செயற்கை இனிப்பூட்டிகள்: ‘உடல் எடையைக் குறைக்க உதவாது’

– எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

 


வீட்டிற்கு வரும் விருந்தினருக்குத் தேநீர் வழங்குவது  வழக்கம். அந்த சமயத்தில் சர்க்கரை எவ்வளவு போட வேண்டும் அல்லது சர்க்கரை போடலாமா என்ற கேள்வி எழும். “என் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு நான் முன்பிலிருந்தே சர்க்கரை சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்து வருகிறேன்” என்று விருந்தினர் சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் எடையைக் குறைக்கலாம் என்றோ உடல் தகுதியை மேம்படுத்தலாம் என்றோ நினைத்தால் அது தவறு. இதைத்தான் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

 

உலக சுகாதார நிறுவனம் என்ன கூறுகிறது?

உலக சுகாதார நிறுவனம், தனது புதிய வழிகாட்டுதல்களில் சர்க்கரை அல்லாத இனிப்புகளை (NSS) பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. என்எஸ்எஸ் என்றால் இனிப்பைத் தரும் ஆனால் சர்க்கரை அல்ல.

 

சில மதிப்புரைகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது. செயற்கை இனிப்புகள் எடை இழப்புக்கும் உதவாது தொடர்புடைய நோய்களின் அபாயத்தையும் குறைக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

சர்க்கரைக்குப் பதிலாக என்எஸ்எஸ் பயன்படுத்துவது பெரியவர்கள் அல்லது குழந்தைகள் நீண்ட காலத்திற்கு உடல் எடையைக் குறைக்க உதவாது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

உலக சுகாதார நிறுவனத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு இயக்குநரான பிரான்செஸ்கோ பிரான்கா, "சர்க்கரை நுகர்வைக் குறைக்க, மக்கள் மற்ற மாற்று வழிகளைத் தேட வேண்டும், அதாவது சர்க்கரை சேர்க்கப்படாத இயற்கையான பழங்கள் அல்லது இனிப்பு உணவுகள் அல்லது பானங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறார்.

 

"என்எஸ்எஸ்ஸில் ஊட்டச்சத்து மதிப்பு எதுவும் இல்லை. மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தங்கள் உணவில் சர்க்கரையை சீக்கிரம் குறைக்கத் தொடங்க வேண்டும்." என்பது அவரது பரிந்துரை.

 

எவையெல்லாம் செயற்கை இனிப்பூட்டிகள்

பற்பசை, தோல் கிரீம் மற்றும் மருந்துகளிலும் NSS பயன்படுத்தப்படுகிறது, எனவே அவற்றையும் நாம் பயன்படுத்தக்கூடாதா?

 

உலக சுகாதார நிறுவனம் தனது பரிந்துரை, சுய பாதுகாப்பு மற்றும் தூய்மைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களுக்குப் பொருந்தாது என்று கூறுகிறது.

 

பொதுவாகப் பயன்படுத்தப்படும் NSS சுக்ரோலோஸ், அஸ்பார்டேம், நியோடேம் மற்றும் ஸ்டீவியா. இவை அனைத்தும் செயற்கை இனிப்புகள் என்று சர் கங்காராம் மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பி மற்றும் வளர்சிதை மாற்றப் பிரிவின் மருத்துவர் சுரேந்திர குமார் கூறுகிறார். ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் பயன்படுத்தினால் பரவாயில்லை, ஆனால் அவற்றின் நீடித்த பயன்பாடு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறார் அவர்.

 

உதாரணத்திற்கு, "ஸ்டீவியா இலைகளை இனிப்புக்காக நேரடியாகப் பயன்படுத்தினாலும் பரவாயில்லை, ஆனால் எந்த வகையான பதப்படுத்தப்பட்ட வடிவத்திலும், அதாவது மாத்திரை போன்ற வடிவத்தில் பயன்படுத்தினால், அது தீங்கு விளைவிக்கும்" என்று கூறுகிறார்.

 

இதை, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் பயன்படுத்துகிறார்கள், இது குறித்தும் மருத்துவரிடம் கேட்டோம்.

