முகவுரை -12- மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் திரிபுகளும்
ஏழு சீர்களுக்குள் கூறவந்த அனைத்தையும்
அடக்கிவிடும் ஆற்றல் கொண்டதும் தன்னியல்பிலேயே மிகவும் நுட்பம் வாய்ந்ததுமான
குறள்வெண்பா பா வகைகளில் மிகவும் பொருளடர்த்தி கொண்ட தனது அரிய தன்மையினால்
அறநெறிக் கருத்துக்களை உரைக்க மிகவும் ஏதுவான பாவகையாக விளங்குகிறது. சுவெலபில் போன்ற அறிஞர்களால் "சுருக்கத்தின் உச்சமாகக் குறுகிய
அதிசயம்" என்று வர்ணிக்கப்படும் குறள்வெண்பா, தமிழ் மொழியின் அமைப்பிலக்கணத்தை ஒத்தே பரிணமித்த பாவகையாகும். இதன் காரணமாகவே
இப்பாவகையிலான செய்யுட்களை மொழிபெயர்க்கும் முயற்சிகள் இன்றுவரை மிகவும் சிக்கல்
வாய்ந்ததாகவே அறிஞர்களால் கருதப்படுகிறது. குறளை மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்வதைக் குறித்துக் கூறுகையில், "நடையழகிலோ சொல்வன்மையிலோ எந்த ஒரு மொழிபெயர்ப்பும் திருக்குறளின் தமிழ்
மூலத்திற்கு இணையாக இருக்க இயலாது" என்று ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி
உரைக்கிறார். குறளின் ஒரு பகுதியை மொழிபொயர்த்து
முடித்தவுடன் கார்ல் கிரவுல் "குறளின் வசீகரத் தன்மையினை எந்த ஒரு
மொழிபெயர்ப்பாலும் நல்க இயலாது. குறள் வெள்ளி இழைகளுக்கிடையில் பதிக்கப்பட்ட
தங்கக் கனி" என்று கூறினார். திருக்குறள்
கூறும் உண்மையான பொருளை எந்த ஒரு மொழிபெயர்ப்பைக் கொண்டும் அறிய முடியாது என்றும்
குறளின் தமிழ் மூலத்தைப் படிப்பதன் வாயிலாக மட்டுமே வள்ளுவர் கூறிய ஆழ்பொருளை அறிய
முடியும் என்றும் சுவெலபில் கூறுகிறார்.
குறளின் மொழிபெயர்புக்கே உரிய இதுபோன்ற
சிக்கல்களுக்கிடையில் சில அறிஞர்கள் வள்ளுவத்துக்கு ஒவ்வாத தங்களது சொந்தக்
கருத்துக்களை குறளின் சிந்தனைகளில் ஏற்றியும் வலிந்து பொருள்கொண்டும் மொழிபெயர்த்து
விடுகின்றனர். இதனால் குறள் கூறும் சிந்தனைகள் பலவாறு திரிக்கப்பட்டும்
சிதைக்கப்பட்டும் பொருள் காணப்படுகின்றன. குறிப்பாக வீரமாமுனிவர் எனப்படும் பெச்கி
முதலான கிறித்தவ மதபோதகர்களது மொழிபெயர்ப்புகளில் இதுபோன்ற திரிபுகளைப் பல
இடங்களில் காணமுடிகின்றது. வி. இராமசாமி தனது ஆய்வுநூலில் கூறுகையில், "பிற மொழிபெயர்ப்பாளர்கள் 'பிறவிப்பெருங்கடல்' என்பதை 'பல பிறவிகளாகிய கடல்' என்று மொழிபெயர்க்கையில் பெச்கி அச்சொல்லை 'இப்பிறப்பின் கடல்' என்றும் 'பிறவாழி' என்ற சொல்லை 'துயரமான வாழ்க்கைக் கடல்' என்றும் மொழிபெயர்ப்பதன் மூலம் குறள்
கூறும் சிந்தனையை பெச்கி வேண்டுமென்றே திரிக்க முயல்கிறார்". மேலும் "இதன் மூலம் பெச்கி கூற வரும் பொருள் 'துன்பப் பெருங்கடலை நீந்துவோர்' என்றாகும்" என்றும்
"கிறித்தவத் தத்துவத்தில் மறுபிறவி மற்றும் ஒரே ஆத்மாவுக்குப் பல பிறவிகள்
போன்ற சிந்தனைகள் கிடையாது என்பதே இதற்குக் காரணம்" என்றும் இராமசாமி
துணிகிறார்.
"அன்றிலிருந்து இன்றுவரை குறளுக்கு உரை
எழுதும்போதும் குறளை மொழிமாற்றம் செய்யும் போதும் பல அறிஞர்கள் குறள் கூறும்
சிந்தனைகளோடு தங்களது கலாச்சார சிந்தனைகளையும் சேர்த்து நூல்களைச் செய்து விடுகின்றனர்"
என்று நார்மன் கட்லர் கூறுகிறார். பதின்மூன்றாம்
நூற்றாண்டில் பரிமேலழகர் குறளின் சிந்தனைகளை அன்றைய பிராமணீய சிந்தனைகளோடு
இணைத்துப் பொருள்கண்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறித்தவ
மதபோதகர்கள் குறளின் சிந்தனைகளை கிறித்தவக் கொள்கைகளுக்கேற்றார் போல் திரித்துப்
பொருள்தர முயன்றனர். இன்று திராவிடக் கழகங்கள் தங்களது சொந்த
சமூக மற்றும் அரசியல் சிந்தனைகளுக்கு ஏற்றார் போல் தங்களது தனிப்பட்ட
குறிக்கோள்களை முன்னெடுக்க வேண்டி குறளின் பொருளைப் பலவாறு திரித்து உரை
தருகின்றன. இவையாவும் குறளின் மூலப் பொருளை
ஆண்டாண்டு காலமாகப் பலவாறு திரித்துள்ளன என்று அறிஞர்கள் பலரும் கருதுகின்றனர்.
