நான் சாதாரண வகுப்பில் தமிழ் கற்கும் ஒரு மாணவன். எமது ஆசிரியர் இன்று எம்மை 'விசுவாசம்' பற்றி கவிதை எழுதும்படி பணித்தார். எமது இனத்தின் இருப்பை, அடையாளத்தை, பண்பாட்டை காட்டுவது தாய் மொழி என்று அதே ஆசிரியர் நேற்று கூறியது ஞாபகம் வருகிறது. இன்று விசுவாச [višvāsa] என்ற வடமொழியை, நல்ல தமிழ் சொற்களான உண்மை, நம்பிக்கை, மாறாத பற்று போன்றவை இருக்கும் பொழுதே பயன் படுத்துகிறார் என்பது எனக்கு கோபமாக வந்தது. என்றாலும் அதை நான் வெளிக்காட்டவில்லை.
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள், எந்த மதத்தை பின்பற்றுபவர்கள் என்றாலும் என்றும் தம் தாய் மொழியில் மாறாத பற்று கொண்டவர்களாகவே அநேகமாக இருக்கிறார்கள். அப்படியான குடும்பம் ஒன்றில் தான் நான் பிறந்தேன். எனக்கு மொழி, நாடு இரண்டிலும் நல்ல பற்று உண்டு என்றாலும் என் மேல் அதிலும் கூடிய நம்பிக்கை உண்டு. உன்னை அறிந்தால் தான் உலகம் அறிவாய், அது போலவே பற்றும் என்பது என் வாதம்.
ஒரு நாள் நான் என் குட்டி தங்கையுடன் ஒரு பாலத்தை கடக்க வேண்டி இருந்தது. அந்த பாலம், பல ஆண்டுகளாக திருத்தப் படாமல், அரசால் கவனிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் எமக்கு, எம் கிராமத்துக்கு அது ஒன்று தான் எம்மை பட்டணத்துடன் இணைக்கும் குறுகிய வழி. தேர்தல் காலத்தில் மக்களிடம் நாம் உங்களில் பெரும் பற்றுடன் இருக்கிறோம் என்று கூறி வரும் அரசியல் வாதிகள், தேர்தலின் பின், தங்கள், தங்கள் குடும்பத்தின் வருமானத்தை பெருக்குவதிலேயே முழு பற்றாக இருக்கிறார்கள். ஆமாம், வருமானத்துக்காக பற்று இல்லாமல் தமிழ் படிப்பிக்கும் என் ஆசிரியர் போல!
எனக்கு பாலத்தை கடக்கும் பொழுது, மூன்று மாதத்துக்கு முன், ஒரு சிறுமி அங்கு தவறி விழுந்து மரணித்தது ஞாபகம் வந்தது. நாம் அந்த நிகழ்வின் பின், மாற்று வழியாக நீண்ட தூரம் வாடகை மோட்டார் வண்டியில் பயணித்தே பட்டணம் போனோம். ஆனால் இன்றைய வாழ்க்கை செலவின், எதிர்பாராத அதிகரிப்பு அதற்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. எனவே நான் என் தங்கையிடம், ' என் குட்டி செல்லமே, என் கையை இறுகப் பிடித்துக் கொண்டு வா, அப்படி என்றால் பயம் இல்லை' என்றேன்.
ஆனால், என் புத்திசாலி தங்கையோ, 'இல்லை அண்ணா, நீங்களே என் கையை பற்றிக் கொண்டு வாருங்கள்' என்றார். எனக்கு ஒரே கோபம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் என்னை சமாளித்துக்கொண்டு, தங்கையிடமே ஏன் என்று விளக்கம் கேட்டேன்.
தங்கையோ, சிரித்துக்கொண்டு, அதில் பெரிய வித்தியாசம் உண்டு என்றார். 'நான் உங்கள் கையை பிடித்துக்கொண்டு போனால், ஏதாவது தற்செயலாக நடந்தால், அநேகமாக நான் பிடியை தளர்த்தி விடுவேன் , ஆனால் அண்ணா, நீங்கள் என் கையை பிடித்து இருந்தால் கட்டாயம், உயிரைக்கொடுத்து, உங்க பிடியை விடமாட்டீர்கள்' என்றார். அப்ப தான் என் தங்கை என் மேல் வைத்த மாறாத பற்று, நம்பிக்கை எவ்வளவு என்று உணர்ந்தேன்!
தங்கை சொன்ன பாடம் எனக்கு புது தெம்பையும் தந்தது. பிழை விடுபவர்கள் [ஆசிரியர்
போல்] , ஏமாற்றுபவர்கள்
[அரசியல்வாதிகள் போல்] தவறான வழியில் போகாமல் [விழாமல்] தடுக்க வேண்டின் , நாம் அவர்களை பிடித்து
இருக்க வேண்டும். அவர்கள் நாம் இல்லை என்றால், தாம் இல்லை என்பதை உணர
வேண்டும். ஆமாம் அவர்களின் நம்பிக்கை, பற்று [விசுவாசம்] , எமக்கு அவர்கள் மேல்
இருப்பது போல, அவர்களுக்கும்
எம் மேல் இருக்கவேண்டும்!
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment