பழகத் தெரிய வேணும் – 79

யார் விவேகி?

எனக்கு நிறைய நண்பர்கள்!” என்று சிலர் மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கக் கூறுவார்கள்.

 

`நண்பர்கள்’ என்று நாம் நினைப்பவர்களில் எத்தனைபேருக்கு நம்மை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது?

 

ஒன்றாக வாழும் தம்பதியருக்கே அத்தகைய புரிந்துணர்வு பெற இருபது ஆண்டுகள்கூடப் பிடிக்கலாம். ஏனெனில், தான் நினைப்பதுபோல் மற்றொருவரும் நினைக்கவேண்டும், தனக்குப் பிடித்ததைச் செய்யவேண்டும் என்று இருவரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

 

`நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்’ என்பது கைகூடாத ஆசையாக முடிந்துவிடும். பாட்டில் கேட்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?

 

ஒரே குடும்பத்தினர் ஆனாலும், சகோதர சகோதரியர்கூட குணத்தால், அனுபவத்தால் ஒன்றுபட்டிருப்பார்களா?

 

::கதை::

மூத்த மகளை அவளுடைய தாய் ஓயாமல் திட்டுவாள். தந்தை அவளிடம் பாசமாக இருந்தது அவள் பொறாமையைத் தூண்டிவிட்டதோ, இல்லை, எல்லாவற்றிற்கும் மகள் தன்னை நாடவில்லையே என்ற ஆற்றாமையோ!

 

தாயின் வசவுக்குப் பயந்த இளையவள் சாரதாவோ, அம்மாவின் நிழலாக நடந்தாள். தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டாள்.

 

பெரியவளாகப் போனதும், தன்னைச் சுந்திரமாக நடக்கவிடாமல் செய்துவிட்ட தாயின்மேல் வெறுப்பு எழுந்தது.

 

தாய் இறந்தபின், அக்காளைப் பார்த்து சாரதாவுக்கு ஆச்சரியம். “நீ எப்படி அம்மாமேல் ஆத்திரப்படாமல் இருக்கிறாய்? நீ திட்டு வாங்கும்போதெல்லாம், மாற்றாந்தாய் குழந்தையோ என்றுகூட நினைப்பேன்!”

 

அப்பா நிறைய செல்லம் கொடுத்தார். அம்மாவும் அப்படி இருந்திருந்தால், நான் கெட்டுப்போயிருப்பேனோ, என்னவோ! இப்போது, யார் என்னைத் திட்டினாலும், அவர்கள் ஏன் அப்படி நடக்கிறார்கள் என்று என் யோசனை போகிறது”.

 

ஒரே அனுபவம்தான். ஆனால், சகோதரியர் இருவரும் அதைப் புரிந்துகொள்ளும் விதம் வித்தியாசமாக இருந்தது.

 

பிறர் நம்மைக் காயப்படுத்தினாலும், அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று ஆராய்வதுதான் விவேகம். அப்போதுதான் நாமும் அதேபோல் நடந்து, அவர்களைத் துன்புறுத்தமாட்டோம். அவர்கள் நம்மிடம் காட்டாத பொறுமையையும் மென்மையையும் பதிலாக அளிக்கமுடியும்.

 

எச்சரிக்கை: கணவன்மாரிடம் வதைபடும் பெண்கள் பொறுமையாக நடந்தால், வதை அதிகரிக்கும்.

 

சிறுவயதில் ஒருவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், மனைவியையும் அதேபோல் பாடுபடுத்த வேண்டும் என்று எண்ணுவது இயற்கை. இருந்தாலும், தவறுதான்.

 

ஒரு பெண் எவ்வளவுதான் உறுதுணையாக இருந்தாலும், அவள் உதவியை நாடும் சிலர் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்துகொண்டே இருப்பது வீண்.

 

::கதை::

கணவரிடம் உடல்ரீதியாக வதைபட்ட பெண்கள் காவல்துறையினரால் அனுப்பப்பட்ட இல்லம் அது. கோலாலம்பூரில் உள்ளது. அவர்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனை, அவரவர் மத வழிபாடு எல்லா வசதிகளும் உண்டு.

 

கிட்டத்தட்ட உயிர்போகும் நிலைக்கு வந்தவர்கள் சிலர் மீண்டும் கணவருடன் போய்விடுவார்கள்.

 

அழுவறாருங்க. பாவமா இருக்கு!” இருபத்தேழு ஆண்டுகள் வதைபட்ட பெண்மணி என்னிடம் கூறியது.

