தவறுகள் பலவிதம்
எல்லாரும்தான் தவறு செய்கிறார்கள். ஆனால், ஒரு
வித்தியாசம். ஒருசிலருக்குத்தான் அவற்றிலிருந்து கற்கும் துணிச்சல் உண்டு.
பிறரோ, தவறு செய்வது தம்
தோல்வியைக் குறிக்கும் என்று நாணுவார்கள். அதனாலேயே வெற்றி அவர்களைவிட்டு விலகிப்
போய்விடும்.
::கதை::
ஆங்கிலத்தில் சிறுகதைப்போட்டி ஒன்று நடந்தது.
“நீங்கள்
கலந்துகொள்ளவில்லையா?” என்று கேட்டாள் என் சக ஆசிரியை. (அதற்குமுன், அதேபோன்ற வேறொரு
போட்டியில் நான் பரிசு வாங்கி, எல்லா மொழி பத்திரிகைகளிலும் என் பெயர்
வெளியானது என் அந்தஸ்தை உயர்த்தியிருந்தது).
என் பதில் அலட்சியமாக வந்தது: “கலந்துகொண்டேன். பரிசு கிடைக்கவில்லை”.
பக்கத்தில் அமர்ந்திருந்தவள் விழிகள் விரிய, சற்று அதிர்ச்சி
அடைந்தாற்போல் இருந்தது, `இதையெல்லாம் ஒப்புக்கொள்வார்களா!’ என்பதுபோல்.
வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை என்ற மனப்பான்மையை
வளர்த்துக்கொண்டால்தான் அமைதி நிலைக்கும். தொடர்ந்து வெற்றிகள் கிடைக்கும்.
தவறு செய்யலாமா?
பள்ளியில் படிக்கையில், தவறான விடைக்கு, `பிழைதிருத்தம்’ என்று
மூன்று முறை சரியான பதிலை எழுத வைப்பார்கள்.
அதிலும் தவறா?
ஐந்து முறை!
செய்த தப்பையே திரும்பத் திரும்பச் செய்வது அறிவீனம் என்று மறைமுகமாக
உணர்த்தும் வழி இது.
தவறே செய்யாமல் இருக்கத்தான் யாரால் முடியும்? தவறு செய்ய அஞ்சுவதுதான்
தவறு.
நமக்கு எல்லாமே தெரிந்திருந்தால், அதன்பின், கற்க
என்ன இருக்கிறது!
::கதை::
நான்கு வயதுச் சிறுவனான குகனுக்குத் தாய் பாடம் சொல்லிக்கொடுக்க, அவன் பென்சிலால் எழுத
ஆரம்பித்தான்.
“இது இப்படி
இருக்கவேண்டும். ரப்பரால் அழித்துவிட்டுத் திரும்பவும் எழுது!” என்று அம்மா சொல்ல, அழ ஆரம்பித்தான்.
தான் ஒரு தப்பு செய்வதா!
`புத்திசாலி!’
என்று குடும்பத்தில் எல்லாரும் புகழ்ந்ததைக் கேட்டு வளர்ந்த பிள்ளை ஆயிற்றே!
அறியாமையால் பிழை செய்ய நேர்ந்தால், அதற்காக வருத்தமோ, வெட்கமோ அநாவசியம் என்று
புரிந்தவள் அத்தாய்.
ஆகவே, மகன் ஏற்கும்
விதத்தில் கூறினாள்: “பென்சிலையும் ரப்பரையும் காசு கொடுத்து, கடையில்தானே வாங்குகிறோம்? அந்தக் கடைக்காரர்
அப்பாமாதிரி ஆபீஸ் போகமாட்டார். நாம்ப வாங்கினாதான் அவருக்குக் காசு கிடைக்கும்.
அவருடைய குழந்தைகள் சாப்பிட முடியும்”.
அவனைப்போன்ற குழந்தைகளின் நலனுக்காக என்று அவள் ஒப்பிட்டது குகனுக்குப்
புரிந்தது.
அதன்பின்னரும் தப்புத் தப்பாக எழுதி, அழிக்க நேர்ந்தது. அதற்காக அவன் வருந்தவில்லை.
கவனமாக இருக்கப் பழகிக்கொண்டான்.