 

செயற்கை இனிப்பூட்டிகள் உடம்பில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

 

சர்க்கரையை விட செயற்கை இனிப்புகள் 700 மடங்கு சக்தி வாய்ந்தவை. அவை மூளையின் ஒரு பகுதியை பாதிக்கின்றன, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கிறது.

 

இதன் விளைவாக நீங்கள் அதிகமாக சாப்பிடத் தொடங்குகிறீர்கள், அதனால் உங்கள் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. அதன் பிறகு, பல்வேறு நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.”என்கிறார் மருத்துவர் சுரேந்திர குமார்.

 

என்னென்ன நோய்கள் வரும்?

செயற்கை இனிப்பூட்டிகளை நீண்டகாலம் பயன்படுத்துவதால் டைப்-2 நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயம் அதிகரிக்கிறது. இது தவிர, உயிரிழக்கும் வாய்ப்பும் உள்ளது.

 

மருத்துவர் நீரு கெரா, செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதால் உடல் எடை அதிகரிக்கும், இதன் காரணமாக உங்களுக்கு ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும், இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று விளக்குகிறார்.

 

செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிற நோய்கள் குறித்து மருத்துவர் சுரேந்திர குமார், "மன அழுத்தம், தலைவலி, நீரிழிவு நோய், இதய நோய், மூளைத் தாக்குதல் மற்றும் புற்றுநோய் ஆகியவை அவற்றின் நீண்டகாலப் பயன்பாட்டால் அதிகரிக்கின்றன." என்கிறார்.

 

மக்கள் சர்க்கரை இல்லை என்று நினைத்து ஐஸ்கிரீம் அல்லது பிற உணவுப் பொருட்களை சாப்பிடத் தொடங்குகிறார்கள், ஆனால் அவர்கள் எப்படியும் கலோரிகளைத் தான் உட்கொள்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். அதே போல், கோடையில், மக்கள் டயட் கோலா குடிக்கிறார்கள், ஆனால் அதில் பாஸ்பரஸ் உள்ளது, இது சிறுநீரகத்தை பாதிக்கிறது.” என்று அவர் விளக்குகிறார்.

 

சர்க்கரை எவ்வளவு உட்கொள்ளலாம்?

இனிப்புகள் சாப்பிடுவது மகிழ்ச்சியைத் தருவதாகவும், அது மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறினாலும், எந்த அளவு இனிப்புகளைச் சாப்பிடுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

 

மேப்பிள் சிரப், தேன், வெல்லம், நாட்டு சர்க்கரை, பனங்கல்கண்டு ஆகியவை சர்க்கரைக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.

 

"ஒவ்வொரு உணவுப் பொருளிலும் சர்க்கரையைச் சேர்த்துக்கொண்டால், அது உடலில் அதன் அளவை அதிகரிக்கும். டீ, காபி குடிக்கும் முன், சிறிது சர்க்கரையை வாய் மூலையில் அழுத்தி, பின் சர்க்கரையில்லாத டீயைக் குடியுங்கள். எந்த உணவுக்கும் முன் இதை செய்து வந்தால் கட்டுப்பாடான அளவில் முழுச் சுவையும் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

வெல்லத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடாமல், உறிஞ்சி சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் மீண்டும் மீண்டும் வெல்லத்தை சாப்பிட மாட்டீர்கள், நீண்ட நேரம் உங்கள் வாயில் இருப்பதால், நீங்கள் இனிப்பை அனுபவிக்க முடியும். இதற்கு மேல் சாப்பிட ஆசை இருக்காது.’ என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

 

மருத்துவர்களின் கூற்றுப்படி, சர்க்கரை ஒரு வகையில் மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது, ஆனால் நீங்கள் அதை தேவைக்கு அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் உடலுக்குக் கசப்பான பலனைத் தரும்.

 

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக செயற்கை இனிப்புகளை எடுத்துக்கொள்வது சரியா?

"சர்க்கரை நோயாளிகள் எந்த வகையிலும் என்எஸ்எஸ் எடுக்கக் கூடாது. நீங்கள் எப்போதாவது ஒரு முறை அதைச் சுவைக்காக எடுக்க விரும்பினால், அதை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்." என்கிறார் மருத்துவர் சுரேந்திர குமார்.

 

:சுஷீலா சிங்/பிபிசி செய்தியாளர்

0 comments:

Post a Comment