 

அவள் பக்கத்தில் இருந்தவள் லேசாகச் சிரித்தபடி, முட்டியை இறுக்கி, அவள் முகத்தில் குத்துவதுபோல் பாவனை செய்தாள்.

 

இவ்வாறு, மூன்று முறை தம் வீட்டுக்கே சென்றுவிட்டபின், திரும்பவும் பாதுகாப்பான அந்த இல்லத்திற்கு வர அனுமதி கிடையாது.

 

பெண்களுக்கு இரக்க சுபாவம் இருக்கலாம். ஆனால், சற்று விவேகம் வேண்டாமா?

 

நான்தான் விவேகமானவன்

 

என்னைப்போல் இல்லாதவர்கள் முட்டாள்கள்!

 

::கதை::

ஒரு விமரிசகர் இசைத்துறையில் முன்னணியில் இருந்த பாடகியை விமரிசனம் செய்தார்: `தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு, அதிலிருந்து சற்றும் விலகமாட்டார்!” என்று, அது ஒரு பெரிய குறைபாடு என்பதுபோல் எழுதியிருந்தார்.

 

பாடகியின் முழுத்திறனையும் புரிந்துகொள்ளும் இசைஞானம் அவருக்கு இருக்கவில்லை. குறையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, பிறரைக் குறைகூறினார்.

 

இன்னொருவரிடம் குற்றம் கண்டுபிடிப்பதால் தான் மிகப் புத்திசாலி என்று நினைப்பவர்கள் பிறரிடமிருந்து விலகிவிடுகிறார்கள்.

 

இவர்களது குணம் புரிந்து, `திருத்தி’க்கொள்ள முயற்சிக்காமல் இருப்பதுதான் விவேகம்.

 

பிறரைப் புரிந்துகொள்வது அறிவு. தன்னையே புரிந்துகொள்வது விவேகம்” (சீனத் தத்துவஞானி, லாவோஜி, LAOZI).

 

எனக்குப் புரிகிறது

 

இந்த இரு வார்த்தைகளுக்கும் நல்ல சக்தி உண்டு.

 

ஒருவர் நம்மைத் தாக்கும்போது, “உங்கள் உணர்ச்சி எனக்குப் புரிகிறது,” என்று சொல்லிவைத்தால், அவர் அடங்கிவிடுவார். உண்மையில் அது நமக்குப் புரிகிறதா, இல்லையா என்பது வேறு விஷயம்.

 

உற்றவரை இழந்து தவிப்பவர்களிடம் ஆறுதலாக எல்லாரும் சொல்வார்கள்: “உங்கள் துக்கம் எனக்குப் புரிகிறது”.

 

இந்தப் போலித்தன்மையால் துக்கப்பட்டிருப்பவர்களின் மனதை ஆற்ற இயலுமா?

 

ஒருவர் தானே அனுபவித்தால்தான் துன்பமோ, துயரமோ புரியும். பிறரும் அதே நிலையில் இருக்கும்போது, உண்மையாக ஆறுதல் கூறமுடியும்.

 

இறைவன் நமக்குக் கஷ்டங்களைக் கொடுப்பது நாம் பிறரது கஷ்டங்களைப் புரிந்துகொள்வதற்குத்தான்!” (மகாத்மா காந்தி).

 

இதற்கு விதிவிலக்கானவர்களும் உண்டு.

 

ஒரு கவுன்சிலர் பிறரது மனநிலையில் தன்னைப் பொருத்திக்கொண்டு, அவர்கள் மனம்விட்டுச் சொல்வதை உள்ளபடி புரிந்துகொள்கிறார். அதாவது, அவரது எதிர்பார்ப்போ, பின்னணியோ குறுக்கிடுவதில்லை.

 

அவருக்கு அதே அனுபவம் கிடைத்திருக்காவிட்டாலும், பிறருடைய மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வெகு சிலரால்தான் இப்படி நடக்கமுடியும்.

 

அவரிடம் தம் குறைகளைச் சொல்ல வருகிறவர்கள் அவரது புரிந்துணர்வால் நெகிழ்ந்து போய்விடுகிறார்கள். `காதல்’ என்று அதை எண்ணிவிடுவார்கள்!

 

அறிவான பிராணிகள்

பேசத் தெரியாவிட்டாலும், தன்னை வளர்ப்பவர்களின் உணர்ச்சியைப் புரிந்துகொள்கின்றன,, இல்லத்தில் வளையவரும் பிராணிகள்.

 

எங்கள் வீட்டுப் பூனை, நாள் முழுவதும், என் காலைத் தடுக்காத குறையாக என்கூடவே நடக்கும். சிறு வயதிலேயே தாயிடமிருந்து பிரிந்துவிட்டதால், நான்தான் அதன் அம்மா.