வளர்ந்தபின்னர்,
நல்ல காரியங்களில் சிறக்க இக்குணம் உதவியது.
எப்போதாவது தவறு செய்தாலும், அளவுக்கு அதிகமாக அவன் வருந்தவோ, வெட்கவோ இல்லை.
உடனுக்குடன் திருத்திக்கொண்டான்.
இக்குணத்தால் வாழ்க்கையில் உபயோகமானவற்றை அவனிடமிருந்து
பிறர் கற்க முடிந்தது.
தவறு செய்வது மனிதனின் இயற்கை!
இந்தத் தாரக மந்திரத்தை சிலர் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள்.
ஒவ்வொரு முறையும் கணக்குப் பரீட்சையில் நிறைய பிழைகள் செய்துவிட்டு, “அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன்!”
என்று, மிதப்புடன்
தோள்களைக் குலுக்கிக்கொள்வார்கள் என் மாணவிகளில் சிலர்.
ஒவ்வொரு முறையும் செய்த தப்பையே செய்துகொண்டிருந்தால், அது கவனக்குறைவு, அலட்சியம்.
இப்படிச் செய்தால் என்ன?
செய்வது `தவறு’ என்று தெரிந்தே
செய்பவர்கள் பலர். `கலிகாலம்!’ என்றோ, அவர்களால்
நமக்கும் ஏதோ ஆதாயம் கிடைக்கிறதே என்றோ, பிறர் ஏற்றாலும், விளைவு
வினையாகத்தான் முடியும்.
::கதை::
(அண்மையில் படித்தது)
லண்டனில் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் படித்துக்கொண்டிருந்த இளைஞன்
அவன்.
சிங்கப்பூரில் உள்ள பொதுக்கழிப்பறை ஒன்றில் காமெரா வைத்து, இளம்பெண்களைப்
படமெடுத்தான். ஓரிரு முறை அப்படிச் செய்தும், மாட்டிக்கொள்ளாது போனதில் துணிச்சல்
அதிகரித்தது.
ஏழாவது முறை பிடிபட, குற்றத்தை ஒத்துக்கொண்டான். ஒவ்வொரு குற்றத்திற்கும்
ஓராண்டு சிறைத்தண்டனை, அபராதம்.
சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்வது அறிவீனம் – அது எவ்வளவுதான்
கிளர்ச்சி ஊட்டுவதாக அமைந்தாலும். அறிவாளியான அவன் இதை ஏனோ உணராமல் போனான்!
புத்தி தீய வழியில் போனதால், அவனுடைய கல்வி, எதிர்காலம் இரண்டுமே
பாழ்.
பழிக்குப் பழி!
வீம்புடன், பிறருக்குத் தீங்கு
விளைவிப்பவர்கள் தமது வாழ்க்கையுடன், பிறருடையதையும்
வீணாக்கிவிடுவார்கள்.
::கதை::
இளம் மனைவி தனக்குத் துரோகம் செய்துவிட்டதை மன்னிக்கவோ, மறக்கவோ முடியவில்லை
மாதுவால்.
தன்னைப்போலவே அவளும் நோகவேண்டும், அதுதான் அவளுக்குப் பாடம் கற்பிக்கும் வழி
என்று கருதி, அவளுக்குத்
தெரிந்தே பிற பெண்களுடன் உறவுபூண்டான்.
எத்தனை வயதாகியும், அவனுடைய ஆத்திரம் அடங்கவில்லை. மனைவிபோல் இல்லாத, உலகம் தெரியாத பெண்களை
மயக்குவதைக் கலையாகக் கற்றான்.
அந்த நடத்தையால் சமூகத்தில் அவனுக்கு இருந்த மதிப்பு அறவே குலைந்தது.
உறவினர்கள் அவனைத் தவிர்த்தார்கள்.
தன் தீய நடத்தைக்கு ஒரு காரணம் கற்பித்தான்: `எனக்கு மனைவி சரியில்லை!’
ஒரு பிழையை இன்னொன்றால் சரிசெய்ய முடியுமா?
தெரியாமல் பிழை
தெரியாமல் செய்த தவற்றுக்காக, தன்னையே
வருத்திக்கொள்வதால் என்ன பயன்?
::கதை::
அந்த வீட்டுக்கூரைமேல் இருந்த கூட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டது ஒரு
குருவிக்குஞ்சு.
அதை மிதித்துவிட்ட சிறுமி லதா, தன் அஜாக்கிரதையால் ஓர் உயிர் போய்விட்டதே
என்று அழ ஆரம்பித்தாள்.
`நடந்தது உன்
தப்பு இல்லை,’ என்று தாய்
எத்தனைதான் சமாதானப்படுத்தியும், அவள் மனம் அடங்கவில்லை.
அதன்பின், இறந்த எந்த
பிராணியைக் கண்டாலும், தான் செய்த `குற்றம்’ நினைவில் எழ, பயம், அழுகை.
பெரியவளாகி, நன்கு படித்து, வாழ்க்கையில் எவ்வளவு
உயர்ந்தபோதும், `தாய்க்குருவி
என்னைச் சபித்துவிட்டது!’ என்பாள். என்றோ எழுந்த சோகமும், குற்ற உணர்வும்
மறையவேயில்லை. அவற்றைப் போக்க என்னென்னவோ மருந்துகள்!
தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவற்றுக்காக
நம்மையே தண்டித்துக்கொள்ளாது, மன்னிக்க வேண்டுவது அவசியம்.
இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி
பறிபோய்விடும்.
ஆண்-பெண் உறவில் வெற்றி, தோல்வி
::கதை::
ஏழையாக இருந்தாலும், சந்திரன் அறிவாளி. பணக்காரர் ஒருவர் தன் மகளை அவனுக்கு
மணமுடித்து, மேற்படிப்புக்கும்
உதவினார்.
கணவனை விலைக்கு வாங்கிவிட்ட பெருமிதம் அவன் மனைவி தாராவிற்கு. பலர்
முன்னிலையில் அவனை அவமதிப்பதை வழக்கமாக்கிக்கொண்டாள்.
`மாறுவாள்,’ என்ற நம்பிக்கையுடன், முதலில் பொறுத்துப்போன
சந்திரன் சில வருடங்கள் கழிந்ததும் அவளை விவாகரத்து செய்தான்.
அழகிலும், பொருளாதாரத்திலும்
தன்னைவிட உயர்ந்த நிலையில் இருந்த பெண்ணை மணந்தது தான் செய்த தவறு என்று
தோன்றிப்போக, தாராவைப்போல்
இல்லாத ஒரு பெண்ணைக் காதலித்து மணந்தான்.
“குண்டாக
இருக்கிறாளே!” என்று நண்பர்கள் ஆச்சரியப்பட்டு, முகத்தைச் சுளித்தார்கள்.
சந்திரன் சிரித்துக்கொண்டான்.
தான் தேடி, மணந்த பெண்
குண்டுதான். ஆனால்,
அன்பானவள். எல்லாவிதத்திலும் அவனுக்குப் பக்கபலமாக
இருந்தாள்.
பெண்கள் காதல் தோல்வியை அவ்வளவு எளிதாக ஏற்பதில்லை.
::கதை::
முப்பது வயதுக்கு மேலாகியும் திருமணமாகாமல் இருந்தாள் என் சக ஆசிரியை வித்யா.
`இவ்வளவு அழகான
பெண்ணை ஆண்கள் எப்படி விட்டுவைத்திருக்கிறார்கள்!’ என்ற ஆச்சரியம் எனக்குள் எழ, அவளிடமே கேட்டேன்.
“ஆண்களை நம்பவே
பயமாக இருக்கிறது,”
என்றாள் வித்யா. ஒருவனைக் காதலித்து, அவன் ஏமாற்றிவிட்டதை
மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தாள், தான்தான் குற்றம் புரிந்ததுபோல்.
“அவனைப்போல்
பகட்டாகவோ, கலகலப்பாக
இல்லாது, அமைதியாக, ஆழமாக இருக்கும் ஒருவர்
உனக்கு வாய்ப்பார். அந்த வாழ்க்கையிலேயே நிறைவு கிடைத்துவிடும், பார்!” என்றேன், ஆறுதலாக.
தவறு செய்தால் என்ன?
அதையே திரும்பத் திரும்பச் செய்யாமல் இருப்பதுதானே
புத்திசாலித்தனம்!
::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக... Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1
No comments:
Post a Comment