பழமை வாய்ந்த, அத்தியடி ஸ்ரீ சிதம்பர
நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும் அதனுடன் அமைந்த வாசிக சாலையும், நான் பிறந்து வளர்ந்த, எனக்கு மிகவும் பிடித்த
ஊரான, அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு
இடத்திற்கு, முக்கிய
அடையாளமாக அன்று இருந்தன. அங்கு தான் எங்கள் வீடு அத்தியடி புது வீதியில் அமைந்து
இருந்தது. எங்கள் வீட்டில் பனை, தென்னை, கமுகு, மா, பலா என சில மரங்களும், செவ்வரத்தை, ரோசா, மல்லிகை என பூ மரங்களும்
நிறைந்து இருந்தன. நான் சிறுவனாக இருந்த
அந்த காலத்தில், எம் பக்கத்து
வீட்டில் இருந்தவள் தான் அவள். அவள் பெயர் செவ்வரத்தை, அந்த பெயருக்கு ஏற்ற
அழகுடன், எந்த நேரமும்
புன்னகை சிந்தும் முகத்துடனும் என்னுடன் வந்து, ஓய்வு நேரங்களில் ஒழித்து
விளையாடியதை இன்னும் மறக்க முடியாது?
அதற்கு ஒரு காரணம் கூட
உண்டு. என் நெற்றியில் இன்னும் உள்ள காயத்தின் வடுவே அந்த நினைவை மறக்கவிடாமல்
தந்துகொண்டு இருக்கிறது. ஆமாம், என்னுயிர் தோழி, செவ்வரத்தை அன்று ஒரு பனை
மரத்தின் பின் ஒழிந்து இருந்துகொண்டு, குயில் போல் தன் அழகிய பிஞ்சு குரலில் 'கூ கூ' என சத்தம் போட்டார். என்
இரு கண்ணும் கட்டப்பட்டு இருந்தது, நான் அந்த சத்தம் வந்த திசை நோக்கி ஓடினேன்.
இளங்கன்று பயம் அறியாது என்று அன்று சும்மாவா சொன்னார்கள்?
பனையுடன் மோதி நெற்றியை உடைத்தது தான் மிச்சம். அது பின்
காய்ந்தாலும் அதன் தழும்பு மாறவில்லை. அப்படித்தான் அவளின் நினைவும். இன்னும்
மறையவில்லை!
நான் இன்னும் ஒன்றையும்
உங்களுக்கு சொல்லவேண்டும் , என் நெற்றி வடு அவளை மட்டும் அல்ல, பனையையும் இன்னும் ஞாபகப்
படுத்திக் கொண்டு இருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரம்
தான் அது. பனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும், நாணல் போல வளைந்து
தப்பிக் கொள்ளாதது. அது வளைவதை விட, வளையாமல் உடைவதையே விரும்புவது. இன்னல், துன்பம் வரும் போது, யாழ்ப்பான மக்கள், பனை மரத்தின் இந்த
சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து, தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம், துணிச்சலுடன் தளர்வுறாத, விடாப்பிடியாய்
எதிர்க்கின்ற ஒரு இயல்புக்குணம் / பண்பை வளர்த்துள்ளார்கள் என்றே எண்ணுகிறேன்.
அந்த பண்புதான் அவளை, என்னுயிர் தோழியை, என்னுடன் இன்று இணைந்து
வாழாமல், தன்னுயிரை
தியாகம் செய்ய வைத்துவிட்டது!
காலம் போக கோலம் மாறும்
என்பார்களே, அப்படித்தான் ஒரு
பதினோரு அகவையை அவள் அடைய, மொட்டு மலர்ந்து பூவாகிய கதையாக, அவள் கதை போய்விட்டது.
அது வரை என்னுடன் கட்டிப் பிடித்து உருண்டு விளையாடியவள், விலகி விலகி போக
தொடங்கிவிட்டாள். வெட்கம் [நாணம்], அது வேறு இப்ப? எங்கிருந்து தான் இவை
எல்லாம் வந்ததோ? தொல்காப்பியர், களவியலில், அதாவது திருமணத்துக்கு
முன்னுள்ள ஒரு கட்டத்தில் "அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும்
பெண்பாற் குரிய என்ப." என்கிறார். அது தான் அவளின் அந்த மாற்றத்தைப் பார்த்து
எனக்கு ஞாபகம் வந்தது. அவளுடன் அதன் பின் கதைப்பதே நின்றுவிட்டது. என்றாலும்
பாடசாலைக்கு போகும்பொழுது, வீட்டில் இருந்து பல நூறு யார் சென்றபின்பு, ஒரு வேளை நானும் அவளும்
சந்திக்க நேரிட்டால். அவள் கையில் ஏந்தி இருக்கும் புத்தகங்களால் முகத்தை ஓரளவு
மறைத்து, அதில் ஒரு
நீக்கலுக்கு ஊடாக பார்க்கும் அந்த
கயல்விழியும் , கன்னத்தில் குழி
விழும் அவளின் மௌன சிரிப்பும் எத்தனையோ கதை இன்றும் கூட சொல்லுகிறது. ஆனால் அவள்
இன்று இல்லை!
நான் சில ஆண்டுகளின் பின்
உயர் வகுப்பில் சித்தியடைந்து, பேராதனை பல்கலைக்கழகத்துக்கு பட்டப்
படிப்புக்கு 1987,
அக்டோபர் முதல் கிழமை போய்விட்டேன். அவள் அப்பொழுது சாதாரண
வகுப்பில் பதினாறு வயது பருவப் பெண்ணாக, இளமை பூத்துக் குலுங்க, மயக்கம் தரும் உடல்
அழகுடன் அவள் அன்று இருந்தாள்! அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை!
"பக்கத்து வீட்டு பைங்கிளி கோடியில் நிற்குது
வெக்கத்தை விட்டு அது
ஆடிப் பாடுது
தூக்கத்தை கலைத்து எனக்கு
துடிப்பை தருகுது
ஏக்கத்தை கூட்டி மனதை
நொடியில் வாட்டுது"
நான் பல்கலைக்கழகம்
போறதுக்கு முதல் நாள் அவளை தற்செயலாக, அவளின் வீட்டு கோடியில் கண்டேன். அது தான் நான்
அவளை கடைசியாக கண்டதும் கூட. அது ஒரு சனிக்கிழமை, அவள் தன் இளைய
சகோதரிகளுடன் பின் வளவில் விளையாடிக்கொண்டு இருந்தாள். பெற்றோர் இருவரும் , அவர்களின் நண்பரின்
வீட்டிற்கு போய் இருந்தார்கள், அவர்கள் வர மூன்று நான்கு மணித்தியாலம் ஆகும்
என்று அவள் என்னிடம் கூறி, இளைய சகோதரர்களை படிக்க சொல்லி அனுப்பிவிட்டு , தனியாக என்னிடம் ஏறத்தாழ
ஐந்து ஆண்டுக்கு பின் முதல் முதல் கொஞ்சம் நெருக்கமாக இருந்து கொண்டு கதைக்க
தொடங்கினாள்!
யாழ்ப்பாணம் எங்கும்
சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள்
பாடுகின்றன.வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது இந்த சொர்க்கத்தில்
நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்! மாலையில் சூரியன் மேற்கு திசையில்
மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்" வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்!!
அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில்
காணும் இன்பமோ - சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!! ஆனால் இதை எல்லாம் மிஞ்சியது தான்
அவளின் அன்றைய ஊடலும் கூடலும்!
"மொட்டு விரிந்து அழகை காட்டுது
நட்பு உறவு காதலை நாடுது
வேட்டை ஆட வண்டு ஏங்குது
கட்டி அணைக்க பூவையும்
துடிக்குது"
நேரம் கடக்க நான் விரைவாக
அவளிடம் இருந்து விடைபெற்றேன். அவளின் இரு கண்களும் ஆறு போல் ஓடிக்கொண்டு இருந்தன.
என் கைகளை இறுக்க பிடித்த படியே பிரிய
மனம் இல்லாமல், தன் முன்னைய
வெட்கத்தை மறந்து கட்டி அணைத்துக்கொண்டு நின்றாள். நான் நாளை தூர பயணம். அது தான்
அவளின் அந்த ஏக்கம். என்றாலும் பெற்றோர் வரும் நேரம் நெருங்குவதால், கொஞ்சம் தடுமாற்றத்துடனும்
இருந்தாள். அவள் என்னை காதலிக்கிறாள் என்பது அவளின் அந்த நெருக்கம், வருடல், கொஞ்சும் செல்ல பேச்சு
சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தாலும், அவளின் வாயால் 'ஐ லவ் யு' கேட்கவேண்டும் என்ற ஆசை
என்னை கொஞ்சம் உணர்ச்சி படுத்தியது நேரம் மிக நெருங்கியதால், நானும் அவளை இருக்க
அணைத்தபடி, 'சீக்கிரம் சொல்.
உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச்
சொன்னால், உன்னுடைய
பற்களில் இதழோடு இதழ் சேர்த்து, என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!' என்று அவள் காதில்
கூறினேன்!
"இன் சொல்
மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு
உண்கு என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய
கூறி,
ஏறு பிரி மடப் பிணை
கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின்
சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம்
நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல்
ஒல்லாதே?"
அவள் சடுதியாக ஒரு
முத்தம் தந்து, தன்னை மறக்க
வேண்டாம், 'நீங்க தான் என்
அன்பு' என்று கெஞ்சாத குறையாக விடை தந்தாள்! நானும்
அவளுக்கு பதில் முத்தம் கொடுத்து, அவசரம் அவசரமாக விலகி போனேன். நான் யாழில்
இருந்து பேராதனைக்கு போகும் வழியில்
யானைகள் ஆணும் பெண்ணுமாக ஏராளமாகத் திரியும்.வெயில் தாங்க முடியாது நீர்
வேட்கை கொண்டு திரியும் பெண் யானையின் தாகம் தீர்க்க வேண்டி, ஆண் யானை மரப் பட்டைகளைப்
பிளந்து தன் இணையான பெண் யானைக்கு அன்புடனும் காதலுடனும் ஊட்டி விடும். அதை நான்
பார்க்கும் பொழுது தன் நினைவு என்னில் எழும் என்று அவள் எண்ணினாலோ என்னவோ, நான் விலகி போய்க்கொண்டு
இருப்பதால், கொஞ்சம் சத்தம்
போட்டு, தான் தமிழ்
இலக்கியம் பாடம் ஆக்குவது போல, அவள் குறுந்தொகை பாடல் ஒன்றை பாடியது இன்னும்
என் கண் முன் நிற்கிறது, ஆனால் அவள் தான் இல்லை!
"நசைபெரி துடையர்
நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை
வேழம்
மென்சினை யாஅம்
பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற
வாறே."
நான் பொறியியல் பீடத்தில்
கற்கத் தொடங்கி இன்று -1987 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் நாள் - இரண்டு மூன்று
கிழமை தான் ஆகிறது. வழமையாக நடைபெறும் பகிடி வதை [ராகிங்] எல்லாம் ஓய்ந்துவிட்டது.
நிம்மதியாக அன்று இரவு ஒரு சில மணித்தியாலம் அன்றைய பாடங்களை திருப்பி ஒருக்கா
பார்த்த பின், நான் தங்கி
இருந்த ஹில்டா ஒபேயசேகர விடுதியில் [Hilda Obeysekara Hall] சக நண்பர்களுடன் தேநீர்
அருந்தி கதைத்துக்கொண்டு, இலங்கை செய்திகளுக்காக காத்திருந்தோம். இந்த கால கட்டத்தில், சமாதானத்தை ஏற்படுத்த
வந்த காந்தி தேசத்து அமைதிப்படை, உரிமைகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டு இருந்த
மக்களின் போராட்டத்தை நசுக்கும் செயற்பாடுகளில் தம்மை துரிதப்படுத்திக் கொண்டு
இருந்தது குறிப்பிடத் தக்கது. அதனால் தான் எமக்கு செய்திகள் அன்று முக்கியமாக
இருந்தன.
