திருக்குறள் -/14/- ஒழுக்கம் உடைமை

முகவுரை -13-அச்சிடப்படுதல்

நூல்கள் யாவும் பெரும்பாலும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கும் ஆசானிடமிருந்து மாணாக்கர்களுக்கும் வழிவழியாகக் கற்பிக்கப்பட்டு வாயால் விளக்கிச் சொல்லியும் செவியால் கேட்டு உணர்ந்தும் கற்கும் வழக்கம் பண்டைய இந்திய மரபாகும். குறளும் இவ்வாறே கற்பிக்கப்பட்டு தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களால் பரம்பரை பரம்பரையாகக் கற்கப்பட்டு வந்திருக்கிறது. இவ்வகையில் குறள் இயற்றப்பட்டு பல நூற்றாண்டுகளாக இந்திய மண்ணுக்கு வெளியே அறியப்படாமலேயே இருந்திருக்க வேண்டும். குறளின் முதல் மொழிபெயர்ப்பு 1595 மலையாளத்தில் செய்யப்பட்டது என்று சுவெலபில், சஞ்சீவி ஆகியோர் கூறுகின்றனர். எனினும் இம்மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்படாமலும் 1933–34-ம் ஆண்டு கொச்சி அகழ்வாராய்ச்சித் துரை தனது ஆண்டு அறிக்கையில் இதைப்பற்றிய விவரத்தினை வெளியிடும்வரை வெளியுலகுக்குத் தெரியாமலும் இருந்திருக்கிறது.

 

திருக்குறள் முதன்முதலில் தாளில் அச்சிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டது 1812-ம் ஆண்டில் ஆகும். தஞ்சை ஞானப்பிரகாசர் என்பவர் மரத்தால் செய்யப்பட்ட அச்சுக்களைக் கொண்டு குறள் மற்றும் நாலடியாரின் ஓலைகளிலிருந்து எடுக்கப்பட்ட மூலப் பிரதிகளை அச்சிட்டார். 1835-ம் ஆண்டில்தான் ஆங்கிலேய அரசு இந்தியர்களுக்கு அச்சிட அனுமதி வழங்கியது என்பதால் குறள் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூலாகவும் நாலடியார் இரண்டாவது நூலாகவும் ஆயின. ஆங்கிலேய அரசு அதிகாரியும் தமிழ் மற்றும் வடமொழி ஆர்வலருமான எல்லீசன் 1825-ம் ஆண்டு சென்னையில் தமிழ் சங்கமொன்றை நிறுவி மக்களைப் பழைய தமிழ் ஓலைச்சுவடிகளை அச்சிட தன்னிடம் எடுத்து வருமாறு அழைப்பு விடுத்தார். மதுரையில் ஐரோப்பிய அரசு அதிகாரியான ஜார்ஜ் ஹார்ங்டன்னிடம் சமையல் பணிபுரிந்த கந்தப்பன் என்பவர் 1825 மற்றும் 1831 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திருக்குறள், திருவள்ளுவமாலை, நாலடியார் ஆகியவற்றின் ஏடுகளைச் சமையலுக்கு எரிக்கப்படவிருந்த விறகுகளுக்கு மத்தியில் கண்டெடுத்து எல்லீசனிடம் கொடுக்க 1831-ம் ஆண்டு இவையாவும் எல்லீசனின் மேலாளர் முத்துசாமி பிள்ளை மற்றும் தமிழறிஞர் தாண்டவராய முதலியார் ஆகியோரது உதவியுடன் பதிப்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1833, 1838, 1840, மற்றும் 1842 ஆகிய ஆண்டுகளில் திருக்குறள் அடுத்தடுத்து அச்சிடப்பட்டது. மகாலிங்க ஐயர் குறளின் 24 அதிகாரங்களுக்கு மட்டும் உரையினைப் பதிப்பிக்க, அதன் பின்னர்ப் பல குறளுரைகள் அச்சுக்கு வரத் தொடங்கின. அது முதல் குறள் தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்துள்ளது. 1925-ம் ஆண்டு காலகட்டம் வரை குறள் சுமார் 65 பதிப்புக்கு மேல் வெளிவந்துள்ளது. 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது.

