகளை எப்படிக் கண்டுபிடிப்பது?

சிறிது நேரம் தூங்கும் வழக்கத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது ஒரு சவால் நிறைந்த வேலை.

 

தூங்குவது உடல்நலத்தை மேம்படுத்தலாம், அதே நேரம் நீங்கள் தூங்கவேண்டிய தேவை ஏற்படும் போது அது உங்களை சோர்வடையச் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

 

அதனால், தூங்குவது உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது என்பதை நிரூபிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு யுக்தியைப் பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

 

நாம் பிறக்கும் போதே பல்வேறு தரவுகளுடன் நமது உடலில் இருக்கும் டிஎன்ஏ குறித்த ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டனர்.

 

நாம் அடிக்கடி பகலில் தூங்கும் நபர்களா அல்லது எப்போதும் விழிப்புடன் இருக்கும் நபர்களா என்பதை டிஎன்ஏவில் உள்ள 97 சிறிய தகவல்கள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே கண்டுபிடித்துள்ளனர்.

 

இதனால், 40 முதல் 69 வயதுக்குள் இருக்கும் 37,000 பேரின் தகவல்களை எடுத்து அதன் மூலம் அதிகம் தூங்குபவர்கள் மற்றும் தூங்காதவர்கள் குறித்த ஆய்வுகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

 

இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட உண்மைகள், ஆரோக்கியமான தூக்கம் குறித்த ஒரு அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் பார்த்தால், பகலில் தூங்குபவர்களின் மூளை 15 கன சென்டி மீட்டர் பெரிதாக இருப்பதாகவும், அவர்கள் 2.6 முதல் 6.5 ஆண்டுகள் வரை இளமையான தோற்றத்துடன் இருந்ததும் தெரியவந்தது. இந்த ஆராய்ச்சியின் போது, மூளையின் மொத்த அளவு 1,480 கன சென்டி மீட்டராக இருந்தது.

 

"நான் வார இறுதி நாட்களில் சிறிதளவு தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். தற்போதைய கண்டுபிடிப்பின் படி, சோம்பேறித் தனம் காரணமாகவே நான் தூங்குகிறேன் என்ற எண்ணம் ஏற்படக்கூடாது என்பதையும், அது என்னுடைய மூளையைப் பாதுகாக்கும் என்றே நான் கருதவேண்டும் என்றும் உணர்ந்துகொண்டேன்," என எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியரும், பிரிட்டனில் செயல்படும் நரம்பியல் அறிவியல் அமைப்பின் (British Neuroscience Association) தலைவருமான டாரா ஸ்பைர்ஸ்- ஜோன்ஸ் என்னிடம் தெரிவித்தார்.

 

பகலில் தூங்குவதால் மூளை பெரிதாகிறது என்ற கண்டுபிடிப்பும், சிறிதளவே என்றாலும், அது மிகவும் முக்கியமானது என்ற உண்மையும் எனக்கு பெரிதும் ஆர்வமூட்டும் தகவல்களாக இருந்தன என்கிறார் அவர்.

 

இருப்பினும் பகலில் அதிக நேரம் தூங்குவது குறித்து இந்த குழுவினர் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால், அரைமணி நேரத்துக்கு மட்டுமே தூங்கவேண்டும் என்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு வலியுறுத்தியுள்ளது.

 

:நன்றி பி பி சி தமிழ்

0 comments:

Post a Comment