அன்றைய இரவு செய்தி எம்மை
அப்படியே கதிகலங்க வைத்துவிட்டது. ஆமாம், இந்திய இராணுவம், மாலை நாலு மணிக்குப்பின்
யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் புகுந்து நடாத்திய கோரத்தாண்டவங்கள்
பற்றியே அந்த செய்திகள் இருந்தன. அன்றைய காலத்தில் கையடக்க தொலைபேசி இலங்கையில்
இல்லை. எனவே நேரடியாக நாம் அங்கு பேசி செய்தி அறிவது கஷடம். என்னுயிர் தோழி, செவ்வரத்தையின் முதல்
கடிதம் அன்று காலை தான் கிடைத்தது, அவள் பாடசாலைக்கு போகும் பொழுது பெற்றோருக்கு
தெரியாமல் எழுதி போட்டு இருந்தாள். அதில் இருந்த ஒரு வரி தான் இப்ப என்னை ஏக்கத்தை
கொடுத்து வருத்திக் கொண்டு இருக்கிறது, 'அக்டோபர், 21ம் நாள், புதன் கிழமை, பாடசாலையில் இருந்து அரை
நேரத்துடன் வீடு திரும்பி மாலை மூன்று மணி அளவில், தான் அம்மாவை
கூடிக்கொண்டு யாழ் வைத்தியசாலை போவதாக குறிப்பிட்டு இருந்த அந்த வரி தான்' அது!
அந்த அவசர செய்தியில்
தனிப்பட்ட விபரங்கள் தராவிட்டாலும்.
இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில்
கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட
இருபத்தியொரு பணியாளர்களும், நோயாளார் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த
நாற்பத்தியேழு நோயாளர்களுமாக, மொத்தம் அறுபத்தியெட்டு பேர் கொல்லப்பட்டார்கள்
என்ற அந்தக் கோரப் படுகொலை செய்தி கேட்டதில் இருந்து எனக்கு என்ன செய்வது என்றே
தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்க்கும் விடயம் இதுவல்ல, என்றாலும் முழுமையாக
அடுத்தடுத்த செய்திகள் மூலம் விபரம் அறிய நாளை வரை பொறுத்து இருக்கத் தான்
வேண்டும். அவளுக்கு ஒன்றும் நடக்காது என்று என் மனது என்னை ஆறுதல் படுத்தினாலும்
நித்திரை அன்று கொள்ளவே இல்லை!
நான் வியாழக்கிழமை வழமை
போல பாட வகுப்புகளுக்கு போய்விட்டு, ஆனால் அன்று இரவு, பாடங்கள் ஒன்றையும்
திருப்பி பார்க்காமல், எமது விடுதியில் இருந்த தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னாலையே
, அடிக்கடி வரும்
மேம்படுத்தப் பட்ட செய்திகளை [news update] கேட்டுக்கொண்டு இருந்தேன். இரவு பதினோரு
மணிக்கு பிற்பாடு தான் கொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வாசிக்கப் பட்டன, அதில் .. அவள் ..
பெயர் ..
'செவ்ராத்தை'யும் இருந்தது. என்னுயிர்
தோழியின் அந்த முதல் மற்றும் கடைசி அணைப்பு, அந்த முத்தம், அந்த கடிதம் இந்த
மூன்றும் தான், அவளின்
ஞாபகார்த்தமாக என்னுடன் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது! என் முதல் மகளின்
பெயர் கூட 'செவ்வரத்தை' தான்!
"அத்தியடி
வீதியில் காலை பொழுதில்
ஓட்டா வாழ்வை கொஞ்சம்
சிந்தித்தேன்
பிள்ளையார் கோவில்
கிணற்றடியில் அமர்ந்து
காட்டாத வாழ்வை கனவு
கண்டேன்!"
"கேட்காத இனிமை காதில் ஒலித்தது
வாட்டாத நிலவு வானத்தில்
ஒளித்தது
மொட்டு விரிந்து வாசனை
தந்தது
ஹலோ சொல்லி செவ்வரத்தை
வந்தது!"
"சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி
ஒட்டி உடையில் அழகு
காட்டி
வட்ட மிட்டு வானத்தில்
இருந்து
எட்டிப் பார்த்து இன்பம்
பொழிந்தது!"
"நட்சத்திரம் மின்ன கதிரவன் மறைய
ஆலய பக்தர்கள் அரோகரா
முழங்க
மனைவி வந்து தட்டி கேட்க
வெட்கம் கொண்டு கனவும்
பறந்தது!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment