நீங்கள் அணிந்துள்ள கண்ணாடியை மாற்றும் நேரம் வந்துவிட்டதா?

அதற்கான 4 அறிகுறிகள் இவைதான்


நீங்கள் கண் மருத்துவரை சந்தித்து எவ்வளவு நாட்களாகிவிட்டன?

பார்வைத் திறனை ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் மயாமி பல்கலைக் கழகத்தில் பாஸ்கம் பால்மர் கண் மருத்துவக் கல்வி நிறுவனத்தில் கண் பரிசோதனைத் துறை இயக்குநர் மருத்துவர் மார்க் டி.டன்பார் கூறுகிறார். அமெரிக்காவின் மிகச்சிறந்த கண் மருத்துவமனைகளில் ஒன்றாக இது புகழ் பெற்ற நிறுவனமாகும்.

 

"சிலருக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொண்டால் போதுமானது. ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை என்பதே சிறந்ததாக இருக்கும்" என்று பிபிசி முன்டோவிடம் டன்பார் கூறுகிறார்.

 

சிறந்த பார்வைத் திறன் அவசியம் என்பதைத் தாண்டி, நம்மில் பலரும் கண்ணின் ஆரோக்கியம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நமக்குத் தான் கண் நன்றாக தெரிகிறதே என்று எண்ணுகிறோம். அல்லது ஒரு கட்டத்தில் கண் மருத்துவரை அணுகி கண்ணாடிக்கான பரிந்துரையைப் பெறுவதுடன் விட்டுவிடுகிறோம்.

 

"நல்ல பார்வைத்திறன் கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை" என்கிறார் டன்பார். "நாற்பது அல்லது ஐம்பதுகளில் இருக்கும் மக்கள் ஒருமுறை கூட கண் பரிசோதனை செய்ததில்லை என்பது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல" என்று அவர் கூறுகிறார்.

 

கண் போன்ற சிக்கலான மனித உறுப்புகளின் செயல்பாடுகளில் நடக்கும் சிறுசிறு மாறுபாடுகளை நம்மால் எளிதில் தெரிந்து கொள்ள முடியாது என்று கண் சிறப்பு மருத்துவர்கள் கூறுகின்றனர். இரு கண்களின் பார்வைத்திறன் தரத்தில் ஏற்படும் மாறுபாடுகள் அல்லது பொதுவான பார்வைத்திறன் குறைபாட்டைக் கூட நம்மால் பல நேரங்களில் உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்று அவர் கூறுகிறார்.

 

"சரியான நேரத்தில் கண் பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையைப் பெறாவிட்டால் நீங்கள் சரியாக பார்க்கவில்லை என்றே அர்த்தம்" என்று டன்பார் கூறுகிறார்.

 

நீங்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்த்தும் சில அறிகுறிகளை டன்பார் குறிப்பிட்டுள்ளார். அவை முதன் முறையாகவும் இருக்கலாம் அல்லது கண்ணாடியை மாற்றும் நேரம் வந்துவிட்டதை உணர்த்துவதாகவும் இருக்கலாம்.

 

1. வாகனம் ஓட்டும் போது பார்ப்பதில் கடினம்

"வாகனம் ஒட்டிக் கொண்டிருக்கையில் உங்களால் சாலையோர சிக்னல் சரியாக படிக்க முடியவில்லை அல்லது பார்க்க முடியவில்லை என்பது ஒரு எச்சரிக்கை அறிகுறி" என்கிறார் மருத்துவர் டன்பார்.

 

கேமராவைப் போல, உங்கள் கண்களும் ஒளியை விழித்திரையில் (ரெட்டினா) குவிக்க வேண்டும். அப்படி நடந்தால்தான் உங்களால் தெளிவாக பார்க்க முடியும்.

 

கிட்டப்பார்வை குறைபாடு உடையோருக்கு, ஒளியானது விழித்திரையின் முன் குவிக்கப்படும். இதனால், சாலையோர சிக்னல்கள் போன்ற சற்று தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாக தெரியும்.

 

அதுபோன்ற கண் பார்வை இருக்கும் சூழலில், குறிப்பாக இரவில் வாகனம் ஓட்டுவது சவாலானது.

 

ஒளியானது கண்ணின் மேல் படுவதையும், அதன் மேற்பரப்பில் ஒரே சீராக பரவுவதையும் உறுதிப்படுத்தும் வேலையை கண்ணாடிகள் செய்கின்றன.

 

ஒளி பிரதிபலிப்பை தடுக்கும் லென்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கண்ணாடிகள் உங்களது பார்வைத் திறனை இன்னும் மேம்படுத்தும்.

 

2. மிக அருகே பார்ப்பதில் சிரமம்

கண்ணாடி போட்டிருந்த நிலையிலும் புத்தகம் படிப்பதையோ அல்லது உங்கள் மொபைல் போன் திரையை பார்ப்பதிலோ நீங்கள் சிரமத்தை உணர்ந்தால் நீங்கள் கண் மருத்துவரை அணுக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அர்த்தம்.

 

நாம் வயதாகும் போது, விழிலென்ஸ்கள் அதன் நெகிழ்வுத்தன்மையை இழப்பதால் அருகில் உள்ள பொருட்களை பார்ப்பது கடினமாகி விடுகிறது. இதனையே தூரப்பார்வை குறைபாடு என்கிறோம்.

 

உங்கள் கண் ஆரோக்கியமாக இருப்பதாகவே கருதலாம். ஆனால், ஒளி விலகலில் தான் பிரச்னை இருக்கிறது. ஒளியானது சரியாக விழித்திரையில் குவிக்கப்படாவிட்டால் நீங்கள் பார்க்கும் பொருள் மங்கலாகவே தெரியும்.

 

ஒளி விலகலில் உள்ள பிரச்னையை சரிசெய்வதுடன், நீங்கள் படிக்க முயலும் போது அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதையும் கண்ணாடிகள் தடுக்கின்றன.

 

3. பகலில் பார்வைத்திறன் ஏற்ற, இறக்கமாக இருப்பது

பகல் முழுவதும் உங்களது கண் பார்வை ஏற்ற, இறக்கமாக இருப்பதை நீங்கள் உணர்ந்தால், அது நீங்கள் கண்ணாடியை மாற்றும் நேரம் வந்துவிட்டதை உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.

 

கண் தசைகள் சோர்வாக இருப்பதே இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று மருத்துவர் டன்பார் விவரிக்கிறார்.

 

ஒரே புள்ளியை நீண்ட நேரம் நீங்கள் உற்றுப் பார்த்தால், அதாவது கணினி திரையை பார்த்துக் கொண்டே இருப்பது போன்ற தருணங்களில் உங்களது கண்கள் சோர்வடைகின்றன. இதனால், ஒரு புள்ளியில் கவனத்தை குவிக்கும் உங்களது திறன் குறையும்.

 

"கணினியில் பணிபுரிவது, திரைப்படத்தைப் பார்ப்பது அல்லது புத்தகத்தைப் படிப்பது போன்ற அதிக கவனம் குவிக்கும் வேளைகளில் நாம் கண் சிமிட்டுவது வழக்கத்தை விட பாதியாக குறைகிறது." என்று அவர் கூறுகிறார்.

 

உங்களுக்கு இருக்கும் சில பார்வைக் குறைபாடுகளை மீறி நீங்கள் அதீதமாக செயல்படும் போது, கண்கள் சோர்வடைகின்றன. அந்த நாள் உங்களுக்கு மோசமானதாக முடிகிறது.

 

இதுதான் உங்களின் நிலை என்றால், உடனே தயங்காமல் கண் மருத்துவரை அணுகுங்கள்.

 

4. ஒரு கண்ணில் அல்லது இரு கண்களிலும் பார்வை மாறுதல்

ஒன்று அல்லது இரு கண்களிலும் பார்வைத்திறன் வேகமாக மாறுபடுவது நீங்கள் மோசமான மாற்றத்திற்கு உட்படுகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.

 

"உங்களால் சரியாக பார்க்க முடியவில்லை என்றால் கண்ணாடியை மாற்றினாலே போதுமானது. ஆனால், இந்த மாற்றம் கூடுதல் கவனத்துடன் பார்க்க வேண்டிய ஒன்று" என்று மருத்துவர் டன்பார் எச்சரிக்கிறார்.

 

குறுகிய கால இடைவெளியில் பார்வைத்திறன் குறைவது கண்புரை (Cataract) நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதன் காரணமாகவே, தெளிவாக பார்ப்பதில் சிரமம், இரவில் வாகனம் ஓட்டுவதில் சிக்கல், உற்றுநோக்குவதில் கஷ்டம் போன்ற டன்பார் சுட்டிக்காட்டிய பிரச்னைகள் வந்திருக்கலாம்.

 

"இன்று நம்மிடையே உள்ள தொழில்நுட்பத்தின்படி கண்புரை அறுவை சிகிச்சை என்பது வெகு சாதாரணமான எளிதான விஷயமாகிவிட்டது. வெறும் 15 நிமிடங்களில் முடிந்துவிடக் கூடியது" என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

பல நேரங்களில், கண் ஆரோக்கியத்தை கண்காணிப்பது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்தான பிரச்னைகளை தெரிந்து கொள்ளவும் உதவும்.

 

"மேற்கூறிய காரணங்களை முன்னிறுத்தியே மக்கள் தங்களது கண்களை சரியான கால இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கிறோம். கண்ணின் பார்வைத்திறனை உறுதி செய்வதற்காக மட்டுமல்ல," என்று மருத்துவர் டன்பார் தெரிவித்தார்.

 

நன்றி -ரஃபேல் அபுசைப் (RafaelAbuchaibe),பிபிசி நியூஸ் வேர்ல்ட்

 

0 comments:

Post a Comment