 

குறளின் முதல் ஆராய்ச்சியுரை இந்து சமய மடங்களில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகளிலிருந்தும் தனியே கிடைக்கப்பெற்ற சுவடிகளிலிருந்தும் 1861-ம் ஆண்டு ஆறுமுக நாவலரால் பதிப்பிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறள் மற்றும் இதர தமிழிலக்கிய நூல்களைப் பலதரப்பட்ட ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து அவற்றிலிருந்து சந்திப்பிரித்த வெண்பாக்களை முறைப்படுத்தி அச்சிடுவதில் ஆறுமுக நாவலர் அனைவருக்கும் முன்னோடி என்று சுவெலபில் பாராட்டுகிறார்.

 

குறளுக்கான பரிமேலழகருரை முதன் முதலில் 1840-ம் ஆண்டு அச்சிடப்பட்டது. 1850-ம் ஆண்டு வேதகிரி முதலியாரின் உரையோடு திருக்குறள் அச்சிடப்பட்டது. இதன் மறுபதிப்பு 1853-இல் வெளிவந்தது. இப்பதிப்பே திருக்குறள் முழுவதும் முதன்முறையாக உரையோடு வெளிவந்த பதிப்பாகும். 1917-ம் ஆண்டு முதன்முறையாக மணக்குடவருரை . . சிதம்பரம் பிள்ளையால் தொகுத்து வெளியிடப்பட்டது. ஆயின் அவர் அறத்துப்பாலை மட்டுமே பதிப்பித்தார். மணக்குடவருரை முழுவதும் முதன்முதலாக கே. பொன்னுசாமி நாடாரால் 1925-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு முடிய பரிமேலழகருரை 30-இக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களால் 200-இக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளது.[190] முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்ட அன்று முதல் இதுவரை அதிகமாக அச்சிடப்பட்ட குறளுரையாகப் பரிமேலழகருரை திகழ்கிறது.

 

திருக்குறள் 1970-களில் தொடங்கி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கிட்டு சிரோமணி என்பவரால் தமிழ்ப் பிராமி எழுத்துகள், பல்லவர் காலத்து எழுத்துகள், வட்டெழுத்துகள் உள்ளிட்ட பல்வேறு பண்டைய தமிழெழுத்துகளில் உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

[திருக்குறள் - முகவுரை-14 அடுத்தவாரம் தொடரும்]

திருக்குறள் தொடர்கிறது

 


14. ஒழுக்கம் உடைமை

 

👉குறள் 131:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

மு. உரை:

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

கலைஞர் உரை:

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

English Explanation:

Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.

 

👉குறள் 132:

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை.

மு. உரை:

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:

எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

கலைஞர் உரை:

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.

English Explanation:

Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.

 

👉குறள் 133:

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.

மு. உரை:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை:

தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

கலைஞர் உரை:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

English Explanation:

Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.

 

👉குறள் 134:

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

மு. உரை:

கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

சாலமன் பாப்பையா உரை:

பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

கலைஞர் உரை:

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

English Explanation:

A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

 

👉குறள் 135:

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு.

மு. உரை:

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

கலைஞர் உரை:

பொறாமையுடையவனுக்கும்,நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.

English Explanation:

Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.

 

👉குறள் 136:

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.

மு. உரை:

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:

ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

கலைஞர் உரை:

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.

English Explanation:

Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.

 

👉குறள் 137:

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி.

மு. உரை:

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை:

ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

கலைஞர் உரை:

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

English Explanation:

From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.

 

👉குறள் 138:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.

மு. உரை:

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

கலைஞர் உரை:

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.

English Explanation:

Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.

 

👉குறள் 139:

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.

மு. உரை:

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

கலைஞர் உரை:

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.

English Explanation:

Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.

 

👉குறள் 140:

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்

கல்லா ரறிவிலா தார்.

மு. உரை:

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:

முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

கலைஞர் உரை:

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

English Explanation:

Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.

 

👉 திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....

 ✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக 

அடுத்த பகுதி வாசிக்க, அழுத்துக 
Theebam.com: திருக்குறள் -/15/- பிறனில் விழையாமை:

No comments:

Post a Comment