 

ஒரு காலைப்பொழுதில், “குறுக்கே, குறுக்கே நடக்காதே! தூக்கக்கலக்கத்தில் நான் விழுந்து வைக்கப்போறேன். ஒரு ஓரமா ஒக்காரு!” என்று கண்டித்தேன்.

 

உடனே புரிந்துகொண்டு, சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டது. எனக்கே பரிதாபமாகிவிட்டது.

 

மறுநாள் சொல்லிவைத்தாற்போல், தானே அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டது, நான் அங்கும் இங்கும் நடக்க சௌகரியமாக.

 

எத்தனை மனிதர்களுக்குப் பிறர் உணர்ச்சிகளைப் புரிந்து நடக்கும் திறமை இருக்கிறது?

 

அடுக்கடுக்காகக் கேள்வி கேட்பது

 

சிலர் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். எதிராளியின் பதிலைக் காதில் வாங்கிக்கொள்ளுமுன், அடுத்த கேள்வி வந்துவிடும்.

 

கேள்வி கேட்பது புத்திசாலித்தனம் என்று நினைத்திருப்பார்கள்! ஒருவர் கேட்கும் கேள்விகளாலேயே அவரது அறிவுகூர்மை வெளிப்பட்டுவிடும்.

 

எத்தகைய கேள்விகள் கேட்கிறோம், அதனால் யாருக்காவது பயன் இருக்கிறதா என்பது முக்கியம்.

 

நிதானம் தவறாதே!

உங்கள் மகன் இறந்துவிட்டான் என்பது உறுதியானதும், என்ன செய்தீர்கள்?” என்று என் நெருங்கிய தோழி ஒரு கேள்வி கேட்டாள்.

 

“`அவன் கண்களைத் தானம் கொடுத்துவிடலாமா?’ என்று என் கணவரைக் கேட்டேன்,” என்று நான் பதிலளித்ததும், “ஐயோ!” என்று அதிர்ந்தாள்.

 

எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாது இருப்பவர்கள் பிறரது அச்சத்திற்கு – பாராட்டுக்கல்ல – ஆளாகிறார்கள். அதற்காக நிதானம் இழக்கலாமா?

 

வெற்றி கிடைக்க

`எனக்கு வெற்றி கிட்டுவதேயில்லை. யாரும் ஊக்குவிப்பதில்லை’. பலரின் புலம்பல் இது.

 

வெற்றியும் தோல்வியும் அவரவர் கையில்தான் இருக்கிறது.

 

நாம் நன்றாக இருக்கவேண்டும் என்பதில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை இருக்கமுடியும்?

 

பிறரது பாராட்டையோ, புகழையோ எதிர்பார்த்து ஒரு காரியம் செய்து அடையும் மகிழ்ச்சி நீடிக்காது.

 

நாம் எதை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதை நோக்கிப் பயணிப்போம், நம்மையும் அறியாமல். ஆனால், அது நம் திறமைக்குட்பட்டதாக, நியாயமான வழிகளில் இருக்கவேண்டும்.

 

::கதை::

பதின்ம வயதினனான அவன் ஒரு குண்டர் கும்பலில் இணைந்திருந்தவன்.

 

மிகுந்த பிரயாசைக்குப்பிறகு நான் அவனைப் பேட்டி கண்டேன்.

 

சிரித்தபடி, இக்கருத்தை என்னிடம் வெளியிட்டான் மூன்று கொலைகள் புரிந்திருந்த அப்பையன்: “சாகப்போகிறோம் என்று புரிந்ததும், ஒருவர் கண்ணில் தோன்றும் பயம் இருக்கிறதே, அப்போது எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடே கிடையாது!”

 

சொல்லும்போதே அவன் கண்கள் கிறங்கியிருந்தன. நான் அதிர்ந்தே போனேன்.

 

மகிழ்ச்சி தரும் காரியமெல்லாம் வெற்றி என்பதல்ல, தான் தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்று உணர்ந்தபின், அதிலிருந்து விலகும் விவேகம் அவனுக்கு இருந்தது.

 

அவனுக்குள் இருந்த முரட்டுத்தனத்தை விளையாட்டுகளின்மூலம் வெளியிடக் கற்றான்.

 

பிறரைப் பயமுறுத்துகிறவர்கள் பயந்தவர்கள் என்று புரிந்தால், பலரும் அநாவசியமாக அஞ்சத் தேவையில்லை.

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

No comments:

Post a Comment