[திருக்குறள் - முகவுரை-13 அடுத்தவாரம் தொடரும்]
திருக்குறள் தொடர்கிறது….
13.
அடக்கம் உடைமை
👉குறள்
121:
அடக்கம்
அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
மு.வ உரை:
அடக்கம் ஒருவனை
உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள்
போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
சாலமன் பாப்பையா
உரை:
அடக்கம் ஒருவனைப்
பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல்
வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.
கலைஞர் உரை:
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
English
Explanation:
Self-control will place
(a man) among the Gods; the want of it will drive (him) into the thickest
darkness (of hell)
👉குறள்
122:
காக்க
பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
மு.வ உரை:
அடக்கத்தை
உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட
ஆக்கம் உயிர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா
உரை:
அடக்கத்தைச்
செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.
கலைஞர் உரை:
மிக்க உறுதியுடன்
காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும்
இல்லை.
English
Explanation:
Let self-control be
guarded as a treasure; there is no greater source of good for man than that.
👉குறள்
123:
செறிவறிந்து
சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்.
மு.வ உரை:
அறிய
வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம்
நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
சாலமன் பாப்பையா
உரை:
அடக்கத்துடன்
வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம்
நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
கலைஞர் உரை:
அறிந்து கொள்ள
வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து
பாராட்டுகள் குவியும்.
English
Explanation:
Knowing that
self-control is knowledge, if a man should control himself, in the prescribed
course, such self-control will bring him distinction among the wise
👉குறள்
124:
நிலையின்
திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
மு.வ உரை:
தன்
நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை
விட மிகவும் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா
உரை:
தன் நேர்மையான
வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக்
காட்டிலும் மிக உயரமானது.
கலைஞர் உரை:
உறுதியான
உள்ளமும், அத்துடன்
ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச்
சிறந்தது எனப் போற்றப்படும்.
English
Explanation:
More lofty than a
mountain will be the greatness of that man who without swerving from his
domestic state, controls himself
👉குறள்
125:
எல்லார்க்கும்
நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
மு.வ உரை:
பணிவுடையவராக
ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு
செல்வம் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா
உரை:
செருக்கு
இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ்
எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.
கலைஞர் உரை:
பணிவு என்னும்
பண்பு, எல்லார்க்கும்
நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு
செல்வமாகும்.
English
Explanation:
Humility is good in all;
but especially in the rich it is (the excellence of) higher riches.
👉குறள்
126:
ஒருமையுள்
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
மு.வ உரை:
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும்
அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
சாலமன் பாப்பையா
உரை:
ஆமை தன் நான்கு
கால், ஒரு தலை ஆகிய
ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு
பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து
பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப்
பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.
கலைஞர் உரை:
உறுப்புகளை ஓர்
ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம்
வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.
English
Explanation:
Should one throughout a
single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will
prove a safe-guard to him throughout the seven-fold births.
👉குறள்
127:
யாகாவா
ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
மு.வ உரை:
காக்க
வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால்
சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
சாலமன் பாப்பையா
உரை:
எதைக் காக்க
முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால்
சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
கலைஞர் உரை:
ஒருவர் எதைக்
காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர்
சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.
English
Explanation:
Whatever besides you
leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the
consequent misery will ensue.
👉குறள்
128:
ஒன்றானுந்
தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
மு.வ உரை:
தீய சொற்களின்
பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற
அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
சாலமன் பாப்பையா
உரை:
தீய சொற்களின்
பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம்
இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.
கலைஞர் உரை:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
English
Explanation:
If a man's speech be
productive of a single evil, all the good by him will be turned into evil.
👉குறள்
129:
தீயினாற்
சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
மு.வ உரை:
தீயினால் சுட்ட
புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால்
தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
சாலமன் பாப்பையா
உரை:
ஒருவனை
மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம்
காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில்
புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.
கலைஞர் உரை:
நெருப்பு சுட்ட
புண்கூட ஆறி விடும்;
ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம்
ஆறவே ஆறாது.
English
Explanation:
The wound which has
been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never
heal.
👉குறள்
130:
கதங்காத்துக்
கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
மு.வ உரை:
சினம் தோன்றாமல்
காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக
இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
சாலமன் பாப்பையா
உரை:
கல்வி கற்று
மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான
நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.
கலைஞர் உரை:
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும்
பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.
English
Explanation:
Virtue, seeking for an
opportunity, will come into the path of that man who, possessed of learning and
self-control, guards himself against anger.
👉 திருக்குறள்
அடுத்த வாரம் தொடரும்....
No comments:
Post a Comment