பாட்டி வடை சுட்ட நவீன கதை:

சொல்லப்பட்ட  கதை (-ஒரு மாற்றம் தேவை.)

 


தமிழ்க்  குழந்தைகளுக்குக்  காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்த பாட்டி வடை சுட்ட கதை எல்லோரும் அறிந்ததே. இந்தக் கதையைக் குழந்தைகளுக்கு நீதியைப் போதிப்பதற்காகச் சொல்லப்பட்டது. ஆனால், மறைமுகமாகச் சிறுவர்களுக்குச் சில ஒழுக்கமற்ற விடயங்களை அல்லவா செய்யச் சொல்லித் தூண்டுகின்றது!

 

அந்தக் கதை:

 

ஓர் ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையைத் திருடிக்கொண்டு பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது. அந்த வழியாக வந்த நரி, வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது. காக்காவைப் பார்த்து, "காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு" என்றது. காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று கரையவே  வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி வடையைக் கவ்வி எடுத்துக்கொண்டு ஓடிப் போனது.

 

தவறுகள்?

முதலில், 'பாட்டி' என்னும் மரியாதைக்கு உரிய பெரியவரை 'அவள்' என்று குறிப்பிட்டது.

 

இரண்டாவது, உழைக்காமல், பிறர் பொருளை  களவெடுத்து உண்பது என்பது முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கின்றது.

 

கடைசியாக, தந்திரத்தால் ஏமாற்றி வெற்றி அடையலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

 

இந்தக் கதை எப்படி இருந்திருக்க வேண்டும் என்றால் ...

 

ஓர் ஊரிலே ஒரு பாட்டி இருந்தார். அவர் வடை சுட்டு விற்று வாழ்ந்து வந்தார்.

 

ஒரு நாள் அங்கு பறந்து வந்த காகம் பாட்டியிடம் ஒரு வடை தருமாறு கேட்டது. அதற்குப் பாட்டி, '"உழைப்பில்லாமல் ஊதியம் ஒருபோது கிடைக்க மாட்டாது. வடை வேண்டுமென்றால் நீ காட்டுக்குள் சென்று சில விறகு சுள்ளிகளை எடுத்துக்கொண்டு வா; அப்பொழுது தருகிறேன்" என்றார். காகமும் அவ்வாறே செய்து ஒரு வடையைக் கூலியாகப் பெற்றுக்கொண்டது.

 

அப்புறம் அது அப்பால் சென்று 'கா.. கா..' என்று கரைந்து தன் இனத்தவர்களை அழைத்து அவைகளுடன் பகிர்ந்து கொண்டது. தனது பங்கு வடையை எடுத்துக்கொண்டு போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது.

 

அந்த வழியாக வந்த நரி, வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது.

 

காக்காவைப் பார்த்து "காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு" என்றது. காகம் வடையைத் தனது காலில் வைத்தபடி பாட்டுப் பாடியது. காகம் ஏமாறவில்லை.

 

நரி மீண்டும் கேட்டது, "நீ அழகாகப் பாட்டுப் பாடினாய் இனி ஒரு நடனம் ஆடு" என்று. காகம் மீண்டும் வடையை வாயில் வைத்துக் கொண்டு நடனம் ஆடியது.

 

நரி மீண்டும் ஏமாந்தது. நரி யோசித்துவிட்டு "நீ பாட்டும் பாடினாய். ஆடியும் காட்டினாய், அற்புதம் .இனி ஆடலுடன் பாடலும் பாடி ஒரு நாடகம் நடி பார்க்கலாம்" என்று கேட்டது.

 

காகம் மீண்டும் வடையைக் காலில் வைத்துக் கொண்டு "நான் பாடினேன் ஆடினேன். நாடகம் நடிப்பதற்கு சக்தி வேண்டும் இந்த வடையைச் சாப்பிட்ட பின்னர் நடித்துக் காட்டுகிறேன் நண்பனே" என்றது.

 

நரி மீண்டும் ஏமாந்து போனது.

 

எப்படி? எவ்வளவு நற்குணச் செயல்கள் இக்கதைமூலம் போதிக்கப்பட்டிருக்கின்றது!

 

-சந்திரகாசன் , செல்வத்துரை

0 comments:

Post a Comment